By 1 October 2018 0 Comments

சிறப்பு தினங்கள்… சிறப்பு கட்டுரைகள்…!( மருத்துவம்)

* சர்வதேச அல்ஸைமர் தினம் – செப்டம்பர் 21

அல்ஸைமர் நோய் மற்றும் அதனோடு தொடர்புடைய முதுமை மறதி பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21-ம் நாள் சர்வதேச அல்ஸைமர் தினம்(World Alzheimer’s Day) கடைபிடிக்கப்படுகிறது. நோயின் கடுமையைக் கருத்தில் கொண்டு சில நாடுகளில் இந்த சிறப்பு தினம் ஒரு மாதம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அல்ஸைமர் நோய் முதுமையில் ஏற்படும் மறதியின் மிகவும் பொதுவான ஒரு வடிவமாக உள்ளது. அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த மூளை நோயால் நினைவாற்றலையும் சிந்தனைத் திறனையும் இழக்க நேரிடுகிறது.

இந்த நோயால் மூளை உயிரணுக்கள் சிதைவடைவதால் ஞாபக மறதி, நினைவாற்றல் மாற்றம், தாறுமாறான நடத்தைகள், உடல் செயலிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. பொதுவாக இந்நோய் மெதுவாக ஆரம்பித்து நாட்பட நாட்பட மோசமான நிலைக்குச் செல்கிறது. சமீபத்திய நிகழ்வுகளை நினைவில் வைத்துக்கொள்ளச் சிரமப்படுவது இந்நோயின் ஆரம்பக் கட்ட அறிகுறிகளில் ஒன்று. இந்த நோயாளிகள் நீண்ட நாள் நண்பர்கள் போன்றோரின் பெயர்களையும், முகவரிகளையும், சாலைகளின் பெயர்களையும் பிறவற்றையும்கூட மறந்து விடுகிறார்கள்.
அல்ஸைமர் நோய் பற்றிய உண்மைகள்

* இது அதிகரித்துச் செல்லும் ஒரு மூளை நோய். அது சிலவற்றை மறந்து போவதிலிருந்து ஆரம்பித்து, சமீபத்திய நிகழ்ச்சிகளையும் மறந்து போகும் ஞாபக இழப்பில் சென்று முடியும். இறுதியாக அன்றாட செயல்களையும் அடிப்படைக் கடமைகளையும் செய்ய முடியாத நிலை உண்டாகும்.
* இந்நோய் பெரும்பாலும் முதியவர்களையே பாதிக்கிறது. இந்தியாவில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இது கவலை தரும் ஒன்றாக உள்ளது.

* இந்த நோய்க்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால், மூளையில் உண்டாகும் சில சிக்கலான நிகழ்வுகளால்
ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.
* இந்நோய் முழுமையாக குணமடைய வாய்ப்பில்லை. இருந்தபோதும் ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிவதன் மூலம் நோயாளிக்குப் பலன்தரும் வகையில் சிகிச்சையளிக்கலாம்.
* மருந்து, உளவியல் மற்றும் பராமரிப்பு போன்ற முறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குடும்ப மற்றும் சமுதாய ஆதரவு முக்கியப் பங்கு வகிக்கிறது.

அறிகுறிகள்

மனநிலை மாற்றங்கள், சமீபத்தியத் தகவலை மறந்துபோதல், பிரச்னைகளைத் தீர்ப்பது சவாலாக மாறுதல், வீட்டிலும் பணியிலும் பழக்கமான வேலைகளை முடிப்பதில் சிரமம் ஏற்படுதல், நேர மற்றும் இடக் குழப்பம், வாசிப்பதில், தூரத்தைக் கணிப்பதில் மற்றும் நிறம் அறிதலில் சிரமம், தேதி மற்றும் நேரத்தை மறந்து போதல், பொருட்களை இடம்மாற்றி வைத்தல், சமூக மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்குதல் போன்ற இவையாவும் இந்நோயின் அறிகுறிகளாக உள்ளது.

நோயைத் தடுக்க சில ஆலோசனைகள்

வாசித்தல், மகிழ்ச்சிக்காக எழுதுதல், இசைக் கருவிகள் வாசித்தல், முதியோர் கல்வியில் சேருதல், குறுக்கெழுத்து, புதிர், சதுரங்கம் ஆகிய உள்ளரங்க விளையாட்டுகளில் ஈடுபடுதல், நீச்சல் மற்றும் பந்து வீசுதல் போன்ற குழு விளையாட்டுக்களில் ஈடுபடுதல், நடை, யோகா மற்றும் தியானம் இதுபோன்ற உடல், மனம், சமூக மற்றும் பொழுது போக்குகளில் ஈடுபடுவது இந்நோய் தீவிரமாவதைத் தடுக்க உதவியாக இருக்கும்.

* சர்வதேச மருந்தாளுநர் தினம் – செப்டம்பர் 25

பல ஆண்டுகளுக்கு முன் துருக்கி நாட்டு இஸ்தான்புல்லில் கூடிய உலக மருந்தியல் கூட்டமைப்புப் பேரவையானது, செப்டம்பர் 25-ம் நாளை சர்வதேச மருந்தாளுநர் தினமாக (World Pharmacist Day) அறிவித்தது. உலகின் மூலை முடுக்கெல்லாம் உள்ள மக்களின் உடல் நலத்தை மேம்படுத்துவதில் மருந்தாளுநர்களுக்குரிய பங்கினை ஊக்கப்படுத்தி, எடுத்துரைக்கும் விதமாக நிகழ்ச்சிகளை ஒருங்கமைப்பது, மக்கள் ஆரோக்கியத்திற்கு மருந்தாளுநர்கள் வழங்கும் பல நன்மைகளை பிரதிபலிப்பது போன்றவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு இந்த சிறப்பு தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

* சர்வதேச காதுகேளாதவர் தினம் – செப்டம்பர் 30

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமையன்று சர்வதேச காதுகேளாதவர் தினம் (World Day Of Deaf) கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 30 அன்று இந்த சிறப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக சமுதாயத்தில் காது கேளாதவர்களுக்கு இருக்கும் பிரச்னைகளைப் பொதுமக்கள் புரிந்துகொள்ளச் செய்வது, இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மட்டுமன்றி பொதுமக்கள், அரசியல்வாதிகள், வளர்ச்சி அதிகாரிகள் ஆகியோரின் கவனத்தைக் காது கேளாதோரின் சாதனைகளையும் சவால்களையும் நோக்கித் திருப்புவது போன்றவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு இந்த சிறப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

காது கேளாமை

காது ஓர் உணர்வு உறுப்பு. அதன் கேட்கும் திறனே நம்மை உலகத்தோடு இணைக்கிறது. ஒலி தூண்டலுக்கு ஒருவர் பதில்வினை ஆற்றாமல் இருக்கும்போதும், அவரால் பிறருடைய பேச்சை புரிந்துகொள்ள முடியாதிருக்கும் போதும், பிறரை சத்தமாகப் பேசும்படி கூறும்போதும், சொன்னதைத் திரும்பச் சொல்லக் கேட்கும்போதும் அந்த நபருக்கு கேட்கும் திறன் இழப்பு பிரச்னை ஏற்பட்டிருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

15 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள பெரியவர்களுக்கு, கேட்கும் திறன் கூடுதலாக உள்ள காதில் திறன் இழப்பு 40 டெசிபெல்லுக்கும் மேலாக இருப்பது மற்றும் பிறந்த குழந்தை முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கேட்கும் திறன் கூடுதல் உள்ள காதில் திறன் இழப்பு 30 டெசிபெல்லுக்கும் மேலாக இருப்பதை காதுகேளாமை என்று வரையறுக்கப்படுகிறது. காது மெழுகு, ரத்தம், சீழ் அல்லது ஏதாவது திரவம் காதில் இருந்து வடிவதை காதில் நீர் வடிதல் அல்லது காதில் சீழ் வடிதல் என்று சொல்கிறோம்.

இதுபோன்று சீழ் வடிந்தால் பின்வருவனவற்றை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது. மென்மையான துணியால் ஒழுக்கைச் சுத்தம் செய்ய வேண்டும். காதில் ரத்தம் வருவது அல்லது துர்நாற்றம் ஏற்படுவது நோயின் கடுமையான நிலையைக் குறிக்கிறது. நீண்ட நாட்களாக தொடர்ந்து ஒழுக்கு இருந்தால் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டு காதுகேளாமை பிரச்னை ஏற்படும் என்பதால் உடனடியாக காலம் தாழ்த்தாமல் அதற்குரிய மருத்துவரை அணுகுவது நல்லது.

செவித்திறன் இழப்பைத் தடுக்க சில ஆலோசனைகள்

காது வலியை அலட்சியப்படுத்தக் கூடாது. அது ஒரு கடுமையான தொற்றாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அழுக்கு நீரில் நீந்தவோ குளிக்கவோ கூடாது. இதனால் காது தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. காதில் பிரச்னை ஏற்பட்டால் மரபு ரீதியான சிகிச்சைகளை எடுக்கக்கூடாது. அது செவிப்பறையைச் சேதப்படுத்தி கடுமையான காது தொற்று நோய்கள் ஏற்பட வழி வகுக்கலாம். சத்தமான இடங்களைத் தவிர்க்க வேண்டும்.

தொலைக்காட்சி, ஸ்டீரியோ, ஹெட்செட் ஆகியவற்றின் ஒலியைக் குறைத்து பயன்படுத்த வேண்டும். இசை சத்தமாக இருந்தாலோ, நீண்ட நேரம் அதைக் கேட்டாலோ காது கேட்கும் திறனை இழக்கும் ஆபத்து அதிகரிக்கிறது. தொடர்ந்து அதிக ஒலியைக் கேட்டால் கேட்கும் திறன் பாதிக்கப்படும். இசையை இயர்போனில் கேட்கும்போது மெதுவாகவும் இடைவெளி விட்டும் கேட்பது நல்லது.

மருத்துவர் ஆலோசனை இல்லாமல் நீர், எண்ணெய் அல்லது எந்த ஒரு திரவத்தையும் காதில் ஊற்றக் கூடாது. கூரிய பொருட்களைக் காதில் இடுவதைத் தவிர்க்க வேண்டும். சாலையோரத்தில் இருப்போரிடம் காது சுத்தம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். காதில் வலி, காதில் நீர் வடிதல், காதில் ரத்தம் வடிதல், கேட்கும் திறனில் குறைவு ஏற்படுவது போன்ற சமயங்களில் உடனடியாக உரிய மருத்துவரை அணுக வேண்டும்.

சர்வதேச வெறிநாய்க்கடி நோய் தினம் – செப்டம்பர் 28

சர்வதேச வெறிநாய்க்கடி நோய் தினம் (World Rabies Day) ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 28-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. வெறிநாய்க்கடி நோயையும் அதைத் தடுப்பதையும் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் விதமாக, முதல் வெறிநாய்க் கடி நோய்த் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து நோய்த்தடுப்புக்கு அடித்தளம் அமைத்த லூயிபாஸ்ட்டரின் மறைவு தினத்தன்று இந்த சிறப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

வெறிநாய்க்கடி

வெறிநாய்க்கடியானது ஒரு வைரஸ் தொற்றுநோய். இதன் அறிகுறிகள் தொடங்கிய உடனேயே அது உயிருக்கு ஆபத்தானதாக மாறிவிடுகிறது. ஆனால், இந்நோய் முற்றிலும் தடுக்கப்படக்கூடியதே. மாறாக உலக அளவில் ஆண்டுக்கு 59 ஆயிரம் பேர் இந்நோயால் மரணம் அடைகின்றனர் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் 90% பேர் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் கிராமப் புறத்தில் வாழும் சிறுவர்களாகவே இருக்கின்றனர். வெறிநாய்க்கடி நோய் இந்தியாவில் ஒரு பொது சுகாதாரப் பிரச்னை. இதனால் ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் மரணம் அடைவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத் தீவுகளைத் தவிர்த்து இந்தியா முழுவதும் இது இடம்சார் நோயாக உள்ளது. இது விலங்குகளில் இருந்து மனிதனுக்குப் பரவுகிறது. கடிபட்ட அல்லது கீறப்பட்ட இடங்களின் வழியாக உமிழ்நீரில் இருக்கும் வைரஸ் மனித உடலுக்குள் செல்கிறது. நாய்க்கடிக்குப் பின் 1 முதல் 3 நாட்கள் கழித்து அறிகுறிகள் தோன்றுகின்றன. நாய்க்கடி மற்றும் நோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாத 5 முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகளே பெரும்பாலும் நாய்க்கடிக்கும் நோய்க்கும் ஆளாகின்றனர்.

குழந்தைகள் தங்கள் பெற்றோருக்குப் பயந்து பலவேளைகளில் கடிபட்டதை மறந்துவிடுகின்றனர். சில வேளைகளில் நாயால் தாக்கப்பட்ட குழந்தைகள் கடிபட்டதை அல்லது கீறப்பட்டதை அறியாமல் போகின்றனர். பெற்றோரும் அதை அலட்சியம் செய்து காயத்துக்கு வீட்டு மருத்துவ முறையில் மிளகுப்பொடி அல்லது மஞ்சளால் மட்டுமே சிகிச்சை அளிக்கின்றனர்.

வெறிநாய்க்கடியைத் தடுத்தல்

இந்த நோயால் மனித மரணம் ஏற்படுவதையும் நோய்ப் பரவலையும் தடுக்க, இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் தேசிய வெறிநாய்க்கடி நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி இந்நோயைப் பற்றியும், அதைத் தடுக்கும் பல்வேறு வழிமுறைகளைப் பற்றியும் விலங்கு கடித்தவுடன் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய அவசியத்தைப் பற்றியும் பொது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பின்வரும் உண்மைகளைப் பற்றி பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

நாய்க்கடியைத் தவிர்க்க, பொது மக்களுக்குக் குறிப்பாகக் குழந்தைகளுக்கு, நாயின் நடத்தை மற்றும் அதன் உடல் பாவனைகள் (கோபம், சந்தேகம், நட்பு போன்றவை) பற்றிய விவரங்களை போதிக்க வேண்டும். விலங்கு கடித்தால் அல்லது கீறினால் அதை மறைக்காமல் கூற குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்படிக் கூறும் குழந்தைகளைப் பாராட்ட வேண்டும். வெறுங்கையால் நாய் கடித்த காயத்தைத் தொடக்கூடாது. மண், மிளகு, எண்ணெய், மூலிகை, சுண்ணாம்புப்பொடி, வெற்றிலை போன்ற எரிச்சலூட்டும் பொருட்களைக் கடிபட்டக் காயத்தின் மீது இடக்கூடாது.

நாய் கடித்துவிட்டால் வெறிநோயைத் தடுக்கக், கடிபட்ட பின்னான தடுப்பு மருந்தை எடுக்க வேண்டும். நாய் கடித்து விட்டால் 10 நிமிடங்களுக்கு சோப்பு மற்றும் நீரால் கழுவ வேண்டும். அதன்பின் அதனால் ஏற்பட்ட காயத்திற்கான சிகிச்சை மற்றும் நாய்க்கடிக்குரிய தடுப்பூசி போன்றவை குறித்த விவரங்களை மருத்துவரை அணுகி பெற்றுக் கொள்ள வேண்டும்.

வீட்டில் வளர்க்கும் நாயை வெறி நோயிலிருந்து பாதுகாப்பதன் மூலம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கலாம். எனவே நீங்கள் வீட்டில் வளர்க்கும் நாய்க்குத் தடுப்பூசி போட வேண்டும். வைரஸ் போன்ற தொற்றுக் கிருமிகளைக் கையாளும் ஆய்வக ஊழியர்கள், சிகிச்சை அளிப்போர், மனித வெறிநாய்க்கடியைக் கையாள்வோர், விலங்குநல மருத்துவர்கள், விலங்கைக் கையாள்பவர்களும் பிடிப்பவர்களும் வனவிலங்கு காப்பாளர்கள் போன்ற ஆபத்துள்ள அனைவரும் முன் தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

சர்வதேச இதய தினம் – செப்டம்பர் 29

உலகில் மரணத்துக்குப் பெரும் காரணமாக இருக்கும் இதய ரத்தக் குழல் நோய்களைப் பற்றியும், அந்த நோய் ஆபத்தைக் குறைக்கத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தேவையான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாகவும் சர்வதேச இதய தினம் (World Heart Day) ஆண்டுதோறும் செப்டம்பர் 29 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது. நோய் பளுவைக் குறைத்து, அதனால் ஏற்படும் அகால மரணங்களைத் தடுத்து, நீண்ட காலம், சிறந்த முறையில் இதய நலத்தோடு உலகில் உள்ள மக்கள் வாழும்படி செய்வதற்கு தனிநபர்கள்,

குடும்பங்கள், சமுதாயங்கள், அரசுகளை ஊக்குவித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இந்த சிறப்பு தினம் உதவியாக இருக்கிறது. இதயம், நுரையீரல், மூளை, சிறுநீரகம் மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கு ரத்தத்தை விநியோகிக்கும் ரத்தக் குழல்களைப் பாதிக்கும் ஒரு தொகுதிக் கோளாறுகளே இதயக் குழல் நோய் என்று சொல்லப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் பரவா நோயால் ஏற்படும் மரணத்தை 2025-க்குள் 25% குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதில் இதயக் குழல் நோய்களே பெரும்பங்கு வகிக்கிறது. தற்போது உலகம் முழுவதும் ஆண்டுக்கு 1.75 கோடி மக்களைக் கொன்று (பரவா நோய் மரணத்தில் பாதி) இதயக் குழல் நோய்கள் மக்களின் உயிரிழப்பிற்கு முக்கியக் காரணமாக உள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் 2.3 கோடி மக்கள் இதயக் குழல் நோயால் மரணம் அடையக்கூடும் (உலகளவில் இந்த நோயினால் 31% பேர் மரணம்) எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகள்

மார்பின் நடுவில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் மெல்லிய வலி அல்லது அசௌகரியம், ஒரு புயம் அல்லது இரண்டு புயங்கள், முதுகு, கழுத்து, தாடை, வயிறு போன்றவற்றில் வலி அல்லது அசௌகரியம் உண்டாதல், மூச்சடைப்பு, குளிர் வியர்வை, குமட்டல், தலைசுற்று போன்றவை மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகளாக உள்ளது. இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக உரிய மருத்துவரை அணுகி அவருடைய ஆலோசனையைப் பெற வேண்டும்.

இதயக் குழல் நோய்களைத் தடுக்க…

* பழம், காய்கறி, தானியம், கொழுப்பற்ற இறைச்சி, மீன் என்று சத்துள்ள மற்றும் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். விலங்குக் கொழுப்பு, சீனி மற்றும் உப்பு போன்றவற்றின் பயன்பாடுகளை குறைத்துக்கொள்ள
வேண்டும்.
* புகைக்க வேண்டாம். புகை பிடிப்போர் அருகிலும் செல்ல வேண்டாம்.
* இதய வேகத்தையும் மூச்சையும் அதிகரிக்க தொடர் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதாவது ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்களுக்குக் குறையாமல்
உடற்பயிற்சி செய்வது அவசியம். இந்தியப் பணி முறைகளில் அடங்கியிருக்கும் உடல் செயல்பாடுகள் இதயக் குழல் நோயைக் குறைக்க உதவும். இதுபோன்ற நமது பழக்கவழக்கம் அல்லது நடத்தைகளை சரிசெய்வதன் மூலம் இதயக்குழல் நோய்களைத் தடுக்க
முடியும்.

* மிகை ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற ஆபத்துக் காரணிகளால் மாரடைப்பு உருவாக வாய்ப்புள்ளது. எனவே, இதுபோன்ற பிரச்னைகளைத் தொடர்ந்து கண்காணித்து அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

* மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகளை முறையாகவும், கவனமாகவும் உட்கொள்ள வேண்டும்.

* நோயின் தீவிரத் தன்மையிலிருந்து எந்த அளவிற்கு நிவாரணம் கிடைத்துள்ளது அல்லது நோய் சரியாதலில் எந்த அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். இதில் நோயாளியின் உடல்நலம், மனநலம் மட்டுமின்றி, அவருடைய குடும்ப உறுப்பினர்களின் மனநிம்மதியும் அடங்கியிருக்கிறது. நலம் தரும் உணவு, கூடுதல் உடற்பயிற்சி, புகையை ஒழித்தல் போன்ற சிறு மாற்றமே இதயத்தை வலுவாக்கும். எனவே நாம் ஒவ்வொருவரும் இந்த சிறப்பு தினத்தில் நமது இதயத்தை வலுப்படுத்தி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதி கொள்வோம். இதய நலன் காத்திடுவோம்.Post a Comment

Protected by WP Anti Spam