By 8 October 2018 0 Comments

ஈரான் – பாகிஸ்தான் இணைந்த வெளிவிவகாரக் கொள்கை!!(கட்டுரை)

மத்திய கிழக்கில் பிராந்திய வல்லரசாகக் காணப்படும் ஈரான், தெற்காசிய நாடான பாகிஸ்தானின் மூலோபாய, வர்த்தகப் பரிமாற்றத்தை பொறுத்தவரை, மிகவும் நம்பிக்கை உடைய அண்மைய நாடாகும். பாகிஸ்தானும் ஈரானும் இஸ்லாமிய நாடுகளாகும் என்பதுடன், மதக்கொள்கை, மதம் சார்பான அரசியல் கொள்கைகள், மொழி, கலாசாரம் போன்ற பல முனைகளிலும் ஒற்றுமையைக் கொண்டுள்ளதோடு, 900 கிலோமீற்றர் நீளமான பொதுவான எல்லையை இரு நாடுகளும் கொண்டுள்ளமை, இரு நாடுகளும் மேலும் இணங்கிச்செல்லும் போக்குக்கு வழிவகுத்ததெனலாம். வரலாற்றில், பாகிஸ்தானை இறையாண்மை கொண்ட நாடாக முதன்முதலாக அங்கிகரித்த நாடும், ஈரானே ஆகும். மறுபுறத்தில், ஈரானுடனான உறவுகளை வளர்ப்பதற்கும், சர்வதேச தரத்தில் ஈரானை ஆதரிப்பதற்கும், பாகிஸ்தான் தொடர்ச்சியான தமது ஆதரவை வழங்கியிருந்தது.

பெப்ரவரி 1979இல், ஈரானின் இஸ்லாமியப் புரட்சியை அடுத்து உச்ச தலைவரான அயத்தொல்லா கோமேனி, ஈரானிய மன்னர் ஆவார் ஷா ஈரான் (முகம்மது ரஸா பஹ்லவி) அரசாங்கத்தைக் கவிழ்த்தார். ஈரானியப் புரட்சியின் பின்னர், இஸ்லாமிய குடியரசான ஈரான் நிறுவப்பட்டது. இந்நிலையில் ஈரானை முதல்முதலாக அங்கிகரித்த நாடும் பாகிஸ்தானே ஆகும். மேலும், 1980 செப்டெம்பரில் ஈரான் மீது ஈராக் படையெடுத்தபோது, பல மேற்கத்திய நாடுகள் சதாம் ஹுஸைனுக்கு ஆதரவளித்திருந்தன. எவ்வாறாயினும், பாகிஸ்தானில் ஈரானிய சார்பு உணர்வுகளே முற்றுமுழுதாக இருந்தது என்பதுடன், பாகிஸ்தான் அரசாங்கம், வெளிப்படையாகவே ஈரானுக்கு தமது ஆதரவை வழங்கியிருந்தது. அணுவாயுதப் பரிசோதனைகள் தொடர்பில் ஈரானுக்கு எதிராகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க சர்வதேசம் முயன்றபோது, ஈரானுக்குச் சார்பாக குரல் கொடுத்த ஒரேயொரு நாடு, பாகிஸ்தானே ஆகும்.

அதேவேளை, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி, சீனா, ரஷ்யா ஆகியன இணைந்து, ஈரானுடைய அணுவாயுத உற்பத்தியைத் தடைசெய்தல் தொடர்பாக ஈரானுடன் JCPOA உடன்படிக்கையை எட்டும்போது, ஈரான் சார்பான கொள்கையை வெளிப்படையாக விடுத்திருந்த ஒரே ஒரு நாடும், குறித்த ஒப்பந்தத்தில் இருந்து மே மாதம் 2018இல், ஐ.அமெரிக்கா வெளியேறியபோது, அந்நாட்டுக்கு எதிராக நேரடியாகவே கண்டனம் தெரிவித்த நாடும், பாகிஸ்தானே ஆகும். இதன் பிரகாரம், பாகிஸ்தான் – ஐ.அமெரிக்கா உறவுகள், முன்னிருந்த காலப்பகுதிகளிலும் பார்க்க அதிகமாகவே பாதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாக இருந்த போதிலும், ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு, ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசாங்கத்தை பாகிஸ்தான் ஆதரித்தபோது, விரிசல் அடைந்திருந்தது. அவ்வாறே, ஈரான், இந்தியாவுடன் இணைந்து சாஹ்-பகார் துறைமுகத்தில் பொருளாதார திட்டமொன்றைத் தொடங்கியமை, பாகிஸ்தானுக்குப் பிடிக்கவில்லை. எவ்வாறிருந்த போதிலும், குறித்த உறவு நிலை, 2014ஆம் ஆண்டு மே மாதம், அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், ஈரானுக்கு விஜயம் செய்தமையுடன் மீண்டும் புத்துயிர் பெற்றதெனலாம். இவ்வாண்டு ஓகஸ்டில், பாகிஸ்தானுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் விஜயம் மேற்கொண்டமை, இரு நாடுகளுக்கும் இடையிலான மேலும் அழுத்தங்களைக் மேலதிகமாக குறைத்திருந்தது. ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஸாரிப், பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யும் முன்னர், முன்னொருபோதும் இல்லாத நடவடிக்கையில் ஈரானில் பாகிஸ்தான் சுதந்திர தினத்தைக் கொண்டாடியிருந்தார். இது, நல்லெண்ணச் சைகை என்று, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழ்ந்திருந்தமையும், பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தபோது, ஜவாத் ஸாரிப், பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, COAS ஜெனரல் கமர் பேஜ்வா, பிரதமர் இம்ரான் கான் ஆகியோருடன் சந்தித்திருந்தமை, இரு பகுதிகளும் செழிப்புக்காக பரஸ்பர வேலை செய்ய ஒப்புக்கொண்டமையைக் காட்டுகின்றது. இதன் ஓர் அங்கமாக, காஷ்மிர் மக்களின் சுயநிர்ணயத்துக்கான உரிமை தொடர்பாக, ஈரானிய உச்ச தலைவரின் ஆதரவையும், ஈரான் வெளிப்படுத்தியிருந்தது.

ஈரான், பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் தமக்கிடையேயான உறவைத் தொடர்ச்சியாக நன்னிலையில் பேணுதல் அவசியமானது. பிராந்தியத்தில் வல்லரசாண்மையைப் பேணுவதில் ஈரானுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான முறுகலைத் தவிர்ப்பதற்கு, பாகிஸ்தான் ஒரு நடுநிலைமைவாதியாக அமையும் என, ஈரான் கருதுகின்றது. இதற்குக் காரணம், பாகிஸ்தான் எப்போதும் சவூதியுடன் நட்பான உறவுகளைப் பகிர்ந்து கொண்டமையே ஆகும். 1971இல் பாகிஸ்தான், சீனாவுக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை வளர்ப்பதில், உறுதியானதோர் பங்கைக் கொண்டிருந்தது, எனவே, சவூதிக்கும் ஈரானுக்கும் இடையே நல்ல உறவை வளர்ப்பதற்கு, பாகிஸ்தான் திறன் வாய்ந்ததாக அமையும் என ஈரான் கருதுவதில் தவறேதும் இல்லை.

மேலும், ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவின் எழுச்சி, ஈரானுக்கும் அச்சுறுத்தலாக அமைந்தபோது, பாகிஸ்தான் அதன் மூத்த இராணுவ அனுபவம் மற்றும் அதன் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் இராணுவ உதவியுடன் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டமை, ஈரானுக்குத் தொடர்ச்சியாக பாகிஸ்தான் ஒரு பாதுகாப்பு தொடர்பான உறுதியான நட்பு நாடாக இருக்கும் என்பதைப் புலப்படுத்தியது. மறுபுறத்தில், பாகிஸ்தானின் எரிசக்தித் தேவைகளை நிறைவேற்றும் ஒரு பங்காளியாக, ஈரான் இருக்கின்றது. பாகிஸ்தானின் தொழிற்றுறை வலயத்துக்கு ஆற்றலை வழங்குவதற்கான திறனை, ஈரானிய எரிபொருள் உதவியுடன் நிறைவேற்றலாம் என்பதே, பாகிஸ்தானின் கணிப்பாகும். பாகிஸ்தான் ஏற்கனவே, ஈரான் – பாகிஸ்தான் எரிவாயுக் குழாய்த் திட்டத்தில் நன்மை அடைகின்றது. இந்தம் திட்டம், பாகிஸ்தானுக்கு பல அம்சங்களில் ஏற்றது என்பதுடன், பொருளாதார ரீதியில் TAPI எரிவாயு குழாயிலிருந்து வரும் எரிவாயு, சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலையுடன் ஒப்பிடும் போது, பலமடங்கு மலிவானதாகும்.

இப்பின்னணிகளின் மத்தியிலேயே, ஐ.அமெரிக்கா, ஈரானுக்கு எதிரான தடைகளை அண்மையில் விதித்திருந்தமையைத் தொடர்ந்து, ஈரான் வெளிவிவகார அமைச்சர், பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தமை, மேலும், பாகிஸ்தானும் ஈரானும் இணைந்து, ரஷ்யாவுடன் பிறிதோர் உலக வல்லரசாண்மையை நிறுவ முற்படல் – அதன் மூலம் ஐ.அமெரிக்காவின் ஏகபோக வல்லரசாண்மையைத் தவிர்த்தல் என்பதில், பாகிஸ்தான், ஈரானுக்குப் பெரும் பங்காற்றுகின்றது. இது ரஷ்யாவைத் தாண்டி, இவ்விரு நாடுகளுக்கும் கூட தமது பிராந்தியத்தில் ஒரு வல்லரசுத் தன்மையை ஏற்படுத்தும் என்பதில் இரு நாடுகளும் நம்பிக்கை கொண்டுள்ளன.Post a Comment

Protected by WP Anti Spam