By 12 December 2018 0 Comments

கணக்கில் எடுக்கப்படாத ஆணைகளும் அபிலாஷைகளும்!!(கட்டுரை)

மக்கள் தங்கள்தங்கள் அபிலாஷைகளின் அடிப்படையில், அரசியல்வாதிகளுக்கு வழங்கிய ஆணையை, பெருந்தேசிய அரசியல் தலைவர்களும் சிறுபான்மை அரசியல்வாதிகளும் மீறி, அல்லது மதிக்காமல் நடக்கின்ற ஒரு போக்கையும் பொறுப்புக்கூறலில் இருந்து, தப்பியோடப் பார்க்கின்ற எத்தனங்களையும் வெளிப்படையாகவே காணக் கூடியதாக இருக்கின்றது.

காணி ஒன்றைக் குத்தகைக்கு எடுத்தவர், அதில் என்னவேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம் என்று நினைப்பதைப் போல, ஜனநாயக நாடொன்றினது மக்களின் வாக்குகளையும் அதன் ஊடாக, சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற மக்கள் ஆணையையும் தமது தாய்வீட்டுச் சீதனம் போல, அல்லது ஐந்துவருடக் குத்தகைக் காணிபோல, சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் கையாள நினைக்கின்றனர்.

தாம் தலைவர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற போதிலும், உண்மையில் தாம் மக்களின் சேவகர்கள் என்பதையும் நாடாளுமன்றத்திலும் ஏனைய பிரதிநிதித்துவ அவைகளிலும் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் என்பதையும் அரசியல்வாதிகள் வசதியாக மறந்து விடுகின்றனர்.

வாக்குக் கேட்டு வருகின்ற போது, அவர்களிடம் இருக்கின்ற பவ்வியமும் பணிவும், தேர்தலில் வெற்றி பெற்றபிறகு, அதிகாரத் தோரணையாகத் தலைக்கேறி விடுகின்றது. முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் மட்டுமல்ல, ஆட்சியாளர்களிடமும் இந்தப் போக்கு இருப்பதைக் காண்கின்றோம்.

ஜனாதிபதிக்கோ, பிரதமருக்கோ, முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ மக்களுக்கு வழங்கப்பட்ட ஆணை, அவர்களின் எந்த அபிலாஷையை நிறைவேற்றுவதற்காக வழங்கப்பட்டது என்பதை, மறந்து செயற்படுவதையும் ஆணைக்கு முரணாக நடப்பதும் பின்னர், மக்களின் விருப்பம் அறியப்படாமலேயே தங்களது முடிவுகளைத் தான்தோன்றித்தனமாக எடுப்பதும் வாடிக்கையாகி விட்டது.

தேர்தல்களுக்கு இடைப்பட்ட காலத்தில், தமக்கு வாக்களித்த மக்களுடனான இருவழித் தொடர்பாடல், கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டே விடுகின்றது எனலாம். ஓரிரு கட்சிகளையும் விரல்விட்டு எண்ணக்கூடிய அரசியல்வாதிகளையும் தவிர, வேறு எந்தத் தரப்பினருக்கும் மக்களுடனான ஒரு வலைப்பின்னல் கிடையாது.

தமக்கு ஆணை வழங்கப்பட்டுள்ள விடயத்துக்கு அப்பாலான, ஒரு முடிவை எடுக்க முனைகின்ற போது, அதுபற்றி மக்கள் அபிப்பிராயம் என்னவென்று கேட்டறிவதற்கான எந்த ஏற்பாடுகளும் இல்லை. பெருந்தேசியக் கட்சிகளோ, முஸ்லிம் கட்சிகளோ இதற்கு விதிவிலக்கல்ல.

முப்பது ரூபாய் விற்கின்ற ஒரு பிஸ்கட் பக்கற்றில் அதனது சுவை, நிறைகுறைகளைச் சொல்வதற்குத் தொலைபேசி இலக்கம் போடப்பட்டிருக்கும். வீதியில் செல்லும் கனரக வாகனங்களில், இந்த ‘வாகனச் செலுத்துகை எவ்வாறு?’ என்ற கேள்வியுடன், அதன் முதலாளியின் தொலைபேசி இலக்கம் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆனால், உயிரைக் கொடுத்துப் பாடுபட்டு வளர்த்து, மக்கள் ஆணை வழங்கப்படுகின்ற இலங்கை முஸ்லிம் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு பற்றி மக்கள் கருத்தை, ஓர் அமைச்சரை, எம்.பியைத் தொடர்பு கொண்டு, தமது தேவையைச் சொல்வதற்கான ஒரு தொலைபேசி இலக்கமாவது கொடுக்கப்பட்டிருக்கின்றதா?

முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிவதற்காக, கருத்தறிவதற்காக ஒவ்வொரு பிரதேசத்திலும் சந்திப்புகளை நடத்தியதாகச் செய்திகள் வந்ததுண்டா?

அன்றேல், தாம் எடுக்க வேண்டிய ஒரு தீர்மானம் தொடர்பில், முஸ்லிம்களின் அபிப்பிராயங்களைப் பெறுவதற்காகத் தமக்கு வாக்களித்த மக்களை, ஆதரவாளர்களை இந்தத் திகதிகளில் தலைவர் சந்திப்பார் என்று, பத்திரிகைகளில் பகிரங்க அறிவித்தல் வெளியிடப்பட்டதுண்டா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே விடைதான்.

இங்கு மக்கள், ஆதரவுத் தரப்பினர் என்று கூறப்படுபவர்களைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு கட்சித் தலைவரைச் சுற்றி இருக்கின்ற கூட்டத்தையோ, அமைச்சரின் இணைப்பதிகாரிகளையோ, கொந்தராத்துக் காரர்களையோ, சமூக வலைத்தளச் செயற்பாட்டாளர்களையோ, தம்முடன் இருக்கும் ‘ஆமாம்சாமி’ கூட்டத்தையோ, மக்கள் என்ற வகுதிக்குள் உள்ளடக்க முடியாது என்பதை, அழுத்தமாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு மக்களின் ஆணைக்கான, பிரதியுபகாரம் செய்யப்படாமல் விடப்பட்டதும், மக்களின் விருப்பு வெறுப்புகளை அறியாது அரசியல் தலைவர்கள் தீர்மானங்களை, நடவடிக்கைகளை எடுப்பதும் அதுவே மக்களின் தீர்மானம் என்று கூறுவதும் முஸ்லிம் அரசியலில் மட்டுமன்றி பெருந்தேசிய அரசியலிலும் நடந்து வருவதை, நாம் சிலபோதுகளில் அவதானிக்கத் தவறி விடுகின்றோம்.

தேசிய அரசியலைப் பொறுத்தமட்டில், 2005ஆம் ஆண்டு, ஜனாதிபதியாக வெற்றிபெற்ற மஹிந்த ராஜபக்‌ஷ, தனது பிரதான வாக்குறுதியாக இருந்த, யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருதல் என்பதை நிகழ்த்திக் காட்டினார்.

அதுவே இன்னுமொரு தடவை, அவருக்கு ஆணை கிடைக்கவும் வழிவகுத்தது. மஹிந்த ராஜபக்‌ஷவின், 2010 தேர்தல் வெற்றிக்கான ஆணையை, முஸ்லிம்கள் குறிப்பிடத்தக்க அளவில் வழங்கிய போதும், இனவாதம் மேலெழுந்த வேளையில், அவரது அரசாங்கம் அந்த ஆணையை மதிக்கவில்லை.

பேருவளை, அளுத்கம, ஜின்தோட்டை போன்ற இடங்களில், இனவாதத் தீயைக் கொளுத்திவிட்டவர்கள் யாராக இருப்பினும், ஆட்சியும் அதிகாரமும் பாதுகாப்பு அமைச்சும் கூட, ஜனாதிபதியிடமே இருந்தது என்ற அடிப்படையில், முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில், ராஜபக்‌ஷவின் அரசாங்கம் நடந்து கொள்ளவில்லை என்பது, பொதுவான மனப்பதிவாகும்.

இந்தச் சூழமைவை, தமது பிரதான முதலீடாகப் பயன்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதானமாகக் கொண்ட ஐ.தே.முன்னணி, 2015இல் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று, தனது ஆட்சியை உறுதி செய்தது. நாள்கள் நகரநகர, தமிழர்களின் எதிர்பார்ப்புகள் நிவர்த்திக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, நல்லாட்சியை நம்பியிருந்த முஸ்லிம்களுக்கும் ஆன பலன் ஒன்றுமில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது. திகண, அம்பாறைக் கலவரங்கள், இதற்கு நல்ல உதாரணங்களாகும்.

நல்லாட்சி மீது, முஸ்லிம்கள் வைத்திருந்த நம்பிக்கை பெருமளவுக்கு இல்லாது போவதற்கு, இந்தக் கலவரங்களும் அதன்போது பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவால் சட்டமும் ஒழுங்கும் நடைமுறைப்படுத்தப்பட்ட விதங்களும் காரணமாக அமைந்தன.

ஆக, இந்த அரசாங்கமும் முஸ்லிம்கள் தமக்கு எதற்காக ஆணை வழங்கினார்கள் என்பதை மதித்து, இனவாதத்துக்கு எதிராகத் திருப்திப்படக் கூடிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. முஸ்லிம்களின் உணர்வுகளையும் அபிலாஷைகளையும் புரிந்து கொண்டு, நல்லாட்சி செயற்பட்டதாகச் சொல்வதும் கடினமானது. இவ்வாறு, மக்கள் சார்பு அரசியலில், நல்லாட்சியின் தோல்விக்கு, ரணில் விக்கிரமசிங்க மீதே, எல்லோரும் சுட்டுவிரலை இன்று நீட்டுகின்றார்கள். இருந்தபோதும், அதற்கு அவர் மட்டுமே, முழுப் பொறுப்பாளியாக முடியாது.

இந்த நல்லாட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் (ஆணையில்), ஐ.தே.கட்சியின் வாக்குகள், மஹிந்தவுக்கு எதிரான வாக்குகள், சிறுபான்மைக் கட்சிகளின் வாக்குகள், சந்திரிகா அம்மையார், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன போன்றோரில் ஏற்பட்ட ஈர்ப்பால் கிடைத்த வாக்குகளும் உள்ளன.

எனவே, இன்று நல்லாட்சி தோல்வி அடைந்திருக்கிறது என்றால், மேற்சொன்னவர்கள் உள்ளிட்ட, முஸ்லிம் கட்சிகளும் கூட, அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும். இதே அடிப்படையில் நாட்டு மக்கள், குறிப்பாக, சிறுபான்மையினர் வழங்கிய ஆணை, மீறப்படுகின்ற நிகழ்வுகளே இலங்கை அரசியலில் தற்போதும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

ரணிலைப் போலவே, ஜனாதிபதியும் மக்கள் ஆணையுடன் ஒத்திசைந்து செயற்படவில்லை என்றே தோன்றுகின்றது. ஏனெனில், ஜனாதிபதிக்கு நாட்டு மக்கள் வழங்கிய ஆணை என்பது, இப்போது அவர் கூட்டுச் சேர்ந்திருக்கின்ற தரப்பினருக்கு ஆதரவானதல்ல. அதற்கு அதிகாரம் இருந்தாலும், அதற்கான மக்கள் அபிப்பிராயத்தைப் பெற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

சமகாலத்தில், பாரிய எதிர்பார்ப்புகளோடு மக்கள் வழங்கிய ஆணையை, ரணில் விக்கிரமசிங்கவும் மீறியிருக்கின்றார் என்றே கருத வேண்டியுள்ளது. மேட்டுக்குடி அரசியல் போக்கை, இன்றுவரையும் மீள்பரிசீலனை செய்யாதது மட்டுமன்றி, மத்திய வங்கிப் பிணைமுறி உள்ளிட்ட மோசடிகளுக்கும் இன்னோரன்ன தவறுகளுக்கும் ஜனாதிபதி சொல்வது போல், ஆசீர்வாதம் வழங்கியதன் மூலம் அவர், நல்லாட்சியின் தோல்விக்கான பிரதான பொறுப்பை, ஏற்க வேண்டும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆக, தங்கள் தங்களது அதிகார ஆசைக்காகவும் ஆட்சிக் கனவுக்காகவும் ஒரு நாட்டின் மக்கள் வழங்கிய ஆணை மீறப்பட்டுக் கொண்டிருப்பதாகவே தெரிகின்றது. ‘நாடும் மக்களும் என்னபாடு பட்டாலும் பரவாயில்லை, நாங்கள் இரண்டில் ஒன்று பார்ப்போம்’ என்ற கோதாவிலேயே, பெரும்பான்மைக் கட்சிகள் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. இந்தப் பின்னணியில், முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் மேற்குறிப்பிட்ட காலமெல்லாம் பரவலாக, மக்கள் ஆணையை மீறி வந்திருக்கின்றனர்.

ஏதாவது ஒன்றுக்காக, ஆணையைப் பெற்று விட்டு, பிறகு இன்னுமொரு முடிவை எடுக்கின்ற போது, அதுபற்றி மக்களின் அபிப்பிராயத்தைப் பெறாமல், தற்றுணிவான தீர்மானங்களை எடுக்கின்ற போக்குகளை, நெடுங்காலமாகக் காண முடிகின்றது. இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம், முஸ்லிம்களின் அபிலாஷைகள் கறிவேப்பிலையாகக் கையாளப்படுகின்றன.

முஸ்லிம்களுக்கு அநியாயங்கள் நடந்த போது, தேர்தல் வாக்குறுதிகளை அரசாங்கங்கள் மீறிய போது, இனவாதம் தலைவிரித்தாடிய போது, ஜனநாயகமும் இனத்துவ அடையாளமும் கேலிக்குள்ளாக்கப்பட்ட போது, முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்த ஞாபகங்கள் இல்லை. மாறாக, தேர்தல் காலங்களில், அரசியல் மாற்றங்களின் போதே, அவ்வாறான தைரியம் அவர்களுக்கு ஏற்படுவதுண்டு.

இதேவேளை, மக்கள் வழங்கிய ஆணையைப் பொருட்படுத்தாமல் தேசியப்பட்டியல் எம்.பி பதவியோடு, கட்சி மாறுபவர்களும் இருக்கின்றார்கள். மக்களிடம் கேட்காமல் தீர்மானங்களை எடுத்துவிட்டு, ‘மக்களின் விருப்பமும் அதுதான்’ என்று நிறுவ முனைந்த அரசியல் கட்சிகளும் நம்மிடையே இருக்கின்றன.

இந்நிலையில், தேசிய அரசியலில் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில், முஸ்லிம் கட்சிகள் எடுத்துள்ள நிலைப்பாடு பற்றி, நோக்க வேண்டியிருக்கின்றது.

உண்மையில், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள இரு கட்சிகள், மக்கள் ஆணையைப் பெற்றது, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராகவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாகவும்தான். ஆனால், ஜனாதிபதித் தேர்தலில், இதே கட்சிகள் இரண்டும், மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆணை கிடைக்க முன்னின்றன என்பதையும் இவ்விடத்தில் மறந்து விடக் கூடாது.

அந்த வகையில், ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்கு எடுத்திருக்கின்ற முடிவில் சரியும் காணலாம்; இங்கு ஒரு தர்க்கம் இருக்கின்றது. அதாவது, ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது ஜனாதிபதியோ எதற்காக முஸ்லிம்களின் ஆணையைப் பெற்றுக் கொண்டார்களோ, அதை நிறைவேற்றிக் கொடுத்திருக்கின்றார்களா என்ற ஆராய வேண்டியுள்ளது. எனவே, தமது தீர்மானம் எதுவாகினும், அதுகுறித்து மக்கள் கருத்தை அறிந்து, அதன்படி முடிவெடுத்திருக்க வேண்டும்.ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை.

மேற்குறிப்பிட்டது போன்று, முஸ்லிம்களின் உணர்வைக் கணக்கிலெடுத்து, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமும் செயற்படவில்லை என்றால், அவருக்கு ஆதரவளிக்க, முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் முன்னிற்க வேண்டுமா என்ற கேள்வி எழுகின்றது. அதற்காக மஹிந்தவை ஆதரிக்க வேண்டும் என்றோ, அது சரி என்றோ கூறுவதற்கில்லை.

மாறாக, இந்தச் சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்‌ஷ, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க எல்லோருமே முஸ்லிம்களின் ஆணையை, அபிலாஷைகளை மதிக்கவில்லை என்று எடுத்துக் கொண்டால், இவர்கள் யாருக்கும் இந்தச் சமூகம் கடமைப்படவில்லை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.

அதையும் தாண்டி, சில நியாயங்களின் அடிப்படையில் ரணிலுக்கு, மஹிந்தவுக்கு ஆதரவளிப்பது என்ற நிலை வந்துவிட்டால், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, முஸ்லிம்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள, முஸ்லிம் கட்சிகள் முன்வர வேண்டும். ஜனநாயகத்துக்கான ஆதரவு என்று சொல்லி, நமக்குக் கிடைத்திருக்கின்ற வாய்ப்பை, மீண்டும் ஒரு தடவை வீணடித்துவிடக் கூடாது.

முஸ்லிம் கட்சிகள், அரசியல்வாதிகள் தமக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு அமையச் செயற்படுவதுடன், முக்கிய தீர்மானங்கள் எடுக்கின்ற போது, மக்களிடம் இருந்து அபிப்பிராயம் பெறுவதற்கான பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். முஸ்லிம் மக்களின் ஆணையைக் கணக்கிலெடுக்காத ஆட்சியாளர்களிடம், நீண்டகாலமாகக் கிடப்பில் கிடக்கும் முஸ்லிம்களின் அபிலாஷைகளை முன்னிறுத்த வேண்டும்.

முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள், மீள்குடியேற்றம், அரசியல் தீர்வில் உரிய பங்கு, இனவிகிதாசாரப்படியான காணிப் பகிர்வு உள்ளடங்கலான சிவில் சமூகப் பிரச்சினைகளைப் பேரம் பேசி, ஒப்பந்த அடிப்படையில் ஆதரவளிக்க வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்கவைப் பலப்படுத்துவதற்காக, என்றுமில்லாதவாறு ஒன்றுசேர்ந்துள்ள கட்சிகள், ஒன்றுபட்டு முன்வைக்கும் கோரிக்கை கனதியாகவும் இருக்கும். அவ்வாறு உடன்படும் ஆட்சியாளர்கள், அதை நிறைவேற்றித்தர மறுக்கின்ற போது, அவர்களுக்குப் ‘பாடம்’ படிப்பிக்கும் தைரியத்தையும் முஸ்லிம் அரசியல்வாதிகள் பெற வேண்டியிருக்கின்றது.Post a Comment

Protected by WP Anti Spam