By 18 December 2018 0 Comments

வாழைப்பழம் தயாரிக்கிறார் பில்கேட்ஸ்!( மருத்துவம் )

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரராகவும், மென்பொருள் துறையில் மாபெரும் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தியவருமாகவும் நமக்குத் தெரிந்தவர் பில்கேட்ஸ். சமீப வருடங்களாக Bill & Melinda Gates Foundation மூலமாக மருத்துவ உலகிலும், பொது நல சேவையிலும் அதிகம் ஈடுபட்டு வருகிறார்.அதன் ஒரு கட்டமாக, உலகின் மிகச் சிறந்த வாழைப்பழம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கி கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றிருக்கிறார். ஏற்கெனவே மரபணு மாற்றம் மூலம் வாழைப்பழ உற்பத்தி உலகெங்கும் நடைபெற்று வருகிறது.

அந்த மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்தே, இன்னுமொரு ‘ஸ்பெஷல் டச்’ வைத்திருக்கிறார். இன்னும் 2 ஆண்டுகளில் இந்த வாழைப்பழம் உற்பத்தியாகி, சந்தைக்கு வர தயாராக இருக்கிறது. பில்கேட்ஸின் இந்த முயற்சி கலவையான கருத்துக்களை மருத்துவ உலகில் ஏற்படுத்தியிருக்கிறது.

‘இது பெரிய ஆபத்து…’ என்று ஒரு தரப்பினரும், ‘இல்லை.. இது காலத்தின் தேவை’ என்று மற்றொரு தரப்பினரும் கூறி வருகிறார்கள். இது வியாபார ரீதியிலும் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படி என்னதான் செய்கிறார் பில்கேட்ஸ்…

‘‘எங்களுடைய Bill & Melinda Gates Foundation மூலமாக உலகளவில் பல மாறுபட்ட களங்களில் வேலைகளைச் செய்வதற்கான வாய்ப்புகளை வழங்கி வருகிறோம். அந்த முயற்சிகளில் இதுவும் ஒன்று. 2012-ம் ஆண்டு நானும் எனது மனைவி மெலிண்டாவும் ஆஸ்திரேலியா சென்றிருந்தோம்.

அங்கு குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் டேல் என்ற விஞ்ஞானி வாழைப்பழ ஆராய்ச்சியை மேற்கொண்டிருப்பது பற்றி தெரிந்துகொண்டேன். உலகின் மிகச்சிறந்த வாழைப்பழத்தை தயாரிக்கும் ஆராய்ச்சி என்று கேள்விப்பட்டதும் அது எனக்கு சுவாரஸ்யமாகத் தெரிந்தது. ஆர்வத்தையும் அதிகரித்தது. மேலும் அந்த ஆராய்ச்சி ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் பொது சுகாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை அளிக்கக்கூடும் என்பதை தெரிந்து கொண்டேன்.

எங்களுடைய அந்த பயணத்திற்கு முன் வாழைப்பழங்கள் பற்றி மருத்துவரீதியாக அதிகம் தெரியாது. டேல் ஒரு விவசாய விஞ்ஞானி. உலகின் முன்னணி நிபுணர்களில் ஒருவர். அவர் அதுபற்றி விரிவாக விளக்கியதும் அசந்துபோனேன்.

‘சமீபகாலமாக ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் ஏற்றுமதிக்கு வளர்க்கப்படும் கேவெண்டிஷ்(Cavendish banana) எனும் ஒரு வகை வாழையில் பூஞ்சைத் தொற்று ஏற்படுவதால், அதன் உற்பத்தி மிக மோசமாக பாதிப்படைவதாகவும், இந்நிலை நீடிக்குமானால் அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா நாடுகளில் வாழைப்பழ உற்பத்தி பற்றாக்குறை அபாயம் ஏற்படக்கூடும்’ என கூறினார். The new yorker பத்திரிகையில் வாழைப்பழ ஏற்றுமதியின் வரலாற்றைப்பற்றி ஒரு அழகானகட்டுரையும் எழுதியிருந்தார்.

பிற உயிரினங்களிலிருந்து வாழைப்பயிர்களுக்கு மரபணு மூலக்கூறுகளை சேர்ப்பதன்மூலம், பூஞ்சையை எதிர்க்கும் புதுவகை கேவண்டிஷ் வாழைப்பழ வகையை உருவாக்கும் முயற்சியிலும் டேல் இறங்கியிருந்தார்.

டேலின் இந்தப்பணியோடு அதே மரபணு மாற்ற அறிவியலை புகுத்தி சேர்க்கப்பட்ட ஊட்டச்சத்துகளுடன் மேம்பட்ட வாழையை தயாரிப்பில் எங்களுடைய ஃபவுண்டேஷனின் ஆதரவையும் கொடுக்க எண்ணினோம். நோயில்லாத வாழைப்பழத்தை உருவாக்குவது, எங்களைப் பொருத்தவரை இரண்டாம்பட்சம்தான்.

புது சத்துக்களை கொண்ட குறிப்பாக, வைட்டமின் ‘ஏ’ மற்றும் இரும்புச்சத்து கொண்ட எளிதில் செரிக்கக்கூடிய வாழைப்பழத்தை உருவாக்குவதில் டேலுக்கு உதவுவதே எங்களுடைய முக்கிய நோக்கம். டேலின் முயற்சியில் உருவாகும் இந்த வாழைப்பழங்கள் வித்தியாசமானவை. அவர்கள் வெளியில் மற்ற வாழைப்பழங்கள் போலவே இருக்கும்.

ஆனால், வைட்டமின் ‘ஏ’ அதிகம் இருப்பதால், உள்ளிருக்கும் சதைப்பகுதி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். மற்ற வாழைப்பழங்களைப் போல நாம் அப்படியே பயன்படுத்தக் கூடாது. இதை வேக வைத்துதான் சாப்பிட வேண்டும். வாழைப்பழம் ஒரு பொதுவான உணவுதான் என்றாலும், அது வைட்டமின் ‘ஏ’ குறைவாக இருந்தால், நோயெதிர்ப்பு அமைப்புகளைத் தாக்கி பார்வையிழப்பிற்கு வழி வகுக்கும்.

இதை ஏன் முக்கியமாக கருதுகிறேனென்றால் ஆப்பிரிக்காவில் கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த இரண்டு முக்கிய ஊட்டச்சத்துக்குறைவால் பாதிப்படைந்துள்ளனர். வளரும் நாடுகளில் வைட்டமின் ‘ஏ குறைபாடால், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு பார்வையிழக்கும் நிலையை ஏற்படுத்துகிறது. மேலும், இது தொற்றுநோய்க்கு எதிராக போராடும் உடலின் திறனைக் குறைத்து, ஏழை நாடுகளில் அம்மை போன்ற தொற்றுநோய்களால் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை உயர்த்தியுள்ளது.

உகாண்டாவில் மட்டும், இரும்புச்சத்து குறைபாட்டால், 40 சதவீத குழந்தைகள் வளர்ச்சியின்றியும் 73 சதவீதக் குழந்தைகள் ரத்தசோகையினாலும் பாதிப்படைந்துள்ளனர். ஏனெனில், உகாண்டா மற்றும் பல ஆப்பிரிக்க நாட்டு மக்களின் பிரதான உணவாக வாழைப்பழம் இடம்பிடித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், உலகின் கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு அனைத்து முக்கிய உணவு வகைகளையும், அரிசி, சோளம் ஆகியவற்றின் நுண்ணுயிரிய ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சிக்கு எங்கள் ஃபவுண்டேஷன் உதவி வருகிறது’’ என்று இதுபற்றிக் கூறியிருக்கிறார் பில்கேட்ஸ்.

ஜேம்ஸ் டேல் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வெப்பமண்டல பயிர்கள் மையம் மற்றும் உயிர்காப்பு மையத்தின் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். அவர் தன்னுடைய ஆராய்ச்சி பற்றி இப்படி கூறுகிறார். ‘‘வாழைப்பழத்திற்குள் நூற்றுக்கணக்கான வெவ்வேறு வரிசை மாற்றங்களில் மரபணுக்களை செலுத்தும் சோதனைகளை பல கட்டங்களாக முயற்சித்திருக்கிறோம்.

நிச்சயம் எங்கள் அறிவியல் வெல்லும். மனித நுகர்வுக்கு முன்னதாக, மங்கோலிய கெர்பில்ஸால் குரங்கு இனத்திற்கு இந்த வாழைப்பழங்கள் கொடுக்கப்பட்டு, ஆய்வும் நடத்தியாயிற்று. இவற்றை குயின்ஸ்லாந்தில் வளர்த்து, 6 வார கால சோதனைக்காக அமெரிக்காவிற்கு அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில், அதாவது, வரும் 2020-ம் ஆண்டில் உகாண்டா விவசாயிகள் புதுவகை வாழைப்பழங்களை பயிர் செய்வார்கள் என்று நம்புகிறேன்.

எங்களுடைய ஆராய்ச்சிக்கு கை கொடுக்கும் விதமாக மட்டுமின்றி, ஒரு சிறந்த வாழைப்பழத்தை உருவாக்குவதிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பில்கேட்ஸ் செயல்பட்டு வந்திருக்கிறார். கணக்கு வழக்கில்லாத பொருளாதார முதலீடுகளுடன் தன்னுடைய பல ஆண்டுகளையும் இதில் அவர் தியாகம்
செய்துள்ளார்’’ என்று உற்சாகமாகிறார் ஜேம்ஸ் டேல்.

பில்கேட்ஸின் இந்த புதிய முயற்சி பற்றி சித்த மருத்துவர் ராதிகாவிடம் பேசினோம்…‘‘மனிதன் இயற்கையால் உருவானவன். அவனுக்கு இயற்கைதான் எல்லாமே.. அந்த வகையில் உணவு என்பதும் இயற்கையாக விளைவிக்கப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும்.

இயற்கைக்கு மாறான மரபணு மாற்ற பயிர்களை, சித்த மருத்துவத்தில் ஒத்துக் கொள்வதே இல்லை. இயற்கையாக விளையும் பழங்களில் கிடைக்கக்கூடிய இயற்கையான சத்துதான் மனித உடலுக்கு ஒத்துக் கொள்ளும். சித்த மருத்துவத்தில் நாடி பார்த்து, வாத, பித்த, கப தோஷங்களை கண்டறிந்து, அதற்கேற்ற சிகிச்சை அளிக்கிறோம்.

‘சமதோஷ, சம அக்னிச, சம தாது மல க்ரியா, ப்ரசன்ன ஆத்மா, இந்திரிய மனஹ, ஸ்வஸ்த்ய இதி அபிதியதே’ என்று சித்த மருத்துவத்தில் வலியுறுத்தப்படுகிறது. அதாவது மனித உடலில் வாத, பித்த, கப என்னும் மூன்று தோஷங்களும் சம அளவில் இருப்பது, செரிமானம் சரியாக நடைபெறுவது மற்றும் சரியான மல ஜல வெளியேற்றம் இவற்றோடு, மனித ஆன்மாவின் மகிழ்ச்சியான நிலை, உணர்வு உறுப்புகளின் சமநிலை இயக்கம் மற்றும் மன ஆரோக்கியம் இவை அனைத்தும் சரிவர இருக்கும் ஒரு மனிதனே ஆரோக்கியமானவன்’ என்று பொருள்.

இதுபோன்ற செயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவை மனிதன் சாப்பிடும்போது, அந்த தோஷங்களை கண்டிப்பாக தாக்கும். செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு, கழிவுகள் வெளியேற்றம் சரியாக நடைபெறாது.

உதாரணத்திற்கு கடைகளில் விற்கப்படும் நோயில்லாத பிராய்லர் சிக்கனை வாங்கி சாப்பிடும் மக்களின் உடல் சீர்கேட்டையே எடுத்துக் கொள்ளலாம். அடுத்து, அந்த வாழைப்பழத்தில் பூஞ்சை வராமலிருக்க ஏதேனும் ஆன்டிபயாடிக் மருந்துகளை சேர்ப்பார்கள்.

அது பூச்சிகளை மட்டும் அழிப்பதில்லை. அதை சாப்பிடும் மனிதன் உடலில் இருக்கும் நல்ல செல்களையும் சேர்த்து அழித்துவிடும். இதில் எங்கிருந்து ஆரோக்கியம் கிடைக்கப்போகிறது. தவிர, நம் நாட்டிலேயே பலவகையான வாழைப்பழங்கள் கிடைக்கின்றன.

அவை ஒவ்வொன்றும் தனித்தன்மையும், மருத்துவகுணமும், ஊட்டச்சத்தும் மிக்கவை. நமக்கு வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படும் மரபணு மாற்ற வாழைப்பழம் தேவையில்லை’’ என்கிறார்.இரைப்பை மற்றும் குடலியல் சிகிச்சை நிபுணர் சுகுமார் இதுபற்றி தன் கருத்தைப் பகிர்கிறார்.

‘‘மரபணு முயற்சியை ஒரு குறிப்பிட்ட வகை வாழைப்பழத்தில் மட்டும் மேற்கொண்டு, அதை அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளில் சந்தைப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். நம் நாட்டைப் பொருத்தவரை பல வகையான வாழைப்பழங்கள் இன்னும் கூடுதல் ஊட்டச்சத்தோடு கிடைக்கின்றன.

அது மட்டுமல்லாமல், வாழைப்பழம் ஒன்று மட்டுமே ஊட்டச்சத்துக்கு ஆதாரமான பழமாகவும் இல்லை.நம் நாட்டில் எளிதாக கிடைக்கக்கூடிய கேரட், சிவப்பு பூசணிக்காய், கீரை வகைகள், சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்ற காய்கறிகள் மற்றும் தர்பூசணி, மாம்பழம், தக்காளி போன்ற பழவகைகளிலும் அதிக ‘ஏ’ வைட்டமின் சத்து உள்ளது.

நம் நாட்டில் ஏகப்பட்ட வகைகளில் வாழைப்பழங்கள் கிடைக்கின்றன. அவற்றில் இல்லாத ஊட்டச்சத்துக்கள், இந்த மரபணு மாற்றப்பட்ட வாழைப்பழம் கொடுத்துவிடப் போவதில்லை.மேலும், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழைப்பழம் மட்டுமே ‘வைட்டமின் ஏ’ சத்து கிடைப்பதற்கான மூலாதாரமாக இருப்பதாலும், ஊட்டச்சத்து மாத்திரைகளைவிட விலைகுறைவாக இருப்பதாலும் அவர்களுக்கு வேண்டுமானால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட வாழைப்பழம் தேவைப்படலாம்.

தவிர உணவு மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை அதிகஅளவில் எடுத்துக் கொள்வதால் செரிமானத்திற்கோ, குடலியக்கத்துக்கோ எந்த பின்விளைவும் ஏற்படாது. அதிகப்படியான சத்துக்கள், கழிவுகள் வழியாக வெளியேறிவிடும்’’ என்கிறார்.மென்பொருள் துறையில் நிறைய சர்ச்சைகளுடன் வளர்ந்ததைப் போலவே, மருத்துவ உலகிலும் சர்ச்சையை தொடங்கியிருக்கிறார் பில்கேட்ஸ். இதில் என்ன நடக்குமோ பார்க்கலாம்!

பில்கேட்ஸின் இன்னொரு முயற்சி

– தண்ணீர் இல்லா கழிப்பறை

பில்கேட்ஸின் மற்றுமொரு புது முயற்சி தண்ணீர் இல்லாத கழிப்பறை. இதற்காக பல லட்சம் கோடிகளை அவர் முதலீடு செய்திருப்பதிலிருந்தே அதன் சிறப்பை அறியும் ஆவலைத் தூண்டுகிறது.

இந்த புது கண்டுபிடிப்பால், எதிர்கால கழிப்பறைகளில் நீர்வழிக்கான பைப் லைன்களோ ஃப்ளஷ் டேங்குகலோ கூட தேவையில்லை. குழாய்கள் வழியாக வெளியேற்றப்படும் மனித கழிவுகள் தொழிற்சாலைகளில் பிரிக்கப்பட்டு, மின்சாரமாகவும், தூய்மையான நீராகவும் மாற்றப்படுகின்றன.

பீஜிங் நகரில் நடைபெற்ற கழிப்பறை எக்ஸ்போவில், இந்த சிறிய அளவிலான கழிவுப்பொருள் ஆலை மூலம் நீர் எவ்வாறு வடிகட்டப்படுகிறது” என்பதை இதைத் தயாரித்த ஸெடரான் டெக்னாலஜி நிறுவனம் காட்சிப்படுத்தியதோடு செயல்முறை விளக்கத்தையும் அளித்தது. பில்கேட்ஸ் அந்த நீரை குடித்துவிட்டு, “நீங்கள் ஒரு சாதாரண குழாயிலிருந்து பெறும் தண்ணீரைவிட உண்மையில் தூய்மையான நீர் இது.

அதோடு, புதிய தலைமுறைக்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கழிவறை, சுகாதார வசதியில்லாமல் தவிக்கும் 400 கோடி மக்களிடையே நோய் பரவுவதையும் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார். மேலும், உற்பத்தி பெருகப் பெருக, இந்த நீரில்லா கழிப்பறை சாதாரண மக்களின் அன்றாட பயன்பாட்டிற்கு வரும் என்றும் உறுதிபடுத்தியுள்ளார்.Post a Comment

Protected by WP Anti Spam