By 9 January 2019 0 Comments

முஹம்மத் பதவி விலகியது ஏன்? அடுத்து என்ன? (உலக செய்தி)

மலேசியாவின் மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மத், யங் டி- பெர்துவன் அகாங் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவி விலகினார். ஆனால் பதவி விலகியதற்கான எந்தவொரு காரணத்தையும் அவர் குறிப்பிடவில்லை.

ரஷ்யாவின் முன்னாள் மாடல் ஒருவரை அவர் திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் பதவி இறங்கும் அறிவிப்பு வந்திருக்கிறது. ஆனால் அரண்மனையில் இருந்தோ அல்லது மலேசிய அரசுத் தரப்பிலிருந்தோ இந்த திருமணம் குறித்து அறிவிக்கப்படவில்லை.

மன்னர் பதவி இறங்கியது மலேசியாவில் பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியிருக்கிறது. மேலும், உள்ளூர் அரசியலில் ஒரு நுட்பமான மாற்றத்தையும் உண்டாக்கியிருக்கிறது.

மலேசியா அரசியலமைப்பின் செயல்படும் ஒரு முடியாட்சி. அதன் ஒன்பது மாகாணங்களுக்கும் பரம்பரை அரச குடும்பங்கள் உள்ளன. இவர்கள் தான் நாட்டின் அகாங்கை தேர்வு செய்வார்கள்.

அதாவது இந்த அரச குடும்ப சபையில் இருந்து ஒருவரை ஐந்தாண்டு பதவிக்காலத்துக்கு ஆட்சியாளராக தேர்ந்தெடுப்பார்கள்.

சம்பிரதாயமாக அரசராக பணியாற்றும் அந்நபருக்கு குறைவான சட்ட அதிகாரங்களே உள்ளன. ஆனால் கலாசாரரீதியாக அவருக்கு மிகப்பெரிய அரசியல் செல்வாக்கு இருக்கும்.

வெவ்வேறு மாகாணங்களில் இந்த மன்னர் இஸ்லாமின் தலைவராகவும் அங்கீகரிக்கப்படுவார்.

கடந்த 2016-ம் ஆண்டு தனது 47 வயதில் ஐந்தாம் முகமது அரசராக முடியேற்றுக்கொண்டார். மிக இளம் வயதில் மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர்.

தனது பதவிக்காலம் முடியும் முன்னரே பதவியை ராஜினாமா செய்த முதல் அரசரும் இவர்தான்.

தனது பதவிக்காலத்தில் அவர் இரண்டு ஆண்டுகளை மட்டுமே நிறைவு செய்திருக்கிறார். பரிசன் நேஷனல் எனும் தேசிய முன்னணி கட்சிதான் மலேசியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஆட்சி செய்து வந்தது. ஐந்தாம் முகமதுவின் காலகட்டத்தில் பகடன் ஹரப்பன் கட்சி கடந்த மே மாதம் பொதுத்தேர்தலில் வென்று ஆட்சியில் அமர்ந்தது.

கடந்த நவம்பர் மாதம் அரசர் மருத்துவ விடுப்பில் இருந்த சமயத்தில், ரஷ்யாவின் அழகு ராணி ஓக்சானா வியோவொடினா உடன் அவர் திருமணம் செய்து கொண்டதாக காட்டும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைதலத்தில் பரவின.

மலேசியாவின் அரசர்கள் அயல்நாட்டினரை மணப்பதோ, முஸ்லீம் அல்லாதவர்களை மணப்பதோ புதிது அல்ல.

அரண்மனையோ, அரசோ, அரசரோ இதுவரை ஐந்தாம் முகமது பதவி இறங்கியதற்கான காரணத்தை வெளியிடவில்லை.

மாட்சிமை பொருந்திய அரசர் மலேசிய ஆட்சியாளர் மாநாட்டின் செயலருக்கு அனுப்பிய அதிகாரபூர்வ கடிதத்தில் இந்தப் பதவி இறங்குதல் குறித்து விவகாரம் குறித்து ஆட்சியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

அரசர் தனது சொந்த மாகாணமான கேலன்டனுக்கு திரும்பி மாகாண அரசுடனும், கேலன்டன் மக்களுடன் சேர்ந்து அம்மாகாண மக்களின் நலனுக்கு துணை நிற்கவும், அதனை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லவும் தன்னை தயார் படுத்தி வருகிறார் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரதமர் மஹாதீர் முகமதுடன் பதற்றமான உறவு நிலவிய நிலையில், திருமண விவகாரம் மோதல் முற்றிய புள்ளியாக அமைந்தது என பலர் நம்புகின்றனர்.

மஹாதீர் கடந்த மே மாதம் ஐந்தாம் முகமது முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார். அவர் பிரதமராக பதவியேற்கும் நிகழ்வு எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக நேரம் எடுத்தது. இதற்கு அகாங் காரணம் எனப் பலர் கூறினாலும், அரண்மனை இதனை மறுத்தது.

தற்போதைய துணைப் பிரதமராக இருக்கும் வான் அஜிஜா வான் இஸ்மாயிலுக்கு ஐந்தாம் முகம்மது பிரதமர் பதவி வாய்ப்பை வழங்கியதாக கூறப்படுகிறது.

மஹாதீருக்கும் நாட்டின் மன்னர்களுக்கும் ஏற்கனவே பதற்றமான உறவு இருந்தது. அவர் தமது முதல் ஆட்சிக்காலத்தில் அரசர்களின் அரசியல் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தினார்.

இது குறித்து மஹாதீர் நேரடியாக கருத்து தெரிவிக்காதபோதிலும் தனது தனிப்பட்ட வலைப்பதிவில், சட்டம் அனைவருக்கும் சமமானது என்று கூறியதுடன், பதவியேற்பு சமயத்தில் தனக்கு இருந்த அதிருப்தி பற்றி ஜாடையாக ஒரு குறிப்பையும் எழுதியிருந்தார்.

ஐந்தாம் முகமது பதவி இறங்கியது குறித்து வருத்தப்பட்டதாக கூறிய துணைப் பிரதமர் வான் அஜிஜா, தனது கணவரும் பார்டி கெடிலியன் ரக்யாத் கட்சி தலைவருமான அன்வர் இப்ராஹிம், குதப் புணர்ச்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவிக்க நேர்ந்தபோது அவரை மன்னர் ஐந்தாம் முகமது மன்னித்து விடுதலை செய்ததற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

´´மலேசியாவில் ஒரு புது வரலாறு உருவானநிலையில் அவர் பதவியில் இருந்தார். அவர் அகாங் பதவி இறங்குவது வருத்தமாக இருக்கிறது ´´ என அவர் கூறியதாக மலாய் மெயில் இணையதளம் கூறியுள்ளது.

கேலன்டன் முதல்வர் அஹமத் யகோப் பேசுகையில், அரசர் பதவி இறங்குவதற்கான எந்த முன் அறிகுறியையும் தான் பார்க்கவில்லை என்று கூறினார். மாகாண அரசு அவரது முடிவை ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மலாய்சியாகினி செய்தி தளம், ஐந்தாம் முகமது பிரபலமாக இருந்தார் ஆனால் நாட்டின் தலைவராக அவர் விரும்பியதில்லை என எழுதியிருக்கிறது.

மலேசிய ஆட்சியாளர்கள் சபை அடுத்த நான்கு வாரங்களில் அடுத்த மன்னர் யார் என்பதை தீர்மானிக்கும். அதுவரையில் அகாங் மருத்துவ விடுப்பில் இருந்தபோது அவரது பணிகளை கவனித்துக்கொண்ட நஸ்ரின் ஷா தொடர்ந்து அப்பணியை மேற்கொள்வார்.

அரியணை ஏறுவதற்கு அடுத்த வரிசையில் பஹாங் சுல்தான் அஹமத் ஷா இருக்கிறார். ஆனால் அவர் உடல் நலமின்றி இருப்பதால் அரச கடமைகளை செய்வதில்லை என்கிறது உடுசன் எனும் மலேசிய நாளிதழ்.

அடுத்தடுத்த இடங்களில் ஜோகர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர், நஸ்ரின் ஷா இருக்கின்றனர். தற்போதைய பிரதமருடன் இவ்விருவருக்கும் வெவ்வேறு விதமான உறவு இருக்கிறது.

ஜோஹரின் அரச குடும்பத்துடன் நெருங்கிய உறவு கொண்டவர் மஹாதீர். இரண்டு தாக்குதல் தொடர்பான வழக்குகளின் குற்றவியல் நடைமுறையில் இருந்து சுல்தானை விடுவிக்க 90களில் அவர் பிரசாரம் செய்தார்.

2016-ல் ஜோஹர் சுல்தான் அகாங் பதவியை ஏற்க மறுத்ததாக ஃப்ரீ மலேஷியா டுடே எனும் பத்திரிகை தெரிவித்துள்ளது.

சுல்தான் நஸ்ரின் அரசியல் ரீதியாக நடுநிலை எடுத்துவந்திருக்கிறார். தனது பதவிக்கான அரசியலமைப்பு அதிகார வரம்புக்குட்பட்டு அவர் நடந்து கொண்ட விதம் பரவலாக மதிக்கப்பட்டது.Post a Comment

Protected by WP Anti Spam