By 1 February 2019 0 Comments

கிச்சன் டைரீஸ் ! (மகளிர் பக்கம்)

புதிய புதிய டயட்கள் இன்று உலகம் முழுவதும் ஒரு மதம் போல் பரவிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு டயட்டிலும் பல ல்டசக்கணக்கானவர்கள் தடாலடியாக குதித்து அதை மிகப் பெரிய கம்யூனிடியாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். சிலர், பலதரப்பட்ட டயட்களையும் முயற்சித்து தானே ஒரு க்ரூப் ஆரம்பித்துவிடுவதும் உண்டு. எது எப்படி இருந்தாலும் மக்களுக்கு டயட் தொடர்பான வழிப்புணர்வு கணிசமாக உயர்ந்திருப்பது உண்மை. இன்றைய தேதியில் உலகம் முழுவதும் கலக்கிக்கொண்டிருக்கும் டயர் க்ரூப்களில் குறிப்பிட வேண்டியவற்றில் வெயிட் வாட்சர்ஸ் (weight watcher) க்ரூப்பும் உண்டு.

உலகம் முழுவதும் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஒரு மிகப்பெரிய வெயிட் லாஸ் டயட் கம்பெனியாக உயர்ந்துள்ள இதனை ஜீன் நைடெட்ச் என்ற ப்ரூக்லினைச் சேர்ந்த இல்லத்தரசி ஒருவர்தான் வடிவமைத்தார் என்றால் நம்ப முடிகிறதா? ஆமாம்! 1963ம் ஆண்டில் நைடெட்ச் தன்னுடைய தோழிகளை இணைத்து ஒரு க்ரூப் உருவாக்கி இந்த வெயிட் லாஸ் டயட்டை முன்னெடுத்தார். கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று இது ஒரு டயட் ப்ளான் சாம்ராஜ்யமாக நிற்கிறது. புகழ்பெற்ற மருத்துவர்கள், உணவியல் நிபுணர்கள் பலர் இந்த க்ரூப்பின் டயட் பிளான்களை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

இவர்களின் புரோகிராம்கள் சுய உதவிக்குழுக்களாகச் செயல்படுவது, இன்னொரு க்ரூப் மூலம் பரஸ்பரம் உதவிக்கொள்வது, பாயிண்ட் எனப்படும் மதிப்பெண் வழங்கும் முறை ஆகியவை மூலம் திட்டமிட்டு இயங்குவதால் இதற்கு நல்ல ரிசல்ட் இருப்பதாகத் தெரிகிறது. பி.எம்.ஐ எனப்படும் உயரத்துக்கு ஏற்ற எடை விகிதம் இருபது முதல் இருபத்தைந்து வரை இருக்க வேண்டும் என்பதை இந்த க்ரூப் இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. இந்த டயட்டில் பொதுவான செயல்திட்டம் ஏதும் இல்லை. ஒவ்வொரு நபருக்கும் ஏற்ற தனிப்பட்ட டயட் முறை பரிந்துரைக்கப்படுகிறது. ஆன்லைனில் உள்ள வழிகாட்டுதல்கள் மூலம் இவற்றை ஒருவர் பின்பற்ற முடியும்.

அதே சமயம் குழுவாக இணைந்து பணியாற்றுவது இந்த டயட்டுக்கு முக்கியம். ஏதேனும் ஒரு குழுவில் உறுப்பினராக நீங்கள் இணைய வேண்டும் அல்லது ஒரு குழுவை நீங்கள் உருவாக்க வேண்டும். அப்போதுதான் எடைக் குறைப்பு தொடர்பான குறுகியகால, நீண்டகால இலக்குகளை நிர்ணயிப்பதும், அதை நோக்கிப் பயணிப்பதும் எளிதாக இருக்கும் என்கிறார்கள். எனவே, தொடர்ச்சியான சந்திப்புகள், உணவு தொடர்பான உரையாடல்கள், பகிர்தல்கள் இங்கு முக்கியம். உங்கள் டயட் மற்றும் உடற்பயிற்சி தொடர்பான விவரங்கள் உங்கள் குழுவின் மற்ற உறுப்பினர்களால் கண்காணிக்கப்படுவதால் நீங்கள் சிரத்தையாக இதைப் பின்பற்றுவீர்கள் என்பதுதான் இதன் லாஜிக்.

எந்த வகையான உணவு மீதும் கட்டுப்பாடோ, ஒதுக்குதலோ இவர்களின் டயட் முறையில் இல்லை என்று சொன்னாலும் நபர் சார்ந்து இது வேறுபடக்கூடும். மேலும், ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் இத்தனை பாயிண்ட் என்று மதிப்பெண் வழங்கப்படுவதால் உங்களை நீங்களே கண்காணிக்கவும் வசதியாக இருக்கும். இதற்கான, ஆப் வசதிகூட இன்று வந்துவிட்டது. உங்கள் மொபைல் மூலமே எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப், யூட்யூப் வீடியோ என்று உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் க்ரூப்புடன் நீங்கள் தொடர்பில் இருக்க முடியும்.

பாயிண்டுகள் நீண்ட கால அளவில் இலக்கை சாதிக்க உதவுகின்றன. கொழுப்பு, சர்க்கரை, புரோட்டின் என ஒவ்வொரு உணவு வகைக்கும் ஒவ்வொரு பாயிண்ட் உள்ளது. அதிக புரோட்டின் உணவை ஒருவர் உண்டால் குறைவான பாயிண்டுகள்தான் கிடைக்கும். எவ்வளவு குறைவாக ஒருவர் உண்கிறாரோ அவ்வளவு சிறப்பாக பாயிண்டுகள் அதிகரிக்கும். அதிக பாயிண்ட் எடுக்க வேண்டும் என்றால் அளவில் குறைவாகவும் தரத்தில் நிறைவாகவும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவதன் மூலம் இந்த குழுவில் உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருகிறார்கள்.

கடை மாவுக்கு தடா போடுங்க!

கடைகளில் தோசை மாவு பாக்கெட்டுகள் தற்போது கிடைக்கின்றன. இந்த மாவு புளிக்காமல் இருப்பதற்காக கால்சியம் சிலிகேட் சேர்க்கப்படுகிறது. கடை மாவு சுகாதாரமற்ற தண்ணீரில் தயாரிக்கப்படுவதால் இதில் இ-கோலி பாக்டீரியா (மலக்கழிவில் இருக்கும் கிருமி) போன்ற மோசமான நோய்தொற்றுகள்கூட இருக்கும். இவற்றைச் சாப்பிடும்போது வயிற்றுப்போக்கு முதல் வலிப்பு வரை பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எனவே, இயன்றவரை கடையில் மாவு வாங்குவதைத் தவிர்த்துவிடுங்கள்.

பிரியாணி பிறந்த கதை

பிரியாணியின் வரலாற்றை ஆராய்ந்தால் நாம் ஆதித் தமிழகத்துக்கே செல்ல வேண்டியது இருக்கும். ஊண்சோறு என்றும் புலால் என்றும் நம் முன்னோர் உண்டது பிரியாணியின் வேறொரு வடிவம்தான். ஊண் சோறு பற்றிய குறிப்புகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியங்களிலேயே நிறைய கிடைக்கின்றன. அரிசி, நெய், மஞ்சள், மிளகு, புன்னை இலை ஆகியவற்றோடு இறைச்சியைச் சேர்த்து வேகவைத்துச் சாப்பிடுவதே ஊண் சோறு. இதை ஊண் துவையடிசில் என்றும் சொல்வார்கள்.

மதுரைக் காஞ்சி, நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு போன்ற இலக்கியங்களில் இந்த ஊண்சோறு பற்றி அத்தனை செய்திகள் உள்ளன. சரி நாம் பிரியாணிக்கு வருவோம். பிரியாணி என்ற சொல்லின் பூர்விகம் பாரசீகமாய் இருக்கக்கூடும். பெர்சிய மொழியில் ப்ரியாண் என்றால் வறுக்கப்பட்ட என்று பொருள். ஆனால், சிலர் அரேபி யாதான் இதன் பூர்விகம் என்று த(இ)லையில் அடித்துச் சத்தியம் செய்கிறார்கள். தைமூர் பதினான்காம் நூற்றாண்டில் இந்தியா வந்தபோது அவருக்கும் அவரது படையினருக்கும் பிரியாணி சமைத்துப் பரிமாறப்பட்டதாக ஒரு வரலாற்றுத் தகவல் உள்ளது.

உலகம் முழுதும் கடலோடி வணிகம் செய்த அரேபியர் இதற்கும் முன்பாகவே கேரளத்துக்கு பிரியாணியைக் கொண்டுவந்துவிட்டனர் என்கிறார்கள். போர்க்களத்துக்கு வந்த மொகலாயப் பேரரசி மும்தாஜ், வீரர்கள் ஆரோக்கியமற்ற உணவின்றி வாடுவதைக் கண்டு சமைத்துப் படைத்த உணவே பிரியாணி என்று ஒரு வாய்வழி வரலாறும் உள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளை ஆண்ட சுல்தான்கள் காலத்தில்தான் பிரியாணி முக்கிய உணவாக மாறியது.

ஜீரக சாலா அல்லது ஜீரக சம்பா அரிசி பிரியாணிக்கு உகந்தது. பாரசீக முறைப்படி தயாரிக்கப்படும் பிரியாணி மற்ற முறைகளில் இருந்து சிறிது மாறியதாக உள்ளதைக் குறிப்பிட்டு இதுதான் ஒரிஜினல் பிரியாணி என்கிறார்கள் சிலர். ஆனால், வித்தியாசமான பிரியாணிகள் அங்கு மட்டும் இல்லை பல இடங்களிலும் உண்டு. லக்னோவின் அவாதி பிரியாணி, கல்கத்தா பிரியாணி, தாகிரி பிரியாணி, ஹைதராபாதி பிரியாணி, ஆற்காடு பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, வாணியம்பாடி பிரியாணி என ஒவ்வொரு ஏரியாவிலும் ஒவ்வொரு பிரியாணி தன் மணத்தாலும் ருசியாலும் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.

ஃபுட் சயின்ஸ்

இனிப்பு என்றால் ஆதி மனிதனுக்கு தேனும் பழங்களும்தான். பின்னர் நாகரிகம் வளர வளர இயற்கையாகக் கிடைக்கும் இனிப்புப் பொருட்களை சிலவகையான ப்ராசஸ்கள் மூலம் சர்க்கரை தயாரிக்கும் முறையைக் கற்றுக்கொண்டோம். அப்படித்தான், கருப்பட்டி, வெல்லம், பனங்கற்கண்டு போன்றவற்றை உருவாக்கினோம். இன்று, அஸ்கா எனும் வெள்ளைச் சர்க்கரையில் தொடங்கி சுகர் சிரப் வரை விதவிதமான இனிப்புகள் உள்ளன. சர்க்கரையில் உள்ள க்ளூக்கோஸ் உடனடியாக உடலில் ஆற்றலாக மாறுவதால் இனிப்பை உண்ணும் போது தடாலடி எனர்ஜி கிடைக்கிறது.

மிக அடிப்படையில் சர்க்கரை என்பது சுக்குரோஸ் (Sucrose) எனப்படும் கார்போஹைட்ரேட்தான். இந்த சுக்ரோஸ் தாவரங்களில் இயல்பாகவே உருவாகிறது. தாவரங்களின் வேர்கள் நீரிலும் மண்ணிலும் உள்ள தாதுஉப்புக்கள் எனும் மினரல்ஸை உறிஞ்சுகின்றன. தாவரங்களின் இலைகள் காற்றில் உள்ள கார்போஹைட்ரேட்டையும் அதன் பச்சையம் சூரிய ஒளியில் உள்ள க்ளோரோபில்லையும் உறிஞ்சுகின்றன. தாவரங்களில் இந்த வேதிப்பொருட்களின் கூட்டணியில்தான் சுக்ரோஸ் உருவாகிறது. இந்நிகழ்வை போட்டோசிந்திசிஸ் என்கிறார்கள்.

இந்த சுக்ரோஸ்தான் பழங்களிலும் காய்கறிகளிலும் நட்ஸ்களிலும் நிறைந்திருக்கின்றன. இதைத்தான் நாம் ப்ராசஸ் மூலம் பிரித்தெடுத்து சர்க்கரையாக மாற்றிக்கொள்கிறோம். சர்க்கரையின் மூலக்கூறு கட்டுமானம் எளிமையானது. ஒரு குளுகோஸ் உடன் ஒரு ஃப்ரக்டோஸ் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும். குளுக்கோஸ், ஃப்ரக்டோஸ், கேலக்டோஸ் என்ற மூன்று எளிமையான சர்க்கரைப் பொருட்கள் இணைந்துதான் பலவகையான சிக்கலான சர்க்கரைகளை உருவாக்குகின்றன. இந்த அடிப்படையான சர்க்கரைகளை மோனோசேச்சரைட்கள் என்பார்கள். இதுபோலவே, மோனோசேச்சரைட்ஸ், டிசாஸரைட்ஸ், பாலிசேச்சரைட்ஸ் என்று மூன்றுவகையான சர்க்கரைகள் உள்ளன.

இதில் மோனோசேச்சரைட்ஸ் எனப்படும் ஒற்றைச் சர்க்கரையில் குளுக்கோஸ் எனும் டெக்ஸ்ட்ரோஸ், ஃப்ரக்டோஸ் எனும் பழச் சர்க்கரை, கேலக்டோஸ் எனும் பாலில் உள்ள சர்க்கரை ஆகிய மூன்றுவகை உள்ளன. டிசாசரைட்ஸ் எனப்படும் இரட்டை மோனோசேச்சரைட்ஸ் கலவையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அஸ்கா ஒருவகை இதையும் சுக்ரோஸ் என்கிறார்கள். ஆனால் இதில், குளுக்கோஸ், ஃப்ரக்டோஸ் இரண்டுமே உள்ளன. லாக்டோஸ் என்பது குளுக்கோஸும் கேலக்டோஸும் இணைந்த கலவை. இது பாலில் உள்ளது. குளுக்கோஸுடன் இன்னொரு குளுக்கோஸ் இணையும்போது மால்டோஸ் உருவாகிறது. பத்துக்கும் மேற்பட்ட மோனோ சேச்சரைட்ஸ் இணையும்போது அது பாலிசாச்சரைட்ஸ் ஆகிறது. தாவரங்களில் உள்ள ஸ்டார்ச் எனப்படும் குளுக்கோஸ் பாலிமர் இதுதான்.

எக்ஸ்பர்ட் விசிட்

இந்தியாவின் புகழ்பெற்ற டயட்டீஷியன் ஷிகா சர்மா எப்போதும் இளமையான தோற்றத்தை தரும் முதுமைக்கு எதிரான உணவுகள் எவை என்று சொல்கிறார் கவனியுங்கள். ப்ளூபெர்ரி, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள உணவுகள், மல்லிகைப்பூ தேநீர், பச்சைக் காய்கறிகள், அவகேடோ, குளிர்நீர் மீன்கள், கடல் உணவுகள், தக்காளி, வால்நட், கற்றாழை. இந்தப் பத்தும்தான் முதுமையைத் தள்ளிப்போடும் முத்தான உணவுகள் என்கிறார் நிபுணர். எனவே, இயன்றவரை இவற்றை உணவில் சேர்த்திடுங்கள்.

உணவு விதி 16

உங்கள் வண்ணத்தில் உள்ள காய்கறிகளைத் தவிர்க்காமல் பயன் படுத்துங்கள். இது என்ன வித்தியாசமான உணவு விதி என்று சிந்திக்காதீர்கள். அமெரிக்காவின் புகழ்பெற்ற உணவியல் நிபுணர் மைக்கேல் பொல்லான் இதை அவசியமான விதி என்று பரிந்துரைக்கிறார். நம் உடலின் கட்டு மானம்தான் நம் தோலின் நிறத்தை உருவாக்குகிறது. இது நமக்கு மட்டும் அல்ல; இயற்கையான காய்கறிகள், பழங்களுக்கும் பொருந்தும். எனவே, நமது சரும நிறத்துக்கு காய்கறி, பழங்களை உண்ணும்போது அதன் சத்துக்கட்டுமானம் இயல்பாகவே நமக்கு ஏற்றதாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இதனால், நம் சருமம் மட்டும் அல்ல உட்புறமும் ஆரோக்கியமாகிறது.Post a Comment

Protected by WP Anti Spam