By 17 March 2019 0 Comments

கறையா, இனி கவலை வேண்டாம்!! (மகளிர் பக்கம்)

‘எத்தனை பேன்டி வாங்கினாலும் உடனே கிழிஞ்சிடுது, எவ்ளோ பெரிய பிராண்ட் போனாலும் சரி, எப்பேர்பட்ட சோப் பவுடர் பயன்படுத்தினாலும் சரி அதுல பட்ட கறைய மட்டும் சுத்தம் பண்ணவே முடியலை’… இதுதான் பெண்கள் பலரின் வெளியே சொல்லமுடியாத கவலையாக இருக்கும். மாதவிடாய் கூட மூன்று நாட்கள் பிரச்னைதான். ஆனால் இதுதான் வருடம் முழுக்க பெரிய பிரச்னையாக நிற்கும். காரணம் வெள்ளைப்படுதல், பிறப்புறுப்பில் இருந்து வெளியேறும் சுரப்பு, ஏன் சில நேரத்தில் தும்மல், இருமல், சிரிப்பில் கூட நம்மையறியாமலேயே ஒரு சில துளிகளில் சிறுநீர் வெளியேறிவிடுவது.

இதெல்லாம்தான் நம் பேன்டியைக் குறிவைக்கும் பிரச்னைகள். இதில் வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை, அதற்குதான் இந்த பேன்டி லைனர் என்கிறார் அரோமா தெரபிஸ்ட் கீதா அசோக். ‘‘இதெல்லம் விட பெரிய பிரச்னையே சிலருக்கு பேன்டி கொஞ்சம் ஈரமா இருந்தாலும் அப்படியே அலர்ஜி, அரிப்பு, எரிச்சல், கருப்பா தோல் நிற மாற்றம் கூட வரும். வீட்டிலேயே இருக்கற பெண்கள் உள்ளாடைகளை போட்டுக்காம கூட இருக்கலாம். ஆனால் வெளியே செல்லும் பெண்கள், வேலைக்குப் போகும் பெண்களுக்கு இந்தப் பிரச்னை சாதாரணம். சில பெண்கள் பஸ்ல ஏறும் போதும் இறங்கும் போதும், ஸ்பீட் பிரேக்ல வண்டியை ஓட்டும் போது இப்படியான நேரங்கள்ல கூட சங்கடங்களை சந்திப்பாங்க.

இதுக்கெல்லாம் ஒரே தீர்வு பேன்டி லைனர்கள்தான். பார்க்க நாம மாதவிடாய் கால நேப்கின்கள் மாதிரிதான் இருக்கும். ஆனால் இது இன்னும் கொஞ்சம் லேசா, மெலிதா இருக்கும். இது மாதவிடாய் காலத்தில் நேப்கினுக்கு மாற்று கிடையாது. மாதவிடாய் முடிந்தும் சிலருக்கு ஒண்ணு, ரெண்டு துளிகள் படும், அதற்கு இதைப் பயன்படுத்தலாம். மேலும் இப்போவெல்லாம் பெண் குழந்தைகளுக்கு வயசுக்கு வரும் நிகழ்வையெல்லாம் முன்கூட்டியே சொல்லிக்கொடுத்து பள்ளிகள்ல சங்கடம் ஆகாம இருக்க இந்த பேன்டி லைனர்களை அவங்க ஸ்கூல் பேக்குகள்ல வெச்சு அனுப்பலாம்.

திடீர்னு நேப்கின், ரத்தப்போக்கு இதெல்லாம் பார்த்து பயப்படாம இருக்க முன்கூட்டியே அவங்களை தயார்படுத்தும். ஒரு சின்ன கிளட்ச் பர்ஸ், ஹேண்ட்பேக் இப்படி எதுலயும் நாம இந்த லைனர்களை வெச்சுக்கலாம்’’ என்னும் கீதா அசோக் லைனர்களை எப்படித் தேர்வு செய்ய வேண்டும் என்பதை பகிர்ந்தார். ‘‘ரெண்டு வகையான லைனர்கள் இருக்கு. ஒண்ணு பேன்டி லைனர்கள், இன்னொன்னு பெடல் பேட். லைனர்கள் அப்படியே நேப்கினுடைய இன்னொரு வகையா மெலிதா இருக்கும். அதே பெடல் பேட் பார்க்க ஒரு பெரிய இலை வடிவத்துல இருக்கும். சிலர் சரியான அளவுகள் கச்சிதமா பொருந்தக்கூடிய உள்ளாடைகளை பயன்படுத்துவாங்க.

அவங்கள்லாம் இந்த பெடல் பேட் பயன்படுத்தலாம். இதை வெஜினல் பேட்னு கூட சொல்வாங்க. இந்த வகை லைனர் நம்ம வெஜினாவுடைய வெளிப்புற சுவருக்குள்ள பொருந்துகிற மாதிரி உள்ள வைத்துக் கொள்ளும் வகை பெடல் பேட். இன்னமும் உட்புறமா பயன்படுத்துகிற மாதவிடாய் கப், டேம்பூன் இவைகளே இன்னும் இந்தியா மாதிரியான நாடுகள்ல பிரபலமாகாததால இந்த பெடல் பேட் கூட அவ்வளவா இன்னும் பெண்கள் மத்தியில பரவல. அதனால சாதாரணமாக பயன்படுத்தக்கூடிய லைனர்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

நம் இடைப்பகுதி எந்த அளவுக்கு பெரிதோ அதே அளவுக்கு இந்த லைனர்களையும் நாம வாங்கிக்கலாம். இதுலயும் பகல், இரவு இப்படி வேறுபடுத்தி Xl, XXl சைஸ்களும் இருக்கு. ஏற்கனவே நேப்கின் செலவே எனக்கு பெரிதா இருக்கு இப்போ இந்த லைனர்கள் வேறயா என்கிற கேள்வி எழலாம். இதுக்கு தீர்வா துவைத்து திரும்ப பயன்படுத்துற துணி லைனர்கள் இருக்கு. இன்னும் நிறைய விஷயங்கள் பெண்கள் பயன்படுத்துறதே இல்லை. சிலருக்கு எப்பேர்பட்ட உள்ளாடைகள் அணிந்தாலும் மார்புக் காம்புகள் தனியா வெளிப்படுவதன் மூலம் சங்கடத்தை உண்டாக்கும்.

அவங்களாம் தனியா ஒரு மார்பக பேட் பயன்படுத்தலாம். பாடி ஸ்பிரே, பெர்பியூப் அலர்ஜி எனில் அக்குள் பகுதிகளில் வியர்வை வெளியேறி ஈரமாகி, துர்நாற்றம் ஏற்படுத்துறதைத் தடுக்க ஸ்வெட் பேட் பயன்படுத்தலாம். இதெல்லாம் வெறும் ஒரு பீஸ் ரூ.10 முதல் கிடைக்குது. ஒருமுறை இந்த பேட்களையெல்லாம் பயன்படுத்திப் பாருங்க நிச்சயம் மேல துப்பட்டாவோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பேன்டி வாங்குகிற பிரச்சனைகளோ, ஏன் அக்குள் பகுதிகள்ல எதிர்பாராத விதமா உடை கிழிவது போன்ற பிரச்னைகள் ஏற்படாது. இந்த பிரச்சனைகளை தவிர்த்தாலே ஆரோக்கியமாக வாழலாம்’’ என்றார்.Post a Comment

Protected by WP Anti Spam