By 9 April 2019 0 Comments

அழகான கூடு!! (மகளிர் பக்கம்)

ஹால் தொடங்கி பாத்ரூம் வரை எப்படி அழகுப்படுத் துவது, பராமரிப்பது என்று இதுவரை பார்த்திருக்கிறோம். மேலும் நம் வீட்டை அழகாக பராமரிக்க ஹோம் மேக்கர் டிப்ஸ் சில… வெளியே சென்று வரும்பொழுதெல்லாம் பொருட்களை வாங்கி வந்து சேர்த்து வைப்பது என்பது சிலரின் பழக்கம். வாங்கி வரும் பொருளுக்கு சரியான இடம் உள்ளதா என முதலில் பார்க்க வேண்டும் அல்லது முன்பே இடம் நிரப்பப்பட்டு விட்டால் புதியதை வைக்க புதிய இடம் அல்லது அலமாரி ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக, அழகிய பொம்மை ஒன்று வாங்கி வந்தோம் எனக் கொள்வோம். அதன் உயரம் அலமாரிக்குள் புகாதவாறு இருக்கலாம். அப்படியானால் என்ன செய்யலாம்? சுவற்றில் பொருத்தும்படியான சிறிய முக்கோண வடிவ ஸ்டாண்டு ரெடி செய்து, அதன் மேல் வாங்கிய பொம்மையை வைக்கலாம்.

இதனை ‘வால் பிராக்கெட்’ என்று சொல்வார்கள். இப்பொழுது புதிய வீடுகளில் ‘ஷோ கேஸ்’ அமைக்கும் போது, இந்த மாதிரிதான் ‘செட்’ செய்கிறார்கள். நம் சுவரும் பாதிக்காது. இடமும் மிச்சம். பார்க்கவும் நல்ல அழகு. சுவர் மூலைகளில் கண்ணாடி தட்டுகள் பொருத்தி உயரத்திற்கேற்றவாறு வடிவமைக்கலாம். நடு சுவரிலும் இங்குமங்குமாக, இருபுறமும் சரியான விகிதத்தில் முழுவதும் கண்ணாடியில் அமைத்து ேஷாகேஸ் ெசய்யலாம். கண்ணாடியில் தூசி படிந்தால் எளிதில் தெரிந்து விடும் என்பதால் அவ்வப்பொழுது துடைத்துப் பராமரிப்பது அவசியம். வீட்டிற்கு என ஃபர்னிச்சர் வாங்கும்பொழுது அதன் அடிப்பாகத்தில் சுழலும் சக்கரம் இருக்கிறதா என பார்த்து வாங்கலாம். இடம் மாற்றிப் போட்டாலும், தரையில் கீறல் விழுந்து பாதிக்காது.

மரத்தால் ஆன ஃபர்னிச்சர்களாக இருந்தால்கூட அடி ‘புஷ்’ (bush) அல்லது ‘வீல்’ (wheel) அமைப்பை தந்து தரையில் ‘கீறல்’ விழாதவாறு பார்த்துக் கொள்ளலாம். கை அலம்பும் இடத்தை ஒட்டி உள்ள டைல்ஸ்கள் விரிசல்பட்டு இருந்தால், டைல்ஸ் ஸ்டிக்கர் ஒட்டி அந்த இடத்தை மிக அழகாக்கி விடலாம். விலையும் குறைவு. ஒட்டுவதும் சுலபம். பார்க்கவும் அழகு. அதே போன்று கிச்சன் மேடையின் கீழ் பல இடங்களில் விளம்புகள் அழுக்கடைந்திருக்கும் சில இடங்களில் வெல்லப்பாகு அல்லது புளித்தண்ணீர் போன்றவை பட்டு கறை படிந்திருக்கும். அந்த மாதிரி இடங்களில், நல்ல டார்க் கலரில் தண்ணீர் உறிஞ்சும் ‘வால் ஸ்டிக்கர்’ வாங்கி சைஸ்படி வெட்டி ஒட்டி விடலாம். ஃபிரிட்ஜ் மேலே ஒரு அழகான பவுச்சுடன் கூடிய ஷீட் போட்டு வைக்கலாம்.

அதில் அவசரத் தேவைக்கு ஒரு கத்திரி, டிஷ்யூ பேப்பர், பேனா மற்றும் சிறிய நோட்புக் வைத்துக் கொள்ளலாம். கேஸ் சிலிண்டர் தீரும் நாள், புக் செய்த நேரம், தீர்ந்த மளிகைப்பொருட்கள் போன்றவற்றை உடனுக்குடன் குறித்து வைக்கலாம். நகரங்களில் வசிக்கும் நம் வீடுகளுக்கு, படிக்கவோ, வேலைக்காகவோ வரும் நம் உறவினர் பிள்ளைகளை வர வேண்டாம் என்று சொல்ல முடியாது. அவர்களை முடிந்தவரை இருக்கும் இடத்தில் தங்க வைக்க என்ன செய்ய முடியும் என்று பார்ப்போம். மிகப்பெரிய ஹாலாக இருந்து, வெளிச்சமும் நிறைய இருந்து காற்றோட்ட வசதியும் இருக்குமானால், தடுப்பு வைத்து வெற்றிடத்தை மறைவிடமாக மாற்ற முடியும். அந்தக் காலத்தில் ஓர் அறையை இரண்டு, மூன்று காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டுமானால், மூங்கில்தட்டிகள் ‘ஸ்கிரீன்’ போன்று பயன்படுத்தப்பட்டன.

ஆனால், இப்பொழுது அழகிய வேலைப்பாடுகள் கொண்ட மர ஸ்கிரீன்கள் ரெடிமேடாக கிடைக்கின்றன. இவற்றில் 4 அடுக்குகள், 6 அடுக்குகள் மடிப்புகளைக் கொண்டதாக பல டிசைன்களில் கிடைக்கின்றன. நம் இடவசதியையும், அமைக்கப்படும் இடத்தின் அமைப்பையும் பொறுத்து இதனை வாங்கிக்கொள்ளலாம். இதுவே அறையின் அழகுப்பொருளாக அமைந்துவிடுவதால் அறையைப் பிரிக்கத்தான் பயன்படுத்துகிறோம் என்பதே தெரியாது. இதில் மேலும் ஒரு வசதி என்னவென்றால், வேண்டாத பொழுது மடக்கி ஒரு ஓரமாக அலங்காரப் பொருளாக வைத்துவிடலாம். அதன் இடையிடைேய பூக்கொத்துகள், கொடிகள் போன்றவற்றை தொங்கவிடலாம். செயற்கைக் கொடிகள் படற விடலாம். அழகிய வசனங்கள் கொண்ட பலகைகளை அதிலிருந்து தொங்கவிடலாம்.

ஜோடிக் கிளிகள், இயற்கைச் சிற்பங்கள் போன்றவற்றை வால் ஹேங்கிங் போல சுவரில் ஆணி அடிக்காமல் இதிலிருந்து தொங்க விடலாம். டிராயிங் ரூம் மிகப்பெரியதாக இருந்தாலும்கூட, நிரந்தரமாக சுவர் வைத்துப் பிரிப்பது சரியாக வராது. காரணம், அறைகள் சிறிதாகி இருட்டடைந்து காணப்படும். மேலும் ஒரு தடவை சுவர் வைத்து அடைத்துவிட்டால் பெரிதாக்குவதும் கஷ்டம். டிராயிங் மற்றும் டைனிங் மிகப்பெரியதாக இருப்பினும், அவ்விடத்தை குறுக்காமல் இருப்பது நல்லது. நிறைய நீளமும் அகலமும் கொண்ட அறையாக இருப்பின், ஃபர்னிச்சர், ஷோகேஸ், டைனிங் டேபிள் போன்றவற்றிற்குத் தேவையான இடம்விட்டு, அதன்பின் ஏதாவது ஒரு மூலை காலியாக இருப்பின், அத்தகைய மூலையை இன்ஸ்டண்ட் ரூம் போன்று நம் ரசனைக்கு தகுந்தபடி அமைக்கலாம்.

ஒரு கட்டில் மடித்துப் போடும் அளவிற்கு இடம் விட்டு, சிறிதளவு போக்குவரத்திற்கும் இடம் விட்டு அழகாக ஒரு பார்ட்டிஷியன் செய்யலாம். பிரித்து எடுக்கும் அமைப்புக்கொண்ட, கண்ணாடியில் அலுமினியம் ஃபிரேம் போட்ட சுவர் போன்று வைக்கலாம். அதில் தள்ளும் வசதி கொண்ட கதவு அமைக்கலாம். பொதுவாகவே, கதவு திறந்து மூடும் அளவுக்கு இடம் போதாத சமயங்களில் தள்ளும் வசதி கொண்ட கதவுகள் கனம் இல்லாமல் சுலபமாக பராமரிக்கக் கூடியவையாக இருக்கும். சிறிய பாத்ரூம்களுக்குக்கூட இவை பொருந்தும். வீட்டினுள், ஆபீஸ் போன்றோ, அலுவலக அறை போன்றோ அமைக்க வேண்டுமானால் இந்த அமைப்பைத் தரலாம். வீட்டிலே அலுவலக வேலை செய்ய வேண்டி வந்தாலும் இந்த மாதிரி ஓர் அமைப்பை நாம் உருவாக்கலாம்.

வரவேற்பறை ஓரமாக பால்கனியை ஒட்டிய இடமாக இருந்தால்கூட சிறிய அலுவலக அறை அமைக்கலாம். அலுமினியம் ஃபிரேம் போட்ட கண்ணாடி மூலம் பிரிப்பதால், நமக்கு வேண்டாதபொழுது, செய்து தருபவர்களே பிரித்தும் தருவர். டாக்டர் மற்றும் வக்கீல் போன்றவர்கள் கூட வீடுகளில் சிறிய க்ளினிக், அலுவலக அறை வைத்திருப்பதை நாம் பார்க்கலாம். சிறிய புத்தக அலமாரி, மேஜை, நாற்காலி மற்றும் சிறிய கட்டில் போட்டால் போதும். ஒருவர் உட்கார்ந்து எளிதாக வேலை செய்ய முடியும். க்ளினிக்காக இருந்தாலும் ஒவ்வொருவராகத்தானே பார்க்க வருவர்? இதெல்லாம் சாத்தியமில்லையென்று நினைத்தால், ‘டூ இன் ஒன்’ வசதி கொண்ட ஓர் அலமாரியை வைத்து அறையைப் பிரித்து விடலாம். முன்பக்கம் வரவேற்பறை, டைனிங் போன்றவற்றிற்குத் தேவையான பொருட்களை அடுக்கலாம்.

பின்பக்கம் நம் வேலைகளுக்குத் தேவையான பொருட்களை அடுக்கி வைத்துக்கொள்ளலாம். சோஃபா கம்பெட் வசதி தந்துவிட்டால் சிறிய இடமாக இருந்தாலும், பகலில் அமர்ந்து வேலை செய்யவும், இரவில் படுக்கையாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். சோஃபா அடியில் அறைகள் போன்ற அமைப்பு இருந்தால், பொருட்கள் சேமித்துவைக்கலாம். சிலர் இரவில் உட்காரும் ஷோஃபாவில் படுப்பர். அப்படிப்பட்டவர்கள் ‘ரெக்ளைனர்’ போட்டு வைக்கலாம். சாய்வு நாற்காலி போன்ற அமைப்பு கிடைக்கும். கால்களை நீட்டி இளைப்பாறவும் வசதியாக இருக்கும். முதியவர் இருக்கும் வீடுகளில் ‘ரெக்ளைன்’ மிகவும் உபயோகமான ஃபர்னிச்சர் என்றே சொல்லலாம். இதெல்லாம் எதுவுமே சாத்தியமில்லையா? கவலையை விடுங்கள்.

மேல் ஸ்டீல் ராடுகள் பொருத்தி அழகிய திரைச்சீலைகளை போட்டு அசத்திவிடலாம். அழகுக்கும் அழகு. இடமும் பிரிக்கப்படுகிறது. இதுபோன்ற அமைப்பை நாம் பல ஆஸ்பத்திரிகளில் பார்க்க முடியும். மேலை நாடுகளில் பாத்டப் முழுவதும் திரைச்சீலைகளால் மூடப்பட்டிருக்கும். அது ஒரு மறைவு மட்டுமல்ல. தண்ணீர் அதைவிட்டு வெளியில் சிந்தாமல் இருக்கும். குளியலறை போன்றே தெரியாமல் இருக்கும். இதனால் தரையோ, சுவரோ அழுக்கடையாமல் பாதுகாக்கப்படுகிறது. கொத்துக் கொத்தான அழகிய மணிச்சரங்களை மேல் முதல் கீழ் வரை தொங்கவிட்டுக்கூட பிரிக்கலாம். சினிமாக் காட்சிகளிலும், டிராமாக்களிலும் நம்மால் இந்த அழகைப் பார்க்க முடியும். சில இடங்களில் டிராயிங் டைனிங் நடுவே அல்லது மாடிப்படிகளின் அடிப்பாகம் முழுவதையும்கூட கலைரசனையுடன் அலங்கரிக்கலாம்.

வராண்டாவோ, பால்கனியோ பெட்ரூமுடன் இணைந்திருந்தால், சுவற்றுடன் இணைத்து நீளவாக்கில் ஸ்டீல் மேஜை போன்று அமைத்துக் கொள்ளலாம். மடித்து வைக்கும்படி சுவருடன் இணைப்பதால் இடத்தை அடைக்காது. வேண்டியபொழுது பிரித்துப் போட்டு துணி இஸ்திரி செய்துகொள்ளலாம். வேண்டாதபொழுது மடித்து வைக்கலாம். கார்ப்பெட்டை சுத்தம் செய்யும் பொழுதும் தனியாக தென்னந்தொடப்பம் கொண்டு இழைகள் எப்படி நெய்யப்பட்டுள்ளனவோ, அதே திசையில் சுத்தம் செய்ய வேண்டும். மாறினால் அதன் இழைகள் மேலே தூக்கி சீக்கிரம் பாழாகும். பார்க்கவும் அழகு இருக்காது. அதே போல் கார்ப்பெட்டின் ஓரத்திலுள்ள குஞ்சங்களை அதே ஆர்டரில் சரி செய்ய வேண்டும். இருபுறமும் குஞ்சங்கள் ஒரேமாதிரி காணப்பட்டால்தான் முழு அழகும் வெளிப்படும். ஷூ, செருப்புகள் வைக்கும் அலமாரிகள் கூட காற்றோட்டத்தில் இருப்பது நல்லது. மூடிய அலமாரிகளாகயிருந்தால், ஓரங்களில் வெளிக்காற்று புகுமாறு துளைகள் இட்டு அமைப்பது நல்லது.Post a Comment

Protected by WP Anti Spam