By 2 September 2019 0 Comments

அழிவை நோக்கி மனித இனம்..? (மருத்துவம்)

2050க்குள் பெண்களுக்கு கருமுட்டை என்பதே உருவாகாத நிலை ஏற்படலாம்…. இப்படி அச்சுறுத்துகிறது சமீபத்திய சுகாதார ஆய்வறிக்கை ஒன்று! ஏற்கனவே பெண் இனமே அழிந்து கொண்டிருக்கிற நிலையில், பெண்ணால்
உருவாக்கப்படுகிற சந்ததிக்கும் முற்றுப்புள்ளி வருமோ என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது இந்த அறிக்கை.

வாழ்க்கை முறை மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாசு, மரபியல் காரணங்கள் மற்றும் சமூக காரணங்கள் என இதன் பின்னணியில் பல காரணங்களையும் முன் வைக்கிறது அந்த அறிக்கை. பெண்கள் சுதாரித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது என எச்சரிக்கிறார் மகப்பேறு மருத்துவர் சாமுண்டி சங்கரி. கருமுட்டைகளின் இருப்பு பற்றியும் அதைப் பாதுகாக்கும் முறைகள் குறித்தும் பேசுகிறார் அவர்.

“ஒரு பெண் குழந்தை பிறக்கும்போது அதற்கு 30 லட்சம் முதல் 40 லட்சம் வரை வளர்ச்சியடையாத கருமுட்டைகள் சினை முட்டைப்பையில் இருக்கும். இந்த எண்ணிக்கை மரபணுவை சார்ந்தது. பெண் குழந்தை வளர, வளர, கருமுட்டைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். அந்தப் பெண் பருவமடைகிற போது அவை 3 முதல் 4 லட்சங்களாகக் குறைந்திருக்கும். அவளது 30 வயது வரை கருட்டைகள் உருவாவது உச்சத்தில் இருக்கும். 30 வயதுக்கு மேல் அது வெகுவாகக் குறைந்து, 40 வயதில் அதிக அளவில் குறைந்திருக்கும்.

பெண்கள் திருமண வயதையும், முதல் குழந்தைப்பேற்றையும் தள்ளிப் போடுவதால் கருமுட்டைகளே இல்லாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பருவத்தே பயிர் செய் என்பது இவர்களுக்குப் பொருத்தமான வாசகம். இன்று பல பெண்களும் 30 வயதிற்குமேல் குழந்தையின்மைக்காக மருத்துவரை அணுகும் போது கருமுட்டை இருப்பு மிகக் குறைவாக இருப்பது கண்டறியப்படுகிறது. பெண்கள் திருமணம் ஆனவுடன், முதல் குழந்தைப் பேற்றினை தள்ளிப்போடும்போது அவர்களுக்கு எண்டோமெட்ரியோசிஸ் என்ற பிரச்னை ஏற்படுகிறது.

பிறகு அது சாக்லேட் சிஸ்ட் என்கிற வேறொரு பிரச்னையாக உருவாக வாய்ப்புள்ளது. இந்த சாக்லேட் சிஸ்ட்டை லேப்ராஸ்கோப்பி அல்லது ஓப்பன் சர்ஜரி மூலமாக எடுக்கும் போது அந்தப் பெண்ணின் கருமுட்டை இருப்பு மேலும் குறைகிறது. நிறைய பெண்களுக்கு இருபது, இருபத்தைந்து வயதிற்கு மேல் கருமுட்டைகள் முற்றிலும் நீங்கிவிடுவதால் 3035 வயதிலேயே அவர்களுக்கு மாதவிலக்கு நின்று விடுகிறது. இந்த நிலையை ப்ரீமெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர்’ (Premature ovarian failure) என்று சொல்கிறோம்.

குறைவான கருமுட்டை இருப்பு என்பது குழந்தையை பெற்றெடுப்பதற்கான வலிமையைக் குறைக்கிறது. வயதாவதால், இடியோபதிக் என்கிற பிரச்னையால் (என்னவென்றே தெரியாத நிலை), மரபணுக் கோளாறுகளால், ஆட்டோ இம்யூன் பிரச்னைகள் மற்றும் புற்றுநோய்க்கு எடுத்துக்கொள்கிற கீமோதெரபி, ரேடியோதெரபி சிகிச்சைகளால் சினைப்பை பாதிப்பு ஏற்படுகிறது. வாழ்க்கைமுறை மாற்றங்கள், ஜங்க் உணவுகள், சூழல் மாசு மற்றும் அதீத மன அழுத்தம் போன்றவையும் இப்பிரச்னையைத் தீவிரப்படுத்துபவை.

குறைவான கருமுட்டை இருப்பை ரத்தப் பரிசோதனையின் மூலமாகவும், ஸ்கேன் மூலமாகவும் கண்டறியலாம். FSH மற்றும் AMH போன்ற ஹார்மோன் பரிசோதனைகள் மூலமும் கண்டறியலாம். அந்தப் பெண்ணிற்கு முட்டைகள் இருக்கிறதா என்று 3 மற்றும் 4ம் நாட்களில் சோதனை செய்தும் பார்க்கலாம். ஈஸ்ட்ரோஜன் மற்றும் DHEAS போன்ற ஹார்மோன்களை உபயோகித்து இந்த நிலைமையை சரி செய்யலாம். கருமுட்டை இருப்பினை மேம்படுத்தும் வழிகள்…ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சிகிச்சை மூலம் சரி செய்து IUI, IVF போன்ற செயற்கை முறை கருத்தரிப்பில் பயன்பெறலாம். Mini IVF, Green IVF இதற்கு உதாரணங்கள்.

வைட்டமின் சி, ஈ, CoQ 10 போன்ற வைட்டமின்களை பயன்படுத்துவதால் கருமுட்டையின் தன்மை வீரியம் மிக்கதாகவும், சிதையாமலும் இருக்கும். ஹார்மோன் நிலையை அதிகப்படுத்தவும், புரோஜெஸ்ட்ரோன் குறைபாடு ஏற்படாமல் இருக்கவும் மருந்து, மாத்திரைகள் இருக்கின்றன. அதேபோல சேதமடைந்த முட்டைகளை சரி செய்யவும், DNA செல்லின் சேதத்தை குறைக்கவும் இன்று சிகிச்சைகள் உள்ளன. இந்த சிகிச்சைகள், முட்டையின் முழு வளர்ச்சிக்கும் DNA செல்லின் சேதமடைதலிருந்தும் பாதுகாப்பு தருபவை.

தவிர L.Arginine என்கிற ஒரு அமினோ அமிலத்தின் மூலம் கருவுறுதலுக்கு தேவையான ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, கருமுட்டை திசுக்களுக்கு அதிகமான சத்துகளை அளிக்கலாம். செயற்கைமுறை கருவுறுதலுக்கு வரும் பெண்கள் தீயபழக்கவழக்கங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். முறையாக மல்டி வைட்டமின் மாத்திரைகள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் யோகா, மிதமான உடற் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மனஉளைச்சலைத் தவிர்க்க வேண்டும். பாசிட்டிவான அணுகுமுறை அவசியம்.’’

கருமுட்டை தானம்

மாதவிடாய் நின்ற பெண்களுக்கும், கருமுட்டை உருவாகாதவர்களுக்கும் கருமுட்டை தானத்தின் மூலம் குழந்தைப் பேறு கிடைக்கச் செய்யலாம். மரபணு சார்ந்த பிரச்னைகளுக்கும், Fragil X சிண்ட்ரோம், Turner சிண்ட்ரோம், Turner mosaic போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கும் கருமுட்டை தானம் மிகப் பெரிய வரப்பிரசாதம். பல பெண்கள் தங்கள் குடும்ப மேம்பாட்டுக்காக கருமுட்டை தானம் செய்ய முன்வருகிறார்கள். ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள பெண்களுக்கு ஹார்மோன் டெஸ்ட்டுகள் செய்யப்பட்டு, கருமுட்டை தானம் பெறப்படும்.Post a Comment

Protected by WP Anti Spam