By 14 May 2019 0 Comments

பத்தில் 7 பெண்ணுக்கு ஃபைப்ராய்டு!! (மருத்துவம்)

இந்த விஷயத்தைப் பத்தியெல்லாம் யாரும் வெளிப்படையா பேசுவாங்களானு தெரியலை. எனக்குப் பேசினா என்னனு தோணினது. நான் பட்ட, பட்டுக்கிட்டிருக்கிற அவதிகள் இன்னொரு பெண்ணுக்கும் வேண்டாமேங்கிற எண்ணத்துல என் அனுபவத்தைப் பகிர்ந்துக்கறேன்…’’

பேபி ஃபேக்டரி படித்துவிட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்த சென்னைப் பெண் இப்படித்தான் ஆரம்பித்தார். தனது பெயர் வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதால், அவரை இங்கே பவித்ரா என அழைப்போம். “கல்யாணமான முதல் சில மாசங்கள்ல என்னைப் பார்க்கிற எல்லாரும் `மாசமா இருக்கீங்களா’ன்னு கேட்டிருக்காங்க. அப்பல்லாம் எனக்கு ஏன் எல்லாரும் அப்படிக் கேட்கறாங்கனு புரியலை. புதுசா கல்யாணமானவங்களை அப்படிக் கேட்கறது சகஜம்தானேனு எனக்கு நானே சமாதானமும் சொல்லிக்கிட்டேன். வருஷத்துக்கொரு டாக்டரை பார்க்கிறதும், ட்ரீட்மென்ட் எடுக்கிறதுமா 8 வருஷங்கள் போச்சு. வயிறு வீக்கம், அதிகப்படியான ரத்தப் போக்கு, அடிக்கடி யூரின் போறது, முதுகுவலி, செரிமானக் கோளாறுனு எல்லாம் இருந்தது.

கடைசியா பார்த்த டாக்டர், எனக்கு ஃபைப்ராய்டு இருக்கிறதாகவும், அதனாலதான் குழந்தை நிக்கலைனும் சொன்னாங்க. அதுக்கு அவங்க சொன்ன தீர்வு என் தலையில இடி விழுந்த மாதிரி இருந்தது. கர்ப்பப்பை நீக்கம்… ‘ஆனா, அதுக்குப் பிறகு இயற்கை முறையில குழந்தை பெற முடியாது. செயற்கை முறைகளைத்தான் முயற்சி செய்யணும்’னும் சொன்னாங்க. அதுக்கெல்லாம் எங்களுக்கு வசதி இல்லை. எங்க வீட்டுக்காரர் எெலக்ட்ரீஷியனா வேலை பார்க்கிறவர். அவர் வருமானத்துல குடும்பம் நடத்தறதே பெரிசு. சோதனைக்குழாய் குழந்தைக்கெல்லாம் நாங்க எங்கே போறது? கர்ப்பப்பையையே எடுக்காம இந்தப் பிரச்னையை சரி செய்ய வழியில்லையானு நானும் எவ்வளவோ பேசிப் பார்த்துட்டேன்.

வாய்ப்பில்லைனு சொல்றாங்க டாக்டர். ஃபைப்ராய்டு பிரச்னையினால வீங்கிப் போயிருந்த என் வயித்தைப் பார்த்துட்டுத்தான் ஆரம்ப காலத்துல எல்லாரும் மாசமா இருக்கியானு கேட்டிருக்காங்க போல… அதுகூட தெரியாம இத்தனை காலத்தை வீணாக்கிட்டேனே… என் வாழ்க்கையே அவ்வளவுதானா? என் குழந்தை ஆசை கனவா போயிடுமா?’’மிச்சமிருக்கும் கொஞ்சூண்டு நம்பிக்கையுடன் தனது கவலையை முன் வைத்தார் பவித்ரா. ‘குழந்தை இல்லாவிட்டால் எத்தனையோ வழிகள் இருக்கின்றன. நல்லவேளையாக ஃபைப்ராய்டு கட்டி என்பது புற்றுநோய் கட்டி இல்லை என்பதை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள்…’ இதுவே பவித்ரா உள்பட ஃபைப்ராய்டால் அவதிப்படுகிற பல பெண்களுக்கும் மருத்துவர்களால் சொல்லப்படுகிற ஆறுதல் சேதி. அது ஆறுதல் அல்ல… ஆறாத சோகம் என்பதை சம்பந்தப்பட்ட பெண்களால் மட்டுமே உணர முடியும்.

ஒரு சின்ன கட்டி… அது இத்தனை பாடு படுத்துமா? மகப்பேறு மருத்துவர் லோகநாயகியிடம் பேசினோம். பவித்ராவின் வயிற்றில் பால் வார்க்கும் செய்தியுடன் பேச ஆரம்பிக்கிறார் டாக்டர் லோகநாயகி. “பலரும் அறியாமையில் அவசரப்பட்டு கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சையை செய்து கொண்டு விடுகிறார்கள். இன்றைய நவீன மருத்துவத்தில் எவ்வளவு பெரிய கட்டியானாலும், எத்தனை எண்ணிக்கையில் இருந்தாலும் கர்ப்பப்பையை சேதம் செய்யாமல், கட்டிகளை மட்டும் நீக்கும் சிகிச்சைகள் வந்திருக்கின்றன. Fertility Enhancing Laparoscopy Laparoscopic Myomectomy என்கிற அந்த சிகிச்ைசயில் ஃபைப்ராய்டு கட்டிகளை நீக்கியதும், கர்ப்பப்பையானது கருத்தரிக்க மிகப் பிரமாதமாக தயாராகி விடும்.

எனவே, மகப்பேறு மருத்துவத் துறையில் அனுபவமும் விஷய ஞானமும் உள்ள மருத்துவர்களை அணுகினால் பவித்ராவின் குழந்தைக் கனவு கட்டாயம் நனவாகும்…’’என்கிறார் டாக்டர் லோகநாயகி. உலக அளவில் 70 சதவிகிதப் பெண்களுக்கு ஃபைப்ராய்டு பிரச்னை இருக்கிறது என்கிற அதிர்ச்சித் தகவலுடன் தொடர்ந்து பேசுகிறார் டாக்டர். “இனப்பெருக்க வயதில் உள்ள பெண்களில் 20 முதல் 50 சதவிகிதப் பெண்களுக்கு ஃபைப்ராய்டு இருக்கிறது. பலருக்கும் அது குழந்தை பெறும் காலகட்டத்திலேயே தலையெடுக்கிறது. ஃபைப்ராய்டு என்பது கர்ப்பப்பையில் வருகிற ஒருவித தசைக்கட்டி. இதில் 3 வகைகள் உள்ளன. Submucosal fibroids என்பது கர்ப்பப்பையின் உள்புற குழிவுப் பகுதியில் ஏற்படுவது.

Subserosal fibroids என்பது கர்ப்பப்பையின் வெளியில் வளர்வது. Intramural fibroids என்பது கர்ப்பப்பையின் தசைச்சுவர் இடுக்கில் வளர்வது. ஃபைப்ராய்டு கட்டியானது பட்டாணி அளவுக்கு சிறியதாகவோ கிரிக்கெட் பந்து அளவுக்குப் பெரியதாகவோ இருக்கலாம். 99 சதவிகித ஃபைப்ராய்டு கட்டிகள், புற்றுநோய் கட்டிகளாக இருப்பதில்லை. அதாவது, இவை புற்றுநோயின் அறிகுறிகளாகவோ, கர்ப்பப்பை புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிற காரணியாகவோ இருப்பதில்லை. ஃபைப்ராய்டு கட்டிகள் ஏன் ஏற்படு கின்றன என்பதற்கான காரணங்கள் இன்னமும் உறுதியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒவ்வொரு கட்டியும் கர்ப்பப்பையின் பிறழ்ந்து போன தசை செல்களில் இருந்து உருவாகி, ஈஸ்ட்ரோ ஜென் ஹார்மோனின் தூண்டுதலால் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.

ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகமாவதே இந்தப் பிரச்னைக்கான முக்கிய காரணம். பருமனுக்கும் இதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உடலின் அதிகப்படியான கொழுப்பிலிருந்தும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரக்கும். அதன் விளைவாக ஃபைப்ராய்டு வரலாம். அசைவ உணவுகளை அதிகம் உண்கிற பெண்களுக்கும் வரலாம். பால் முதல் அசைவ உணவுகள் வரை அனைத்தையும் கொடுக்கும் விலங்குகளுக்கு இன்று ஹார்மோன் ஊசிகள் போடுவது சகஜமாகி விட்டது. அவற்றை உண்ணுவோருக்கும் அந்த ஹார்மோன்களின் தாக்கம் நிச்சயம் இருக்கும்.

சிலருக்கு பரம்பரையாகவும் இது தாக்கலாம். பாட்டி, அம்மா, சித்தி வழியில் அந்தக் குடும்பத்துப் பெண்ணுக்கு வரலாம். அறிகுறிகள்… ஃபைப்ராய்டின் அறிகுறிகள்
ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடலாம். சிலருக்கு அறிகுறியே இல்லாதது முதல் மிக மிதமான அறிகுறி வரை இருக்கலாம். வேறு சிலருக்கு அதீதமான அறிகுறிகள் காட்டலாம்.

பொதுவான அறிகுறிகளாக சொல்லப்படுபவை…

அதிக மற்றும் நீடித்த உதிரப்போக்கு.

ஒரு மாதவிடாய்க்கும் இன்னொன்றுக்கும் இடையில் ஏற்படுகிற அசாதாரண உதிரப் போக்கு.

இடுப்பு வலி (ஃபைப்ராய்டு கட்டி இடுப்பெலும்புப் பகுதிகளை அழுத்துவதால் ஏற்படுவது).

அடிக்கடி சிறுநீர் கழிப்பது மற்றும் மலச்சிக்கல்.

அடிமுதுகு வலி.

தாம்பத்திய உறவின் போது கடுமையான வலி.

மாதவிலக்கே வராமல் இருப்பது.

மாதவிலக்கு நாட்களில் உருண்டு, புரண்டு அழுது துடிக்கிற அளவுக்கு வலி.

5 மாதக் கர்ப்பம் மாதிரி வயிறு பெருத்துக் காணப்படுவது.

அதிக நாட்கள் நீடிக்கிற, அளவுக்கதிக ரத்தப் போக்கின் காரணமாக அந்தப் பெண்களுக்கு ரத்தசோகை பிரச்னையும் சேர்ந்து கொள்ளும். அதுவும் தீவிரமாகக் கண்காணித்து சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியது. ஃபைப்ராய்டு உருவாக்குகிற மேற்சொன்ன அத்தனை பிரச்னைகளையும்கூட ஒரு பெண் சகித்துக் கொள்வாள். ஆனால், அது அவளது தாய்மைக்கே சவாலாக அமைவதை ஏற்றுக்கொள்ள முடியுமா? பெரிய பெரிய பிரச்னைகளை ஏற்படுத்துகிற இந்த ஃபைப்ராய்டை மிகச் சுலபமாக சரிப்படுத்திவிடலாம்.

சரியான நேரத்து மருத்துவப் பரிசோதனையும், பிரச்னையைப் பற்றிய விழிப்புணர்வும், அனுபவம் மிக்க மருத்துவ ஆலோசனையும் அவசியம். அந்தப் புரிதல் இருந்தால் குழந்தையின்மை என்கிற பெருங்கவலையை வென்று, இழந்த ஆரோக்கியத்தையும் ஆனந்தத்தையும் திரும்பப் பெறலாம். சரி… பட்டாணி அளவுக்கு இருப்பதாக சொல்லப்படுகிற குட்டியூண்டு கட்டி, குழந்தைப் பிறப்புக்கே தடையாக அமைவது எப்படி? ஃபைப்ராய்டுக்கான சிகிச்சைகள் என்ன? வராமல் தவிர்க்க வழிகள் உண்டா?Post a Comment

Protected by WP Anti Spam