By 10 May 2019 0 Comments

தாய்ப்பால் சுரக்க வைக்கும் ஆமணக்கு!! (மருத்துவம்)

வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச்
சஞ்சலம் ஏதுக்கடி? குதம்பாய் சஞ்சலம் ஏதுக்கடி
அல்லலை நீக்கி அறிவோடு இருப்பார்க்கு
பல்லாக்கு ஏதுக்கடி? குதம்பாய் பல்லாக்கு ஏதுக்கடி

ஆமணக்கு கை வடிவ மடல்கள் மாற்றடுக்கில் அமைந்த பெரும் செடி வகையை சேர்ந்தது. இதன் மலர்கள் வெண்மை நிறத்துடன் இருக்கும் முள்ளுள்ள இதன் சாயில் மூன்று விதைகள் அமைந்திருக்கும் முற்றி காய்ந்த விதைகள் வெடிக்கும் குணம் கொண்டது. முத்து கொட்டை, கொட்டை முத்து என அழைக்கப்படும் ஆமணக்கு மூலமே நமக்கு விளக்கெண்ணெய் கிடைக்கிறது.

இதில் சிற்றாமணக்கு பேராமணக்கு செவ்வாமணக்கு என மூன்று வகைகள் உண்டு. பேராமணக்கு ஆற்றங்கரை ஓரங்களில் விளையும், செவ்வாமணக்கு இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. இதன் இலை வீக்கம், கட்டியை கரைக்கும். ஆமணக்கு நெய் மலமிளக்கும். தாதுவெப்பு அகற்றும். இலையை போட்டு காய்ச்சி நீரால் மார்பில் ஒற்றிடமிட்டு இலையை நெய் தடவி நெருப்பில் வாட்டி பெண்களின் மார்பகத்தில் வைத்து கட்டிவர பால்சுரப்பு அதிகரிக்கும்.

இலையை பொடியாக அரிந்து ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஒற்றிடம் கொடுத்து அதை கட்டிவர மூலக்கடுப்பு, கீழ்வாதம், வாதவீக்கம் நீங்கும். ஆமணக்கு துளிரை விளக்கெண்ணெயில் வதக்கி தொப்புளில் வைத்து கட்டினால் உடல் சூட்டால் ஏற்படும் வயிற்றுவலி தீரும். கண்வலி அல்லது கண்ணில் மண் மற்றும் தூசி விழுந்தால் ஒரிருதுளி விளக்கெண்ணெய் விட தூசி போகும். கடுமையான வலி நீங்கும். தோல் நீக்கிய விதையை மைய அரைத்து ஆறாத புண்களில் பற்றுபோட அவை ஆறும்.

கட்டிகளில் போட்டால் பழுத்து உடையும். மூட்டுவலியுள்ளவர்கள் மூட்டில் பற்று போட்டால் வீக்கம் குறைந்து வலி நீங்கும். ஆமணக்கு இலையுடன் சமஅளவு கீழாநெல்லி இலையை சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து 30கிராம் அளவில் காலை வேளையில் மட்டும் மூன்று நாட்கள் சாப்பிட்டு நாக்காம் நாள் பேதிக்கு சாப்பிட காமாலை தீரும். பசியின்மை, வயிற்றுவலி, சிறுநீர் பாதை, அழற்சி,நீர்கடுப்பு, மாதவிடாய் கோளாறு உள்ளவர்கள் 50மிலி விளக்கெண்ணெயுடன் சிறிது பசு மோர் அல்லது இஞ்சிசாறு கலந்து சாப்பிட நான்கைந்து முறை பேதியாகும். இதனால் மேற்சொன்ன நோய்கள் அனைத்தும் குணமாகும்.

ஆமணக்கு நெய்யால் நலமுண்டாம் யாவர்க்கும்
பூமணக்கு மேனி புரிகுழலே- வாய்மணக்கக்
கொள்ளில் வயிறுவிடுங் கோரமுள்ள வாயுவறும்
உன்னில்வரு குன்மம்போ மோது
அம்பொனிற மும்விந்து மாங்குடலினேற்றமறும்
ஐம்பொதிச் சூடடெரிவுமாறுங்காள்- அம்புவியற்
பாமணக்கு மின்பமொழிப்பாவாய்! நலஞ்செறிந்த ஆமணக்கு நெய்யை அருந்து”

என்கிறார் அகத்தியர். எதற்குமே உதவாதவர்களை அறிவு தளிவில்லாதவர்களை அவன் ஒரு விளக்கெண்ணெய் என்பார்கள். ஆனால் அந்த விளக்கெண்ணெயின் பயனை நன்கு அறிந்து அது கிடைக்கம் ஆமணக்கின் சிறப்பை ஆராய்ந்து நமக்களித்த முன்னோர்கள் வழியில் தேவைக்கேற்ப பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம்.

ஒரு பாத்திரத்தில் நான்கு பங்கு தண்ணீர் விட்டு அதில் ஆமணக்கு பருப்புகளை இடித்து ஒரு பங்கு போட்டு தீயிட்டு எரிக்க வேண்டும். அப்பொழுது நெய் கக்கி நீர்மீது மிதக்கும். இதை அகப்பையில் எடுத்து வேறு பாத்திரத்தில் சேமிக்க வேண்டும். பின்பு அதை அணலில் வைக்க தண்ணீர் முற்றிலும் வற்றி எண்ணெய் மட்டும் தனியாக கிடைக்கும்.இது ஊற்றிய எண்ணெய் எனப்படும். தமிழகத்தில் கிராமங்களில் இன்றைக்கும் இதை செய்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. அதுவே உடலுக்கு மிகுந்த நன்மை பயக்ககூடியது. குற்றமற்றமதுமாகும்.Post a Comment

Protected by WP Anti Spam