குழந்தையின்மைக்குக் காரணம் வைட்டமின் டி குறைபாடா? (மருத்துவம்)

Read Time:5 Minute, 43 Second

எலும்புகளுக்கும், பற்களுக்கும் அவசியத் தேவை கால்சியம் என்பதை எல்லோரும் அறிவோம். அந்த கால்சியம் உடலில் கிரகிக்கப்பட வைட்டமின் டி சத்து மிக மிக அவசியம். ‘‘எலும்புகளின் ஆரோக்கியத்தைக் காப்பது என்பதைக் கடந்து, இந்த வைட்டமினுக்கு வேறு சில முக்கிய குணங்களும் உண்டு. நீரிழிவு வராமல் தடுப்பதில் தொடங்கி, குழந்தையின்மையைத் தவிர்ப்பது வரை அதில் பலதும் அடக்கம்…’’ என்கிறார் மருத்துவர் நிவேதிதா.

‘‘வைட்டமின் டி சத்தை இந்த நூற்றாண்டின் அற்புதக் கண்டுபிடிப்பு என்றே சொல்லலாம். புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தியின்மை காரணமாக உண்டாகும் பல்வேறு நோய்கள், ஹார்மோன் பிரச்னைகள் எனப் பலதுக்கும் இந்த வைட்டமின் டி குறைபாடு காரணமாகலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எலும்புகளில் மட்டுமின்றி, உடல் திசுக்கள் பலவற்றிலும் இந்த வைட்டமின் இருப்பதும், கர்ப்பப் பை, சினைப்பை, மூளையின் பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு சுரப்பி, கணையம் போன்றவற்றிலும்கூட இருப்பதும் 1966ல்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

வைட்டமின் டி குறைபாடு, கணையத்தில் இன்சுலின் சென்சிட்டிவிட்டியை குறைத்து, அதன் காரணமாக நீரிழிவுக்கு வழி வகுக்கிறது. வைட்டமின் டி சப்ளிமென்ட் எடுத்துக் கொள்வோருக்கு நீரிழிவு கட்டுப்பாட்டில் வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதிக ரத்த அழுத்தம், ஹார்ட் அட்டாக் போன்ற பயங்கர பிரச்னைகளைக் கூட இதன் மூலம் கட்டுக்குள் கொண்டு வர முடியும். சினைப்பை மற்றும் கர்ப்பப் பையிலும் இந்த வைட்டமின் டி சத்து இருப்பதால்தான், புரொஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் போதுமான அளவு சுரக்கின்றன.

வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிற போது, அது பிசிஓடி எனப் படுகிற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னைக்குக் கூட காரணமாவது கண்டறியப்பட்டுள்ளது. வைட்டமின் டி குறைபாடு உள்ள பெண்களுக்கு, அதைத் தெரிந்து கொண்டு, சப்ளிமென்ட் கொடுக்கும் போது, முறையற்ற மாதவிடாய் முறைப்படுவதும், குழந்தையின்மைப் பிரச்னை சரியாவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு உயிரணு உற்பத்திக் குறை பாட்டுக்கும், அந்த அணுக்களின் தரக் குறைவுக்கும்கூட வைட்டமின் டி குறைபாடு காரணமாகலாம் என்பது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு.

அசாதாரணமான செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், செக்ஸில் நாட்டம் குறைவதற்கும்கூட இந்தக் குறைபாடு அதீதமாக இருப்பதே காரணமாகலாம் என்றும் தெரிய வந்திருக்கிறது. குறைபாடு உள்ளவர்களுக்கு வைட்டமின் டி சப்ளிமென்ட் கொடுத்த பிறகு இந்த எல்லா பிரச்னைகளும் சரியாவதும் தெரிய வந்திருக்கிறது. இத்தனை அவசியமான இந்த வைட்டமினை நம் உடலே உற்பத்தி செய்கிறது. சூரிய வெளிச்சத்தில் உள்ள யுவி கதிர்கள், ஒரு வித ஹார்மோனின் தூண்டுதலின் உதவியுடன், டீஹைட்ரோ கொலஸ்ட்ரால் என்பதை சில வேதியல் மாற்றங்கள் செய்து, வைட்டமின் டியாக மாற்றித் தருகின்றன.

ஈரல், மீன், சில வகை கடல் உணவுகள், காளான் போன்றவற்றில் இந்தச் சத்து அதிகமிருப்பதால், இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கை, கால் வலி, எலும்பு வலி, உடல் வலி போன்றவை இருந்தால், வைட்டமின் டி சத்துக் குறைபாடு இருக்கிறதா என்பதை ரத்தப் பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அப்படிக் குறைபாடு இருப்பது தெரிந்தால், ஊசி அல்லது சப்ளிமென்ட்டுகளின்உதவியுடன், 8 முதல் 10 வாரங்களில் சரி செய்ய முடியும். இவை தவிர தினம் 10 நிமிடங்களாவது சூரிய வெளிச்சம் படும்படி இருப்பது அவசியம். காலை வெயிலும், மாலை வெயிலும் உடலுக்கு நல்லது. வெயிலே படாமல் சன் ஸ்கிரீன் உபயோகிப்பதும், முகமூடி போட்டுச் செல்வதும் வைட்டமின் டி குறைபாட்டுக்கு காரணமாகி, பல பயங்கர பிரச்னைகளைத் தரலாம். ஜாக்கிரதை…’’ என்கிறார் மருத்துவர் நிவேதிதா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாங்கின் ஓசை கேட்ட இந்த பூவின் செயலை பாருங்கள்..!! ( வீடியோ)
Next post எடையை குறைக்க சூரிய முத்திரை!! (மகளிர் பக்கம்)