By 20 July 2019 0 Comments

உடற்பயிற்சியினால் வரும் மனதைரியம்!! (மகளிர் பக்கம்)

சமீபத்தில் சினிமாவில் பிரபலமான, வெற்றி பெற்ற என் நண்பர் என்னை சந்தித்தார். ‘‘சார், நான் என்னவோ என் துறையில் பேரும் புகழுமாக இருப்பது உண்மைதான். அதில் எனக்கு சந்தோஷமும் உண்டு. ஆனால்…’’ என்று நிறுத்தி, ஒரு கவலை முகத்தோடு, என் கண்களை ஊடுருவி, பெருமூச்சுடன் நிறுத்தினார். நான் அவரது தயக்கத்தை புரிந்துகொண்டு, ‘‘எந்த விஷயமாக இருந்தாலும் தாராளமாக என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். நாம் நீண்டகால நண்பர்கள். உங்கள் உணர்வுகளை என்னிடம் மனம் திறந்து பேசுவதால் மனப்பாரம் குறைந்து, புத்துணர்ச்சி அடைவீர்கள்’’ என்றேன். எனினும், வெற்றியின் உச்சாணியில் உள்ள என் நண்பர் கூறிய வார்த்தைகளைக் கேட்டு நான் சற்று அதிர்ந்துதான் போனேன்.

வாழ்க்கையில் வெற்றியே கண்ட அந்த மனிதர் கூறிய வார்த்தைகள் என்ன தெரியுமா?

‘‘ஏதோ அதிர்ஷ்டத்தில், கடவுள் புண்ணியத்தில் வெற்றி பெற்று வருகிறேன். பணம் மழையாக கொட்டுகிறது. ஆனால், மற்றவரோடு அடிக்கடி என்னை நானே ஒப்பிட்டு பார்த்து எப்போதும் குற்ற உணர்வு (Guilt Complex) அடைகிறேன். பல வெற்றி விழாக்களுக்கு செல்வதை, குடும்ப நிகழ்ச்சிகள், திருமண வைபவங்களுக்கு செல்வதை, பத்திரிகை, டி.வி.களுக்கு பேட்டி தருவதைத் தவிர்க்கிறேன். கலந்து கொள்ள வேண்டிய அவசியம் தெரிந்தும், என் மனம் உத்தரவு தராத காரணத்தால் என்னால் இந்தப் பிரச்னையில் இருந்து மீள முடியவில்லை’’ என கண்களில் கண்ணீர் மல்க பேசி முடித்தார். சற்றும் தாமதிக்காமல் நான் அவரிடம் கேட்ட கேள்வி… ‘‘நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்வதுண்டா?’’ அதற்கு நண்பரின் பதில்… ‘‘அதற்கெல்லாம் எங்கே சார் நேரம் இருக்கிறது?’’

உடனே நான் அவர் 6 மாதங்களுக்கு என்னவெல்லாம் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்பதை ஒரு பட்டியல் இட்டு கொடுத்தேன். ‘‘இந்த உடற்பயிற்சியால் நான் மாறுவேன் என்று நீங்கள் கூறுவதால், உங்கள் அனுபவத்துக்கு மதிப்பு கொடுத்து கட்டாயம் செய்வேன்’’ என உறுதி அளித்து விட்டுச் சென்றார். இது என் நண்பருக்கு மட்டுமல்ல… உலகில் உள்ள 75 சதவிகிதமானவர்களுக்கு உள்ள மானசீக பிரச்னையாகும். உங்கள் பணத்துக்காக, சீட்டு, ரேஸ் விளையாட, சிகரெட் மற்றும் மது குடிக்க கூடி வரும் நண்பர்களை சற்று தூரத்தில் வைத்து விட்டு, உங்கள் உடல் நலத்தில் அக்கறை காட்டும், அதற்கு உதவும் நண்பர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடற் பயிற்சி மற்றும் உடல் ஆரோக்கியம் மானசீக தைரியத்துக்கு நீங்கள் உண்டாக்கும் முதல் வெற்றிப்படி இதுதான்!

சோம்பேறித்தனமே மனதின் அழுக்கு

நமது தினசரி வாழ்க்கையில் ஆண், பெண் என இருவகையினரையும் ஒப்பிட்டு பார்க்கையில், ஆண்களே அதிக சோம்பேறித்தனமாக (Negative Heath Consequences Of A Sedentary Life Style) இருப்பதாக விஞ்ஞானப்பூர்வ கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பெண்களுமே ஏதேனும் வீட்டுவேலை செய்தேனும் உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். அனைத்து வயதினரிலும் எல்லாவிதமான துறைகளிலும் அனைத்து வகை வாழ்க்கை தராதரத்தில் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும். இந்த சோம்பேறித்தனமே… அழுக்காக அடுக்கடுக்காக மனதில் பதிந்து குற்ற உணர்வாக விஸ்வரூபம் எடுக்கிறது. அதன் காரணமாக அனைத்துக் குற்றங்களையும் செய்ய வைக்கும் தூண்டுகோலாகவும் அமைகிறது. மனதை சுத்தமாகவும் நல்ல ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உடற்பயிற்சி அவசியம். தினசரி உடற்பயிற்சி, உங்கள் உடலைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளவும் உங்களை நீங்களே உற்சாகப் படுத்தவும் வாழ்க்கையை, வாழும் முறையை, சமுதாயத்தோடு சேர்ந்து வாழும் கட்டுக்கோப்பையும் ஒருங்கிணைக்கிறது.

தன்னம்பிக்கையே தன்மானத்தின் வெற்றி (Self Esteem – Locus Of Control)

தினசரி உடற்பயிற்சி செய்து வருவதால், உணர்ச்சிவசப்பட்டு கோபம் உண்டாகும் நேரங்களில் அதை கட்டுப்படுத்தும் நல்ல நண்பனாக உதவுகிறது. காரணம், வெளி உடலை, உள் உறுப்புகளை உறுதி செய்வதால் ஆழ்மனமும் உறுதியாகி ‘எதையும் தாங்கும் இதய’த்தைப் பெற ஏதுவாகிறது. உடலும் உள்ளமும் உடற்பயிற்சியால் உறுதிப்படுவதால் எது நல்லது, எது கெட்டது, ஏன் நான் இந்த அழிவை நோக்கி போக வேண்டும்? ‘இதோ உன்னதமான வாழ்க்கை… இது என் வழி’ என நாம் நம்மை நாமே அறிந்துகொள்ள, நம்மை நாமே மிக உயர்வாகக் கருத, தினசரி உடற் பயிற்சி உதவும். உடலும் உள்ளமும் உறுதிப்பட்டு சமுதாயத்தில் எதையும் எதிர் கொண்டு, வெற்றி பெற்று, குற்ற உணர்வே இல்லாத உண்மையான, நடிப்பில்லாத வாழ்க்கை வாழ தினசரி உடற்பயிற்சி அவசியம். சமீபத்தில் என் சினிமா நண்பரிடம் இருந்து மிகச்சிறந்த அன்பளிப்போடு ஒரு கடிதம் இணைக்கப்பட்ட பார்சல் வந்தது. கடிதத்தில் நண்பர் குறிப்பிட்டு இருந்த விஷயம்… ‘‘தங்களின் அறிவுரைப்படி தினசரி உடற்பயிற்சி செய்து 4வது மாதத்திலேயே என் குற்ற உணர்வை அகற்றி, விழாக்களுக்கு சென்று, தொலைக்காட்சியிலும் பேட்டி தர ஆரம்பித்துவிட்டேன். மிக்க நன்றி!’’Post a Comment

Protected by WP Anti Spam