By 16 June 2019 0 Comments

இந்தியா வரும் முன்னே, அமெரிக்கா வரும் பின்னே !! (கட்டுரை)

அந்நியத் தலையீடு பற்றிய நம்பிக்கைகள், ஈழத்தமிழர் அரசியலில் தவிர்க்கவியலாத பங்கு எனுமளவுக்குச் செல்வாக்குச் செலுத்தி வருகிறது.

எந்த அந்நிய நாடுகள் மீது நம்பிக்கை விதைக்கப்பட்டதோ, அவையே போருக்கான ஆயுதங்களையும் வழங்கின என்ற உண்மை மறைக்கப்படுகிறது; மறக்கப்படுகிறது. ஞாபகமறதி நிறைந்த சமூகம் தொடர்ந்தும் இன்னலுறுவதற்கு விதிக்கப்பட்டது.

கடந்தவாரம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம், தமிழர்களின் வளமான எதிர்காலத்துக்கானது என, ஒருபுறம் மெச்சப்பட்டது. மறுபுறம், இலங்கையில் வலுப்பெற்றுள்ள இஸ்லாமியப் பயங்கரவாதம், இந்தியாவுக்கு அச்சுறுத்தலாவதால் இந்தியப் பாதுகாப்பு நலன்களுக்கு வடக்கு, கிழக்கு இணைப்பு முக்கியமானது எனத் தமிழ் அரசியல்வாதியொருவர் பேசியுள்ளார். இரண்டும் மோசமான கோணலான பார்வைகள்.

உலகில் எந்த ஒரு நாட்டினதும் உள்விவகாரங்களில், இன்னொரு நாடு குறிப்பாக, வலிய நாடொன்று, அக்கறை காட்டுவது, நிச்சயமாக அந்த நாட்டின் நலன் கருதியோ, அதன் உள்முரண்பாடுகளில் உள்ள ஈடுபாடு காரணமாகவோ அல்ல. மாறாக, அந்நாட்டின் மீதான மேலாதிக்க நோக்கம் தொடர்பானதே என்பதை, எத்தனையோ தடவைகள் கண்டுள்ளோம்.

தமது பிரச்சினைகளைத் தீர்க்குமாறு, வேண்டிக் கொள்கிற ஒவ்வோர் அந்நிய நாடும், எவ்வாறு தமது பிரச்சினை தொடர்பாக நடந்து கொண்டுள்ளது என்று கவனிப்போமா, சொன்னவற்றையும் செய்தவற்றையும் ஒப்பிட்டுப் பார்ப்போமா, உலக அரங்கில் மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் அமெரிக்கா குறுக்கிட்டுள்ள அளவுக்கு, வேறெந்த நாடாவது குறுக்கிட்டுள்ளதா, அக்குறுக்கீடுகளால் நன்மை கண்டோர் யார்? அமெரிக்க மக்களும் அமெரிக்கக் குறுக்கீடுகளால் நன்மை அடையவில்லை என்பதை நாம் மறக்கலாகாது.

அண்டை நாடுகளின் அலுவல்களில், இந்தியாவை மிஞ்சிக் குறுக்கிட்ட நாடும் கிடையாது; ஆக்கிரமிப்பிலும் போரிலும் இறங்கிய நாடும் கிடையாது. இலங்கை விடயத்தில், இந்தியாவின் நடத்தை, நிச்சயமாக இலங்கை மக்களின் நலம் நாடியதாக என்றும் இருந்ததில்லை; இனியும் இருக்கப் போவதில்லை.

எந்த அயல்நாடு, ஏன், எவ்வாறு குறுக்கிட முனைகிறது என்பதை நாம் விளங்கிக் கொள்ளாமல், அயல்நாடுகளின் தலையீடுகளைத் தவிர்ப்பதும் அவற்றுக்கு முகங்கொடுப்பதும் கடினம்.

பல சமயங்களில், உண்மையிலேயே உள்ள பிரச்சினைகளிலிருந்தும் நிகழக்கூடிய குறுக்கீடுகளிலிருந்தும் கவனத்தைத் திசைதிருப்புகிற விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாம் பல முறை ஏமாந்தும் இருக்கின்றோம்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை மீது, அந்நிய நாடுகளின் அக்கறை அச்சப்பட வைக்கிறது. தெற்காசிய அரசியல் அரங்கில், பகடைக்காயாக இலங்கை உருட்டப்படுகிறது.

இந்த நாடு, ஓர் அந்நிய மேலாதிக்கச் சுழிக்குள் சிக்கத் திணறிக் கொண்டுள்ளது. தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்குக் கூட, அயல் நாடுகளின் தலையீட்டை, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வேண்டி நிற்கிற வரை, இந்த நாடு, தேசிய இனப் பிரச்சினைக்கு நிலைக்கக் கூடிய தீர்வு எதையும் காணப் போவதில்லை. அயற் குறிக்கீடு தேவைப்படுகிற ஒரு சூழ்நிலையை, நாமே உருவாக்கியுள்ளோம். அது தொடர்வதற்கும் நாமே காரணமாக இருந்து வருகிறோம்.

அண்மைய ஈஸ்டர் தாக்குதல்கள், ‘பயங்கரவாதத்தின் பெயரால்’ இலங்கையில் மீண்டுமொருமுறை நேரடியாகக் கால்பதிக்க, அமெரிக்கா வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களில் அமெரிக்க இராணுவம், இலங்கையில் நேரடியாகத் தலையிடும் இரண்டாவது சந்தர்ப்பம் இது.

இதற்கு முன், 2004ஆம் ஆண்டு, சுனாமியை அடுத்து ‘மனிதாபிமான உதவி’ என்று அமெரிக்கப் படைகள் இலங்கை வந்தன. முல்லைத்தீவில் வந்திறங்கிய அமெரிக்க இராணுவம் குறித்து, புதுவை இரத்தினதுரை ‘கழுகிறங்கும் கடற்கரை’ என்ற தலைப்பிட்டு, கவிதையொன்றை எழுதியிருந்தார். அதன் சில வரிகளோடு நிறைவுசெய்வது பொருத்தம்:

நங்கூரமிட்ட கப்பலிலிருந்து குளிருக்குப் போர்வையும்
கூடாரப் பொருட்களும் இறக்கப்படுகின்றன.
இயல்பு மறைத்து இறக்கைக்கு வர்ணம் தீட்டி
கூரிய கத்தி நகங்கள் தெரியாவண்ணம் காலிற் சப்பாத்துத் தரித்து
பட்டாளமுகத்தைத் தற்காலிகமாக அப்பாவி முகமென்றாக்கி
எங்கள் மலைமீதும் பனைமீதும் அழகிய வயல் மீதும் நதிக்கரை மீதும்
வந்து இறங்குகின்றன வல்லூறுகளும், பருந்துகளும்.
மலர் வளையங்களுடன் இறக்கை மடித்தமர்கின்றன
எங்கள் இலுப்பை மரமீதும் கழுகுகள்.
சுனாமியால் புதையுண்டோருக்கு அழுவதாய் தொப்பி கழற்றி அஞ்சலிவேறு.
வியட்நாம் வயல்களிலும் ஒட்டகநாட்டின் ஈச்சைமரத்திலும்
இவை இப்படித்தான் இறங்கின முன்னரும்.
உங்களுக்காக அழவும் ஆராதிக்கவுமே வந்தோமெனும் வார்த்தைகளின் பின்னே
இனிவரும் நாளில் இச்சிறுதேசம் சிந்தப்போகும் கண்ணீரும் குருதியும் இருக்கலாம்.
கழுகிறங்கும் கடற்கரையில்
வண்ணத்துப் பூச்சிகளின் வடிவிருக்காது.
சின்னப்புட்கள் சீட்டியடிக்காது.
ஆமை புகுந்த வீடும்
புகுந்த நாடும் விளங்காதென்பது
அடிபட்ட ஒருவனின் அனுபவமொழி.
கழுகுகளுக்கு அப்படியென்ன கரிசனை எம்மேல்?
இந்தச் சின்னமணித்தீவுமீதேன் இத்தனை அன்பு?
மௌனத்தைச் சம்மதமென்றாக்கும் வழக்கமொன்றுண்டு.
உரத்த குரலேதும் இல்லாமை கழுகுகளுக்கே வாய்ப்பாகும்.
புல்வெளிச் சொந்தமான வண்ணத்துப்பூச்சிகளே வாய்திறவுங்கள்.
கடலுறவான ஆட்காட்டிப் பறவைகளே அவலமுணர்த்திக் குரலிடுங்கள்.Post a Comment

Protected by WP Anti Spam