By 22 June 2019 0 Comments

ஒரே திசைக்கு தொடுக்கப்படும் அம்புகள்!! (கட்டுரை)

எமக்கு நேரவிருக்கும் இழப்புகளிலிருந்து எம்மை காத்துக்கொள்வதையே பாதுகாப்பு என்கிறோம். அந்த வகையில், உயிர்ச் சேதங்கள்,சொத்துச் சேதங்கள் உள்ளிட்ட பலவாறான சேதங்களை முன்பே அறிந்து, அதற்குத் தடைக்கல் போடுவதையே பாதுகாப்புச் செயன்முறையாகக் கருதமுடியும். இந்தப் பாதுகாப்புச் செயற்பாடுகளின் பரப்பு விரிவடைந்து செல்லும்போது, தேசிய பாதுகாப்பு, உலக பாதுகாப்பு, பௌதீக வளங்களின் பாதுகாப்பு என்று பல கோணங்களில் பார்க்கப்படுகிறது.

இவற்றில், பிரதான கட்டமைப்பாக, தேசியப் பாதுகாப்பைக் கருதலாம். தேசிய பாதுகாப்பு என்ற விடயத்துக்குள், பொதுமக்களின் பாதுகாப்பு, அரச பாதுகாப்பு உட்பட முழு நாட்டினதும் பாதுகாப்பும் உள்ளடங்கும். தேசிய பாதுகாப்பின் செயற்பாடுகள் வலுவிழந்தால், அது ஒரு நாட்டின் இருப்பு, பொருளாதாரம், சுதந்திரம், சமாதானம், மக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களையும் கேள்விக்குரியாக்கிவிடும் என்பதையும் நேரடியாகவே நாம் அண்மையில் கண்டுகொண்டோம்.

ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னரான நிலைமை, இன்றளவில் சுமூகமான நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தாலும், பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் மீது பொதுமக்கள் கொண்டிருந்த நம்பிக்கை, முற்றாகச் சிதைந்து போயுள்ளதென்றே கூறலாம். இதனால், பாதுகாப்பு விவகாரத்தில் அரசியல் தரப்புகள் கூறுவதை விடவும், பாதுகாப்புத் துறையினர் கூறும் விடயங்களுக்கே, மக்கள் முன்னுரிமை வழங்கத் தொடங்கியுள்ளனர்.

இவ்வாறான நிலையிலேயே, இந்த விவகாரத்தின் பின்னணியில் பல அரசியல் சக்திகள் இருப்பதாகக் கூறப்பட்டது. இதனால், நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றியும் அவற்றைத் தடுக்கத் தவறியமை தொடர்பிலும் கண்டறிவதற்காக, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவொன்று நிறுவப்பட்டு அதன் மூலமான விசாரணைகள், மே மாதம் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

அந்தக் குழுவில் பங்கேற்க, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆகிய தரப்புகள் முன்வராத போதிலும், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதித்துவங்களைக் கொண்டு, இந்த தெரிவுக்குழுவின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், முதன் முறையாக ஊடகங்களுக்கு முன்பாக நடைபெறும் தெரிவுக்குழு விசாரணை என்பதாலும் அதற்குள் பாதுகாப்புத் துறைசார் காரணிகள் விசாரணை செய்யப்படுவதாகவும் கூறி, சில தரப்புகள், இந்தத் தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்கு, கடும் ​எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. எவ்வாறாயினும், தாக்குதலின் பின்னணி, அதற்குப் பொறுப்புகூற வேண்டியவர்கள் யார் என்பதையும் உரிய தரப்புகள் கடமையைத் தவறிய சந்தர்ப்பங்களையும் வெளிச்சம்போட்டுக் காண்பிப்பதில், தெரிவுக்குழு உறுப்பினர்கள் பின்நிற்கவில்லை.

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் குறித்த முன் அறிவித்தல் இருந்தும், அரசியல் சுயலாபச் செயற்பாடுகள், பொதுமக்களின் பாதுகாப்பையும் துச்சமாகக் கருதி முன்னெடுக்கப்பட்டன என்ற விடயத்தையே, இதுவரையான விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன.

தற்போது வரையில், ஐந்து தெரிவுக்குழு விசாரணைகள் இடம்பெற்றுள்ள நிலையில், அவற்றில் கலந்துக்கொண்ட பாதுகாப்புத் துறை முக்கியஸ்தர்களான பாதுகாப்புச் செயலாளர் சாந்த கோட்டெகொட, தேசியப் புலனாய்வுத்துறைப் பணிப்பாளர் சிசிர மெண்டிஸ், கட்டாய விடுமுறையில் அனுப்பட்டிருக்கும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தேசிய புலனாய்வுத் துறையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளரும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நாலக டீ சில்வா, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.

அதன்போது ஆரம்ப விசாரணைகளில் சாட்சியமளித்திருந்த அரச புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிசிர மெண்டிஸ், தாக்குதல் விவகாரம் குறித்து அனுப்பட்ட தகவல் வெறுமனே பார்வைக்காகவும் அறிவுறுத்தலுக்குமானதாக மாத்திரமே அமைந்திருந்தது எனத் தெரிவித்திருந்தார்.

அதனையடுத்து, இரண்டாவது விசாரணையில் சாட்சியமளித்த முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டீ சில்வா, சஹ்ரான் எதிர்காலத்தில் பெரும் பிரச்சினைக்குரிய நபராக உருவெடுப்பார் என்பதை, தான் முன்னெடுத்த இரகசிய விசாரணைகளின் பலனாக ஆரம்பத்திலேயே ஊகித்துகொண்டதாகவும் தான் ஜனாதிபதி கொலைச் சதி விவகாரத்தில் கைதுசெய்யாமல் இருந்திருந்தால், அந்தத் தாக்குதலைத் தடுத்திருக்கக் கூடிய இயலுமை தனக்கு இருந்திருக்குமென்றும் கூறியிருந்தார்.

தெரிவுக்குழு உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், விசாரணைகளின் போது, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடத்தில், இடையிடையே காலோசிதமான கேள்விகளைத் தொடுத்திருந்தார். அந்தக் கேள்விகளுக்கு, ஊடகங்களுக்கு முன்பாக பதிலளிக்க பொலிஸ் மா அதிபர் தயக்கம் காட்டியபோதும், அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயமல்லவென வலியுறுத்திய சுமந்திரன் எம்.பி, விடாப்பிடியாக தனது கேள்விகளுக்கான பதில்களைக் கோரினார்.

சிறிதுநேரத் தயக்கத்தின் பின்னர் பதிலளிக்க ஒத்துகொண்ட பொலிஸ் மாஅதிபரிடத்தில், முதலில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பேற்று நீங்கள் பதவி விலக வேண்டும் என அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதா என்று வினவிய போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் குறித்து அவருக்கு அறிவுறுத்தப்படவில்லை என்பதால், தன்னைப் பதவி விலகுமாறு கூறியதாகக் கூறியிருந்தார். என ஜனாதிபதி வினவியதாகவும் ஆனாலும், பொலிஸாரைக் காட்டிக்கொடுத்து விட்டு பதவி விலகும் எண்ணம் தனக்கு இல்லையென்று பதிலளித்திருந்தார்.

அதேபோல், பாதுகாப்புச் சபையில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் வினவப்பட்ட போது, தான் இறுதியாகக் கலந்துக்கொண்ட பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரி நிஷாந்த சில்வாவை இடமாற்றம் செய்த விவகாரம் குறித்து பேசப்பட்டதென தெரிவித்திருந்தார்.

அப்போது, 11 தமிழ் இளைஞர்கள் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பான கேள்விகளை, சுமந்திரன் எம்.பி வினவினார், அந்த விவகாரத்தில், பாதுகாப்புப் படைகளின் பிரதானிக்கு தொடர்பு இருப்பதாகக் கருதப்படுவதாலேயே, அது குறித்த விசாரணைகளை நிறுத்துமாறு, ஜனாதிபதியிடமிருந்து அறிவுறுத்தல் கிடைத்தது என்றும் இந்த விடயம் குறித்த விசாரணைகள் அவசியமில்லை என்றாலும், இதன் உண்மை நிலைமை வெளிச்சத்துக்கு வந்ததென்றும், பூஜித் ஜயசுந்தர கூறியிருந்தார்.

அதேபோல், உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் தொடர்பில் 3 முறைகள், ஜனாதிபதிக்குத் தான் அறிவுறுத்தியிருந்த போதும், அந்த விடயத்தை, புலனாய்வுத்துறைப் பணிப்பாளர் முன்கூட்டியே அறிவித்திருந்தாக ஜனாதிபதி கூறியதால், அதைப்பற்றித் தான் தொடர்ச்சியாக அறிவுறுத்த விரும்பவில்லை என்றிருந்தார்.

அதே விசாரணைத் தினத்தன்று சாட்சியமளித்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, தானும் உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் விவகாரம் குறித்து ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியதாகவும் அதன்போது, புலனாய்வுத் துறையின் பணிப்பாளர் தனக்கு அதனை முன்கூட்டியே அறிவித்திருந்தாரென ஜனாதிபதி கூறியதாகவே பதிலளித்திருந்தார்.

மேலும், பாதுகாப்புச் சபைக்கு பிரதமர் அழைக்கப்படாமை குறித்து ஜனாதிபதியிடம் வினவியபோது, அது குறித்துத் தான் அறிவதாகவும் தான் சொல்வதை மாத்திரம் செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியிருந்ததாகவும், அவர் சாட்சியமளித்திருந்தார்.

இவ்விடயங்களைப் பார்க்கின்றபோது, தேசிய பாதுகாப்பு விவகாரம் குறித்து, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினதும் பாதுகாப்புத் துறைசார் அதிகாரிகளினதும் அவதானம், கடுகளவும் அக்கறை கொள்ளவில்லை என்பதையே வெளிப்படையாக்கி உள்ளது. அதேபோல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் குறித்து தனக்கு எந்தவொரு பாதுகாப்புத் துறைசார் அதிகாரியும் முன்னறிவித்தல் விடுக்கவில்லை எனத் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது என்பதையே மேற்படி தரப்புகளின் சாட்சியங்கள் வெளிபடுத்துகின்றன.

இவ்வாறான நிலையிலேயே, இந்தத் தெரிவுக்குழு விசாரணைகளை நிறுத்துமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ச்சியாகக் கூறிவருகிறார். தெரிவுக்குழுவை நியமித்த சபாநாயகர் கரு ஜயசூரியவும், அந்தக் குழுவின் விசாரணைகளை நிறுத்தும் அதிகாரம் தனக்கு இல்லையென, ஜனாதிபதிக்கு பதிலளித்துள்ளார்.

இந்த அழுத்தங்களுக்கு மத்தியிலேயே, இறுதியாக 11ஆம் திகதியன்றும் நேற்றும் (13), தெரிவுக்குழு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்போது சாட்சியமளித்த மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலியும் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளரிடத்தில் தான் 3 தடவைகள் அறிவித்திருந்ததாகவும் பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில், ஹேமசிறி பெர்ணான்டோ சகல பாதுகாப்புத் துறைசார் அதிகாரிகளையும் அ​ழைத்து, உரிய விடயம் குறித்து த் தெளிவுபடுத்தியதாகவும், ஆனால் ஜனாதிபதி அது குறித்துப் பெரிதாகக் கருத்திற்கொண்டதாகத் தெரியவில்லை என்றும் கூறியிருந்தார்.

மறுமுனையில், இந்தத் தெரிவுக்குழு விசாரணைகள், அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து நடத்தப்படும் ஒன்றெனவும் ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப் பிரேரணை கொண்டுவருவதற்கான முனைப்பெனவும், பல தரப்புகள் சாடுகின்றன. எவ்வாறாயினும், இவ்விடயம் சார்ந்த உண்மைகளை முழுமையாக அறியும் அதிகாரம், பொதுமக்களுக்கு உள்ளதென்பதை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த விசாரணைகள் நிறுத்தப்படுவதாலோ அல்லது ஊடகங்களை அனுமதிக்காமல் திரைமறைவில் நடத்தப்படுவதாலோ, அந்த விசாரணைகள் நியாயமான முறையில் இடம்பெறும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முடியாது? மாறாக, சந்தேகங்களையே தோற்றுவிக்கும். இவ்வாறிருக்க, தற்போது நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகளின் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளமை கவலைக்குரியது என்பதோடு உண்மைகள் மறைக்கப்படுவதாகவே கருதப்படுகின்றது. நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதன் காரணம் தெரிவுக்குழுவுக்கும் அறிவிக்கப்படவில்லை என்று, அதன் தலைவராகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இந்தத் தெரிவிக்குழுவின் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்த சாட்சியங்களை முழுமையாகத் தொகுத்துப் பார்க்கின்ற போது, ஆரம்பத்தில் எங்கிருந்து தவறு விடப்பட்டுள்ளது, இதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்ற கேள்விகளுக்கு, ஒரேயொரு தரப்பின் மீதுதான் விரல் நீட்டப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இருப்பினும், ஒட்டுமொத்த விசாரணைகளின் பின்னர், தெரிவுக்குழு முன்வைக்கும் அறிக்கையில் தான், இது தொடர்பான முடிவு காணப்படும். அதுவரை, நாம் அனைவரும் பொறுமை காக்கத்தான் வேண்டும்.

தெரிவுக்குழுவுக்கு என்ன நடக்கும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தேடியறிவதற்கு நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அடுத்தக்கட்ட நகர்வு எவ்வாறு இருக்கப்போகிறது என்ற கேள்வி, ஒவ்வொருவரின் மனதிலும் தோற்றியுள்ளது.

தெரிவுக்குழுவைக் கலைக்கவேண்டுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒன்றைக்காலில் நின்றுகொண்டிருக்க, காலவரையறை நிறைவடையும் வரையிலும், அக்குழுவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென்று, குழு அறிவித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரையில், பிரித்தானிய முறையிலிருந்து தோன்றியதாயினும், நாடாளுமன்றத்திலும் சமூகத்திலும் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப, அதன் தன்மைகளில் மாற்றம் பெற்றுள்ளது. அதனடிப்படையிலேயே, குழுக்களும் நியமிக்கப்படுகின்றன.

குழுக்களை, நிலையியற் குழுக்கள், விஷேட குழுக்கள் எனும் இரண்டு விரிவான வகுப்புக்களுள் வகைப்படுத்தப்பட முடியும்.

நிலையியற் குழுக்கள், நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் சபாநாயகரால் நியமிக்கப்படுவதுடன், அக்குழுவின் அலுவல் முற்றுப்பெற்றாலும் முற்றுப் பெறாவிட்டாலும், தொடர்ந்து செயற்பட்டவாறிருக்கும். அவைகளின் பதவிக் காலத்தில் சற்று நிரந்தரத்தன்மை காணப்படும். சபையின் குறிப்பிட்ட ஓர் அலுவலை, அவை கையாள்கின்றன.

விஷேட குழுக்களோ, பெரிதும் தற்காலிகமானவையாக இருப்பதுடன் அவற்றின் பணி பூர்த்தியானதும், அவை இல்லாதொழிந்து போகின்றன. இக்குழுக்கள் காலத்துக்குக் காலம் அவற்றுக்கு வழங்கப்படும் இவ்வாறான குறிப்பிட்ட செயற்பாடுகளுக்காகச் செயலாற்றுகின்றன. இவற்றை நாம், தெரிவுகுழுக்கள் என்றும் அழைக்கலாம்.

நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கத்துக்கு இடையில் கடுமையான சிக்கல்களைத் தோற்றுவித்திருக்கும், உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் தொடர்பில் தேடியறிவதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விசாரணைகளை, ஜனாதிபதி கடுந்தொனியில் விமர்சித்துள்ளார்.

விசேட தெரிவுக்குழுவுக்கு அப்பால், 20க்கும் மேற்படாத துறைசார் மேற்பார்வைக்குழுக்கள், ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களிலும் இயங்கும். நாடாளுமன்றம் ஒரு தேர்தலையடுத்து நடைபெறும் அதன் முதலாவது அமர்வுக்குப் பின்னர், ஆறு வாரங்களினுள் இக்குழுக்கள் நியமிக்கப்படவேண்டும்.

அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள், சிறப்பு நோக்கங்களுக்கான குழுக்கள், சட்டவாக்க நிலையியற் குழு, துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் என வகைப்படுத்தியே அக்குழுக்கள் நியமிக்கப்படும். அக்குழுக்கள் அனைத்தும், நாடாளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும். இடைக்கால அறிக்கைகளையும், அக்குழுக்கள் சமர்ப்பிக்கலாம்.

விஷேட குழுக்கள், கட்சித்தலைவர்களின் ஆலோசனையின் பிரகாரம் சபாநாயகரால் நியமிக்கப்படுகின்றன. சபாநாயகரினால் மட்டுமே அது கலைக்கப்படும். இக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் விசாரணையொன்றின் பரப்பெல்லை, எக்கட்டளையின் கீழ் அக்குழு நியமிக்கப்படுகின்றதோ அக்கட்டளையின் நியதிகளால் வரையறுக்கப்படுகின்றது.

ஆனால் அது, நாடாளுமன்றத்தின் பணிப்பினால் விரிவாக்கப்படவோ, மட்டுப்படுத்தப்படவோ முடியும். தவிசாளரும் அங்கத்தவர்களும், சபாநாயகரால் நியமிக்கப்படுகின்றனர். பன்னிரண்டுக்கும் மேற்படாத எண்ணிக்கையிலான உறுப்பினர்களை, ஒரு தெரிவுக்குழு கொண்டிருக்கும். ஆனால் இவ்வெண்ணிக்கை, நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் அதிகரிக்கப்பட முடியும். ஆட்களையோ பத்திரங்களையோ, பதிவேடுகளையோ வரவழைப்பதற்கான அதிகாரத்தை, நாடாளுமன்றம் இக்குழுக்களுக்கு வழங்குகின்றது.

அத்துடன், விரிவான நியாயாதிக்கத்தையும் கொண்டுள்ளன. அதேவேளை, நாடாளுமன்றத்தின் நாளாந்த அலுவல்களுக்கு, அவை பாரிய பெறுமதி மிக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. இந்நிலையில், தற்போது விசாரணைகளை முன்னெடுக்கும் விசேட தெரிவுக்குழுவின் முன்னிலையில் ஆஜராகவேண்டாமென யாரும் கட்டளையிடமுடியாது. அதற்கான தார்மீக உரிமையும் இல்லை என்பதே திண்ணம்.Post a Comment

Protected by WP Anti Spam