By 24 June 2019 0 Comments

சூடானில் தொடரும் நிழல் யுத்தம் !! (கட்டுரை)

ஏற்கெனவே முன்னாள் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீரை கவிழ்த்துவிட்ட ஒரு மாத கால மக்கள் கிளர்ச்சியைத் தோற்கடிக்க அல்லது பலவீனப்படுத்துவதற்கான சூடான் இராணுவத்தின் முயற்சிகளுக்கு உதவுவதில் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகத்தின் பங்காளியாக ரஷ்யா உருவெடுத்துள்ளது.

நாடுகடத்தப்பட்ட ரஷ்ய தொழிலதிபர் மிகைல் கோடர்கோவ்ஸ்கி நிதியளித்த விசாரணைக் குழுவான பிரித்தானியத் தலைநகர் இலண்டனைத் தளமாகக் கொண்ட டோசியர் சென்டர், தி கார்டியன், ரஷ்ய மொழி செய்தி வலைத்தளமான எம்.எச்.கே மீடியாவுக்கு கசிந்த ஆவணங்கள், சூடானில் இதுவரை திரைக்குப் பின்னால் உள்ள ரஷ்யாவின் பாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளன.

ஆபிரிக்க ஆட்சியாளர்களுடன் உறவுகளை உருவாக்குவதன் மூலமும், இராணுவ ஒப்பந்தங்களை நடத்துவதன் மூலமும், புதிய தலைமுறை தலைவர்கள், இரகசிய முகவர்களை பணியில் அமர்த்துவதன் மூலமும் ஆப்பிரிக்கா முழுவதும் ரஷ்யாவின் நிலைப்பாட்டை உயர்த்துவதற்கான திட்டங்களை வகுத்தல், அதன் ஒரு பகுதியாக சூடானில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை தோற்கடிப்பதற்காக பிரசாரத்தை மேற்கொள்ளல் என்பன குறித்த ஆவணத்தின் மூலம் கசிந்துள்ள விவரங்களாகும்.

போராட்டக்காரர்களின் பிரசாரத்துக்கு எதிரான திட்டம், ரஷ்ய மற்றும் அதன் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிராக எதிர்ப்பை மேற்கொள்ளல் தொடர்பாக ஏற்கெனவே கசிந்திருந்த முன்மொழிவுகளிலிருந்து நகல் எடுக்கப்பட்டு, அதனடிப்படையில் சூடானில் உள்ள போராட்டக்காரர்களின் அணுகுமுறையை உடைக்கும் ஒரு செயல்பாடாக ரஷ்யா பார்க்கின்றது.

இஸ்லாமிய எதிர்ப்பு, இஸ்ரேலுக்கு ஆதரவான மற்றும் சமபாலின சார்பான விடையங்களை சித்தரிப்பதற்காக போலிச் செய்தி மற்றும் காணொலிகளைப் பயன்படுத்துவதற்கு சூடானிய இராணுவத்தை ரஷ்யா அறிவுறுத்தியது. மறுபுறம், இறுக்கமான செய்தி தணிப்பை மேற்கொள்ளல், செய்தி நிறுவனங்களை குறுக்குதல் அல்லது அவை தொடர்பான கொள்கைகளை இருக்குதல், அரசாங்கத்துக்கு எதிரான விமர்சனங்களை தணிக்கை செய்தல் தொடர்பாகவும் ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது.

கசிந்த ஆவணங்களின் படி, சென், பீட்டர்ஸ்பர்க்கைச் சேர்ந்த தொழிலதிபரும் ஜனாதிபதி புட்டினின் நெருங்கிய கூட்டாளியுமான யெவ்ஜெனி பிரிகோஜின், முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல் பஷீருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் குறித்த ரஷ்யாவின் அறிவுறுத்தல்களை ஜனாதிபதி ஓமர் அல் – பஷீர் பின்பற்றவில்லை என்று குற்றம் சாட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், குறித்த யெவ்ஜெனி பிரிகோஜின் என்பவரே, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்துக்க்ச் சாதகமான ஒரு விரிவான சமூக ஊடக பிரசாரத்தை ரஷ்யா சார்பாக நடத்தியவர் என்பதற்காக, அமெரிக்க சிறப்பு வழக்குத்தொடுநர் றொபேர்ட் மல்லரால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிலை இவ்வாறிருக்க, சூடான் இராணுவத்தை பொறுத்தவரை அது தொடர்பில் முக்கிய முடிவுகளை எடுத்தலில் தொடர்ச்சியாகவே யெவ்ஜெனி பிரிகோஜின் பங்கு இருக்கின்றது.

இவ்வாரம், இராணுவத்தினரின் அழைப்பின் பேரில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சூடானுக்கு விஜயம் செய்தமை, குறித்த விஜயத்தில் சூடான் இராணுவத்துக்கு எதிரான எதிர்ப்பாளர்களால் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படும் மருத்துவ வசதிகளை அவர்களுக்குக் காண்பிக்கவும், சூடான் இராணுவத்துடன் தொடர்புடையதும், மோசமான துணை ராணுவப் படையினரால் தாக்கப்பட்ட மருத்துவமனைகள் இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன என்பதை நிரூபிக்கவும், பிரிகோஜினின் அறிவுத்தலுக்கு அமையவே குறித்த வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் அழைத்தது செல்லப்பட்டனர் என கூறுகின்றது குறித்த ஆவணம்.

வெளிநாட்டு ஊடகவியலாளர்களை அழைத்தல் “ஒரு நல்ல யோசனையாகத் தோன்றியிருக்க வேண்டும், ஆனால் ஏன் என்று என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. போராட்டக்காரர்கள் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டார்கள் என்பதை எங்களுக்குக் காண்பிப்பதே திட்டம். சூடான் இராணுவத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள் உண்மையில் என்னவென்பதை உலகத்தால் காண முடிந்தால், இராணுவத்துக்கு போராளிகளை இராணுவ ரீதியாக சந்தித்தலை தவிர வேறு வழியில்லை என்பதை உலக ஊடகங்கள் புரிந்துகொள்வார்கள் என சூடானிய அரசாங்கம் கருதுகின்றது ”என்று பிரித்தானிய ஒளிபரப்புச் சேவையின் ஆபிரிக்க ஆசிரியர் ஃபெர்கல் கீன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர் கீனுக்கு, ஜெனரல் மொஹமட் ஹம்தான் டகலோ அக்கா ஹெமெடி தலைமையிலான ஆர்.எஸ்.எஃப் துணைப்படைகள் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகக் கொள்கைகளுக்கு சார்பானது எனவும் அதன் காரணமாகவே அவ்விரண்டு நாடுகளும் தொடர்ச்சியாக ஆர்.எஸ்.எஃப் க்கு உதவிகள் வழங்குகின்றன என்றும் கூறுகின்றார். அதற்கு காரணம், ஏனெனில் ஜெனரல் மொஹமட் ஹம்தான் டகலோ அக்கா ஹெமெடி தலைமையிலான படைகள் ஏற்கனவே சவூதி அரேபியா சார்பாக யேமனில் போராடி இருந்தமை, மற்றும் அவ்விராணுவ கட்டமைப்பானது ஒரு உள்நாட்டு போராட்ட குழு என்பதையும் தாண்டி ஒரு ஆக்கிரமிப்பு இராணுவத்தைப் போன்று செயல்படுவதே காரணம் எனவும் கீன் குறிப்பிடுகின்றார்.

சர்வதேச விவகாரங்களில் அடிப்படையில் டாபரில் இருந்து ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படை 2019/2020 இல் விலக உள்ளமை தொடர்ச்சியாக நடைபெறும் மோதல்களை இன்னும் உக்கிர நிலைக்கு கொண்டுசெல்லும். மறுபக்கம், குறித்த அமைதி காக்கும் படைகளின் விலகல் சர்வதேச நாடுகளின் பிரசன்னத்தை சூடானில் இருந்து நகர்த்தும் எனவும் அவ்விடைவெளியில் ரஷ்யா – சவூதி அரேபியா – ஐக்கிய அரபு அமீரகம் என்பன தமது நலன்களுக்காக நகர்த்தல்களை மேற்கொள்ளும் என்பதையும் அறிந்திருத்தல் அவசியமானது.

இந்நிலைமைகளின் மத்தியிலேயே சூடானுக்கான பிரத்தியேக தூதுவராக டொனால்டு பூத்தை கடந்த வாரம் ஐக்கிய அமெரிக்கா நியமித்துள்ளது. இதன் பிரகாரம் அமெரிக்கா தனது அரசியல் பிரசன்னத்தை சூடானில் அதிகரித்தல் குறித்த உள்நாட்டு மோதலை முடிவுக்கு கொண்டுவருமா அல்லது மேலும் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.Post a Comment

Protected by WP Anti Spam