By 4 August 2019 0 Comments

உயிர் வாழ உதவும் நொதிகள்!! (மருத்துவம்)

மனித உடலில் நிகழும், பல்வேறு உயிர்வேதியியல் எதிர்வினைகளை வேகமாக செயல்படுத்துவதற்கு உதவுபவை என்சைம்கள்(Enzymes). இயற்கையாக வடிவமைக்கப்பட்ட ஒரு வகை புரதங்களே இந்த என்ஸைம்கள் ஆகும். இவற்றை தமிழில் நொதிகள் என்று அழைக்கிறோம்.

மனித உடலில் மட்டும் ஏறத்தாழ 75 ஆயிரம் என்சைம்கள் இருக்கின்றன. இவை நம்மை உயிருடன் வைத்திருக்கும் ரசாயன எதிர்வினைகள், மேலும் நம் உடலின் வளர்சிதை மாற்றமானது, என்சைம் முன்னெடுக்கும் வேலையை நம்பியிருக்கின்றன. இவைகளைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்வோம்…

ஏறத்தாழ உடலில் உள்ள செல்களின் இயக்கத்திற்கு இந்த என்சைம்கள் முக்கியமாகத் தேவைப்படுகின்றன. என்சைம்கள் இல்லாவிடில் சில வேதியியல் வினைகள் மில்லியன் கணக்கான மடங்கு மெதுவாக நடக்கும். அப்படி மெதுவாக செயல்பட்டால் ஒரு உயிர் வாழவே முடியாது.

அதனால் மனிதன் உயிர் வாழ என்சைம்கள் அத்தியாவசியம் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ள முடியும். உடலில் உள்ள அனைத்து செல்களுமே தேவையான அளவு என்சைம்களை உற்பத்தி செய்கின்றன. ஆனால், இது ஒரு உயிர்ப்பொருள் அல்ல. இருந்தாலும், சில மணித்துளிகளில், பிற சேர்மங்களுடன் சேர்ந்து, செறிவு மிகுந்த உயிர்வேதி வினைகளை நிகழவைக்கும் ஆற்றல் மிக்கது.

செடி, கொடிகளில் ஒளிச்சேர்க்கை நிகழ்வது முதல், மனிதர்களின் உடலில் உணவு செரிப்பது, மூளை இயங்குவது, இதயம் துடிப்பது, மூச்சுவிடுவது ஆகிய அடிப்படை இயக்கங்கள் அனைத்துமே என்சைம்களின் உதவியோடுதான் நிகழ்கின்றன.

மாவை புளிக்க வைப்பதில் தொடங்கி, பாலை தயிராக்குவது, மதுபானத்தயாரிப்பு போன்றவற்றில் நொதிக்கும் செயல் நடைபெறுவதற்கு ஈஸ்ட் என்னும் நுண்ணுயிரி செல்களில் உயிர்ப்புடன் இருந்ததே காரணம் என்பதை 19ம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். அதன்பின் மேலைநாடுகளில் கேக், பிரட் தயாரிப்பில் இந்த ஈஸ்ட்டை பயன்படுத்தத் தொடங்கினர்.

International Union of Biochemistry and Molecular Biology அமைப்பினர் என்சைம்களை 6 பெரும் வகைகளாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு வகைக்குள்ளும் துணைவகைகள், அந்த துணை வகைக்குள்ளும் துணை வகைகள் என நான்கு இலக்க என்சைம் எண்களால் அடையாளம் காணப்படுகிறது. என்சைம்கள் உடலில் பெரிய சிக்கலான மூலக்கூறுகளை குளுக்கோஸ் போன்ற சிறிய மூலக்கூறுகளாக உடைக்க உதவுகின்றன. இதன்மூலம் உடல் குளுக்கோஸை உடனடி எரிபொருளாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

செரிமான மண்டலத்திற்கு துணையாக செயல்படுவது Proteases, Lipases மற்றும் Amylases என்ற 3 என்சைம்கள்தான். நம் உணவில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள் போன்ற சத்துக்களை உடைத்து சர்க்கரையாக மாற்றும் செயலை இந்த என்சைம்கள்தான் செய்கின்றன. எடுத்துக்காட்டாக Amylase மற்றும் Carbohydrase என்சைம்கள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக உடைக்கும் வேலையையும், Lipases என்சைம்கள் கொழுப்புச் சத்தை மூன்று கொழுப்பு அமிலங்களாகவும், கிளிசரால் மூலக்கூறாகவும் உடைக்கும் வேலையையும், Proteases புரதச்சத்தை சிறிய புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்களாக உடைக்கும் வேலையையும் செய்கின்றன. இவை சூப்பர் என்சைம்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

செரிமான என்சைம்கள் செரிமான மண்டலத்தின் இயக்கத்திற்கு ஏற்றவாறு கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் ஆகியவற்றை உடைத்துக் கொடுப்பதால் ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிப்பதோடு, எரிச்சலூட்டும் குடல் நோய் (Irritable bowl syndrome), அல்சர், நெஞ்செரிச்சல் போன்ற வயிறு உபாதைகளை வராமல் தடுக்கின்றன.

என்சைம்கள் மரபணு பிரதியெடுக்கும் வேலையையும் செய்கின்றன. நம் உடலின் ஒவ்வொரு செல்லிலும் மரபணுக்கள் உள்ளன. ஒவ்வொரு முறை மரபணு பிரியும்போதும் அவை பிரதியெடுக்கப்பட வேண்டும். மரபணு சுருள்களை அவிழ்த்து தகவல்களை நகலெடுக்கும் செயல்பாட்டில் என்சைம்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் வேலையை கல்லீரல் செய்கிறது. இந்த வேலைக்கு கல்லீரல் சில என்சைம்களை பயன்படுத்திக் கொள்கிறது.

என்சைம்கள், மனித உடலின் சில நிலைகளில் மட்டுமே செயல்பட முடியும். மனித உடலில் உள்ள பெரும்பாலான நொதிகள் 37°C – உடல் வெப்பநிலையில் சிறப்பாக செயல்படுகின்றன. குறைந்த வெப்பநிலையில், அவை மிக மெதுவாக மட்டுமே வேலை செய்ய முடியும். இதனால்தான் இரவு நேரங்களில், உடல் வெப்பநிலை குறையும்போது செரிமான என்சைம்கள் மிக மொதுவாக செயல்படுவதால், இரவுச் சாப்பாடு செரிமானம் அடைய தாமதமாகிறது.

அதேபோல், உடலின் குறிப்பிட்ட அமிலம் மற்றும் காரம் (Acidic / Alkaline)pH அளவில் மட்டுமே என்சைம்கள் வேலை செய்ய முடியும். உடலில் இந்த pH அளவுகள் காணப்படுவதைப் பொருத்து என்சைம்களின் செயல்பாடு வேறுபடும். உதாரணமாக குடலில் உள்ள என்சைம்கள் 7.5 pH அளவில் சிறப்பாகவும், அதேநேரத்தில் வயிற்றில் உள்ள என்சைம்கள் 2 pH அளவிலேயே சிறப்பாகவும் வேலை செய்கின்றன. ஏனெனில், வயிறு மிகவும் அமிலத்தன்மை உடையது.

வெப்பநிலை அதிகமாக இருந்தாலோ அல்லது சூழல் மிகவும் அமிலமாகவோ அல்லது காரமாகவோ இருந்தாலோ, என்சைம்–்கள் தன் வடிவத்தை மாற்றிக் கொள்கின்றன. இது செயலில் உள்ள தளத்தின் வடிவத்தை மாற்றுகிறது, இதனால் அடிப்படை மூலக்கூறுகளை பிணைக்க முடியாமல் போகும்போது, என்சைம்களின் செயல்திறன் குறைக்கப்படுகிறது.

இப்படி, மனித உடலின் அன்றாட வேளையில், என்சைம்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. சேர்மங்களுடன் பிணைப்பதன் மூலமும் மாற்றுவதன் மூலமும், அவை செரிமான அமைப்பு, நரம்பு மண்டலம், தசைகள் மற்றும் பலவற்றின் சரியான செயல்பாட்டிற்கு மிக முக்கியமானவை.

இயற்கையான காய்கறி, பழவகைகளில் சில என்சைம்கள் இருக்கின்றன. நம் பாரம்பரிய உணவில் கட்டாயம் இடம்பிடிக்கும் ஊறுகாய் நொதித்தலுக்கு (Fermented Foods) உதாரணம். இவற்றை சாப்பிட்டு உடலை அதிக காரமில்லாமலும், அதிக அமிலத்தன்மையில்லாமலும் pH அளவுகளை சமநிலையில் வைத்துக் கொள்வதன் மூலம் என்சைம்களால் கிடைக்கும் பலன்களை நாம் முழுமையாக அடைய முடியும்.Post a Comment

Protected by WP Anti Spam