By 26 August 2019 0 Comments

முதுமையில் கோபம் கொடியது!! (மருத்துவம்)

முதியவர்களிடம் ஏற்படும் கோப உணர்வு அவர்களின் உடல்நலனை மேலும் பாதிக்கும் மோசமான அம்சமாக இருக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது. எனவே, முதியவர்கள் கோபத்தை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்தினர் முதியவர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது அந்த ஆய்வு.

முதியவர்கள் என்றால் எப்போதும் சோகமாகவோ அல்லது கோபமாகவோதான் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது அவர்களின் இயல்பான சுபாவம் அல்ல.

உடலின் தள்ளாமையும், மனதின் வெறுமையுமே அவர்களுடைய அந்த நிலைக்குக் காரணமாக இருக்கிறது என்கிறது உளவியல். அப்படியில்லாமல் அவர்களுடைய முதுமையை உற்சாகமாக மாற்றுவது குடும்பத்தினரின் கைகளில்தான் உள்ளது. முதியவர்களை பாரமாக நினைக்காமல், அவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டாலே ஓரளவு அவர்களுடைய நோய்களை கட்டுப்படுத்த முடியும் என்பதும் உண்மை.

இதனை நிரூபிக்கும் விதமாக ‘இணையின் இழப்பே வயதானவர்களின் உடல்நிலையை கடுமையாக பாதிக்கும் என்றாலும், அதைவிட 2 மடங்கு அதிகமான உடல் பாதிப்பை கோபம் ஏற்படுத்துகிறது’ என்ற தகவலை சொல்கிறது புதிய ஆய்வு ஒன்று.

‘இதயநோய், புற்றுநோய் மற்றும் ஆர்த்தரைடிஸுக்கு காரணமான அழற்சியை(Inflammation) முதியவர்களிடம் ஏற்படும் கோபம் தீவிரமடையச் செய்கிறது. சோகத்தையும் விட கோபம் வயதான உடலை மேலும் சேதப்படுத்தும்’ என்ற ஆய்வறிக்கை கனடா நாட்டில் வெளியாகும் Journal of psychology and ageing இதழில் வெளியாகியுள்ளது.

‘வயதாகும்போது ​​ஏற்கனவே வழக்கமாக செய்த செயல்களை அவர்களால் செய்ய முடியாது அல்லது அவர்களது துணையின் இழப்பு மற்றும் அவர்களின் உடல் இயக்கம் குறைவதை அனுபவிப்பதால், அவர்களது கோபம் இன்னமும் அதிகரிக்கக்கூடும். அந்த கோபம், நாள்பட்ட நோய்களின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். இது அவர்களுடைய சோகத்தையும் விட அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதை எங்கள் ஆய்வு காட்டுகிறது’ என கனடா நாட்டின் மாண்ட்ரீலில் உள்ள கான்கார்டியா பல்கலைக்கழக முன்னணி எழுத்தாளர் மீகன் பார்லோ விளக்குகிறார்.

‘ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 59 முதல் 93 வயதுக்குட்பட்ட 226 முதியவர்களிடம், அவர்களுடைய கோபம், சோகம் மற்றும் அவர்களுடைய நாட்பட்ட வியாதிகள் சம்பந்தமான கேள்விகள் கேட்கப்பட்டன. அதோடு அவர்களுடைய ரத்தமாதிரியும் எடுக்கப்பட்டு அழற்சிக்கான அறிகுறிகள் இருக்கிறதா? எனவும் சோதனை செய்யப்பட்டது.

அந்த சோதனையில், தினமும் கோபப்படக்கூடிய 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடத்தில் அதிகப்படியான அழற்சியும், நாள்பட்ட நோய்களும் இருப்பது தெரிய வந்துள்ளது. 60 வயதுகளின் தொடக்கத்தில் இருப்பவர்களிடத்தில் இது குறைவாக இருப்பதும் தெரிகிறது’ இந்த ஆய்வுக் குழுவின் மற்றொரு ஆய்வாளரான கார்ஸ்டன் வ்ரோஷ்.

இதற்குக் காரணம், 60 முதல் 70 வயதுகளில் உள்ள இளைய முதியவர்கள், வாழ்க்கையின் சவால்கள் மற்றும் வயது தொடர்பான இழப்புகளை சமாளிக்க அந்த கோபத்தையே எரிபொருளாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த உந்துதலே அவர்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆனால், 80 வயதை கடந்தவர்களுக்கோ வாழ்க்கையில் சில சந்தோஷங்களை அனுபவிக்க முடியாது என்ற நிலை வந்தவுடன் அவரின் கோபம் மேலும் மோசமடையக்கூடும்’ என்கிறது இந்த ஆய்வு.

இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன?

நம் வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கு தனி அறை, தொலைக்காட்சி, ஏ.சி. போன்ற வசதிகள் செய்து கொடுத்தால் மட்டும் போதாது. உண்மையில் முதியவர்கள் எதிர்பார்ப்பது உணர்வுப்பூர்வமான அன்பு மட்டுமே. அவர்களிடம் இன்சொற்களை பேசாவிட்டாலும் கூட, குறைந்தபட்சம் எந்த செயல்கள் அவர்களை கோபமடையச் செய்கிறது என்பதை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் புரிந்துகொண்டு, அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உணர்வுகளை தூண்டாமல் இருப்பதன் மூலம் வயதானவர்களுக்கு ஏற்படும் மோசமான நோய்களிலிருந்து ஓரளவு பாதுகாக்கலாம் அல்லவா?!Post a Comment

Protected by WP Anti Spam