By 25 August 2019 0 Comments

மாற்று தெரிவுகளும் முஸ்லிம்களின் தேடலும் !! (கட்டுரை)

பொதுவாக, மனித மனம் முழுமையாகத் திருப்தியடைவது என்பது, அபூர்வமான காரியமாகும். திருப்தியின் எல்லைகளைத் தொடர்ந்து, அகலமாக்கிச் செல்வதன் காரணத்தால், எதிலும் இலகுவில் திருப்தி காணாத ஓர் உயிரினமாக, மனிதர்கள் கருதப்படுகின்றார்கள்.

திருப்திப்படுத்த முயலும் விடயங்களிலேயே, மனிதர்கள் திருப்தி காணாத நிலை இருக்கையில், மக்களைத் திருப்திப்படுத்துவது பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாத ஆட்சி, அதிகாரத்தால், மக்கள் எந்தளவுக்கு அதிருப்தி அடைந்திருப்பார்கள் என்பதைத் தனியாக விவரிக்க வேண்டியதில்லை.

அப்படியொரு மனநிலையே, பெரும்பாலான இலங்கை மக்களுக்கு ஏற்பட்டிருப்பதாகச் சொல்ல முடியும். ஆட்சியாளர்கள் யாரிலுமே, நம்பிக்கையற்ற மனோநிலையும் யாரைத்தான் நம்புவதோ என்ற மனக் குழப்பமும், குறிப்பாக சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு உருவாகி இருக்கின்றது.
இந்த நாட்டில், சுதந்திரத்துக்குப் பின்னரான 70 வருடங்களில், ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியுமே மாறிமாறி ஆட்சி செய்து வருகின்றன.

ஆனால், தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்பது போல, இலங்கையில் தமிழ் ஆயுதக் குழுக்களின் செயற்பாடு, ஆயுத மோதல், இனவாத நெருக்குவாரங்கள் போன்றவற்றால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்குப் பிராயச்சித்தம் தேட, அரசாங்கங்கள் முயற்சி எடுக்கவில்லை. அத்துடன், முஸ்லிம்களின் உரிமைகள், அபிலாஷைகளை நிறைவேற்றி, அம்மக்களைத் திருப்திப்படுத்தும் ஆட்சியை நடத்துவதற்கும் தவறிவிட்டன.

இப்போது, நாட்டில் மாற்றம் பற்றிய சிந்தனை, பரவலாக மேலெழுந்துள்ளது. சிலர், ஜனாதிபதி மாற்றப்பட வேண்டும் என்கின்றனர். இன்னும் சிலர், பிரதமர் மாற வேண்டுமென நினைக்கின்றனர். வேறு சிலருக்கு, ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற அவா இருக்கின்றது. இன்னும் பலருக்கு, எதில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டுமென்ற திட்டவட்டமான நிலைப்பாடு எதுவும் கிடையாது. ஆனாலும், ஏதாவது ஒரு நல்ல மாற்றம் நிகழ வேண்டுமென்று நினைக்கின்றனர்.

ஓர் ஆளும் கட்சிக்கு, கூட்டணி ஆட்சியாளர்களுக்கு, இலங்கை மக்கள் இரண்டு ஆட்சிக்கால ஆணைகளைப் பொதுவாக வழங்கி வந்திருக்கின்றனர். அதன்படி, 1982க்கும் பிறகு ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற ஒரு வேட்கை, அநேகமாக எட்டரை வருடங்களிலேயே மக்களுக்கு ஏற்பட்டிருப்பதாகச் சொல்ல முடியும். ஆனால் இந்த முறை, நான்கரை வருடங்களிலேயே இந்த எண்ணம் உருவாகியிருப்பதே கவனிப்புக்குரிய விடயமாகும்.

ஏதாவது ஒரு மாற்றம் நடந்தாக வேண்டும் என்று, நாட்டு மக்கள், குறிப்பாக முஸ்லிம் மக்கள் கருதுகின்றார்கள். அவ்வாறாயின், அரசாங்கத்தை வெற்றிபெறச் செய்த முஸ்லிம்கள், எந்தளவுக்கு அதிருப்தி அடைந்திருக்கின்றார்கள் என்பதும் இந்த அரசாங்கம், நடைமுறை அரசியலில் எந்தளவுக்கு வெற்றிபெறவில்லை என்ற யதார்த்தத்தையும் உணர்ந்துகொள்வது அவ்வளவு கடினமானதல்ல.

இந்தப் பின்புலத்தோடு தொற்றிக்கொண்டுள்ள தேர்தல் காய்ச்சலில், ஏற்கெனவே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக, கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளராக, நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார பிரகடனம் செய்யப்பட்டுள்ளமையும் அந்தக்கட்சி நடத்திய கூட்டத்துக்கு வந்திருந்த பெருந்திரளான மக்கள் அலையையும், ஏனைய கட்சிகளுக்கு உள்ளூற ஓர் உதறலை ஏற்படுத்தி இருக்கின்றதென்றால் மிகையில்லை.

தேர்தல் களமானது, முன்மதிப்பீடு செய்யப்பட்டதை விட, மிகவும் போட்டிகரமானதாக அமையும் என்ற விடயத்தை, மஹிந்த தரப்புக்கு உணர்த்தியிருப்பது மட்டுமன்றி, பலம் பொருந்திய வேட்பாளர்களையே களமிறக்கியாக வேண்டிய நிர்ப்பந்த சூழலைப் பிரதான கட்சிகளின் தலைவர்களான ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையில், பல்வேறு அமைப்புளை உள்ளடக்கிய ‘தேசிய மக்கள் சக்தி’ என்ற அரசியல் அணியின் மாநாடு, கொழும்பு – காலி முகத்திடலில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த மாநாட்டில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். ஜே.வி.பி மட்டுமன்றி, எந்தக் கட்சியின் கூட்டத்துக்காகவும் அண்மைக்கால வரலாற்றில் காலி முகத்திடல் கண்டிராதளவு மக்கள் கலந்து கொண்டிருந்தமை, இலங்கை அரசியல் அரங்கில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி இருக்கின்றது.

அதுபோதாதென்று, அநுர குமாரவும் இந்த மாநாட்டில் வைத்தே, ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால், கடந்த வாரம் கோட்டாபய ராஜபக்‌ஷ பேசுபொருளாக இருந்த நிலைமாறி, இப்போது அநுர குமார திஸாநாயக்கவே பேசப்படுபவராக ஆகியிருக்கின்றார்.

கூட்டத்துக்கு வருவோரை வைத்து, ஒரு கட்சியின் வேட்பாளர் வெல்வாரா இல்லையா என்பதைக் கணிப்பிட்டுக் கூறுவது அறிவார்ந்தது அல்ல. ஆனால், காலி முகத்திடலில் கூடிய ஜன சமுத்திரத்தைப் பொறுத்தவரையில், அரசியல் அரங்கில் அவ்வாறான ஒரு தோற்றப்பாடு இருக்கின்றது. காலி முகத்திடலுக்கு அதிக மக்கள் வந்தால், கட்சிகள் அதை ஒரு தேர்தல் வெற்றிக்கான கட்டியமாக எடுத்துக் காண்பிப்பதை நாமறிவோம்.

அந்த வகையிலேயே, மக்கள் விடுதலை முன்னணிக்காக மக்கள் கூடியிருந்ததை, அக்கட்சி காட்சிப்படுத்த முனைவதோடு, ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சிக்கும் ஒரு கலக்கத்தை இது ஏற்படுத்தி இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

காலி முகத்திடலில் கூடுகின்ற எல்லா மக்களின் குடும்பங்களும் வாக்களித்தாலும், ஆட்சியமைக்க முடியாது என்பதே யதார்த்தம். ஆனாலும், இந்த மாயைக்குப் பின்னால் ஏதோவொரு செய்தி மறைந்திருப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். அப்படிப் பார்த்தால், ‘மக்கள் சக்தி’ மாநாட்டுக்கு வந்திருந்த மக்கள் வெள்ளம், இரு செய்திகளைக் குறிப்புணர்த்துவதாக எடுத்துக் கொள்ளலாம்.

ஒன்று, மக்கள் விடுதலை முன்னணி; ஏனைய பல அமைப்புகளுடன் ஏற்படுத்தியுள்ள புதிய மக்கள் சக்தி அணியின் ஊடாகவோ என்னவோ, அக்கட்சிக்கு அதிலும் குறிப்பாக அநுர குமாரவுக்கு, மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதை வைத்து, ஜே.வி.பியால் தனித்து வெற்றிபெறுவது நடைமுறைச் சாத்தியமற்றது என்றாலும், அதனது வாக்கு வங்கி அதிகரிக்கும் சாத்தியம் தென்படுகின்றது.

இரண்டாவது, இந்த நாட்டில் வாடிக்கையாக ஆட்சி செய்து வரும் சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து புதுக் கட்சி தொடங்கிய மஹிந்த அணியும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி முறைமையில் இருந்து மாறுபட்ட ஓர் ஆட்சி முறையை அதாவது, மாற்றுத் தெரிவையே மக்கள் நாடி நிற்கின்றனர் என்பதையும், இக்கூட்டம் எடுத்தியம்புவதாக எடுத்துக்கொள்ளலாம்.

இந்த அடிப்படையில், இலங்கை மக்களின் முன்னால், இரண்டு பந்தயக் குதிரைகள், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்காகக் களமிறக்கப்பட்டுள்ளன. இன்னும் பல குதிரைகள் களத்துக்கு வரும்.
குறிப்பாக, ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சியின் குதிரைகளைச் சிறுபான்மை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதேநேரம், முன்னர் பிரகடனப்படுத்தப்பட்ட குதிரைகளின் பெயர்கள், பின்னர் மாற்றப்படவும் சாத்தியமிருப்பதாகப் பேச்சடிபடுகின்றது.

இப்படியான ஒரு பின்புலச் சூழலில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகின்ற ஜனாதிபதித் தேர்தல், அதற்குப் பின்னரான பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல்களில், முஸ்லிம்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கப் போகின்றது என்ற கேள்விக்கு, மிகக் கவனமாக விடைகாண வேண்டியுள்ளது.

இதில் பிரதானமான கேள்வி, ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் யாரை ஆதரிக்கப் போகின்றார்கள்? இப்போது பேசப்படுவது போல, தனி வேட்பாளரைத் தமது சமூகத்தின் சார்பாக நிறுத்தப் போகின்றார்களா என்பதாகும்.

வெளிப்படையாகச் சொன்னால், தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு முஸ்லிம்கள் எதிரானவர்கள் அல்ல; ஆனால், அப்போராட்டத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்ட அநீதிகளை அவர்கள் வெறுத்தனர். அந்த வகையில், யுத்தத்தை வெற்றிகொண்டு, ஆயுதக் கலாசாரத்தில் இருந்து முஸ்லிம் மக்களை மீட்டமைக்காக, முஸ்லிம்கள் மஹிந்தவைப் போலவே கோட்டாபயவையும் பாராட்டினர். கிட்டத்தட்ட ஒரு செயல்வீரன் போல அவர் பார்க்கப்பட்ட காலம் இருந்தது.

ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷவின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின்போது இலங்கையில் மேலெழுந்த இனவாதத்தை வளரவிட்டார், கண்டுகொள்ளாமல் இருந்தார் என்பதற்காகவே, அந்த ஆட்சியை மாற்றியமைக்க முஸ்லிம்கள் மும்முரமாகச் செயற்பட்டனர். இதே அதிருப்தி, கோட்டாபய மீதும் முஸ்லிம்களுக்கு இருந்தது.

குறிப்பாக, கோட்டாபய ராஜபக்‌ஷ என்பவர், பெயர் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இனவாத அமைப்புகளுடன் ஏதோ ஓர் அடிப்படையில் தொடர்புகளைப் பேணியதான சந்தேகம் முஸ்லிம்கள் மத்தியில் இன்னுமிருக்கின்றது.

எனவே, இலங்கையில் பெரும்பாலான முஸ்லிம்கள், கோட்டாவுக்கு வாக்களிக்கும் மனோநிலைக்கு வந்துவிடவில்லை. இருப்பினும், மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் மீது கொண்ட அதிருப்தி, எல்லா அரசாங்கங்களும் ஒன்றுதான் என்ற மனப்பதிவு ஏற்பட்டிருக்கின்றமை ஆகிய காரணங்களால், மஹிந்த தரப்பை நோக்கி முஸ்லிம்கள் ஓர் அங்குலம் நெருங்கி வந்திருப்பதாகச் சொல்லமுடியும்.

மறுபுறத்தில், அநுர குமார திஸாநாயக்கவின் கொள்கைகள், அண்மைக்காலப் போக்குகள், முஸ்லிம்களிடத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளன. மக்கள் விடுதலை முன்னணி, ஓர் இடதுசாரி முற்போக்கு இயக்கமாக ஆரம்பித்தாலும், இடைப்பட்ட காலத்தில், இந்த நாட்டில் ஜே.வி.பியின் கரங்களில் கறை பூசப்பட்டுள்ளதை, முஸ்லிம்கள் மறந்து விடவில்லை.

ஜே.வி.பியின் முன்னாள் உறுப்பினர் விமல் வீரவன்ச, இப்போதைய ஒரு சில உறுப்பினர்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பார்க்கின்ற போது, அநுரவை நம்பலாமா என்ற தடுமாற்றம், முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதையும் தாண்டியே, அநுர குமார, முஸ்லிம்களால் கொண்டாப்படுகின்றார்.

முஸ்லிம்கள் ஒரு மாற்றுத் தெரிவைத் தேடுகின்ற மனநிலை மாற்றத்துக்கு உட்பட்டுள்ளனர். ஆனால். அதற்கான சரியான தெரிவு, எது என்ற முடிவுக்கு இன்னும் வரவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ரணில் விக்கிரமசிங்க நிறுத்தப் போகின்ற வேட்பாளரையும் மதிப்பாய்வு செய்த பின்னரே, முஸ்லிம்கள் தங்களது முடிவை எடுப்பார்கள்.

இதில் கட்சித் தலைவர்கள், அமைச்சர்களின் தீர்மானங்கள் செல்வாக்குச் செலுத்தாது; அந்தக் காலம் மலையேறிப் போய்விட்டது.

முஸ்லிம்கள் சார்பில் ஒரு வேட்பாளர்?

பெரும்பான்மைக் கட்சிகள் சார்பில், ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரை அறிவிக்கும் படலம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. சுருக்கமாகச் சொன்னால், சுதந்திரக் கட்சியினதும் ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஆட்சியில் முஸ்லிம்கள் அதிருப்தியடைந்து, சலிப்படைந்து விட்டிருக்கின்றனர்.

முஸ்லிம்களை ஒரு கறிவேப்பிலைச் சமூகமாக தேர்தல் வாக்குகளுக்காக மட்டும் பயன்படுத்தி விட்டு, காரியம் முடிந்த பிறகு தூக்கியெறிகின்ற போக்கு, தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு வருகின்றது.

இதேசமயம், முஸ்லிம் கட்சிகளும் அதன் தலைவர்களும், மற்றைய அரசியல்வாதிகளும், பெரும்பாலும் தங்களது நலன்களை முன்னிறுத்தியே ‘எந்தப் பெரும்பான்மைக் கட்சிக்கு ஆதரவளிப்பது’ என்ற தீர்மானத்தை எடுக்கின்ற வழக்கத்தைக் கொண்டிருக்கின்றமையாலும், சுய இலாப அரசியலில் மூழ்கிக் கிடக்கின்றமையாலும் முஸ்லிம் சமூகத்தின் பேரம்பேசும் சக்தி இல்லாது போயிருக்கின்றது.

முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாகப் பிரிந்து நின்று அரசியல் நகர்வுகளை மேற்கொள்கின்றமை மற்றும் மக்களின் ஒன்றிணைந்த பலத்தைச் சிதைத்திருப்பதுவும் இதற்கு இன்னுமொரு காரணமாகும்.

எனவே, இப்போது யாரையும் நம்பி இன்னுமொரு முறை எமாறுவதைவிட அல்லது எல்லாக் கட்சிகளுக்கும் வாக்களித்து முஸ்லிம் வாக்குகளைச் சிதறச் செய்வதைவிட, முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கினால் என்ன என்ற எண்ணம் முஸ்லிம் சமூகத்துக்குள் ஒரு சிலருக்கு ஏற்பட்டிருக்கின்றது.

இது தேவையற்ற விபரீத முயற்சி என்றும் நல்ல யோசனை என்றும், ஏட்டிக்குப் போட்டியான நிலைப்பாடுகளும் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படுகின்றன. இதற்கிடையில், இரு முஸ்லிம் அரசியல்வாதிகளின் பெயர்கள், அரசியலரங்கில் உலவுகின்றன. ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் யாரும் வாயைக்கூடத் திறக்காத நிலையிலும், இவ்வாறான கருத்துகள் வேறு நபர்களால் முன்வைக்கப்படுகின்றன.

மக்கள் விடுதலை முன்னணியே தனித்துப் போட்டியிட்டு வெல்ல முடியாத நிலையில், எல்லா தமிழர்களின் வாக்குகளையும் த.தே.கூட்டமைப்பு பெற்றாலும், தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக வருவது அபூர்வமானது என்றிருக்கின்ற நிலையில், முஸ்லிம் ஒருவர் எக்காலத்திலும் தனித்து வெற்றிபெற்று, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவது சாத்தியமில்லை.

ஆனால், ஒரு சாகச முயற்சிபோல இருந்தாலும், பரீட்சார்த்தமாக முஸ்லிம் ஒருவரைக் களமிறக்குவது பற்றி சிந்திப்பதிலிருந்துகூட, முஸ்லிம் சமூகம் விலகி இருக்கத் தேவையில்லை என்றே தோன்றுகின்றது.

முஸ்லிம் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தால், அவருக்கு நாட்டில் இருக்கின்ற எல்லா முஸ்லிம்களும் வாக்களித்தால் மட்டுமே அதைவைத்து பேரம் பேசலை மேற்கொள்ள முடியும். சில ஆயிரம் அல்லது ஓரிரு இலட்சம் வாக்குகளை மட்டுமே அவர் பெறுவார் என்றால் அந்த முயற்சி வீணாகிவிடும்.

எனவே, பெரும்பான்மைக் கட்சிகளை எல்லாம் எதிர்த்து நின்று, ஒரு முஸ்லிமை சமூகத்தின் பொது வேட்பாளராக களமிறக்குவது என்றால் ஒவ்வொரு முஸ்லிமினதும் ஆதரவு முன்கூட்டியே உறுதி செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால், அம்முயற்சி விழலுக்கு இறைத்த நீர் போலவே அமையும்.Post a Comment

Protected by WP Anti Spam