மக்களின் ஞாபக மறதி!! (கட்டுரை)

Read Time:24 Minute, 26 Second

மக்களின் ஞாபக மறதியில்தான், அரசியல்வாதிகள் பிழைப்பு ஓடுகிறது. தேர்தல் காலங்களில் ஏராளமான வாக்குறுதிகளை வழங்கும் அவர்கள், அதிகாரத்துக்கு வந்தபின், அதிகமானவற்றை நிறைவேற்றுவது இல்லை. அதற்கு, ஆயிரத்தெட்டுக் காரணங்களையும் கூறுவார்கள். மீண்டும் ஒரு தேர்தல் வரும்போது, எந்தவித வெட்கமோ குற்ற உணர்ச்சியோ இன்றி, மீண்டும் அவர்கள் தேர்தலில் குதிப்பார்கள், திரும்பவும் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். முன்னைய தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள், மக்களுக்கு மறந்து போயிருக்கும். மீண்டும் அதே அரசியல்வாதிகளுக்கு வாக்களிப்பார்கள்.

ஆண்டாண்டு காலமாக இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. விலக்காக மக்களுக்கு சிலவேளை கோபம் வருவதுமுண்டு.

கடமை

மக்களின் மறதியில் ஓங்கியடிப்பதும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நினைவுபடுத்துவதும், ஊடகங்களின் கடமையாகும். அதனால்தான், சமூகத்தின் ‘காவல் நாய்’ என்று ஊடகங்கள் அழைக்கப்படுகின்றன. மக்கள் மறந்து போகும் விடயங்களை, ‘குரைத்துக் குரைத்து’ ஊடகங்கள் நினைவுபடுத்த வேண்டியுள்ளன.

மற்றுமொரு ஜனாதிபதித் தேர்தலை, விரைவில் மக்கள் சந்திக்கவுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியும் அந்தக் கட்சியின் பங்காளிகளும் சேர்ந்து கொண்டுவந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. தேசிய அரசாங்கத்தை அமைத்து, நல்லாட்சி செய்யப்போவதாகக் கூறிக்கொண்டு வந்தவர்கள், இப்போது ஆளுக்கொரு திசையில் பிரிந்து நின்றுகொண்டு, அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர். இந்தவேளையில், மக்களுக்குச் சில விடயங்களை நினைவுபடுத்த வேண்டிய கடமை உள்ளது.

வாக்குறுதிகள்

மைத்திரிபால சிறிசேனவையும் ஐக்கிய தேசியக் கட்சியையும், மக்கள் ஆட்சிக்குக் கொண்டுவந்தமைக்குப் பிரதான காரணம் என்னவென்பதை முதலில் நினைத்துப் பார்க்க வேண்டும். மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சி மீது கொண்ட கோபத்தால்தான், அவருக்கு எதிராகக் களமிறங்கிய மைத்திரியையும் ஐக்கிய தேசியக் கட்சியையும், மக்கள் ஆதரித்தனர். அதனால்தான், தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மஹிந்த அணியினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போமென்று, மைத்திரியும் ரணிலும் மக்களுக்கு வாக்குறுதியளித்தார்கள்.

மஹிந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள், மோசடிகள், கொலைகள், வெள்ளை வான் கடத்தல்கள், மனிதர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள், அரசியல் பழிவாங்கல்கள் என எல்லாவற்றுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்போமென்று கூறி ஆட்சிக்கு வந்த மைத்திரியும் ரணிலும், நாலரை ஆண்டுகளில் என்ன செய்தார்கள்?

மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் நடந்த அக்கிரமங்களில், சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை முக்கியமானது. மஹிந்த ராஜபக்‌ஷ அணியினர் மீதுதான் அந்தக் கொலைக்கான பழி சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வருட இறுதியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், பொதுஜன பெரமுன சார்பில் கோட்டாபய ராஜபக்‌ஷ போட்டியிடுவாரென அறிவிக்கப்பட்ட பின்னர், நிகழ்வொன்றில் பங்குபற்றி உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ‘பதவியிலிருந்த போது கோட்டாபய ராஜபக்‌ஷ செய்த குற்றங்களுக்கு மன்னிப்புக் கோருவாரா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதன்போது, லசந்தவின் கொலை குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து, லசந்தவின் மகள், ரணிலுக்கு ஒரு கடிதம் எழுதினார். “ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தனது தந்தையின் கொலைக்கு நீதியைப் பெற்றுத்தருவேன் என்று கூறிய விக்ரமசிங்க, ஆட்சிக்கு வந்ததும் கோட்டாபயவைப் பாதுகாத்தார்” என்று, அந்தக் கடிதத்தில் குற்றம் சுமத்தியிருந்தார்.

மேலும், “எனது தந்தையின் படுகொலையை, அரசியலுக்கே பயன்படுத்துகின்றனர். உண்மையான நீதியைப் பெற்றுத்தருவது யாருடைய நோக்கமுமல்ல. ஜனாதிபதி தேர்தலுக்காக எனது தந்தையின் படுகொலையை ரணில் விக்ரமசிங்க நினைவுகூரக் கூடும்” எனவும், அந்தக் கடிதத்தில் லசந்தவின் மகள் தெரிவித்திருந்தார்.

தற்போதைய ஆட்சியாளர்களையும் குறிப்பாக ரணில் விக்ரமசிங்கவையும் புரிந்துகொள்வதற்கு, லசந்தவின் மகள் எழுதிய கடிதத்தின் மேற்சொன்ன விடயங்களே போதுமானவை.

சிறுபான்மையினரின் கோபமும் ரணிலின் முதலீடும்

தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழித்தார் என்பதற்காகத் தமிழர்களும், பொதுபல சேனா போன்ற இனவாதிகளை வைத்துத் தம்மை இம்சித்தார் என்பதற்காக முஸ்லிம்களும், மஹிந்த மீது கொண்டிருந்த ‘கடுங்கோபத்தை’, 2015 ஜனாதிபதி, பொதுத் தேர்தல்களில், முதலீடாக ரணில் விக்ரமசிங்க பயன்படுத்திக் கொண்டார். அதனால்தான், ‘மஹிந்த ஆட்சியில் நடந்த குற்றங்களுக்கு அவர்களைத் தண்டிப்பேன்’ என்று தேர்தல் காலங்களில் ரணில் வாக்குறுதியளித்திருந்தார். ஆனால், இதுவரையான தனது ஆட்சிக் காலத்தில், மஹிந்தவுக்கு எதிராக ஒரு துரும்பைக்கூட ரணில் தூக்கிப் போடவில்லை என்பதுதான் களநிலைவரமாகும்.

மஹிந்தவின் காலத்தில் நடைபெற்ற அக்கிரமங்களில் மற்றொன்று, வசீம் தாஜுத்தீனின் படுகொலையாகும். அந்தக் கொலையுடன் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை, விசாரணைகள் வெளிப்படுத்தி வருகின்றன. ஆனாலும், முக்கிய நபர்கள் எவரும் அந்தக் கொலை தொடர்பில் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த விடயத்திலும் ராஜபக்‌ஷவினரை ரணில் பாதுகாப்பதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.

களவு பிடிக்க வந்தோர் திருடனான கதை

இன்னொரு புறம், மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி விவகாரம், நல்லாட்சியில் நடந்த மிகப்பெரும் அதிர்ச்சியாகும். இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரும் நிதி மோசடியென இது அறியப்படுகிறது. ரணிலினது அழுத்தத்தின் பிரகாரம் மத்திய வங்கிக்கு ஆளுநராக நியமிக்கப்பட்ட அர்ஜுன மஹேந்திரன், இந்த மோசடியின் பிரதான சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார். இன்னொரு புறம், ரணிலுக்கு நெருக்கமானவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான ரவி கருணாநாயக்கவும், இந்த மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளார் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.

ராஜபக்‌ஷவினரின் மோசடியைப் பிடிப்போம் என்கிற வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்தவர்கள், நாட்டின் கஜானாவை காலியாக்கியமைதான் இங்கு முரண் நகையாகும்.

ஏமாற்றங்கள்

இப்படி ஒருபுறம் இவர்கள் ஏமாற்றங்களைத் தந்துகொண்டிருக்கும் நிலையில், முஸ்லிம் அரசியல் தலைவர்களும் தங்கள் பங்குக்கு அவர்களின் சமூகத்தை ஏமாற்றி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மஹிந்தவின் ஆட்சிக் காலத்தை விடவும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளும் அக்கிரமங்களும், இப்போதைய ஆட்சிக் காலத்தில்தான் அதிகம் நடந்துள்ளன. ஆனால், ஞாயிற்றுக்கிழமை (25) சென்னைக்குச் சென்றிருந்த மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், “மஹிந்த அரசாங்கத்தை விடவும், இந்த அரசாங்கத்தில்தான் சிறுபான்மையினரின் நலனில் அதிக அக்கறை காட்டப்படுகிறது. அபகரிக்கப்பட்ட உரிமைகளை மீட்டுக் கொடுத்தல், புதிய சட்டவாக்கங்கள், அவற்றிலே சிறுபான்மைச் சமூகங்களுக்கு அநீதி நடக்காமல் பார்த்துக் கொள்வதில், இப்போதைய அரசாங்கம் கவனஞ்செலுத்தி வருகின்றது’ என, அங்கு அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், முஸ்லிம்கள் நிகாப் அணிவதற்குத் தடையேற்படுத்தியது இந்த அரசாங்கம்தான். அரச நிறுவனங்களுக்குள் ஹபாயா அணிந்து சென்றபோது, முஸ்லிம் பெண்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டமையும் இந்த அரசாங்கத்தில்தான். குர்ஆன், அரபு மொழியில் எழுதப்பட்ட நூல்களை வைத்திருந்தவர்கள், இந்த அரசாங்கத்தில்தான் கைது செய்யப்பட்டார்கள். குர்ஆனில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென அரசாங்கத்துக்குள் இருப்பவர்களே குரலெழுப்பிய சம்பவங்களும், இந்த அரசாங்கத்தில்தான் இடம்பெற்றன. முஸ்லிம்களின் சொத்துகள் கொழுத்தி அழிக்கப்பட்ட போதெல்லாம், ஆட்சியாளர்கள் நாள்கணக்கில் கண்டும் காணாமல் இருந்ததும் இந்த அரசாங்கத்தில்தான். ஆனாலும், இந்த அரசாங்கத்தில்தான் சிறுபான்மையினரின் நலனில் அக்கறை காட்டப்படுவதாக மு.கா தலைவர் கூறியிருக்கின்றார்.

‘முஸ்லிம்களுக்கு எதிராக இந்த அரசாங்கத்தில் நடந்த அநியாயங்கள் சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டும்’ என, முஸ்லிம் சமூகத்திலுள்ள புத்திஜீவிகள் ஆதங்கப்பட்டுக் கொண்டும் அதற்காக உழைத்துக் கொண்டும் இருக்கின்ற சூழ்நிலையில், ‘சிறுபான்மையினருக்கு இப்போதைய அரசாங்கம்தான் உரிமைகளை அள்ளி வழங்கி வருகிறதென, முஸ்லிம் கட்சியொன்றின் தலைவரே சர்வதேசத்தின் முன்னிலையில் கூறியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது.

புஷ்வாணமான புதிய அரசமைப்பு

இந்த நாட்டில், பல தசாப்தங்களாக இடம்பெற்றுவரும் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக, புதிய அரசமைப்பு ஒன்றைத் தாங்கள் முன்வைக்கப் போவதாக, ரணிலும் மைத்திரியும் தத்தமது தேர்தல் காலங்களில் வாக்குறுதியளித்திருந்தனர். ஆனால், இதுவரை புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படவில்லை. அதனைத் தயாரிப்பதற்கென முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் நின்று போய்விட்டன. பௌத்தர்களின் எதிர்ப்பை மீறி, தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இவர்கள்கூட எந்த நலனையும் செய்துவிட மாட்டார்கள் என்பதை, மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளார்கள். இலங்கைக்கு புதிய அரசியல் யாப்பொன்று தேவையில்லையென, மஹாநாயக்க தேரர்கள் கூறியதை நாம் மறந்துவிட முடியாது.

ஒரு காலத்தில், மிஸ்டர் ‘க்ளீன்’ என்று அழைக்கப்பட்டவர் ரணில் விக்ரமசிங்க. அவரது கைகள் துப்புரவானவை என்பதைக் குறிக்க அவ்வாறு அழைக்கப்பட்டார். ஊழல் மோசடிகளுடன் அவர் தொடர்புபடாதவர் என்பதை அந்த அடைமொழி கூறியது. மேலும், ‘கனவான் அரசியல்வாதி’ என்றும், ரணில் விக்ரமசிங்கவை சக அரசியல்வாதிகளே சொல்வார்கள். கொடுத்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றுவதில் பின்னடிப்பதில்லை என்று, அவருக்கு ஒரு பெயர் உள்ளது. ஆனால், இப்போது இந்த அடைமொழிகளுக்கு ரணில் பொருத்தமானவர்தானா என்கிற நியாயமான கேள்விகள் உள்ளன. மத்திய வங்கி பிணை முறி விவகாரத்தில் ‘க்ளீன்’ – அழுக்காகி விட்டதாக விமர்சனங்கள் உள்ளன.

ஆனாலும், இவை குறித்தெல்லாம் இப்போதைய அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்கிக்கொண்டிருக்கும் சிறுபான்மை அரசியல் தலைவர்கள் எவரும் தட்டிக் கேட்டவில்லை. பதிலாக, ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்துக்கு துதிபாடும் வேலைகளைத்தான் செய்கின்றனர். குறிப்பாக, முஸ்லிம் அரசியல் தலைவர்கள், அதனைச் சிறப்பாகவே செய்துகொண்டு இருக்கிறார்கள்.

ஹிஸ்புல்லாவின் கோசம்

இன்னொருபுறம், ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் சார்பாக ஒருவர் போட்டியிட வேண்டுமென்கிற கோரிக்கையொன்றும் எழுந்துள்ளது. கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இந்தக் கோஷத்தை முன்வைத்துள்ளார். மேலும், அவ்வாறு போட்டியிடுவதற்கு, தான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்காவிட்டால், அந்த வாக்குகளை ஐ.தே.மு வேட்பாளருக்குக் கிடைக்கச் செய்யாமல் தடுக்கவே, முஸ்லிம் வேட்பாளர் ஒருவரைக் களமிறக்க வேண்டுமென ஹிஸ்புல்லா கூறுகிறார் என்ற விமர்சனங்களும் உள்ளன. மஹிந்தவின் விசுவாசியாகவே இப்போதும் ஹிஸ்புல்லா பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஹிஸ்புல்லா இதற்குக் கூறும் விளக்கம் வேறாகவுள்ளது. இரண்டுக்கு மேற்பட்ட பிரதான வேட்பாளர்கள், ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் போது எவராலும் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெறமுடியாது என்றும் அப்போது இரண்டாவது தெரிவு வாக்குகளே வெற்றியாளரைத் தீர்மானிக்கும் என்பதால், முஸ்லிம் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது முஸ்லிம்களுக்கு நலனாக அமையும் என்றும் கூறுகிறார். நடக்கின்றவற்றையெல்லாம் கூர்ந்து கவனிக்கும்போது, பிரதான போட்டியாளர்களில் எந்தத் தரப்பை ஆதரிப்பது, எதிர்ப்பதென்பதை, கிட்டத்தட்ட சிறுபான்மை அரசியல் தலைவர்கள் இப்போதே தீர்மானித்து விட்டார்கள் போலவே தெரிகிறது.

அந்தத் தீர்மானங்களில், சமூக அக்கறை என்பது மருந்துக்காயினும் இருக்குமா என்றுதான் தெரியவில்லை.

ஹிஸ்புல்லாவின் ‘கணக்கு’ என்ன?

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தான் தயாரென, முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
அவ்வாறு போட்டியிடுவதால், முஸ்லிம் சமூகத்துக்கு என்ன கிடைத்துவிடும் என்கிற கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது தொடர்பாக, சிவில் அமைப்புகள், கல்வியாளர்கள், சமூகத் தலைவர்கள் கலந்துரையாடி வருவதாகவும் இதில் சாதகமான தீர்மானம் எட்டப்படும்போது, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தான் தயாராக உள்ளதாகவும் ஹிஸ்புல்லா கூறினார்.

“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், அந்தத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளில் செல்லுபடியானவற்றில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறவேண்டும். ஆனால், இரண்டுக்கு மேற்பட்ட முக்கிய வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும்போது, எந்தவொரு வேட்பாளராலும் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறமுடியாமல் போகும்.

“அப்போது, முதல் இரண்டு வேட்பாளர்களைத் தவிர்த்து, ஏனைய வேட்பாளர்களின் வாக்குச்சீட்டுகளில் வழங்கப்பட்டுள்ள இரண்டாவது விருப்பு வாக்குகளின் அடிப்படையில்தான், குறித்த தேர்தலின் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்” என்று தெரிவித்த ஹிஸ்புல்லா, “எனவேதான் முஸ்லிம் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும்” என்றும் “முஸ்லிம் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது. அந்த முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்களிப்போர், இரண்டாவது விருப்பு வாக்கை, எந்தப் பிரதான வேட்பாளருக்கு அளிக்க வேண்டும் என்பதையும், முஸ்லிம்கள் தீர்மானிக்க முடியும்” என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு, முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும்போது, பிரதான வேட்பாளர்களுடன் பேரம்பேச முடியும் என்றும் தமது கோரிக்கைகளுக்கு இணங்கும் பிரதான வேட்பாளருக்கு, முஸ்லிம்கள் தமது இரண்டாவது விருப்பு வாக்கை அளிக்க முடியும் என்றும், அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

“ஜனாதிபதி வேட்பாளராகத் தற்போது கோட்டாபய ராஜபக்‌ஷ, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு விட்டன. ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகவும் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார்.

“இலங்கையில், முஸ்லிம்களின் வாக்குகள் கிட்டத்தட்ட 16 இலட்சமாகும். 2015 ஜனாதிபதித் தேர்தலில், 12 இலட்சம் முஸ்லிம்கள் வாக்களித்திருந்தனர். அவற்றில் 11 இலட்சம் முஸ்லிம்களின் வாக்குகள், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே கிடைத்தன. அப்படியிருந்தும், நாலரை வருடங்களில், முஸ்லிம் சமூகம் எந்தவொரு நன்மையையும் அடையவில்லை. ஜின்தோட்டம் தொடங்கி மினுவாங்கொட வரை, முஸ்லிம்களின் சொத்துகள் தீப்பற்றி எரிந்தன. வில்பத்து முதல் நுரைச்சோலை வரை, முஸ்லிம்களின் காணிப் பிரச்சனைகள் தீவிரமடைந்தன. இவை தொடர்பில், எந்தத் தீர்வுகளும் முஸ்லிம்களுக்குக் கிடைக்கவில்லை” என்று ஹிஸ்புல்லா கூறினார்.

“மைத்திரிபால சிறிசேனவுக்கு, இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் வாக்களித்த போதும், அவர் எந்தவோர் இடத்திலும் தனக்கு முஸ்லிம்கள் வாக்களித்ததாகச் சொன்னதில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் தனது வெற்றிக்குக் காரணம் என்றே அவர் பல தடவை கூறியுள்ளார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“எனவே, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முஸ்லிம்கள் நேரடியாக வாக்களிக்கும்போது, அவற்றுக்குப் பெறுமானம் இல்லாமல் போய்விடும். ஆகவேதான், முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் களமிறங்கி, அவர் ஊடாகப் பிரதான வேட்பாளருக்கு இரண்டாவது விருப்பு வாக்கைப் பெற்றுக் கொடுக்கலாம். இவ்வாறு முஸ்லிம் வேட்பாளர் களமிறங்கும்போது, அவருக்காக முஸ்லிம்களின் 25 சதவீதமான வாக்குகள் மட்டும் கிடைத்தால் போதுமானது. அதனூடாக, ஆகக்குறைந்தது இரண்டரை இலட்சம் இரண்டாவது விருப்பு வாக்குகளை பிரதான வேட்பாளருக்குப் பெற்றுக்கொடுக்க முடியும்” என்றும், ஹிஸ்புல்லா தெரிவித்து உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post பார்த்தாலே பதறவைக்கும் 5 பாம்புகள் !!! (வீடியோ)