யாரிந்த அநுரகுமார திஸாநாயக்க !! (கட்டுரை)

Read Time:15 Minute, 40 Second

ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி என்ற இடதுசாரி அமைப்பினது ஆட்சேர்ப்பு, அதன் ஆரம்பகாலம் முதலே இளைஞர்களை, குறிப்பாகப் பல்கலைக்கழக மாணவர்களை மையப்படுத்தியே அமைந்து வந்துள்ளது. ஜே.வி.பியின் பெரும் பலம் என்பது, இருபதுகளின் ஆரம்பத்திலுள்ள இளைஞர்களும் பல்கலைக்கழக மாணவர்களாகவுமே இருந்துவருகிறது.

1990களில், ஜே.வி.பி சார்ந்த சோசலிஸ அமைப்பில், ஓர் இளைஞராகத் தன்னை இணைத்துக்கொண்டு செயற்பட்டவர்தான் இந்த அநுரகுமார திஸாநாயக்க. 1992இல், களனி பல்கலைக்கழகத்துக்கு தெரிவான இவருக்கு, பல்கலைக்கழகத்திலேயே இடதுசாரி அரசியல் துளிர்விட்டெழுந்தது. பல்கலைக்கழக ஆண்டுகளின் பின்னர், அதாவது 1997இல், சோசலிஸ இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளராகவும் ஜே.வி.பியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும், அநுரகுமார நியமிக்கப்பட்டார். பின்னர், அடுத்த வருடமே ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டதுடன், அடுத்த மத்திய மாகாணசபைத் தேர்தலில், ஜே.வி.பி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டார்.

2000ஆம் ஆண்டில் முதன்முறையாக நாாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட அநுரகுமார, 2004இல் ஜே.வி.பியானது அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து, அந்தக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியபோது, விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக பதவி வகித்திருந்தார். 2008இல், ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக, அநுர குமார தெரிவுசெய்யப்பட்டார்.

2014 பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி இடம்பெற்ற ஜே.வி.பியின் 7ஆவது தேசிய மாநாட்டில், அக்கட்சியின் தலைவராக, அநுரகுமார திஸாநாயக்க தெரிவுசெய்யப்பட்டார். மேலும், 2015ஆம் ஆண்டு “ஆட்சி மாற்றத்தை” தொடர்ந்து, தேசிய அரசாங்கம் அமைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்க் கட்சித் தலைவராக பதவி வகித்தபோது, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக அநுரகுமார திஸாநாயக்க செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போர் நிறைவுக்குப் பின்னரான மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில், ராஜபக்‌ஷவையும் ராஜபக்‌ஷ ஆட்சியையும், நாடாளுமன்றத்திலும் அதற்கு வௌியிலும் கடுமையாக அநுரகுமார திஸாநாயக்க விமர்சித்திருந்தார். இதுவும் சிங்கள மொழிமூலம் அவர் கொண்டிருந்த அற்புதமான பேச்சாற்றலும், மக்கள் மத்தியில் அவருக்குக் கணிசமான வரவேற்பையும் பிரபல்யத்தையும் பெற்றுக்கொடுத்திருந்தது. குறிப்பாக, ராஜபக்‌ஷ ஆட்சியின் ஊழல்களை, நாடாளுமன்றத்தில் அவர் “புட்டுப் புட்டு” வைத்த காணொளிக் காட்சிகள், சமூக ஊடகங்களில் பெருமளவு பரவலாகி, இளைஞர்கள் மத்தியில் அவருக்கு பிரபல்யத்தைப் பெற்றுக்கொடுத்தது.

இடதுசாரிகள், பல்பலைக்கழக மாணவர்கள், “சிங்கள-பௌத்த” தேசியவாதம் என்பவற்றைத் தாண்டி, ஜே.வி.பியின் முகம் பரவலாக அனைவரையும் சென்றடையக்கூடிய வகையில், அநுரகுமாரவின் பேச்சுகள் அமைந்திருந்தன. இது, ஜே.வி.பிக்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கத் தொடங்கியது என்று சொன்னால் அது மிகையல்ல. இந்த ராஜபக்‌ஷ எதிர்ப்பு யுகத்தின் உச்சியில்தான், ஜே.வி.பியின் தலைவராக அநுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டார். அந்த 2014-2015 காலகட்டத்தில், ராஜபக்‌ஷ ஆட்சியைக் கண்டித்த அவரது பேச்சுகள், 2015 ஆட்சி மாற்றம் ஏற்படுவதில் பங்கு வகித்திருந்தன என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால், இதுவே ஜே.பி.யினதோ, அநுர குமாரவினதோ முகம் கிடையாது. கடந்தவாரப் பத்தியில் குறிப்பிட்டிருந்தது போலவே, ஜே.வி.பியானது தன்னுடைய அரசியல் தப்பிப்பிழைப்புக்காக வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு முகமூடிகளை அணிந்துகொண்டுள்ளது.

றோஹண விஜேவீர தலைமையில் ஜே.வி.பி உருவாகி, “மார்க்ஸியப் புரட்சி” முகத்தைக் கொண்டபோது, மார்க்ஸியவாதிகள் அதன் முன்னரங்கில் நின்றார்கள். பின்னர், ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து வாக்குவங்கி அரசியலில் ஈடுபடுவதற்காக, “சிங்கள-பௌத்த” தேசியவாத முகத்தை ஏற்றிருந்த போது, விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் முன்னரங்கில் நின்று, தமது பேச்சாற்றல் மூலம் அதனைப் பலப்படுத்தினார்கள்.

பின்னர், ராஜபக்‌ஷர்களை மீறி, “சிங்கள-பௌத்த” தேசியவாதத்தைப் பேச முடியாது என்ற சூழல் ஏற்றபட்டபோது, அநுர குமாரவைப் போன்ற “மிதவாதிகளை” முன்னிறுத்தி, ஊழல் எதிர்ப்பு, இன சௌஜன்யம் போன்ற முகமூடிகளை ஜே.வி.பி இன்று அணிய முயல்வதையும் நாம் அவதானிக்கலாம். ஆகவே, ஜே.வி.பியின் சந்தர்ப்பவாத அரசியலின் சமகால முகமாகத்தான், நாம் அநுரகுமார திஸாநாயக்கவைப் பார்க்க வேண்டி இருக்கிறது.

அநுரகுமார திஸாநாயக்க, 2009க்குப் பின்னரான ராஜபக்‌ஷ யுகத்தில், ஊழலையும் இனவாதத்தையும், அடக்குமுறையையும் கண்டித்து வந்திருந்தாலும், அடிப்படையில் “யுத்த வெற்றி” என்பதற்கு ஜே.வி.பியும் அநுரகுமார திஸாநாயக்கவும் ஆதரவாகத்தான் இருந்திருக்கிறார்கள். யுத்தக் குற்றம் பற்றியெல்லாம் ஜே.வி.பியோ அநுரகுமாரவோ பேசியதில்லை. மேலும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பற்றியெல்லாம் அவர்கள் தொட்டுக்கூடப் பார்ப்பதில்லை. ஜே.வி.பி பேசும் இன சௌஜன்யம் என்பது, வெறும் மேலோட்டமான சொற்பாவனையேயன்றி, அதற்குத் தத்துவார்த்த அடிப்படையொன்று கிடையாது.

மறுபுறத்தில், தமிழ் மக்கள் முன்னிறுத்தும் “தமிழ்த் தேசியத்தையோ” அதன் அடிப்படையையோகூட, ஜே.வி.பி. ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை. ஜே.வி.பியும் அநுரகுமார திசாநாயக்கவும் இன்று பேசும் இன சௌஜன்யம் என்பது, இலங்கையின் தேசியக் கட்சிகளின் சில தலைமைகள் பேசும் இன சௌஜன்யத்திலிருந்து பெரிதும் வேறுபட்டதொன்றல்ல. “ஒரு நாடு, ஒரு தேசம்” என்ற “சிங்கள-பௌத்த” தேசியவாதத்திலிருந்து உதித்த “ஒற்றையாட்சி” வரைவிலக்கணத்தைத் தகர்த்தெறியும் எந்தத் தத்துவமும்,
ஜே.வி.பியிடம் கிடையாது. ஒவ்வொரு முறையும் இனப்பிரச்சினை பற்றிய கேள்வி அவர்களிடம் எழுப்பப்படும் போதும், ஜே.வி.பியும் அநுர குமாரவும் வர்க்கப் பிரச்சினையைப் பேசி, அதற்கான பதிலை மழுப்பும் போக்கை நாம் அவதானிக்கலாம்.

ஆகவே, வெற்று வார்த்தைகளுக்கு அப்பால் அநுரகுமார திசாநாயக்கவும் ஜே.வி.பியும் “இடதுசாரித்துவத்தை” தாண்டி எத்தகையதொரு மாற்றுத்தெரிவாக அமையப்போகிறார்கள் என்பது கேள்விக்குரியதே. குறிப்பாகச் சிறுபான்மையினர், அதிலும் தமிழர்கள், பிரதான தேசியக் கட்சியின் வேட்பாளர்களைத் தாண்டி அநுர குமாரவைத் தேர்ந்தெடுப்பதற்கான நியாயங்கள் என்னவென்பதுதான் இங்கு முக்கியக் கேள்வி. இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் தத்துவார்த்த ரீதியாகக்கூட தேசியக் கட்சிகளின் நிலைப்பாட்டிலிருந்து ஜே.வி.பியின் நிலைப்பாடு வேறுபட்டதல்ல. மாறாக, மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பிலும்கூட, ஜே.வி.பி எதிர்மறையான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது. வரலாற்று ரீதியாக அரசமைப்புக்கா 13ஆவது திருத்தத்தை, ஜே.வி.பி எதிர்த்தே வந்திருக்கிறதென்பது உண்மை. ஆனால், அது இந்தியாவால் திணிக்கப்பட்ட தீர்வு என்பதால் வந்த எதிர்ப்பு அல்ல. மாறாக, “சிங்கள-பௌத்த” தேசியவாத முகத்தை ஜே.வி.பி தீவிரமாக முன்னிறுத்திய காலகட்டத்தில், “சிங்கள-பௌத்த” தேசியவாதத்தின் “ஒரு நாடு, ஒரு தேசம்” என்ற சித்தாந்தத்துக்கு, இந்த 13ஆவது திருத்தமும் அதிகாரப்பகிர்வும் ஊறு விளைவிக்கின்றன என்ற அடிப்படையில் எழுந்த எதிர்ப்புதான் அது. இன்று, இன சௌஜன்ய முகத்தை ஜே.வி.பி முன்னிறுத்தினாலும், இந்த அடிப்படையை ஜே.வி.பி கைவிடவில்லை. ஆகவே, தமிழ் மக்களின் மிக அடிப்படையான அதிகாரப்பகிர்வுக் கோரிக்கையையே ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய பிரதான தேசியக் கட்சிகளிலிருந்து எவ்வாறு வேறுபட்டது என்ற கேள்வி, தமிழ் மக்களிடையே எழுகிறது.

இந்தக் கேள்விக்கு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதொரு மழுப்பலில்லாத, வர்க்கப்போராட்டம் என்ற மாயத்திரைக்குள் ஒழிந்துகொள்ளாத பதிலை அநுரகுமார தராத வரையில், அவருக்கு வாக்களிப்பதற்கான வலுவான காரணம் தமிழ் மக்களுக்கு இருக்காது.
மறுபுறத்தில், அநுரகுமார என்ற வேட்பாளரைத் தீயது குறைந்த பிசாசாக தமிழ் மக்கள் கருத முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. மிக நீண்ட காலமாக ஜனாதிபதித் தேர்தல்களில் தீயது குறைந்த பிசாசு எது என்ற அடிப்படையில்தான் தமிழ் மக்கள் வாக்களித்து வந்திருக்கிறார்கள். அந்த வகையில், இம்முறை அநுரகுமார அந்த தெரிவாக அமைவாரா? தீயது குறைந்த பிசாசு என்பது “வெற்றிபெறத்தக்க” வேட்பாளராகவே இருக்க வேண்டும். “சிங்கள-பௌத்த” வாக்கு வங்கியின் குறைந்தபட்சம் பாதிக்கு மேலான வாக்கை பெறாத ஒரு நபர், ஒருபோதும் சிறுபான்மையினரின் வாக்குகளால் மட்டும் ஜனாதிபதியாகிவிட முடியாது. இன்றைய சூழலில், அநுரகுமாரவுக்கும் ேஜ.வி.பிக்கும், 5-6% வாக்குகள் கிடைத்தாலே அது பெரிய விடயம். ஆகவே, வெற்றி வாய்ப்பில்லாத ஒருவரைத் தமிழ் மக்கள் “தீயது குறைந்த பிசாசு” என ஆதரிப்பது, எந்தப் பயனையும் தரப்போவதில்லை.

ஆனால், தமிழ் மக்கள் கையாளத்தக்க இன்னோர் அரசியல் உபாயத்துக்குள், அநுரகுமாரவை தமிழ், முஸ்லிம் மக்கள் உள்ளிட்டோர் பயன்படுத்திக்கொள்ள முடியும். இரு பிரதான தேசியக் கட்சிகளின் வேட்பாளர்களிடையே போட்டி மிக அதிகமாக இருக்கும் பட்சத்தில், சிறுபான்மையின மக்களின் வாக்குகளின்றி இருவரில் ஒருவர்கூட 50% எனும் வெற்றி இலக்கை அடையமுடியாத சூழல் ஏற்படும் நிலை இருக்கும்போது, சிறுபான்மை மக்கள் தமது முதல் தெரிவாக அநுரகுமாரவைக் குறிப்பிட்டு, இரண்டாந்தெரிவாக பிரதான இரு வேட்பாளர்களின் “தீயது குறைந்த பிசாசை” தெரிந்தெடுக்க முடியும். இது நடக்கும் போது, இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக இரண்டாம் விருப்பத்தெரிவு வாக்குகள் எண்ணப்பட்டு, அதனடிப்படையில் ஜனாதிபதி தெரிவாகக்கூடிய நிலை ஏற்படும்.

இது, சிறுபான்மை மக்கள் “தீயது குறைந்த பிசாசை” ஆதரிக்கும் அதேவேளை, தம்முடைய அதிருப்தியையும் வௌிப்படுத்தம் இரட்டைக் கைங்கரியத்தை ஆற்றும் உபாயமாக அமையும். ஆனால், பிரதான இரு வேட்பாளர்களிடையேயும் மிக நெருக்கமான போட்டி ஏற்பட்டாலும், சிறுபான்மையினர் ஒன்றுபட்டு இந்த நிலைப்பாட்டை முன்னெடுத்தால் மட்டுமே இது சாத்தியம். ஆகவே, அநுரகுமாரவுக்கு தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் வாக்களிப்பதற்கான எந்தவொரு பலமான நியாயத்தையும் அவரோ ஜே.வி.பியோ இன்னும் முன்வைக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் !! (மருத்துவம்)
Next post 2 வருஷம் இதையெல்லாம் செய்யாதீங்க ! (வீடியோ)