பிரெக்ஸிட்; மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்!! (கட்டுரை)

Read Time:16 Minute, 13 Second

வரலாற்றில், தனி மனிதர்களின் பாத்திரம் முக்கியமானது. பல வரலாற்று நிகழ்வுகளைத் தனி மனிதர்களின் செயல்களே தீர்மானித்து இருக்கின்றன. இது, பண்டைய காலம் முதல் தற்காலம் வரை அனைத்துக்கும் பொதுவானது.

வரலாறெங்கும் தனிமனிதர்கள், தேசங்களின் தலைவிதியைத் தீர்மானித்து இருக்கிறார்கள். அவ்வாறு, ஒரு தேசத்தின் தலைவிதியை, ஒருசிலர் தீர்மானிக்கின்ற நிகழ்வு, இப்போது நடந்தேறுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளிவருவதைக் குறிக்கும் ‘பிரெக்ஸிட்’, இப்போது பேசுபொருளாகி உள்ளது. இது, பிரித்தானிய நாடாளுமன்ற ஜனநாயகத்தையே ஆட்டங்காண வைத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டுமா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான தேர்தல்களை, 2016ஆம் ஆண்டு, அன்றைய பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூன் நடத்தத் துணிந்தது முதல், பிரித்தானிய நாடாளுமன்ற அரசியல் தொடர்ச்சியான ஆட்டங்களுக்கு உட்பட்டு வருகிறது.

வெளியேற்றத்துக்கு ஆதரவு தெரிவித்து அளிக்கப்பட்ட பெரும்பான்மை வாக்குகள், பிரித்தானியாவில் ஓர் அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளன. ‘பிரெக்ஸிட்’ கடந்த மூன்றாண்டுகளில் இரண்டு பிரதம மந்திரிகளைப் பதவியிலிருந்து அகற்றியுள்ளது. இப்போது மூன்றாவது நபரையும் அகற்றுவதை நோக்கிய திசையில் பயணிக்கிறது.

உடன்படிக்கை எட்டப்பட்டோ எட்டப்படாமலோ, 2019 ஒக்டோபர் 31ஆம் திகதி, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து, பிரித்தானியா விலகுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், காட்சிகள் கணத்துக்குக் கணம் மாறுகின்றன.

‘பிரெக்ஸிட்’ நெருக்கடியின் இன்னோர் அத்தியாயம், கடந்தவாரம் அரங்கேறியது. புதிதாகப் பதவியேற்றுள்ள பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன், அடுத்த வாரம் முதல், நாடாளுமன்றச் செயற்பாடுகளை ஐந்து வாரங்களுக்கு நிறுத்தி, நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்குமாறு, பிரித்தானிய முடியைக் கோரினார். இந்தக் கோரிக்கையை, ராணி ஏற்றுக்கொண்டுள்ளார். இது, பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் ஆக்ரோஷமான எதிர்வினைகளுக்கும் வழிகோலியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒரு திட்டத்தின் அடிப்படையில் வெளியேறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தாலும், ஐரோப்பிய ஒன்றியத்தால் முன்மொழியப்பட்ட திட்ட வரைவுகள், தொடர்ச்சியாகப் பிரித்தானிய நாடாளுமன்றத்தால் தோற்கடிக்கப்பட்டு வந்துள்ளன.

இந்நிலையில், பிரித்தானியா விரும்புகின்ற ஒரு திட்டத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது, கிட்டத்தட்ட சாத்தியமில்லாமல் போய்விட்டது.

இந்தப் பின்புலத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு, மக்கள் அளித்த ஆணையைச் சிரமமேற்கொண்டு, எப்படியாவது ஒக்டோபர் 31ஆம் திகதி, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் என்ற உறுதிமொழியை, பிரித்தானியப் பிரதமர் வழங்கியிருக்கிறார். அதை நோக்கிய நகர்வாகவே, அவரது நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் திட்டம் அரங்கேறுகிறது.

நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்கும் சதுரங்கம்

அண்மையில், பிரதமராகப் பதவியேற்ற ஜோன்சன், பிரித்தானிய நாடாளுமன்றம் விரும்புகிற ஒரு திட்டத்தை, ஐரோப்பிய ஒன்றியம் வழங்க மாட்டாது என்பதை நன்கறிவார்.

அதேவேளை, எப்படியாவது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதைச் சாத்தியமாக்கிக் காட்டுவதன் மூலம், தனது அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்யலாம் என்பதையும் அவர் அறிவார்.

எனவே, இதைச் சாத்தியமாக்குவதற்கு அவர் தேர்ந்தெடுத்துள்ள வழி, நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாகும். பிரித்தானிய நாடாளுமன்ற வரலாற்றில், அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, நாடாளுமன்றம் சில காலம் ஒத்தி வைக்கப்படுவது, தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளது.

ஆனால், இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய வரலாற்றில், முதன்முதலாக ஐந்து வாரங்களுக்கு, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதை ‘ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்’, ‘அரசமைப்புச் சதி’ எனப் பலர் விமர்சிக்கிறார்கள்.

அதேவேளை, முன்பே திட்டமிடப்பட்ட நாடாளுமன்ற விடுமுறைக்கு மேலதிகமாக, நான்கு நாள்களே நாடாளுமன்றம் இடைநிறுத்தபடுவதாக பிரதமர் ஜோன்சனின் ஆதரவாளர்கள் வாதிடுகிறார்கள்.

ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர், ஏதாவது ஓர் உடன்படிக்கையின் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதையே, பெரும்பான்மையான பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்புகிறார்கள்.

ஆனால், அவர்களால் உடன் படக்கூடிய எந்த ஓர் உடன்பாட்டையும் வழங்குவதற்கு, ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இல்லை. இந்நிலையில், நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பதற்கான முடிவை, இரண்டு அடிப்படைகளில் பிரதமர் மேற்கொண்டுள்ளார்.

நேற்று முன்தினம், கோடைகால விடுமுறையின் பின்னர், நாடாளுமன்றம் தொடங்கிய நிலையில், செப்டெம்பர் ஒன்பதாம் திகதி முதல், ஒக்டோபர் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 11 ஆம் திகதி, மகாராணியின் உரையைக் கேட்க, நாடாளுமன்றம் கூடும். மகாராணியின் உரை மீதான வாக்கெடுப்பு, ஒக்டோபர் 21, 22ஆம் திகதிகளில் நடக்கும்.

இதற்கிடையில், ஒக்டோபர் 17, 18ஆம் திகதிகளில் இறுதிக்கட்டப் பேச்சுக்காக பிரதமர் போரிஸ் ஜோன்சன், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்துக்குப் பயணிக்கிறார். இந்த நிகழ்வு, புதிய திட்டமொன்றை, பிரித்தானிய நாடாளுமன்றம் வரைந்து, நிறைவேற்றுவதற்கான காலத்தை, கிட்டத்தட்ட இல்லாமல் செய்யப்பட்டுவிட்டது.

இது, உடன்படிக்கை எட்டப்படாத, பிரித்தானியாவின் வெளியேற்றத்தை சாத்தியமாக்கும். உடன்பாடில்லாத வெளியேற்றம், பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குப் பாரிய நெருக்கடிகளை உருவாக்கும்.

இதை அழுத்தமாகப் பயன்படுத்தி, ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து, பிரித்தானியாவுக்குச் சாதகமான உடன்படிக்கை ஒன்றை எட்ட முனைவதாகப் பிரதமர் தெரிவிக்கிறார். ஆனால், அதன் சாத்தியங்கள் குறைவு என்பதை, அனைவரும் அறிவர்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கக்கூடிய தெரிவு, மகாராணியின் உரை மீதான வாக்கெடுப்பில், பிரதமர் ஜோன்சனைத் தோற்கடிப்பதன் மூலம், இன்னொரு பொதுத் தேர்தலை நோக்கி நகர்வதாகும். அவ்வாறு நகர்ந்தாலும், அது பிரித்தானியாவின் வெளியேற்றத்தைத் தடுக்கப் போவதில்லை.

இதேவேளை, ஜோன்சனின் பழைமைவாதக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவுன், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும் பிரித்தானியா வெளியேறுவதற்கான கால எல்லையை நீடிப்பதற்கு, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்றதொரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆனால், பிரதமர் ஜோன்சன், தான் மக்களின் ஆணைக்கு மதிப்பளிப்பதாகவும் எக்காரணம் கொண்டும் திகதியைத் தள்ளிப் போடுவதற்கான கோரிக்கையை, ஐரோப்பிய ஒன்றியத்திடம் விடுக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினர் பெரும்பான்மையுடன் பதவியிலிருக்கும் ஜோன்சன், தனது நாடாளுமன்றப் பெரும்பான்மையை நேற்றுமுன்தினம் இழந்தார்.
அவரது கட்சி உறுப்பினர் ஒருவர், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்ததன் மூலம், இது சாத்தியமாகியுள்ளது. இதற்கிடையில், நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்கும் நடவடிக்கையை, எப்படியாவது தடுத்து நிறுத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயல்கிறார்கள்.

ஒருபுறம், அவர்கள் நீதிமன்றத்தை நாடி உள்ளார்கள்; இன்னொருபுறம், இனிவரும் காலப்பகுதியில் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலை, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து, நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டுக்கு மாற்றுவதற்குப் பகிரதப் பிரயத்தனம் மேற்கொள்கிறார்கள்.

இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது, திகதி நீட்டிப்பை நாடாளுமன்றம் கோர அனுமதிக்கும் வாக்கெடுப்பில், ஜோன்சன் தோல்வி கண்டுள்ளார். 328க்கு 301 என்ற வாக்குகள் வித்தியாசத்தில், திகதி நீட்டிப்பைப் கோரும் சட்டவரைபை, நாடாளுமன்றில் சமர்பிக்க அனுமதி கிடைத்துள்ளது. இதன்படி எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதி வரை, நீட்டிப்பை வழங்கக் கோருவது மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.

அதேவேளை, “மக்களே இதைத் தீர்மானிக்க வேண்டும்; எனவே, பொதுத்தேர்தலுக்குத் தான் அழைப்பு விடுக்கப்போகிறேன்” எனப் பிரதமர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஒக்டோபர் 15ஆம் திகதி, நாடாளுமன்றத் தேர்தலை நடத்தத் திட்டமிடுவதாக அறியக் கிடைக்கிறது.

இந்த மொத்த இயங்குநிலை அவலம் யாதெனில், நாடாளுமன்றங்களின் தாய் என அழைக்கப்படுகின்ற பிரித்தானிய நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது.

இனி வரும் நாள்களில், பிரித்தானியாவின் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், அடிப்படையான அறத்தையும் விழுமியங்களையும் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட நாடாளுமன்ற ஜனநாயகம், தனது தோல்வியை இன்னுமொருமுறை சந்தித்துள்ளது. இதன் தீய விளைவுகள், பிரித்தானியாவில் உள்ள சாதாரண உழைக்கும் மக்களையும் அவர்கள் சார்ந்த நலன்களையும் பாதிக்கும்.

ஜனநாயகத்தின் மீது விழுகின்ற ஒவ்வோர் அடியும் தேசியவாத அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு வலுவூட்டுகிறது. இது எஞ்சியிருக்கும் சமூக நலன்களையும் அடிப்படை உரிமைகளையும் மக்களிடம் இருந்து, இலகுவாகப் பறித்துவிடும் செயலைச் செய்கிறது.

சிக்கன நடவடிக்கைகள், இராணுவ மய்யப் போக்குகள், சுதந்திர வர்த்தகம் போன்ற ஆளும் அதிகார வர்க்கம் வேண்டி நிற்கின்ற ஒன்றை, இறுதியில் ‘பிரெக்ஸிட்’ செய்து முடிக்கின்றது.

உடன்பாடு எட்டப்படாத வெளியேற்றத்துக்குப் பிரித்தானியா தயாராக இருக்கிறது என்பதை, அண்மையில் கசிந்த பிரித்தானிய அரசாங்க ஆவணம் காட்டி நின்றது. ‘Operation Yellowhammer’ எனப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை, அடிப்படை உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கி, தொழிலாளர் உரிமைகளைப் பறித்து, அதன் மூலம் பிரித்தானியப் பொருளாதாரத்தை நிலைநிறுத்த முயல்கிறது.

2016ஆம் ஆண்டு, தனது அரசியல் எதிர்காலத்தைத் தக்கவைக்க, ‘பிரெக்ஸிட்’ தேர்தலை நடத்தத் தான் தயாராக இருப்பதாகச் சொன்ன அந்நாள் பிரதமர் டேவிட் கெமரன், மூன்று ஆண்டுகளில், ‘பிரெக்ஸிட்’ இப்படி முட்டுச் சந்தில் வந்து நிற்கும் என்று கனவு கூடக் கண்டிருக்க மாட்டார்.

அதேபோன்றதொரு செயற்பாட்டையே, இப்போது பிரதமர் ஜோன்சன் முன்னெடுக்கிறார். இன்று, ‘பிரெக்ஸிட்’ என்ற ஒற்றைச் சொல், பிரித்தானியாவின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் ஒன்றாக மாறிவிட்டது.

என்ன செய்வதென்று தெரியாமல், ஒருபுறம் பிரித்தானிய அரசியலும் இன்னொருபுறம் ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகமும் காலத்தின் கைகளில் கதையைக் கையளித்துவிட்டு கைவிரித்தபடி விக்கித்து நிற்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யோகா தரும் யோகம்; பத்மாசனம் !! (மருத்துவம்)
Next post நம்பிக்கை தரும் பிள்ளைப்பேறு !! (மருத்துவம்)