ரணிலின் இறுதிப் போர் !! (கட்டுரை)

Read Time:14 Minute, 15 Second

தென் இலங்கை அரசியல் ஒழுங்கும் அதன் சூத்திரங்களை இயக்கிக் கொண்டிருக்கும் பௌத்த பீடங்களும், தங்களுக்கான ஆட்சி முகமாக ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் கருதியதில்லை. சர்வதேச ரீதியில், தென்னிலங்கை பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து நின்ற போதெல்லாம், ஒரு ஆபத்பண்டவராக ரணில் செயற்பட்டிருக்கிறார்; காப்பாற்றியிருக்கிறார். ஆனாலும், அவரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ‘ஒற்றை’ ஆட்சியாளராகக் கொள்வதற்கு, தென்னிலங்கை ஒருபோதும் தயாராக இருந்ததில்லை.

அப்படிப்பட்ட நிலையில், உண்மையிலேயே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ரணில் விரும்புகிறாரா என்றொரு கேள்வி, பல தரப்புகளாலும் தொடர்ச்சியாக எழுப்பப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது எழுந்துள்ள முரண்பாடுகள், ‘ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு’ தொடர்பிலானது என்பது வெளிப்படையானது. ஆனால், அந்த முரண்பாடுகளின் உண்மையான புள்ளி, ஜனாதிபதி வேட்பாளர் என்கிற ஒற்றைப் புள்ளியில் நிற்கவில்லை. மாறாக, அடுத்த பிரதமர் யார், கட்சியின் தலைமைத்துவத்தை யார் கைப்பற்றுவது என்கிற விடயங்கள் சார்ந்ததாக இருக்கின்றன.

சஜித் பிரேமதாஸவுக்கும் ரணிலுக்கும் இடையிலான உறவு என்பது, கடந்த பத்து வருடங்களில் பெரும் விரிசல்களைக் கண்டிருக்கின்றது. ஒற்றைத் தலைமையாக நீடிக்க விரும்பும் எந்தவொரு நபரும், தனக்கு மாற்றாக இன்னொருவர் எழுவதை விரும்புவதில்லை. சஜித் நேரடி அரசியலுக்கு வந்தது முதல், அவரை நோக்கி தென்னிலங்கையின் இளைஞர்கள் குறிப்பிட்டளவான திரட்சியைக் காட்டினார்கள்.

2005 ஜனாதிபதித் தேர்தலில் ரணில் தோல்வியடைந்ததும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழ ஆரம்பித்தது. ஆனாலும், கடந்த பதினைந்து வருடங்களாக அந்தக் கோரிக்கையை கோரிக்கை என்கிற அளவிலேயே ரணில் கடந்து வந்தார்; தலைமைத்துவத்தையும் காப்பாற்றினார்.

சஜித்துக்கு எதிராக ரவி கருணாநாயக்கவையும் அண்மைக்காலத்தில் சரத் பொன்சேகாவையும் ரணில் கட்சிக்குள் வளர்க்க விரும்பினாலும், அவரால் சஜித்தின் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில், குறிப்பாக மைத்திரியின் சதிப்புரட்சிக் காலத்தில், அரசாங்கத்தைக் காப்பாற்றிக் கொடுத்ததில் சஜித்தின் பங்கு கணிசமானது என்று ரணில் பேச வேண்டிய சூழல் வந்தது. என்றைக்குமே மற்றவர்களை மேடைகளில் பாராட்டாத, கணக்கில் எடுக்காத ரணில், சஜித்தின் கை பிடித்து அடையாளப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.

அதுதான், அப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை, ராஜபக்‌ஷர்களின் பேரம் பேசல்களில் இருந்து காப்பாற்றியது. கூட்டணிக் கட்சிகளைக் கலைந்து போகாமலும் தடுத்தது.

ரணிலைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, சஜித்தைப் பிரதமராக்குவதற்கான முயற்சிகளில், மைத்திரிபால சிறிசேன இரண்டு தடவைகள் இறங்கினார். அதனை அவர் வெளிப்படையாகவும் அறிவித்தார். ஆனால், அதற்கு சஜித் உடன்படவில்லை. அப்படியான சூழ்நிலையிலேயே, மைத்திரி, சதிப் புரட்சிக்குத் தயாரானார். அந்த விடயம், குறுக்கு வழிகளில் அதிகாரத்தை அல்லது கட்சியின் தலைமைத்துவத்தை அடையும் நோக்கம் சஜித்திடம் இல்லை என்பதை வெளிப்படுத்தியது. இதனால், அவரை நோக்கிய கட்சியினரின் திரட்சியைத் தடுக்கவும் முடியவில்லை. இன்றைக்கு, சஜித்துக்குப் பின்னால், மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம உள்ளிட்ட ரணிலின் விசுவாசிகளான சிரேஷ்ட தலைவர்களே திரள்வதற்குக் காரணமானது.

இப்போது, முதல் பந்தியில் எழுப்பப்பட்ட கேள்விக்கான பதிலை நேரடியாகக் கூறினால், வெற்றிகொள்ள முடியாத தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு ரணில் விரும்பவில்லை என்பதே உண்மை. நிச்சயமாக, ரணில் ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை போட்டியிட விரும்பவில்லை. ஜனாதிபதிப் பதவி மீதான ஆசை அவருக்கு இருந்தாலும், அவரால் வெற்றிபெற முடியாதென்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அப்படியிருக்க, ஏன் கட்சிக்குள் இருப்பதிலேயே அதிக வெற்றி வாய்ப்பைக் கொண்டிருக்கிற சஜித்தை அவர் தட்டிக்கழிக்க நினைக்கிறார்?

ரணில், அரை நூற்றாண்டுகளாக அரசியலில் இயங்கிக் கொண்டிருக்கிறார். கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். மூன்று முறை பிரதமராகவும் இருந்திருக்கிறார். இரண்டு முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுமிருக்கிறார். ஆனால், அவர் எழுபது வயதைக் கடந்த பின்னரும், தன்னுடைய அரசியல் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கிறார். அதுதான், இந்தச் சிக்கல்களின் உண்மையான பின்னணி.

அதிகாரத்துக்கு சஜித் வந்தால், இரட்டைத் தலைமை என்கிற பேச்சுக்கே இடமளிக்க முடியாதென்கிற நிலைப்பாட்டில் இருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதும், கட்சித் தலைமையை எடுத்துக்கொள்வதுடன், பிரதமராக எந்தவொரு காரணம் கொண்டும் ரணிலை நியமிக்கப்போதில்லை என்கிற விடயத்திலும் கவனமாக இருக்கிறார். இதனை, பங்காளிக் கட்சிகளுடனான உரையாடல்களிலும், சஜித் தரப்பு ஓரளவுக்கு வெளிப்படுத்தி வருகின்றது.

சஜித்தைப் பொறுத்தளவில், கரு ஜயசூரியவைப் பிரதமர் பதவியில் அமர்த்திவிட்டு, ஒற்றைத் தலைமை, ஒன்றை ஆட்சியதிகாரம் என்கிற தோரணையில் அரசாங்கத்தை நடத்துவதையே விரும்புகிறார். அதன்போக்கில், ரணிலுக்கு அதிகபட்சமாக, புதிதாக அமைக்கப்படவுள்ள கூட்டணியின் தலைமைப் பதவி மற்றும் சபாநாயகர் பதவி ஆகியவற்றுக்கான பரிந்துரைகளே சஜித் தரப்பினால் முன்வைக்கப்படுகின்றன. இந்த விடயம்தான், ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுச் சிக்கலை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நீடிக்கச் செய்கின்றது.

மைத்திரி – ரணில் என்கிற இரட்டைத் தலைமைப் பிரச்சினையும் அதனால் ஏற்பட்ட குழப்பங்களும், அரசாங்கத்தைத் தோல்வியின் பக்கத்தில் திருப்பியதாக பலரும் நம்புகிறார்கள். குறிப்பாக, தென்னிலங்கையில் அந்த உணர்நிலை அதிகமாகவே உண்டு. அதுதான், தோற்கடிக்கப்பட்ட ராஜபக்‌ஷர்களின் மீள் எழுச்சிக்கும் ஒரு காரணமானது.

இலங்கை போன்றதொரு நாட்டில், ஒற்றைத் தலைமை என்பது தவிர்க்க முடியாததென்பது, தென் இலங்கையின் தொடர்ச்சியான வாதமாகும். அப்படியான நிலையில், புதிய ஆட்சியொன்றை அமைக்கும் போது, அது குறைந்தபட்சம் ஒரு தசாப்த கால (இரு ஆட்சிக்கால) நீட்சிக்கான அத்திவாரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று ஒரு கட்சி நினைப்பதைத் தவிர்க்க முடியாது.

அதுதான், சஜித்துக்கு எதிராக கரு ஜயசூரிய என்கிற துருப்பை ரணில் இறக்கிய போதும், கட்சிக்குள் அதற்கான ஆதரவு கிடைக்காமல் போனதற்கான காரணமாகும். கடந்த காலத்தில், ரணிலுக்காக வில்லாகவும் அம்பாகவும், மங்கள, மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹாசிம் உள்ளிட்டவர்கள் செயற்பட்டார்கள். அவர்கள்கூட, ரணிலின் இந்த நகர்வுக்கு எதிராகத் திரும்பினார்கள். ஒரு கட்டம் வரையில், ரணிலின் நம்பிக்கைப் பேச்சுகளையடுத்து, ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் தன்னையும் வெளிப்படையாக இணைத்துக் கொண்ட கரு, மங்கள உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்களே சஜித்தோடு இணங்கிச் செயற்பட ஆரம்பித்ததும் அமைதியாகிவிட்டார்.

கருவுக்கும், ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்‌ஷர்களின் போர் வெற்றிவாதத்தையெல்லாம் தாண்டி, தன்னால் வெற்றிபெற முடியுமா என்கிற சந்தேகம் வலுவாக இருந்த கட்டத்தில், பிரதமர் பதவிக்கான பரிந்துரை என்பது ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒன்றே. அதுதான், சஜித்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இருந்து அவரையும் அவரின் மருமகனான நவீன் திஸாநாயக்கவையும் பின்வாங்க வைத்தது.

சஜித்தைக் காட்டிலும் கரு மீது பௌத்த பீடங்களுக்கு பாசமும் நம்பிக்கையும் உண்டு. தங்களை மீறி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செல்லமாட்டார் என்று அவை நினைக்கின்றன. அதையும் ஒரு காரணமாக வைத்துக்கொண்டுதான், கருவை முன்வைத்து, அதிகாரத்தைத் தக்கவைக்கும் ஆட்டத்தை, ரணில் ஆட நினைக்கிறார். குறிப்பாக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முழுமையாக இரத்துச் செய்யும் நிலைப்பாட்டுக்கு கருவை இணங்கச் செய்துவிட்டு, அவரைப் பொது வேட்பாளராக அறிவிக்கும் போது, ஆட்சி அதிகாரத்திலும் சிக்கல் இருக்காது, கட்சித் தலைமைத்துவத்தையும் விட்டுக்கொடுக்க வேண்டிய தேவையிருக்காது என்று அவர் நினைகிறார்.

சஜித் தரப்பு, தன்னுடைய கட்டுப்பாடுகளை மீறி இவ்வளவுக்கு எழுந்துவிட்ட போதிலும், இறுதிக்கட்டம் வரையிலும் போராடுவது என்கிற முடிவில் ரணில் இன்னமும் இருக்கிறார். அதற்காக, அவர் மைத்திரியோடு பேசவும் தயாராக இருக்கிறார்.

ஆனால், ராஜித சேனாரத்ன என்கிற கூட்டணிக் கட்சியின் தலைவரைத் தாண்டி இன்னொரு கூட்டணிக் கட்சித் தலைவரைக் கூட ரணிலால் தன்னுடைய நிலைப்பாடுகளின் போக்கில் இணங்க வைக்க முடியவில்லை. ஒரு கட்டம் வரையில் சஜித் எதிர்ப்பு மனநிலையில் இருந்த, சம்பிக்க ரணவக்கவும், ரணிலைக் கைவிட்டு சஜித் பக்கம் வந்துவிட்டார். ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் உள்ளிட்டவர்கள், வெற்றிபெற முடியாத ஒருவரை வேட்பாளராக ஏற்க முடியாது என்கிற விடயத்தை வெளிப்படையாக அறிவித்துவிட்டார்கள். அது, சஜித்துக்கான ஆதரவு என்கிற நிலைப்பாட்டின் போக்கிலானது.

இருப்பதில், ரிஷாட் பதியுதீன் மாத்திரமே மதில் மேல் பூனையாக இருக்கிறார். அந்தப் பூனை, கோட்டாவின் மதிலுக்குள்ளும் தாவுவதற்குத் தயாராக இருக்கிறது என்பதுதான், ரணில் எதிர்கொள்ளும் சோகம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்பத்தை கருவாக்கினாள் பெண்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post பயம் பதட்டம் இன்றே ஒழித்திடுங்கள்!! (வீடியோ)