Partner Exercise!! (மருத்துவம்)

Read Time:8 Minute, 0 Second

உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்திருப்பவர்கள் சட்டென்று நம் கவனத்தை ஈர்ப்பவர்களாக இருக்கிறார்கள். ‘கட்டுடல்’ என்ற மந்திரம் எப்போதும் அனைவரையும் கட்டிப் போடுகிறது.

அப்படி ஃபிட்டாக மாற விரும்புகிறவர்கள் தொடர்ச்சியான உடற்பயிற்சியை மேற்கொள்வது அவசியம். அத்தகைய உடற்பயிற்சிகளை தனியாக மேற்கொள்வதைவிட நண்பர்/காதலர்/வாழ்க்கைத்துணை/மகன்/மகள் என யாரோ ஒருவருடன் இணைந்து செய்யும்போது, அதனால் கிடைக்கும் பலன் இன்னும் அதிகம். இதையே Partner Exercise என்கிறார்கள்.

உடற்பயிற்சி நிபுணரான முனுசாமியிடம் Partner Exercise பற்றியும், அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் கேட்டோம்…

‘‘வாக்கிங் செல்வதோ, ஜிம்முக்கு வெயிட் டிரெயினிங் செல்வதோ எதுவாக இருந்தாலும் யாரேனும் ஒரு துணையுடன் இணைந்து செய்வது பலவிதங்களிலும் பலன் தரும். யோகா கிளாஸ், இரண்டு பேர் சேர்ந்து உடற்பயிற்சி செய்வது போன்ற பயிற்சிகள் உடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுப்பதுடன் இருவருக்கும் இடையில் உள்ள அன்பையும் வளர்க்கும்.

இருவரில் ஒருவர் மட்டும் வாக்கிங் போவது அல்லது உடற்பயிற்சி செய்யும்போது தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வது தடைபடும். சில நேரங்களில் சோம்பல்பட்டு பயிற்சியை தள்ளி வைப்போம் அல்லது விட்டுவிடுவோம். அதுவே பார்ட்னரோடு தொடர்ச்சியாக வாக்கிங் செல்லும்போது நாம் தள்ளி வைப்பதாக இருந்தாலும் அவர் கேட்டுக் கொள்வதாலோ அல்லது வற்புறுத்துவதாலோ நம் பயிற்சி தடைபடாது.

சேர்ந்து உடற்பயிற்சிகள் செய்வதால் ஒருவருக்கொருவர் தூண்டு சக்தியாக செயலாற்ற முடியும். மகிழ்ச்சி இரட்டிப்பாகி, இருவருக்குள்ளும் கூடுதல் பிணைப்பை ஏற்படுத்தும். அதேநேரத்தில், இருவரது மனம், உடல் ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்ள உதவும்.

உடற்பயிற்சிகளையோ, யோகா பயிற்சிகளையோ பார்ட்னரோடு செய்தால் ஒருவர் தவறு செய்தால்கூட மற்றவர் சரி செய்துவிடுவார். சில நேரங்களில் பயிற்சி செய்து கொண்டிருக்கும்போதே நிலை தடுமாறி கீழே விழுந்து காயங்கள் ஏற்படலாம். பார்ட்னரோடு செய்யும்போது, ஒருவருக்கொருவர் பேலன்ஸ் செய்து பயிற்சிகளை மேற்கொள்வதால் விபத்துக்களை தவிர்க்க முடியும்.

அலுவலகத்தில் கடினமான வேலைப்பளு இருக்கும் நாட்களில், உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க முயற்சிப்போம். அந்த நேரத்தில் பார்ட்னர் ‘நீ என்னோடு வந்தால் போதும். ஒர்க் அவுட் பண்ண வேண்டாம்’ என்று சொல்லி அழைத்துச் சென்று விடுவார். அங்கு போனதும் நாமாகவே அவரோடு பயிற்சி செய்ய ஆரம்பித்துவிடுவோம். எனவே, இதற்கு சரியான பார்ட்னரை தேர்ந்தெடுப்பது அவசியம். ஆரோக்கியம், உடற்பயிற்சி, உணவுமுறை பற்றிய அக்கறை கொண்டவராக, அவைகளைப் பற்றித் தெரிந்தவராக இருப்பது நல்லது.

இருவராக ஃபிட்னஸ் பயிற்சிகளைச் செய்யும்போது இலக்குகளை எளிதில் அடையலாம். உதாரணத்திற்கு, நீங்கள் 1 மாதத்திற்குள் 50 புஷ் அப் செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருந்தால் நீங்கள் மட்டும் செய்யும்போது களைப்பில் இலக்கை அடைய முடியாது. உங்கள் பார்ட்னரோடு செய்யும்போது அவர் உங்கள் இலக்கை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார். அதுவே தூண்டுதலாக இருக்கும்.

மேலும், இருவருக்குள்ளும் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதால், அதிக ஊக்கத்தோடு பயிற்சிகளில் ஈடுபடலாம். அதோடு, புதுப்புது பயிற்சிகளை முயற்சி செய்யவும் வழிவகுக்கும்தனியாக செய்யும்போது எளிதில் சோர்வடைந்து, இன்றைக்கு இதுபோதும் என்று நேரத்தை குறைத்துவிடுவோம். அதுவே இன்னொருவரோடு செய்தால் நேரம் போவதே தெரியாமல் விளையாட்டாக செய்ய ஆரம்பித்து விடுவோம்.

பார்ட்னர்ஷிப் ஒர்க் அவுட்டை பல ஆய்வுகளும் வலியுறுத்துகின்றன. ‘ஒருவருக்கொருவர் ஃபிட்னஸ் டிப்ஸ்களை வெறும் தொலைபேசியின் மூலம் பேசிக் கொண்டாலே 78 சதவீதம் உடற்பயிற்சி அளவை அதிகரிக்க முடியும்’ என்பதை அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வறிக்கை ஒன்றில் சொல்லியிருக்கிறார்கள். நேரிடையாகவோ, தொலைபேசியிலோ உடற்பயிற்சி சம்பந்தமான ஆலோசனைகள், அறிவுரைகள் பற்றிய உரையாடல் இருக்குமானால் அடுத்தவரின் ஆற்றல் 18 சதவீதம் அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நண்பர்கள் அல்லது தங்கள் துணையோடு, குறைந்தபட்சம் உடன் பணிபுரிபவருடனாவது சேர்ந்து வேடிக்கையாக உடற்பயிற்சி செய்பவர்கள் எளிதில் சோர்வடையாமல், கூடுதல் ஆற்றலோடு செய்வதாக தென் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இருவராக சேர்ந்து பயிற்சி மேற்கொள்பவர்களைவிட, ஒருவராக தனித்து உடற்பயிற்சி செய்பவர்கள் எளிதில் ஸ்ட்ரெஸ் ஆகி விடுவதாக, International journal of stress management நாளிதழில் ஆய்வறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

முக்கியமான விஷயம்… கணவன், மனைவி சேர்ந்து உடற்பயிற்சி செய்வதால், உங்கள் தாம்பத்திய வாழ்க்கைக்கும் துணைபுரியும் என்பது ஆய்வில் நிரூபணமான உண்மை. இன்றைக்கு ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக்கொள்ள நேரம் இல்லாத நிலையில் இருக்கும் போது, உடற்பயிற்சி நேரத்தை உங்கள் இருவருக்குமான தனிப்பட்ட நேரமாக அமைத்துக் கொள்ளலாம். பெற்றோர்கள் இணைந்து உடற்பயிற்சி செய்வதை பார்க்கும் பிள்ளைகளும் தானாகவே உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை பின்பற்றத் தொடங்கிவிடுவார்கள். பிறகென்ன, ஆரோக்கியம் விளையாடும் வீடாக உங்கள் இல்லம் மாறும்!’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வந்தாச்சு மருத்துவ டாட்டூ!! (மகளிர் பக்கம்)
Next post அழகு வரும் முன்னே…ஆரோக்கியம் வரும் பின்னே….!! (மருத்துவம்)