By 26 September 2019 0 Comments

மற்றவரின் பார்வை கண்ணாடி போன்றது!! (மகளிர் பக்கம்)

தாய்வழி சமூகத்திலிருந்து தந்தை வழி சமூகமாக மாறினாலும், எப்போதும் பெண்ணின் ஆளுமைதான் இன்றளவும் ஒவ்வொரு வீட்டிலும் காண முடிகிறது. இதில் ஒரு படி மேல் போய் வெளியிலும் ஆளுமை செலுத்தும் பெண்கள் பலர் உருவாகி வருகிறார்கள். ஒரு சில குடும்பங்களில் அப்பாவின் மறைவுக்குப் பின் அந்த பொறுப்பை தன் கையில் எடுக்கும் பல மகள்கள் சாதனையாளர்களாக உலா வருகின்றனர். அதில் ஒருவராக இருக்கிறார் நடிகை உஷா. தமிழ், தெலுங்கு மொழிகளில் 67 தொடர்கள், ஒரு திரைப்படம், 10 குறும்படங்கள், 3 வெப் சீரிஸ் என பிசியான நடிகையாக வலம் வரும் உஷா, பகிர்ந்து கொண்ட சில சுவாரசியமான தகவல்கள்.

“மூன்று வயதுக் குழந்தையிலிருந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். அப்பா திரைத்துறையில் மேனேஜராக இருந்தார். ஒரு நாள் அப்பாவோட நண்பர் வீட்டுக்கு வந்திருந்தார். அவர் பணிபுரியும் ஒரு தொடருக்காக மூன்று வயதுக் குழந்தையைத் தேடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் வெளியே மண்ணில் விளையாடிக் கொண்டிருந்த என்னைப் பார்த்ததும், நடிக்க வைக்க சொல்லி அப்பாவிடம் கேட்டார். அப்பாக்கு நடிப்புத் துறைக்கு குழந்தைகளை அனுப்புவதில் விருப்பமில்லை.

அவரது ஒரே நோக்கம் என்னை UPSC எக்ஸாமில் பாஸ் பண்ண வைக்கனும். அப்பா முட்டுக் கட்டையாக இருப்பதால், அம்மாவிடம் பேசி அவங்களிடம் சம்மதம் வாங்கி கூட்டிட்டு போனாங்க. தெலுங்கில் ‘காயத்ரி’ என்ற தொடரில் நடிக்க ஆரம்பித்து, இன்று சன்.டி-வியில் ஒளிபரப்பாகும்
‘தமிழ்செல்வி’ தொடர் வரை பதினெட்டு ஆண்டுகள் நடிப்புத் துறையில் இயங்கிக் கொண்டிருக்கிறேன்” என்றவர் தன் குடும்ப பின்னணி, படிப்பு பற்றிப் பேசினார்.

“ஆந்திர மாநிலம் கக்குளம் அப்பாவோட ஊர். அம்மா விசாகப் பட்டினம். விவசாய பின்னணி கொண்ட அப்பா, அம்மாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பி கல்லூரி முதலாமாண்டு படிக்கிறான். நடிக்க வந்தாலும் படிப்பில் என்னுடைய கவனம் சிதறியதில்லை. எப்போதும் முதலிடம் தான். அப்பா எப்படியோ நடிப்புக்கு பச்சைக் கொடி காண்பிச்சாலும், படிப்புதான் முக்கியம் என்பதை அவ்வப்போது நினைவுப்படுத்திக்
கொண்டேயிருப்பார்.

சமீபத்தில் ஹார்ட் அட்டாக்கில் அவர் இறந்துவிட்டார். அவரின் நினைவையும், ஆசையையும் நிறைவேற்ற அவரது ஆசீர்வாதத்தோடு உழைத்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய லட்சியம் UPSC எக்ஸாம் எழுதுவது. அது முடியாததால் என்னுடைய விருப்பத்தின் பெயரிலேயே என்னை எழுத வைக்க பெரும் முயற்சி எடுத்தார். அவருடைய ஆசையை என் மீது திணிக்கவில்லை. தற்போது குடும்பத்தைப் பார்க்கும் பொறுப்பு எனக்கானதாகியிருக்கிறது” என்று கூறும் உஷா, தெலுங்கில் நிறையத் தொடர்களில் நடித்திருந்தாலும் சன் டிவியில் ஒளிபரப்பான ‘தெய்வ
மகள்’ தொடரில் வரும் அஞ்சலி கதாபாத்திரம் அவருக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து சக்தி, சந்திரலேகா எனத் தொடர்ந்து தமிழ்ச் செல்வி தொடர் வரை சன்.டிவியிலேயே நான்கு தொடருக்கு மேல் நடித்து வரும் உஷா, “அழகிய தமிழ் மகள் தொடரில் நடித்த மாரி கதாபாத்திரம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்த கதாபாத்திரம்” என்கிறார்.
இல்லத்தரசியான அம்மாவின் எல்லா வேலைகளுக்கும் என்னுடைய பங்கும் கூடவே இருக்கும் என்று கூறும் உஷா, “சமையல் நல்லா பண்ணுவேன். அதிலும்அசைவ உணவு, வெரைட்டியா ட்ரை பண்ணுவேன்.

ஷூட்டிங், டப்பிங்-ன்னு பிசியா இருந்தாலும், வீட்டில் நேரம் கிடைக்கும் போது சில்க் த்ரெட் ஜூவல்லரி, கிளாஸ் பெயிண்டிங், ஐஸ்கிரீம் ஸ்டிக், நியூஸ் பேப்பர் பயன்படுத்தி கிராஃப்ட் ஒர்க் செய்வேன். பொதுவா வீட்டில்தான் அதிக நேரம் செலவழிப்பேன். நண்பர்களோடு வெளியில் போனாலும், அம்மாகிட்ட பத்துமுறை பர்மிஷன் கேட்டா தான் கிடைக்கும். அம்மா ரொம்ப ட்ரெடிஷன் டைப். இன்று பார்க்கும், கேள்விப்படும் செய்திகளால் அவங்க என்னுடைய பாதுகாப்பு ரொம்ப முக்கியம்னு நினைப்பாங்க.

என்னை பொறுத்த வரை, ஒரு பெண் ஆணிடம் எப்படி பழகுறாங்களோ அதை கொண்டு தான் அவர்கள் அட்வாண்டேஜ் எடுப்பாங்க. மீடியாவில் நான் எப்படி மற்றவர்களுடன் பழகுறேன் என்பதைப் பொறுத்துத்தான் மத்தவங்க என்னை பார்க்கும் பார்வை மாறுபடும். சின்ன வயதிலிருந்தே நடித்துக் கொண்டிருப்பதால் அம்மா ஒவ்வொன்றும் சொல்லிக் கொடுத்துத்தான் வளர்த்தாங்க. திமிரா இருக்க மாட்டேன். எல்லோரிடமும் சிரிச்சு பேசுவேன். அதே சமயம் எந்த இடத்தில் கோபப்படணும்னு தெரியும்.

இன்று பெண்களின் பாதுகாப்பை நாம் தான் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நைட் ஷூட் போவதற்கு சிலர் பயப்படுகிறார்கள். பயம் எதற்கு? வெளியில் வந்து போராடுவதோடு, நமக்கான அநீதி எழும் போது அதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். நல்ல நோக்கத்தில் பார்க்கும் போது பார்ப்பவரின் பார்வையும் அப்படித்தான் இருக்கும், கண்ணாடி போல்” என்றார் நிறைவாக.Post a Comment

Protected by WP Anti Spam