பனங்கற்கண்டால் இத்தனை பலனா?! (மருத்துவம்)

Read Time:6 Minute, 53 Second

‘வெள்ளை நிற சர்க்கரை பல தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது, அதனால் உணவில் சர்க்கரையை சேர்ப்பதை தவிர்க்கவும், முடியாத பட்சத்தில் குறைக்கவும்’ என்று சமீபகாலமாக மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்து வருகிறார்கள். நீரிழிவு நோயாளிகளுக்கு வேறு வழியில்லை சர்க்கரையை தவிர்த்துத்தான் ஆக வேண்டும். ஆனால், சாதாரண மக்கள் இனிப்புக்கு என்ன செய்வது என்ற கேள்வி எழும்போது அங்கே அதற்கு மாற்றாய் நம் பாரம்பரிய உணவுப்பொருளான பனங்கற்கண்டு இருக்கிறது என்பதையும் அதே மருத்துவர்களே நமக்கு உணர்த்தி இருக்கிறார்கள்.

பனங்கற்கண்டின் சுவை மட்டும்தான் நமக்குத் தெரியும். அதனை பற்றிய பயனுள்ள தகவல்கள் தெரியுமா? அதனை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்னவென்று தெரியுமா? அவற்றை இங்கே விளக்க வருகிறார் சித்த மருத்துவர் சிவராமன். ‘பனை மரத்தின் பதநீரை தூய்மைப்படுத்தி அதனை காய்ச்சி, பாகு பதத்தில் வடித்து கற்கண்டு வடிவில் தயாரிக்கும்போது கிடைப்பதே பனங்கற்கண்டு. பனங்கற்கண்டில் கார்போஹைட்ரேட், பொட்டாசியம், மக்னீசியம், காப்பர், ஜிங்க், இரும்புச்சத்து போன்ற தாது சத்துக்களும், நோய் எதிர்ப்புத் திறனுக்குக் காரணமான ஆன்டி ஆக்ஸிடென்ட்டும் அதிகம் இருக்கின்றன. பனங்கற்கண்டு சாப்பிட்டவுடன் உடனடியாக ஆற்றலைத் தரக் கூடியது.

நல்ல செரிமான சக்தியைத் தூண்டும். ரத்தத்தைச் சுத்தம் செய்து, அதில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்குகிறது. உடல் சோர்வை நீக்கி, புத்துணர்வைத் தருகிறது. நினைவாற்றலையும் பெருக்குகிறது. இதில் நார்ச்சத்துகள் நிறைந்திருப்பதால் மலச்சிக்கலை போக்குகிறது. அதிகமான அல்லது குறைவான நாடித்துடிப்பால் பல்வேறு நோய்கள் உடலை பீடிக்கும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று நாடிகளின் இயக்கத்தைச் சமப்படுத்தி சீராக்கி, உடலை நோயிலிருந்து பாதுகாக்க வல்லது இந்த பனங்கற்கண்டு.

சளி, இருமல், குணமாக தூதுவளையின் 5 இலைகளுடன் மிளகு 10 எண்ணிக்கையில் எடுத்துக் கொண்டு, பனங்கற்கண்டு 25 கிராமுடன் தேவையான அளவு நீர் சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் தூதுவளை, பனங்கற்கண்டு, இடித்த மிளகு இவற்றைப் போட்டு கொதிக்க விட வேண்டும். நீர் நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டி ஆறவிட்டு மிதமான சூட்டில் பருகி வர சளி, இருமல், ஒற்றைத் தலைவலி ஆகியவை குணமாகும். இதனை சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் தொடர்ந்து ஐந்து நாட்கள் பருக வேண்டும்.

இதேபோல் ரத்த சோகை குணமாக மாதுளம் பழச்சாறு 250 மில்லி, ரோஜா பன்னீர் 25 மில்லி, பனங்கற்கண்டு 250 கிராம் மூன்றையும் சேர்த்து காய்ச்சி, பாகு பதத்தில் இறக்கி, ஆறிய பின் கண்ணாடிக் குடுவையில் சேகரித்து வைத்து தினமும் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர ஒரு மாதத்திற்குள் ரத்த அணுக்கள் உற்பத்தியாகி, ஹீமோகுளோபின் எண்ணிக்கைக் கூடும். பனங்கற்கண்டில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் ரத்தசோகை குறைபாட்டை நீக்கி ஆரோக்யத்தை மேம்படுத்தும்.

பனங்கற்கண்டில் தேவையான நார்ச்சத்து இருப்பதால் குடலின் நொதிகள் சீராக செயல்பட்டு, செரிமான சக்தியும் தூண்டப்பட்டு, குடலியக்கமும் சீராகி, மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது. இதற்கு வாழைப்பழம் ஒன்று, உலர் திராட்சை 7, பனங்கற்கண்டு 10 கிராம் ஆகிய மூன்றையும் மிக்சியில் மசித்து, இரவில் படுக்கும் முன் எடுத்துக் கொள்ள மலச்சிக்கல் வராது. இதயக் கோளாறுகள், ரத்த அழுத்தம் சீராக பனங்கற்கண்டில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால் இதயத் தசைகளை பாதுகாக்க வல்லது. மேலும் ரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.

இதற்கு ஒற்றை அடுக்கு செம்பருத்தி 3, பனங்கற்கண்டு 5 கிராம், வெந்தயம் ஒரு ஸ்பூன் ஆகியவற்றுடன் தேவையான அளவு நீரில் இந்த மூன்றையும் போட்டு காய்ச்சி வடிகட்டி, ஒரு மாதம் காலையில் வெறும் வயிற்றில் பருகி வர, இதயக் கோளாறுகள் சரியாகும். சரும நோய்கள் நீங்க ஒரு டம்ளர் அருகம்புல் சாற்றுடன் தேவைக்கு பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர, சொறி, சிரங்கு தேமல், படர் தாமரை முதலான அனைத்து தோல் நோய்களும் தீரும். ஆஸ்துமா, காச நோய்கள் தீர ஆஸ்துமா, காச நோய்களுக்கு பனங்கற்கண்டுடன் சித்தரத்தை வேர் சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குடிக்க நோய் தீரும்.

கர்ப்பிணிகள் பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி குடித்து வரும் போது, கருத்தரிக்கும் பெண்களுக்கு கருவளர்ச்சி ஆரோக்யமாக இருப்பதோடு சுகப்பிரசவமும் உண்டாகும். மேலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பையும் அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகளும் பனங்கற்கண்டை குறைவான அளவில் பயன்படுத்த நலம் பயக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸ் உடல்நலத்திற்கு ஓர் அருமருந்து!! (அவ்வப்போது கிளாமர்)
Next post மழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க…!! (மருத்துவம்)