By 21 December 2019 0 Comments

அபாயம் இங்கே ஆரம்பம்!! (மருத்துவம்)

‘‘உடலில் உள்ள ரத்த நாளங்களில் Artery(தமனி) என்பது ஆக்சிஜன் செறிவாக உள்ள சுத்தமான ரத்தம். Veins அல்லது Venous (சிரை) என்பதில் ஆக்சிஜன் குறைவாக உள்ள அசுத்தமான ரத்தம். இந்த 2 வகை ரத்தமும் இயல்பாக, தடையில்லாமல் உடலில் ஓட வேண்டும்.
இதற்கு மாறாக ரத்த ஓட்டம் தடைபட்டு, அது உறைந்து போகும் நிலையும் சமயங்களில் ஏற்படுவதுண்டு. இதையே ரத்த உறைவு நோய்(Thrombosis) என்று அழைக்கிறோம்’’ என்கிறார் நரம்பியல் நிபுணர் மீனாட்சி சுந்தரம். ரத்த உறைவு நோய் எதனால் வருகிறது, எப்படி தடுப்பது என்பது பற்றி விரிவாக கேட்டோம்…

‘‘உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இயல்பாக செயல்படுவதற்கு ரத்த ஓட்டம் மிகமிக அவசியமானது. இந்த ரத்த உறைவு நோய் எந்த வகை ரத்த நாளத்தை பாதிக்கிறது, எந்த உடல் உறுப்புக்கு சம்பந்தப்பட்ட ரத்த நாளங்களைப் பாதிக்கிறது என்பதைப் பொறுத்தே அதன் அறிகுறிகள் வெளிப்படும்.

உதாரணமாக இதயத்திற்கு செல்லும் தமனி ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டால் மாரடைப்பு(Heart attack) ஏற்படுகிறது. அதுவே மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டால் பக்கவாதம்(Stroke) ஏற்படுகிறது. இதேபோல கை அல்லது கால்களுக்கு செல்லும் தமனி ரத்தக்குழாயில் ஏற்படுகிற ரத்த உறைவு நோயால் அவற்றை இழக்கக்கூட நேரிடலாம்.’’

ரத்த உறைவு நோயின் அறிகுறிகள் என்ன?
‘‘பாதிக்கப்பட்ட பகுதியில் வீக்கம், தொடர் வலி, தோல் மிருதுவாக மாறுதல், தோலின் நிறம் மாறுதல் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாக உள்ளது. 50 சதவீதம் பேருக்கு இந்நோயின் அறிகுறிகள் தென்படுவதில்லை. எனவே, மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலம் இந்நோயைக் கண்டறியலாம்.’’

ரத்த உறைவு நோய் எதனால் ஏற்படுகிறது?

‘‘ரத்த நாளத்தில் ரத்தம் சீராக பாயாமல் உறைந்து போவதால் ரத்த உறைவு நோய் ஏற்படுகிறது. இந்த நோய் ஏற்பட பின்வரும் மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. ரத்த நாளங்களில் அல்லது ரத்த நாளங்களின் சுவற்றில் ஏற்படும் நோய்கள் (Vessel wall abnormalities), ரத்த அழுத்தம் குறைவதால் ரத்த ஓட்டத்தின் வேகம் குறைந்து போதல் (Decrease in blood flow velocity), ரத்தத்தின் உறைந்து போகும் தன்மை அதிகரித்தல் (Increase in blood coagulability).’’

ரத்த உறைவுக்கான ஆபத்துக் காரணிகள் என்ன?
‘‘அதிக நேரம் அசைவின்றி ஒரே இடத்தில் இருப்பதால் கால்களில் சிரை ரத்த உறைவு பிரச்னை உண்டாக்கூடும். இது Deep vein thrombosis என்று சொல்லப்படுகிறது. விமானங்களில் அதிக தூரம் செல்லும்போது தண்ணீர் நன்றாக குடிக்க வேண்டும். கால்களை அவ்வப்போது அசைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. விமானம், பேருந்து, ரயில் போன்ற வாகனங்களில் மிக நீண்ட தூரம் பயணம் செய்கிறபோது குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை சிறிது எழுந்து நடப்பதும், சிறு சிறு பயிற்சிகள் செய்வதும் அவசியம்.

நோய்களினால் அல்லது அறுவை சிகிச்சைக்குப் பிறகு படுத்த படுக்கையிலேயே ஓய்வில் இருக்கிறபோது இதுபோன்ற ரத்த உறைவு ஆபத்து அதிகமாகிறது. இதுபோன்ற சமயங்களில் இதைத் தடுப்பதற்கான மருந்துகள் மருத்துவரால் பரிந்துரை செய்யப்படுகிறது.

உடம்பில் ஏற்படுகிற நீர்ச்சத்து குறைவு அல்லது நீர் வறட்சியை Dehydration என்று சொல்கிறோம். இது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். அதிகமான வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி ஏற்படுவதை இதற்கு உதாரணமாக சொல்லலாம். அதிகமாக மது அருந்துவதும் இந்நோய் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது.

ரத்த உறைவு நோய் மூளையில் உள்ள நரம்புகளைப் பாதிக்கும் பொழுது Cerebral venous thrombosis என்கிற நோய் ஏற்படலாம். ஒரு தாய்க்கு குழந்தை பிறக்கும் சமயத்தில் ரத்தம் உறையும் தன்மை சிறிது அதிகமாக இருக்கும். குழந்தை பிறந்த பிறகு பத்தியம் என்ற பெயரில் உணவு மற்றும் நீர் கட்டுப்படுத்தப்படுகிற பொழுது Deep vein thrombosis (DVT) என்கிற ஆழ்ந்த ரத்த உறைவு நோய் ஏற்படும் வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது.’’

ரத்த உறைவு நோயால் உயிருக்கு ஆபத்து உண்டா?

‘‘ரத்தம் உறைதல் நோயை உடனடியாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். தவறினால் Pulmonary embolism என்று சொல்லப்படுகிற உயிருக்கு ஆபத்தான நுரையீரல் ரத்த உறைவு நோய் ஏற்பட வழிவகுத்துவிடும். மூளையில் உள்ள அசுத்த ரத்த நாளங்களில் ஏற்படும் உறைவிற்கு Cerebral Venous Thrombosis என்று பெயர். இதனால் தலைவலி, வலிப்பு மற்றும் நினைவு குறைபாடு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இந்த நோயும் தீவிரமாகிறபோது உயிருக்கு பாதகம் விளைவிப்பதாகக்கூட மாறலாம். இதற்கும் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்.’’Post a Comment

Protected by WP Anti Spam