By 26 December 2019 0 Comments

வெள்ளை சர்க்கரையும் ஒரு காரணம்!! (மருத்துவம்)

*புற்று நோய் இல்லாத புதிய உலகம்

நாட்டு சர்க்கரை, பனங்கருப்பட்டியில் உள்ள பல தாதுக்கள் புற்றுநோயாக்கத்தைத் தடுக்கும் தன்மை கொண்டவை. ஆனால், வெள்ளைச் சர்க்கரை அப்படியில்லை.

பெற்றோருக்குப் புற்றுநோய் வந்திருந்தால் பிள்ளைகளுக்கும் வரும் என்று சொல்வதற்கில்லை. இதற்கு ஆறுமுகம் ஓர் உதாரணம். ஆறுமுகத்துக்கு நான்தான் குடும்ப மருத்துவர். அவருக்கு வயது 55. வெல்ல வியாபாரி. ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார். அவருடைய அப்பா 50-வது வயதில் புராஸ்டேட் கேன்சரில் இறந்துபோனது ஒரு காரணம். வம்சாவளியாகத் தனக்கும் கேன்சர் வந்துவிடக்கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வில் வருடந்தோறும் சென்னைக்குச் சென்று முழு உடல் பரிசோதனை செய்துகொள்வார்.

இதுவரை நல்லவேளையாக அவருக்கு அந்தப் பாதிப்பு வரவேயில்லை. சில புற்றுநோய்கள் வம்சாவளியில் வருவது உண்மைதான். ஆனால், எல்லோருக்கும் அவை வருவதில்லை. என் அனுபவத்தில் வம்சாவளியில் புற்றுநோய் வந்திருந்தாலும் அந்த வம்சத்தில் பிறந்தவர்கள் பலரும் புற்றுநோய் வராமல் தப்பித்து இருக்கின்றனர். சரியான எச்சரிக்கைகளைக் கையாண்டு புற்றுநோய் வருவதைத் தள்ளிப் போட்டவர்களையும் நான் கண்டிருக்கிறேன். ஆகவே, வம்சாவளிப் புற்றுநோயைப் பொறுத்த அளவில் நமக்குத் தேவை விழிப்புணர்வும் தடுப்பு ஏற்பாடுகளும்தானே தவிர, பயமும் பதற்றமும் அல்ல!

அண்மையில் ஆறுமுகம் என்னிடம் வந்திருந்தார். ‘செக்-அப்’புக்குச் சென்னை சென்று வந்ததாகச் சொன்னார். அவருடைய பரிசோதனை ரிப்போர்ட்டுகளைக் காண்பித்தார். எல்லாமே நார்மல். ‘மகிழ்ச்சி’ என்றேன். அப்போது அவர் ஒரு சந்தேகம் கேட்டார். ‘டாக்டர், இந்த முறை நான் சென்னைக்குப் போனபோது வெள்ளைச் சர்க்கரையைக் குறைக்க வேண்டும் என்று சொன்னார்கள். சர்க்கரைக்கும் புற்றுநோய்க்கும் என்ன தொடர்பு? வெள்ளைச் சர்க்கரை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்று படித்திருக்கிறேன். புற்றுநோயும் வருமா? எனக்குச் சர்க்கரை நோயும் இல்லை! எதற்கு இதைச் சொன்னார்கள் என்று புரியவில்லை’ என்றார். இந்தச் சந்தேகம் ஆறுமுகத்துக்கு மட்டுமல்ல; பலருக்கும் இருக்கிறது. ஆகவே, இதைக் கொஞ்சம் விளக்கமாகவே பார்த்துவிடலாம்.

கசக்கும் சர்க்கரை!

நம் ஆரோக்கியத்தைக் கெடுப்பதில் மூன்று வெள்ளை நிற உணவுப் பொருட்களுக்கு முக்கியப் பங்கு உண்டு என்கிறது அமெரிக்கப் புற்றுநோய்த் தடுப்பு மையம். அவை… வெள்ளை உப்பு, வெள்ளை மைதா, வெள்ளைச் சர்க்கரை (சீனி). இவற்றில் வெள்ளைச் சர்க்கரை இடம் பெறாத உணவு இல்லை என்று சொல்லும் அளவுக்கு நம் உணவுப்பழக்கம் இப்போது மாறிவிட்டது. நம் தாத்தா, பாட்டி சாப்பிட்ட இனிப்புகளில் நாட்டு வெல்லமும் பனங்கருப்பட்டியும் பனங்கற்கண்டும் ஆட்சி செய்தன. தற்போது நாம் சாப்பிடுவதில் வெள்ளைச் சர்க்கரைதான் ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்தியர்களின் ‘குடிநீரான’ காபி, தேநீரில் நேரடியாகக் கலக்கப்படும் சர்க்கரை மட்டுமல்ல; சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் ஐஸ்க்ரீம், கேக், லட்டு, பூந்தி தொடங்கி பெரியவர்களுக்குப் பிடித்த கோதுமை அல்வா, பாதுஷா, பால்கோவா, ரசகுல்லா, இன்னும் பிற உச்சரிக்க முடியாத இனிப்புகள் வரை எல்லாமே மறைமுகமாக வெள்ளைச் சர்க்கரையில் ஊறியவைதானே!காபி, தேநீர் போன்ற நேரடி சர்க்கரைப் பயன்பாட்டிலாவது நமக்கு சர்க்கரை அளவு தெரியும். ஆனால், பல வண்ணங்களில் நம்மை மயக்கி வைத்திருக்கும் சந்தை இனிப்புகளில் மறைமுகச் சர்க்கரையின் அளவு தெரிய வாய்ப்பில்லை. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அளவு இருக்கும். அதிலும் அறம் மறந்த இன்றைய வணிகப் பெருக்கத்தில் வாடிக்கையாளரைக் கவர ஏற்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாகவே இருக்கும். அதில்தான் ஆபத்தும் காத்திருக்கும்.

அளவுக்கு மிஞ்சினால் வெள்ளைச் சர்க்கரையும் கசக்கும். காரணம், கரும்பு வெல்லம் கொடுக்கும் நாட்டு சர்க்கரையும் பனை தரும் நாட்டுக் கருப்பட்டியும் இயற்கை இனிப்புகள். இவற்றில் உள்ள பல தாதுக்கள் நம் உடலில் புற்றுநோயாக்கத்தைத் தடுக்கும் தன்மை கொண்டவை. ஆனால், வெள்ளைச் சர்க்கரை அப்படியில்லை. இயற்கையாக விளைந்த கரும்புச் சாற்றில், சுத்திகரிப்பு எனும் பெயரில் பல ரசாயனங்கள் கலக்கப்பட்டு, வண்ணம் மாறி வெள்ளைப் பாகு ஆகி சர்க்கரையாக வரும்போது, அது நம் உடல் செல்களுக்கு வேண்டாத வேதிப்பொருளாகிவிடுகிறது; புற்றுநோய்க் காரணியாகிவிடுகிறது.

இன்று இந்தியாவில் சர்க்கரை நோய் கூட்டமும் உடற்பருமன் ஆபத்தும் அனுதினமும் அதிகரிக்கிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் இந்த வெள்ளைச் சர்க்கரைப் பயன்பாடுதான் என்றால் அது உண்மை; மிகையில்லை. இந்த இரண்டு நோய் உள்ளவர்களுக்குப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது என்பதும் உண்மைதான். நடுத்தர வயதில் உள்ள ஓர் ஆண் நாளொன்றுக்கு 9 தேக்கரண்டி சர்க்கரையும் (36 கிராம்), ஒரு பெண் நாளொன்றுக்கு 6 தேக்கரண்டி சர்க்கரையும் (25 கிராம்) தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இதற்கு அதிகமானால் அது சர்க்கரை நோய்க்கு மட்டுமல்ல புற்றுநோய்க்கும் குழி பறிக்கும் என்கிறது அமெரிக்கப் புற்றுநோய்த் தடுப்பு மையம். எப்படியெனில் ஆர்ப்பரித்து ஓடும் தண்ணீர் ஆற்றங்கரையை அரிப்பதுபோல், அதீத வெள்ளைச் சர்க்கரை உடலில் இயல்பாக இருக்கும் மரபணுக்களைப் பிராண்டிக் கொண்டே இருக்கிறது. இந்தத் தொல்லையைத் தாங்க முடியாத ஒரு சில மரபணுக் கூட்டம் புதிய முகம் காட்டுகிறது; புற்று செல்களைத் தூண்டுகிறது. இப்படித்தான் வெள்ளைச் சர்க்கரை புற்றுநோயைத் தொடக்கி வைக்கிறது. அடுத்ததாக, ஏற்கனவே புற்றுநோய் இருந்தால், அந்தப் புற்று செல்கள் வேகமாக வளரவும் மற்ற உறுப்புகளுக்குப் பரவவும் இதுவே முதல் விருந்தாக அமைகிறது. இப்படி, புற்றுநோய்க்கான புதிய அடையாளத்தை இந்த மையம் காட்டிவிட்டது. அதை விலக்கி வைப்பதுதானே புத்திசாலித்தனம்.

முடிந்தவரை நம் அன்றாட வாழ்வியலில் வெள்ளைச் சர்க்கரைப் பயன்பாட்டைத் தவிர்த்து, தேன், கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை மற்றும் பழச்சாறுகளில் தயாரிக்கப்பட்ட இயற்கை இனிப்புகளைப் பயன்படுத்தப் பழகினால் புற்றுநோய்த் தாக்குதலிலிருந்து தப்பிக்கவும் வழி இருக்கிறது’ என்றேன். உடற்பருமன் ஒரு புற்றுக்காரணியா? ஆறுமுகம் அன்றைய தினம் நிறைய பேசினார். சென்னை மருத்துவமனையில் காத்திருந்தபோது அருகில் குண்டாக ஒரு கல்லூரி மாணவியும் அமர்ந்திருந்தாராம். அவருக்கு இரைப்பையில் கேன்சராம். அவர் அம்மாவிடம் ‘இந்த வயதிலா? என்ன காரணம்?’ என கேட்டாராம். ‘இப்போதெல்லாம் கேன்சர் வர்றதுக்கு வயசு ஒரு கணக்கு இல்லை… சார்’ என்றவர், ‘என் மகளுக்குக் குண்டு உடம்புதான் எதிரி ஆகிடுச்சு’ என்றாராம்.

‘என்ன டாக்டர், ரத்தக்கொதிப்பு. மாரடைப்பு, சர்க்கரை நோய்க்கு வேண்டுமானால் உடற்பருமன் காரணமாகலாம். புற்றுநோய்க்கும் அது எப்படிப் காரணமாகிறது?’ என்று அடுத்த சந்தேகத்தை எழுப்பினார் ஆறுமுகம். ‘உடலில் கொழுப்பு சேரச் சேர உடற்பருமன் ஏற்படுகிறது. அப்போது சில ஹார்மோன்களுக்குக் கொண்டாட்டம் கூடிவிடுகிறது. முக்கியமாக, டெஸ்டோஸ்டீரான், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கின்றன. வெட்டியாகச் சுற்றும் குளவிதான் கொட்டும் என்று சொல்வதுபோல் இந்த ஹார்மோன்கள் இரண்டும் தேவைக்கு அதிகமாக ரத்தத்தில் கலந்து உடலில் சுற்றிவரும்போது புற்றுநோய் மரபணுக்களைத் தூண்டுகின்றன. அதன் விளைவாகக் குடலில்/மார்பகத்தில்/கருப்பையில் இன்னும் சில இடங்களில் உறங்கிக்கொண்டிருக்கும் சீரற்ற மரபணுக்கள் உசுப்பப்படுகின்றன. அதனால் உடலில் பல இடங்களில் இயல்பான செல்கள்கூட வேகமாகப் பிரிகின்றன; அதிகமாக வளர்கின்றன. அப்போது பலதரப்பட்ட புற்றுநோய்கள் புதிதாகப் புறப்படுகின்றன.

பொதுவாக, உலக அளவில் ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் உடற்பருமன் பிரச்னை அதிகம். ஆகவே, பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயும் கருப்பைப் புற்றுநோயும் குடல் புற்றுநோயும் அதிகம். அதே நேரத்தில் உடல் எடையைச் சரியாகப் பராமரித்தால் 13 வகையான புற்றுநோய்களைத் தடுக்க முடியும் என்ற புள்ளிவிவரத்தையும் சொன்னபோது ‘புரிகிறது, புரிகிறது’ என்றார் ஆறுமுகம் தலையைப் பெரிதாக ஆட்டியபடி!
(படைப்போம்)

உடற்பருமன் உள்ளவர்கள் கவனத்துக்கு…

கொழுப்பு கூடிய உடலில் கீழ்க்காணும் 13 வகை புற்றுநோய்கள் ஏற்படுவதை உலகளவில் உறுதி செய்துள்ளன புற்றுநோய்க் கள ஆய்வுகள்.
1. மார்பகப் புற்றுநோய் 2. கருப்பைப் புற்றுநோய் 3. உணவுக்குழாய்ப் புற்றுநோய் 4. குடல் புற்றுநோய் 5. இரைப்பைப் புற்றுநோய் 6, கணையப் புற்றுநோய் 7. கல்லீரல் புற்றுநோய் 8. சிறுநீரகப் புற்றுநோய் 9. பித்தப்பைப் புற்றுநோய் 10. சினைப்பைப் புற்றுநோய் 11. தைராய்டு புற்றுநோய் 12. ‘மையலோமா’ எனும் ரத்தப்புற்றுநோய் 13. ‘மெனிஞ்சியோமா’ எனும் மூளைப்புற்றுநோய். உடல் எடையைக் குறைத்தால் இந்தப் புற்றுநோய்களுக்கான வாய்ப்புப் படிப்படியாகக் குறைந்துவிடுகிறது என்பதற்கும் ஆதாரம் உள்ளது. ஆகவே, ‘உடற்பருமனைத் தவிர்ப்போம்; புற்றுநோயைத் தள்ளிவைப்போம்’ என்று காரியத்தில் இறங்க வேண்டியது நமது கடமை.

சர்க்கரைக்குப் பதிலாக செயற்கை இனிப்பூட்டிகளை நாம் குடிக்கும் பானங்களிலும் பிற உணவுகளிலும் பயன்படுத்தும் வழக்கம் பல காலமாக இருக்கிறது. சாக்கரின், அஸ்பார்ட்டேம், சுக்ரலோஸ், அஸிசல்ஃபேம், ஸ்டீவியோசைட், லேவுலோஸ் ஆகியவை இப்போதுள்ள முக்கியமான செயற்கை இனிப்பூட்டிகள். இவை கடைகளில் பல பெயர்களில் விற்கப்படுகின்றன. இவற்றில் ‘சாக்கரின்’ என்பது நீண்ட காலப் பயன்பாட்டில் உள்ள ஒரு செயற்கை இனிப்பூட்டி. மருந்து, மாத்திரை, பானங்கள், கேக், பிஸ்கட் என பலவற்றில் இது கலக்கப்படுகிறது.

அஸ்பார்ட்டேம், சுக்ரலோஸ், லேவுலோஸ் ஆகியவை அதிகம் பயன்பாட்டில் உள்ள மற்ற செயற்கை இனிப்பூட்டிகள். இப்போது சில இனிப்பகங்களில் சுக்ரலோஸ் கொண்டு கேசரி, லட்டு போன்ற இனிப்புகளையும் தயாரிக்கிறார்கள். ‘சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது’என்று விளம்பரம் செய்து அவற்றை விற்கிறார்கள். இனிப்புச் சுவையைத் தேடுவோருக்கு இவை இன்பம் தருகின்றன. ஆனால் இவை நல்லதா, கெட்டதா என்று மருத்துவத்துறையில் இன்னும் பட்டிமன்றங்களே நடக்கின்றன. தெளிவான தீர்ப்புகள் இதுவரை இல்லை. ஆனால் இது உண்மை.

பலவித ஆராய்ச்சிகளில் ‘நீண்டகால சாக்கரின் பயன்பாட்டில் ‘சிறுநீர்ப்பைப் புற்றுநோய் ’வருகிறது’ என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. பிறகு, ‘அது எலிகளுக்குத்தான்; மனிதனுக்கு இல்லை’ என்று அறிக்கை விட்டார்கள். அஸ்பார்ட்டேம் மற்றும் சுக்ரலோஸை அளவுக்கு அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் ரத்தப் புற்றுநோய் வருகிறது என்றார்கள். பிறகு அதுவும் எலிகளுக்கும் சுண்டெலிகளுக்கும்தான் என்று மறுத்தார்கள். இங்கே ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அறிவியலில் ‘இன்று இல்லை’ என்று மறுத்த பல விஷயங்கள் பின்னாளில் ‘உண்மை’ என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.

ஆகவே, எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறது என்று சொல்ல முடியாததுபோல், எந்த செயற்கை இனிப்பூட்டியில் எந்த ஆபத்து வரும் என்று இப்போது தீர்க்கமாகச் சொல்ல முடியாது. அல்சர் மாத்திரையிலேயே புற்றுக்காரணி இருப்பதாகச் சந்தேகப்படும் காலம் இது. செயற்கை இனிப்பூட்டிகள் எம்மாத்திரம்?பல வெளிநாடுகளில் பனஞ்சர்க்கரை உள்ளிட்ட இயற்கை இனிப்பூட்டிகளைச் சேர்த்துக்கொள்ளும் பழக்கம் வீட்டில் மட்டுமல்லாமல் தங்கும் விடுதிகளிலும் உணவகங்களிலும் வழக்கத்தில் உள்ளது. அவர்கள் விழித்துக் கொண்டார்கள். நாம் எப்போது விழித்துக்கொள்ளப் போகிறோம்?

வம்சாவளி புற்றுநோயைப் பொறுத்த அளவில் நமக்குத் தேவை விழிப்புணர்வும் தடுப்பு ஏற்பாடுகளும்தான்!Post a Comment

Protected by WP Anti Spam