By 2 January 2020 0 Comments

Look Listen Learn Love Live!! (மகளிர் பக்கம்)

‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்ற பழமொழி பலரது வாழ்விலும் பிரதிபலித்திருக்கும். நல்லதோ கெட்டதோ சிறு வயதில் ஏற்படுத்தும் தாக்கம் அது கால காலத்திற்கும் பசு மரத்து ஆணிபோல் மனதில் பதிந்து விடுகிறது. இப்படி இருக்கும் போது குழந்தையில் இருந்தே நேர்மறையான எண்ணம் விதைப்பது அவசியம் என்கிறார் ஐஸ்வர்யா ராஜன் பாபு.

யார் இந்த ஐஸ்வர்யா..? சென்னையை பூர்வீகமாகக் கொண்டவரான இவர் தற்போது சிகாகோவில் வாழ்ந்து வருகிறார். அங்கு, பரபரப்பான ஐ.டி மேலாளராக இருந்தாலும் தன் ஆர்வத்தால், Hugopt என்ற பெயரில் குடும்பங்களின் புகைப்படக்கலைஞராக இருக்கிறார். அவ்வாறு பல குடும்பங்களை புகைப்படம் எடுக்கச் சென்றபோது அம்மாக்களின் அனுபவங்கள் பல இவருக்குக் கிடைத்துள்ளன. தனக்குக் கிடைத்த இந்த அனுபவத்தை மற்றவர்களுக்கும் பகிர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ‘தி மாமி சீரிஸ்’ என்ற ஃபேஸ்புக் பக்கம் ஒன்றை இயக்கி வருகிறார்.

அன்பும் தாய்மையும் ஆளும் அந்த பக்கத்தில் நேர்மறை சிந்தனைகள், நம்பிக்கை, எதையும் சாதிக்கலாம் என்ற வலிமை கொண்டிருக்கும் இதில் 40 நாடுகளைச் சேர்ந்த ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட அம்மாக்கள் உள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தாயின் அனுபவங்களால் இந்த பக்கம் நிறைகிறது. தொடங்கிய குறுகிய நாட்களிலேயே பல அம்மாக்கள் இணைய, அவர்களை எப்போதும் ஆக்டிவாக வைத்துக்கொள்ள அடிக்கடி அவர்களுக்கு ஏதேனும் போட்டிகள், கேள்விகளைத் தொடுப்பதாக இருக்கிறார் ஐஸ்வர்யா.

“தாய்மார்களுக்கான ஃபேஸ்புக் பக்கங்கள் பல இருக்கின்றன. ஆனால் அவை குறுகிய காலத்திற்குள் எதற்காகத் தொடங்கப்பட்டது என்று தெரியாதவாறு எல்லா செய்திகளும் பகிரப்படும். நான் அந்த விஷயத்தில் தெளிவாக இருந்தேன். அதேசமயம் இந்த பக்கத்தில் நேர்மறையான விஷயங்கள் மட்டுமே இருக்க வேண்டும். அவை மற்றவர்களுக்கு ஊக்குவிப்பாக இருக்க வேண்டும் என்ற கோணத்தில் கொண்டு சென்றேன். இன்று வரை இந்த பக்கம் அப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” என்கிறார்.

இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவங்களைக் கொடுக்கும் இந்த பக்கத்தில், சமீபத்தில் தாய்ப்பால் வாரத்திற்காகத் தாய்ப்பால் இயக்கம் (breastfeeding movement) என்ற பிரசாரத்தை நடத்தினார். இந்த பிரசாரத்தில் தாய்ப்பால் தானம், பொது வெளியில் தாய்ப்பாலூட்டுதல் எனத் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வுகள் அளிக்கப்பட்டது. வெறும் வார்த்தைகளால் சொல்வதைவிடப் புகைப்படங்களால் சொன்னால் இன்னும் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்பதால் இந்தியா முழுதும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள 40 பெண் புகைப்படக்கலைஞர்களை அணுகி இந்த பிரசாரம் குறித்துப் பேசியுள்ளார்.

அவர்களிடம் தாய்ப்பால் கொடுப்பது போன்ற புகைப்படங்கள் எடுத்து அனுப்பக் கோரியுள்ளார். அதில் 9 கலைஞர்கள் மட்டுமே அனுப்ப ஒப்புக் கொண்டுள்ளனர். பின் ஐஸ்வர்யாவே எதிர்பார்க்காத அளவில் பூஜை அறை, பேருந்து நிலையம், ரயில் நிலையம் என இந்தியாவில் தாய்ப்பால் கொடுக்க அச்சப்படும் இடங்களிலெல்லாம் தாய்ப்பால் ஊட்டுவது போன்ற புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளனர். “அந்தப் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்ததைப் பார்த்துவிட்டு மற்ற பெண்களும் தாங்களாகவே முன் வந்து தங்கள் ஆதரவைத் தந்தனர்.

சிலரின் கணவர்களே மனைவியை பொது இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலூட்டச் சொல்லி புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளனர்” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். “பலருக்கும் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்பது தெரியாது. இவ்வாறு தெரியாததால்தான் 99,499 குழந்தைகள் வயிற்றுப் போக்கு , நிமோனியா போன்ற காரணங்களால் இறக்கின்றனர். தாய்ப்பாலுக்கு 82,0000 குழந்தைகளைக் காப்பாற்றக்கூடிய ஆற்றல் உள்ளது என்கிறது யுனிசெஃப். இது எத்தனை பேருக்குத் தெரியும்.

இந்த விஷயம் எனக்கே குழந்தை பிறக்கும் வரை கூட தெரியாது. அது குறித்து தற்போது வருந்துவதில் பலனில்லை என்பதால்தான் மற்றவர்களுக்கு இதுபோன்ற விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இயக்கத்தைத் துவங்கினேன். தாய்ப்பால், விழிப்புணர்வு பிரசாரத்தால் பலரும் தங்கள் கருத்தை பரிமாற்றிக் கொண்டுள்ளனர். இதுதான் எங்களுடைய வெற்றி” என பெரும் மகிழ்ச்சி கொள்கிறார் ஐஸ்வர்யா. இதை வெறும் தகவல்களாக மட்டும் பதிவு செய்யாமல், தாய்ப்பால் கொடுப்பதால் ஒவ்வொரு தாயும் பெற்ற அனுபவத்தை உணர்வுப்பூர்வமாகப் பகிரச் சொல்லி அதன்மூலம் மற்ற அம்மாக்களுக்கு அந்த எண்ணத்தைத் தூண்ட வைக்கிறார்.

இவ்வாறாகத் தாய்ப்பாலின் மகத்துவத்தை எடுத்துரைத்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா, பிரசவித்த பின் ஏற்படும் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய நிலைக்குத் தள்ளப்படுபவர்களை மீட்கும் பணியினையும் செய்து வருகிறார். “குழந்தை பெற்ற பின் அந்த தாய் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு மாற்றம் பெறுகிறாள். நம்ம ஊரில் குழந்தை பிறந்ததும் அம்மா வீட்டில் சில மாதம் தங்கி இருந்து வருவது வழக்கம். இந்த வசதி இல்லாத பெண்கள் தாங்களாகவே குழந்தை மற்றும் வீட்டு வேலைகளை பார்த்துக் கொள்ளும் போது பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

குறிப்பாக வெளிநாட்டில் வாழும் பெண்கள். இதனால் அவர்களில் பெரும்பாலானோர் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய மனநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஏன் இப்படி நமக்குத் தோன்றுகிறது என்று கூட தெரியாமல் பலர் இருக்கின்றனர். இவர்களை மீட்கும் நோக்கில் அவர்களுக்கு நேர்மறையான விஷயங்கள் சொல்லி ஆறுதல் அளிக்கிறோம்” என்கிறார். Look, Listen, Learn, Love, Live என்ற ஐந்து ‘L’ கோட்பாடுகளுடன் தானும் வாழ்ந்து தன்னை பின்பற்றுபவர்களையும் இதைக் கடைபிடிக்குமாறு அன்பு கட்டளையிடும் ஐஸ்வர்யாவிற்கு இது போன்று உதவி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இன்று நேற்று தோன்றியதல்ல.

பத்தாவது, பன்னிரண்டாவது படிக்கும் காலத்தில் பார்வையற்றோர் விடுதிகளுக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு வாசிப்பாளராக இருந்துள்ளார்.
சிறு வயதில் கற்ற நல்ல விஷயங்கள் தான் இன்றளவும் தன்னை வழி நடத்துகிறது என்று கூறும் ஐஸ்வர்யாவின் நான்கு வயது மகள் சஹானாவும், அம்மாவிற்கு இப்போதே பல பெரிய வேலைகளை தன் கேள்வி மூலம் கொடுத்திருக்கிறார். “சஹானா ஒரு நாள் டிஸ்னி புத்தகத்தை புரட்டிவிட்டு, ‘இதில் ஏம்மா இந்தியா பிரின்சஸ் இல்லை. ஏழை மக்கள் வாழும் நாடாக இருப்பதினால் அழகான, வலுவான பெண்கள் இல்லையா’ என்று என் மகள் கேட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இதை பற்றிய எங்களது உரையாடலில், அன்னை இந்தியா என்று அன்பாக அழைக்கப்படும் நம் நாடு காலம் காலமாக அழகிலும், அறிவிலும், வீரத்திலும் சிறந்தவர்களை கொண்ட பெண்ணின் நிலம். புகழ்பெற்ற போர் குணம் கொண்ட அரசிகள் ஆண்ட மண். ஆறு உலக அழகி பட்டங்களை வென்றுள்ளனர் நம் பெண்கள். இது போன்ற பல சிறப்புகள் கொண்ட நம் நாட்டை பிரதிபலிக்கும் வகையில் டிஸ்னி சிண்டர்லாவாக இந்திய பெண் ஒருவர் வர வேண்டுமென்று டிஸ்னிக்கு கடிதம் எழுதினேன். இதை மையமாகக் கொண்டு ‘மாமி சீரிஸ்’ முகநூல் பக்கத்திலிருக்கும் தாய்மார்களுக்கு ஒரு போட்டி அறிவித்துஇருக்கிறேன்.

இந்தப் போட்டியில் சிறப்பான இளவரசி கதை கொடுப்பவரது கதை டிஸ்னிக்கு பரிந்துரைக்கப்படும்” என்றார். இந்த வேலைகளோடு தனது அடுத்த இலக்காக பல குழந்தைகளுக்கு கண்டுபிடிக்க முடியாத ஒன்றாக இருக்கும் ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் ஐஸ்வர்யா, “குழந்தைகளுக்கு இளைமையில் கற்பிப்பது முக்கியம். அந்த கற்பித்தல் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்” என்கிறார்.Post a Comment

Protected by WP Anti Spam