By 30 January 2020 0 Comments

மதுவால் ஏற்படும் பார்வையிழப்பு!! (மருத்துவம்)

கள்ளச்சாராயம் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்களில் மீத்தைல் ஆல்கஹால்(Methyl alcohol) அளவு அதிகம் இருந்திருக்கும். அது உடலுக்குள் சென்ற பின் நிகழும் வேதியியல் மாற்றத்தால் ஃபார்மால்டிஹைடு, ஃபார்மிக் ஆசிட் ஆகிய வேதிப்பொருட்கள் வெளியாகின்றன. இவை விழித்திரை மற்றும் கண் நரம்பினை நேரடியாகத் தாக்கி செல்களை மரணிக்க வைக்கின்றன. இதனால் இரண்டு மூன்று நாட்களிலேயே முழுமையான பார்வை இழப்பு ஏற்படுகிறது.

இத்தகைய நோயாளிகளுக்கு ஆரம்பத்தில் மயக்கம், தலைசுற்றல், சுயநினைவற்ற நிலை ஆகிய தொந்தரவுகளும் இருப்பதால் நோயாளி கண் விழிக்கும் முன்னரே கண் பார்வை முற்றிலுமாக மீட்கக் கூடிய வாய்ப்பை இழந்திருப்பார். இத்தகைய சம்பவங்களில் உயிரிழப்பும் அதிகளவில் ஏற்படும்.

இதனால்தான் மதுவிலக்குக்கு எனத் தனிப்பிரிவு அரசால் அமைக்கப்பட்டு கள்ளச் சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டன. மீத்தைல் ஆல்கஹாலால் ஏற்படும் உடனடி பார்வை மற்றும் உயிரிழப்பு முற்றிலும் தவிர்க்கப்பட்டு விட்டாலும் தற்போது சந்தையில் கிடைக்கும் மதுபானங்களினாலும் கண்பார்வைக் குறைபாடு ஏற்படவே செய்கிறது. இத்தகைய மதுபானங்களில் ஈத்தைல் ஆல்கஹால்(Ethyl alcohol) கலந்திருக்கிறது. இதைத் தொடர்ச்சியாக அருந்துபவர்கள் உணவு, உடல்நலம் போன்றவற்றில் அக்கறை காட்டுவதில்லை.

நரம்புகளின் செயல்பாட்டிற்குத் தேவையான வைட்டமின் பி மற்றும் சில முக்கிய புரதங்கள் கிடைக்காத காரணத்தால் கண் நரம்பின் செல்கள் தேய்மானம் அடைகின்றன. மெல்ல மெல்ல நடக்கும் இந்த நிகழ்வு ஒரு கட்டத்தில் முழுமையான பார்வை இழப்புக்குப் பாதை அமைக்கிறது. இத்துடன் புகைப்பழக்கமும் சேர்ந்து கொண்டால் நரம்புத் தேய்மானம் வெகு வேகமாக நிகழ்ந்துவிடும். கண் பார்வையில் குறைவு ஏற்படுவதை நோயாளி உணரும் முன்னரே நிலைமை ‘டூ லேட்’ ஆகிவிடும்.

மதுப்பழக்கம் மட்டுமல்ல, மலேரியாவுக்குப் பரிந்துரைக்கப்படும் குயினின்(Quinine) வகை மருந்துகள், கேன்சருக்கு அளிக்கப்படும் சில மருந்துகள் மற்றும் காசநோய்க்கு அளிக்கப்படும் கூட்டு சிகிச்சை மருந்துகளாலும் கண்பார்வை பாதிக்கப்படலாம். இத்தகைய மருந்துகளை எடுத்துக் கொள்வோர் அவ்வப்போது கண் பரிசோதனையும் செய்வது அவசியம். பாதரசம் ஈயம், தாலியம் போன்ற அடர் உலோகங்களாலும் கண் நரம்பு பாதிக்கப் படலாம். இத்தகைய உலோகங்களை பயன்படுத்தும் ஆலை ஊழியர்களுக்கு இந்தப் பிரச்சனை நேரலாம்.

புகை, மது, மருந்துகள் நேரடியாக கண் நரம்பைப் பாதிக்கும் எமன்கள் என்றால் மூளை சம்பந்தப்பட்ட வேறு சில பிரச்சனைகளால் கண் நரம்பு மறைமுகமாகப் பாதிக்கப்படலாம். மூளைப்பகுதியில் புற்றுநோய், ரத்தக் கசிவுகள், மூளைக்காய்ச்சல் இவற்றால் தலைக்குள் அழுத்தம் அதிகரிக்க நேரிடும். அதுமட்டுமின்றி பிறவியிலேயே ஏற்படும் கபால எலும்பின் வளர்ச்சிக் குறைபாடு, உயர் ரத்த அழுத்தம், கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம், இவற்றாலும் கபால எலும்புக்குள் அழுத்தம் அதிகரிக்கும்.

இந்த அதிக அழுத்தத்தால் முதலில் தலைவலி, வாந்தி, குழந்தையாக இருப்பின் வளர்ச்சிக் குறைபாடு போன்ற அறிகுறிகள் தோன்றும். நாட்கள் செல்லச்செல்ல உயர் அழுத்தம் கண்களின் நரம்பைப் பாதித்து அதில் தேய்மானத்தை உண்டாக்கி விடுகிறது. இத்தகைய நிலையில் ஒரு நல்ல விஷயம் இருக்கிறது. அது என்னவென்றால் தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகளுக்காக மருத்துவமனையை நாடி பரிசோதிக்கையில் கண்களின் நரம்பு வீங்கி இருப்பதை நேரடியாகவே கண்டறிந்துவிடலாம். அதன் காரணியைத் தேடிக் கண்டுபிடித்து மூல நோய்க்கான சிகிச்சையை விரைவில் துவங்கி விடலாம்.

மூளையின் முக்கியமான ஒரு பகுதியான பிட்யூட்டரி சுரப்பி கண் நரம்புகள் சேரும் இடத்திற்கு வெகு அருகில் உள்ளதால் அதில் ஏற்படும் மிகச் சிறிய கட்டிகள் கூட கண் நரம்பின் மேல் உடனடியாக அழுத்தம் கொடுத்து பார்வை வட்டத்தில் சில குறைபாடுகளை உண்டு செய்யும் (visual field defects). வெளியிலிருந்து ஏற்படும் அழுத்தம், மருந்துகள் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பு இவற்றுடன் காய்ச்சல், எச்ஐவி போன்ற வியாதிகளாலும் கண் நரம்பு பாதிக்கப்படலாம். இத்தனை காரணங்கள் இருந்தாலும் பெரும்பாலான நோயாளிகளைப் பொறுத்த வரை கண் நரம்பில் ஏற்படும் குறைபாடுகளுக்கு எந்தக் காரணமும் கண்டுபிடிக்க முடிவதில்லை.

இத்தகைய மூளை நரம்பியல் பிரச்னைகளில் நோயாளிக்கு ஏற்படும் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் சற்று மாறுபடும். சிலர் கண்களில் பார்வை குறைகிறது என்று கூறுவார்கள். சிலர் இரவு நேரப் பார்வையில் சிக்கல் இருப்பதாகக் கூறுவார்கள். மிக மிக அரிதாக சிலர் வண்ணங்களை உணர்வதில் குறை இருப்பதையும் கண்டுபிடித்திருப்பார்கள். இவை எதையும் உணராமல் இருக்கும் நோயாளிகளும் உண்டு. பெரும்பான்மையான நேரங்களில் வழக்கமான பரிசோதனையின் போதே இப்படிப்பட்ட குறைபாடுகளைக் கண்டுபிடிக்க நேர்கிறது.

ஒருவகையான மனச்சிதைவு நோயில் திடீரென்று கண்ணைக் கட்டியது போன்ற உணர்வு ஏற்படும். இரண்டு கண்களிலும் எந்த பாதிப்பும் இருக்காது. மனச்சிதைவு பிரச்சனையை சரி செய்தால் பார்வை விரைவாகத் திரும்பிவிடும். இதைப் போன்றே கண்கள் சீராக இருக்கும் நிலையில் திடீரென பார்வை பறிபோகும் மற்றொரு சூழ்நிலையும் உண்டு. பின் மூளையில் அமைந்திருக்கும் பார்வைக்கான பகுதியில் ரத்த ஓட்டம் தடைபடும் பொழுது இது நிகழும். விரைந்து சிகிச்சை அளித்தால் ஓரளவுக்கேனும் பார்வையை திரும்பப் பெற்று விட முடியும்.

சில ஆண்டுகளுக்கு முன் சந்தித்த நோயாளி ஒருவர் ஒரு வருடமாகத் தலைவலியால் அவதிப்பட்டிருந்திருக்கிறார். மருத்துவரை நாடாமல் சுய மருத்துவம் பார்த்து வந்திருக்கிறார். திடீரென்று பார்வைக் குறைபாடு ஏற்பட்டவுடன் கண் பரிசோதனைக்காக வந்தவரின் பார்வை வட்டத்தில் பாதிப் பகுதியில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் மூளையின் ஒரு பகுதியில் கட்டி இருப்பது தெரிந்தது. விரைந்து அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தாலும் அதற்குள் பக்கவாதம், பேச்சுத்திறன் குறைபாடு என்று மிகவும் அல்லல்பட்ட பின்னரே ஓரளவுக்கு மீண்டு வந்தார்.

மற்றோர் நபர்… கைத்தொழில் ஒன்றில் திறமை வாய்ந்தவர். Social drinking ஆக ஆரம்பித்த மதுப்பழக்கம் பணியிடத்திலும் ஒழித்து வைத்து மது அருந்தும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. கைகால் நடுக்கம், கவனக் குறைவு இவற்றைத் தன் அனுபவத்தால் சமாளித்து வந்தவர், திடீரென்று பார்வை இழப்பு ஏற்பட்டவுடன் நிலைகுலைந்து போனார். வேலையை இழக்கும் சூழலும் ஏற்பட்டது. பல மாதங்களாகத் தொடர்ந்த தீவிர சிகிச்சைக்குப்பின் நல்ல வெளிச்சத்தில் மட்டும் வேலை செய்யும் அளவுக்குப் பார்வையை ஓரளவுக்குத் திரும்பப் பெற்றார். இத்தகைய மோசமான சூழல்களை தவிர்க்க விழிப்புணர்வு மிகவும் அவசியம் அல்லவா?Post a Comment

Protected by WP Anti Spam