கடந்த அரசின் தவறான நிதி முகாமைத்துவம்!! (கட்டுரை)

Read Time:11 Minute, 21 Second

2019நவம்பர் 20ஆம் திகதி வரை நாட்டை ஆட்சி செய்த அரசாங்கத்தின் தூரநோக்கற்றதும் வினைத்திறனற்றதுமான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக முழு பொருளாதாரமும் செயலிழந்திருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விவசாயம், இலவச சுகாதார சேவை, நிர்மாணக் கைத்தொழில், உணவுப் பொருட்கள் விநியோகம், தேயிலைக் கைத்தொழில், அரிசி உற்பத்தி போன்ற முக்கிய துறைகளின் வீழ்ச்சிக்கு இது காரணமாகியுள்ளது.

பொருளாதாரம் செயலிழந்திருப்பதற்கு அடிப்படைக் காரணம் சேவைகளுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய கொடுப்பனவுகள் செலுத்தப்படாதிருந்தமையாகும். கடந்த அரசாங்கம் 2019ஆம் ஆண்டிற்காக அனுமதிக்கப்பட்டிருந்த வரவு -செலவு மதிப்பீடுகளில் உள்ளடங்கியிருந்த சகல நிதி ஒதுக்கீடுகளையும் கடந்த நவம்பர் மாதம் ஆகும் போது செலவு செய்திருந்தது.

இதனால் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அந்த அரசினால் மேற்கொள்ளப்பட்டிருந்த பல செலவீனங்களுக்கு நிதி வழங்க திறைசேரியினால் முடியவில்லை.

2019ஆம் ஆண்டிற்கு அனுமதிக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் வருமானம் 2,400பில்லியன் ரூபாவாகும். அதில் டிசம்பர் மாதம் ஆகும் போது கிடைக்கப் பெற்றிருந்த நிதி 1,800பில்லியன் ரூபாவைத் தாண்டவில்லை. இதனால் அரச வருமானம் ஆரம்ப மதிப்பீட்டை விட சுமார் 600பில்லியன் ரூபாவால் குறைந்துள்ளது. இதனால் வருட இறுதியாகும் போது இரண்டு மாதங்களுக்கும் அதிகமான காலம் செய்யப்பட வேண்டிய பெரும்பாலான கொடுப்பனவுகள் செய்யப்பட்டிருக்கவில்லையென அரசாங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.

2019நவம்பர் 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டிருந்த செலவுகளில் தீர்க்கப்படாமலுள்ள செலவு 1,188மில்லியன் ரூபாவாகும். வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் வழங்கல்களுக்காக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட வேண்டிய நிதியில் 25,696மில்லியன் ரூபா செலுத்தப்பட்டிருக்கவில்லை. மூத்த பிரஜைகளுக்கான வட்டி மானியங்களுக்காக நிதி அமைச்சு வங்கிகளுக்கு செலுத்த வேண்டியுள்ள தொகை 45,856மில்லியன் ரூபாவாகும். உர மானியத்திற்காக உரங்களை வழங்குபவர்களுக்கு 23,950மில்லியன் ரூபா வழங்கப்பட வேண்டியுள்ளது. நெடுஞ்சாலைகள் நிர்மாணப் பணிகளுக்காக செலுத்தப்படாதுள்ள தொகை 18,449மில்லியன் ரூபாவாகும்.

கம்பரெலிய கருத் திட்டங்கள், வட மாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்பவற்றிற்காக செலுத்தப்படாமல் உள்ள நிலுவைப் பணம் 3,126மில்லியன் ரூபாவாகும். நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய வேலைத் திட்டங்களுக்கு செலுத்தப்பட வேண்டியுள்ள தொகை 6,558மில்லியன் ரூபாவாகும். இவை செலுத்தப்பட வேண்டியுள்ள நிலுவைத் தொகை தலைப்புகளில் ஒரு சில மட்டுமேயாகும்.

செலுத்தப்பட வேண்டிய தொகை நிலுவையாக உள்ள காரணத்தினால் பாரிய நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டிருப்பதாக அரசாங்கம் சுட்டிக் காட்டியுள்ளது. உரக் கூட்டுத்தாபனம், உர இறக்குமதி மற்றும் விநியோகத்திலிருந்து விலகிக் கொண்டுள்ளது. அரச உரக் கம்பனிகள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் நெற் செய்கைக்கான உரத்தை வழங்கிய போதும், ஏனைய பயிர்களுக்கான உர விநியோகம் சீர்குலைந்துள்ளது. மொத்த விவசாயத்துறையும் பின்னடையக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

புற்றுநோய் வைத்தியசாலை உட்பட அனைத்து வைத்தியசாலைகளுக்கும் உரிய முறையில் மருந்துப் பொருட்களை வழங்க முடியாமல் உள்ள காரணத்தினால், இலவச சுகாதார சேவையும் சீர்குலைந்துள்ளது. உள்நாட்டு கட்டட நிர்மாணத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. சிறிய மற்றும் நடுத்தரளவிலான சுமார் 700நெல் ஆலைகளில் அரைவாசிக்கும் அதிகமானவை மூடப்பட்டுள்ளன. 400க்கும் அதிகமான தேயிலைத் தொழிற்சாலைகள் செயலிழந்து காணப்படுகின்றன.

அரச வங்கி முறைமையும் வினைத்திறனற்ற முகாமைத்துவத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இலங்கை வங்கி, மக்கள் வங்கி ஆகியவற்றின் பணிப்பாளர் சபை மற்றும் நிறைவேற்று அதிகாரிகளினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகளை கருத்திற் கொள்ளாமல் பிணைகள் இன்றி கடன்கள் வழங்கப்பட்டிருப்பதனால், அக்கடன்களை அறவிட முடியாத நிலை உள்ளது. அது 72பில்லியன் ரூபா அல்லது 7,200கோடிகளாகும். அவை விசேட நபர்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் என தெரியவந்துள்ளது.

உரிய அனுமதியோ தேவையான நிதி ஏற்பாடுகளோ இன்றி விதிமுறைகளுக்கு புறம்பாக கடந்த அரசாங்கம் ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்திருப்பதுவும் மற்றுமொரு பிரச்சினையாகும். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு இவ்வாறு சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 167ஆகும். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தற்போதைய நட்டம் 10,000மில்லியன் ரூபாவாகும். இவ்வாறான பொறுப்பற்ற ஆட்சேர்ப்புகள் மற்றும் செயலாற்றும் திறனின்மையை நீக்கப்படாமல் விலைச் சூத்திரத்தை நடைமுறைப்படுத்தி மக்கள் மீது சுமையை ஏற்படுத்துவது நியாயமானதல்ல என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. தொல்பொருள் திணைக்களத்திற்கும் கலாசார நிதியத்திற்கும் 1,430பேர் மேற்கூறியவாறு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.

கலாசார நிதியத்தின் சட்டத் திட்டங்களுக்கு ஏற்ப அதன் நிதி கலாசார மற்றும் தொல்பொருள் பராமரிப்புகளுக்கு மாத்திரமே பயன்படுத்த முடியும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இந்தப் பிரச்சினையிலிருந்து பொருளாதாரத்தை மீட்பதற்கான உறுதிப்பாட்டுடன் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. வரவு-செலவுத் திட்ட நிலுவையை 2025ஆம் ஆண்டாகும் போது 04%வீதமாகவும் தற்போது 80%வீதமாகவுள்ள அரச கடனை 70%வீதமாக குறைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவது அரசின் பொறுப்பாகுமென்பதால் மிக விரைவில் அவர்களுக்கு தொழில்களை பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது. உயர்கல்வி வாய்ப்புக்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

தேயிலை, கறுவா, மிளகு மற்றும் ஏனைய பெருந்தோட்ட பயிர்ச் செய்கையை அபிவிருத்தி செய்து ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன. தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000ரூபா சம்பளம் மார்ச் மாதம் 01ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளது. கரும்புச் செய்கையை அபிவிருத்தி செய்து சீனி மற்றும் எதனோல் உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மரமுந்திரிகை பயிர்ச் செய்கையை அபிவிருத்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறுவோருக்கு 10அத்தியாவசிய பொருட்களை நிவாரண அடிப்படையில் பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி மார்ச் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மூடி விடுவதற்கு அல்லது தனியார்மயப்படுத்துவதற்காக தெரிவு செய்யப்பட்டிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவை முழு அபிவிருத்திக்கும் பங்களிக்கக் கூடிய வகையிலான நிறுவனமாக மாற்றப்படவுள்ளது. தேசிய விமான சேவையினால் மேற்கொள்ளக் கூடிய பணி கொரோனா தொற்று ஆபத்திற்கு முகங்கொடுத்துள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வர மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் தெளிவாகியுள்ளது.

2019, 2020பெரும்போக அறுவடை தற்போது ஆரம்பித்துள்ளது.

நெல்லுக்கு கிலோ ஒன்றிற்கு 50ரூபா குறைந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளை வலுவூட்டி மொத்த விவசாய முறையையும் முன்னேற்றுவதற்கு முறையான திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெறித்தனமாக ஆட்டைய போட்ட உலகின் 10 மனிதர்கள்!! (வீடியோ)
Next post பல ஆண்டுகளாக மர்மம் விலகாத 10 தொல்லியல் கண்டுபிடிப்புகள்! (வீடியோ)