வாழ்க்கையில் கிடைக்கும் அனுபவமே சிறந்த கதை!! (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 21 Second

ஒவ்வொரு ஊராக சென்று, தான் படித்த, கேட்ட கதைகளோடு தனது பயணத்தில் ஏற்பட்ட சுவாரசிய அனுபவங்களையும் கதைகளாக பகிர்கிறார். இதுவும் ஒரு சுவாரசியம் தான். இவர் கதை சொல்ற விதமே வேறு. “சொந்த ஊர் ஸ்ரீ வில்லிபுத்தூர். சிறு வயதிலிருந்தே பெற்றோரை பிரிந்து வளர்ந்தேன். பொறியியல் படித்துவிட்டு, பொம்மலாட்டம், தியேட்டர் ஆர்டிஸ்ட் என ஒரு சில கலைகளை கற்றுக்கொண்டேன். என்னுடைய வாழ்க்கை குழந்தைகள், பயணம், இயற்கை என வித்தியாசமாக போய் கொண்டு இருக்கிறது. 19 வயதில் சில நண்பர்களுடன் சேர்ந்து ‘அறம்’ என்கிற அமைப்பை தொடங்கினேன். இந்த அமைப்பின் மூலம் கிராமம் கிராமமாக சென்று மாணவ, மாணவிகளுக்கு டியூசன் நடத்தி வந்தோம். கிராமத்தில் எங்க அமைப்பின் கல்வி மூலம் 10ம் வகுப்பு கூட தாண்டாத மாணவி ஒருவர் கல்லூரி வரை சென்றாள். எங்களுக்கான பெரிய வெற்றி இதுதான். இந்த வெற்றியை தொடர்ந்து நிறைய வேலைகள் பார்த்து வந்தோம். பின்னர் நான் தனிப்பட்ட முறையில் கதை சொல்ல தொடங்கினேன். ஊர், ஊராக சென்று கதை சொல்ல முடிவு செய்து தற்போது வரை அதை செய்து வருகிறேன்” என்று கூறும் குமார் ஷா, தான் பயணித்த அனுபவங்களை பகிர்ந்தார்.

“இந்தியாவை மூன்று முறை சுற்றி வந்திருக்கிறேன். முதல் பயணம் ரூ.500 கொண்டு பேருந்தில். இரண்டாவது பயணம் ரயிலில். மூன்றாவது பயணம் சைக்கிள். இந்த மூன்றும் ஒவ்வொரு அனுபவங்களை கொடுத்தது. சைக்கிளில் செல்ல யோசித்த போது நண்பன் உதவியால் ஒரு சைக்கிள் வாங்கி அதற்கு கருப்பி என்று பெயர் வைத்தேன். நேரத்திற்கு சாப்பாடு, தூக்கம் என ஏதும் இருக்காது. ஆனால், அதில் ஒரு சுகம் இருந்ததை ரசித்து பயணித்தேன். இது ரொம்ப பிடித்திருந்தது” என்றார். குமார் ஷாவின், இந்த பயணம், அவர் மேற்கொள்ளும் வேலைகளை பார்க்கும் நண்பர்கள் மற்றும் அந்த பகுதியில் வசிப்பவர்கள் தங்க இடமும், உணவும் கொடுத்து பார்த்துக் கொள்கிறார்கள். குழந்தைகள் முன் பசியெல்லாம் பத்தாய் பறந்து போகும். அவர்களின் சிரிப்பு சத்தம்
மட்டுமே இவரது ஆற்றல்.

“அடுத்த பயணம் நடந்து சென்று ஊர் சுற்றுவது தான். டெல்லியிலிருந்து நடக்க தொடங்கினேன். நான் நடந்து சென்றது மட்டும் 8 மாதம் 420 நாட்கள் கடந்தது. நடந்து செல்லும்போது வரும் கிராமங்களில் தங்கி மக்களோடு மக்களாக, அவர்களுக்கு கதை சொல்வதும், நான் கதை கேட்பதும் செய்து வந்தேன். இப்படியே நிறைய கிராமங்கள் கடந்து நிறைய அனுபவங்கள் கிடைத்தது. என்னுடைய ஒவ்வொரு பயணத்திலும், புதுப்புது மக்கள், குழந்தைகள், பறவைகள், விலங்குகள், இயற்கை என பல விதமான அனுபவங்கள் கிடைத்து கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள முக்கால்வாசி நிலப்பரப்புகளைக் கடந்துவிட்டேன்” என்கிறார். தற்போதுள்ள குழந்தைகள் பாரம்பரிய விளையாட்டுகளை மறந்து விட்டனர். நகரத்தில் இருக்கும் குழந்தைகளுக்கும், கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கும் பல்வேறு வித்தியாசங்களை பார்க்கலாம். குழந்தைகளுக்கு அவர்களது பிரச்சனைகளை புரிய வைத்து பல குழந்தைகளிடம் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.

‘‘எவ்வளவு நாள் தான் குழந்தைகள் கதை கேட்டுக்கிட்டு இருப்பாங்க, அவங்களையும் கதை சொல்ல வைக்கலாமே என்று யோசித்தேன். நம் உலகத்தில் திறமைகள் உள்ள குழந்தைளுக்கு வாய்ப்புகள் இல்லை. வாய்ப்பு இருக்கும் குழந்தைகளுக்கு இடமும் திறமையும் இல்லை. இந்த முரணை உடைக்க வேண்டும். என்னால் முடிந்த வரை குழந்தைகளை சந்தோஷமா வைத்துக் கொள்வேன். அவங்க கிட்ட கதை கேட்பது, கதை சொல்வதும், அதைவிட எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாக இருப்பதுதான் முக்கியம். பெருசா விழிப்புணர்வு எல்லாம் ஏற்படுத்துவது என் எண்ணமில்லை” என்று கூறும் குமார் ஷா, தற்போது பல ஊர்கள், நாடுகள் சென்று குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வருகிறார். மற்றவர்களையும் சந்தோஷப்படுத்தி, தானும் குழந்ைதகளுடன் சந்தோஷமாக பயணித்து வரும் குமார் ஷா, “குழந்தைகளின் சந்தோஷமே என்னுடைய சந்தோஷம். வாழ்க்கை என்பது ஒன்று தான். இருக்கிற இந்த ஒரு பயணத்தில் நாமும் சந்தோஷமாக இருக்க வேண்டும், மற்றவர்களையும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். நான் மேஜிக்கை நம்புகிறவன். எப்போது, வேண்டுமானாலும் நமது வாழ்க்கையில் மேஜிக் நடக்கலாம்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சைப்பட்டாணி!! (மருத்துவம்)
Next post கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)