By 15 February 2020 0 Comments

அரசாங்கத்தின் நிலைப்பாடென்ன? (கட்டுரை)

சிங்களப் பெரும்பான்மையினரின் வாக்குகளாலேயே, இந்த நாட்டின் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதாக, அரசாங்கம் அடிக்கடி சொல்லி வருகின்ற போதிலும், முஸ்லிம்களும் தமிழர்களும், தமது அரசாங்கத்தோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற பொருள்பட, ஜனாதிபதியும் பிரதமரும் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

கடந்த தேர்தலில், முஸ்லிம் வாக்குகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று, பொதுஜன பெரமுன கருதியிருக்கலாம் என்று கருதுவதற்கு இடமுண்டு. இருந்தாலும் கூட, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், நிலைமையில் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.

வடக்கு, கிழக்கு உட்பட, நாட்டின் எல்லாப் பாகங்களிலும் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற முனைப்பில், மொட்டு அணி முழுமூச்சாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

சமகாலத்தில், சில சிங்கள அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் மட்டுமன்றி, வழக்கம்போல பௌத்த துறவிகளை மய்யமாகக் கொண்டியங்கும் இனவாத அமைப்புகளும் இன,மத வெறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதையும் காண முடிகின்றது.

இது, ஆட்சியாளர்கள் சிறுபான்மையினர் தொடர்பில் வெளிப்படுத்தி வருகின்ற நிலைப்பாட்டுக்கு, முரணாக அமைந்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது.

அதாவது, ஆட்சியாளர்கள் முஸ்லிம்களையும் தமிழர்களையும் நோக்கி நேசக்கரம் நீட்டிக் கொண்டிருக்கையில், சிறுபான்மைச் சமூகங்களைப் புறந்தள்ளி விட்டு, சிங்களக் கடும்போக்குச் சக்திகள் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று நினைக்கின்றதா என்றதொரு, பலமான சந்தேகம் ஏற்படத் தொடங்கி இருக்கின்றது.

கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகவும், மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராகவும் வந்தால், முஸ்லிம்களுக்குப் பெரும் ஆபத்து ஏற்படும் என்ற பிரசாரங்கள், கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் முன்னெடுக்கப்பட்டன.

இந்தப் பின்னணியில், பெரும்பாலான முஸ்லிம்கள், தமிழர்கள், கோட்டாபயவுக்கு வாக்களிக்காத நிலையிலும், அவர் சிங்களப் பெரும்பான்மை வாக்குகளின் மூலம், வெற்றிவாகை சூடினார். இந்த நிலைமையானது, குறிப்பாக முஸ்லிம்களை ஒருகணம் தூக்கிவாரிப் போட்டது.

தேர்தல் மேடைகளில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை போல், ஏதாவது நடந்து விடுமோ என்று, முஸ்லிம்கள் பயம் கொண்டிருந்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

இருப்பினும், ஒரு சில சம்பவங்கள், கருத்துகளைத் தவிர்த்துப் பார்த்தால், அரசாங்கத்தின் மேல்மட்டமோ, அரச இயந்திரமோ குறிப்பாக, முஸ்லிம் சமூகத்தை மட்டும் இலக்காக வைத்து, வெளிப்படையாகப் பாரிய நெருக்குவாரங்களை மேற்கொள்ளவில்லை.

அத்துடன், செயற்பாட்டு அரசியலிலும், அரச பொறிமுறையை வினைத்திறனாக மாற்றுதல் உள்ளிட்ட விடயங்களிலும் ஜனாதிபதி, பிரதமர் எடுத்து வருகின்ற நடவடிக்கைகள், பல முஸ்லிம் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன.

‘நாம் நினைத்தது போல், அவ்வளவு மோசம் இல்லை; பரவாயில்லை’ என்ற நிலைப்பாட்டுக்குக் கணிசமான முஸ்லிம்கள் வந்திருக்கின்றனர் எனலாம்.

இந்நிலையில், முஸ்லிம்களுக்குப் பிரத்தியேகமானதான தனியார் சட்டத்தைத் திருத்தி, நாட்டில் ஒரேயொரு பொதுச் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று, கடும்போக்காளர்கள் தொடர்ச்சியாகக் கோரி வருகின்றனர்.

மாவட்ட ரீதியான, பிரதிநிதித்துவக் கணிப்பீட்டுக்கு அடிப்படையான வெட்டுப்புள்ளியை, ஐந்து சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக, அதிகரிக்க வேண்டுமென்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தனிநபர் பிரேரணைகளும் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதேநேரம், “பௌத்த சிங்கள மக்கள், தனிச் சிங்கள அரச தலைவரைத் தெரிவு செய்ததைப் போன்று, தனிச் சிங்கள அரசாங்கத்தைத் தோற்றுவிக்க வேண்டும்” என்று, பொதுபல சேனா என்ற அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களும் தமிழர்களும் இல்லாத ஓர் ஆட்சி நிறுவப்பட்டால், தமது விருப்பப்படி ‘ஆடலாம்’ என்று, இனவாத சக்திகள் மனக் கணக்குப் போடுவது இதன்மூலம் புலனாகின்றது.

இவ்வாறு, சிறுபான்மை மக்களை அதிலும், விசேடமாக முஸ்லிம்களைப் புறமொதுக்கும் விதத்திலான சில நடவடிக்கைகளை, சிங்கள அரசியல்வாதிகள் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதுடன், கடும்போக்குத் துறவிகளும், இரட்டை அர்த்தம் நிறைந்த இனவாதக் கருத்துகளை வௌிப்படுத்துவதை, இன்னும் கைவிடவில்லை என்றே கூற வேண்டியுள்ளது.

ஆனால், பொதுத் தேர்தலில் முஸ்லிம் வாக்குகளையும் வேண்டி நிற்கின்ற இந்த ஆட்சியாளர்கள், முஸ்லிம்களையும் அரவணைத்துச் செயற்பட நினைக்கும் போது, இவ்வாறு வெளிப்படுத்தப்படும் கடும்போக்குக் கருத்துகள் தொடர்பில், அரசாங்கத்தின் கொள்கையும் நிலைப்பாடும் என்ன என்பதை, இதுவரை சொல்லவில்லை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம், தமிழ் பிரதேசங்களில், சொற்ப அளவான வாக்குகளே, மொட்டுச் சின்ன வேட்பாளருக்குக் கிடைத்தன. எவ்வாறிருப்பினும், தேசிய ரீதியிலான வாக்குகளின் அடிப்படையில், கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றி பெற்றுவிட்டார்.

ஆனால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமது வெற்றியைப் பொதுஜன பெரமுன உறுதிப்படுத்த வேண்டி இருக்கின்றது.

ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட, அந்தக் கட்சிக்குக் கிடைக்காமல் போகுமாயின், அந்த மாவட்டத்தில் அரசாங்கத்தின் செல்வாக்கும் பலமும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும்.

அத்துடன், இந்த மாவட்டங்களில், புதிய அரசாங்கத்துக்கு மக்கள் ஆதரவு இல்லை என்ற தோற்றப்பாட்டையும் சர்வதேசத்துக்கு ஏற்படுத்தலாம். ஓர் அரசாங்கம் என்ற வகையில், இது மிகப் பெரும் தர்மசங்கடமும் கைச்சேதமுமாக அமையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எனவேதான், பொதுஜன பெரமுன கட்சியானது, தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில், வெற்றி பெறுவதற்கான உபாயங்களை வகுத்து வருகின்றது. பிரதான, முஸ்லிம் கட்சிகளை இணைத்துக் கொள்ளாமலேயே, மொட்டு சார்பான முஸ்லிம் கட்சிகள் இரண்டு, அரசியல் முகவர்களைப் பயன்படுத்தியும் புதுமுகங்களைக் களமிறக்கியும் கணிசமான ஆசனங்களைப் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில், ராஜபக்‌ஷ ஆட்சி தற்போது இருக்கின்றது.

இந்தப் பின்னணியில், முஸ்லிம்களின் வாக்குகளைக் கவர்வதற்கான வேட்பாளர்கள் யார் என்று, மொட்டு அணி ஆராய்ந்து வருகின்றது.

பிரதான முஸ்லிம் கட்சிகளில் இருக்கும் எம்.பிகளைத் தனியாகப் பிரித்தெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகச் சொல்லப்படுகின்ற அதேநேரத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும், தமக்கு நம்பிக்கையான முஸ்லிம் வேட்பாளரைக் களமிறக்க வியூகங்களை வகுத்து வருகின்றது.
நிலைமை இவ்வாறிருக்கையில், முஸ்லிம்களுக்கு எதிரான நகர்வுகளை, சிங்கள அரசியல்வாதிகள் மேற்கொள்வதும், முஸ்லிம்களின் இன, மத அடையாளங்களைக் கேள்விக்குட்படுத்தும் முன்னெடுப்புகளைக் கண்டும்காணாதது போல் இருப்பதும், தனிச்சிங்கள ஆட்சி வேண்டுமெனக் கூறுவோரின் வாய்க்குப் பூட்டுப்போடாமல், ஆட்சியாளர்கள் மெத்தனமாகச் செயற்படுவதும், சிங்கள மக்களின் வாக்குகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத்துக்காக இருக்கலாம். ஆனால், இந்தப் போக்கு அவ்வளவு நல்லதல்ல.

இந்த அரசாங்கம், நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வரை, ஒரு மென்போக்கையே கடைப்பிடிக்கும். தேர்தல் முடிவுகளின் பின்னரே, தனது உண்மை முகத்தைக் காட்டத் தொடங்கும் என்றும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள், தமக்கு நெருக்கமானவர்களிடம் கூறிய விடயங்கள், மக்களது காதுகளுக்கும் எட்டியுள்ளன.

இந்நிலையில், முஸ்லிம் விரோத சக்திகளை அப்படியே விடுவது, இந்த எதிர்வுகூறலை, முஸ்லிம் சமூகம் நம்பும் நிலைக்கு இட்டுச் செல்லலாம் என்பதை, ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டும்.

அரசாங்கம் முஸ்லிம்களையும் தமிழர்களையும் இணைத்துச் செயற்பட விரும்புகின்ற ஒரு சூழலில், இவ்வாறான பேர்வழிகள், பகைமைத் தீமூட்ட நினைப்பதன் மர்மம் என்ன என்ற கேள்வி எழுகின்றது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

ஒன்று, முஸ்லிம் மக்களுடன் அரசாங்கம், ஒன்றுபட்டுப் பயணித்து விடக் கூடாது; முஸ்லிம் சமூகத்தின் விடயத்தில், இந்த ஆட்சியாளர்களும் ஒரு மென்போக்கைக் கடைப்பிடிக்கும் நிலை உருவாகி விடக் கூடாது என்று, மட்டரகமான சிங்கள அரசியல்வாதிகளும் கடும்போக்குச் சக்திகளும் நினைக்கின்றனவா?

இரண்டு, சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளை, இலக்கு வைத்துள்ள ஆளும் கட்சியோ அல்லது, ஆட்சிக் கனவோடு இருக்கின்ற ஏனைய பெரும்பான்மைக் கட்சிகளோ, கடும்போக்காகச் சிந்திக்கும் சிங்கள மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி வைத்திருக்க, இவ்வாறான அரசியல்வாதிகளையும் துறவிகளையும் ஏவி விடுகின்றனவா?

மூன்று, வெளித்தோற்றத்தில் முஸ்லிம்கள், தமிழர்களின் வாக்குகளைப் பொதுஜன பெரமுன வேண்டிநிற்கின்ற போதும், நிஜத்தில் தனிச்சிங்கள ஆட்சியை உருவாக்கும் உள்நோக்கிலேயே செயற்படுகின்றதா, அதற்கான ஆசிர்வாதம் அளிக்கப்படுகின்றதா?

நான்கு, கடும்போக்காளர்களுக்கு எதிராக, அரசாங்கம் கொள்கை விளக்கமளிப்பது, சிங்கள மக்களின் வாக்குகளைப் பாதிக்கும் என்று, ஆட்சியாளர்களாக மௌனமாக இருக்கின்றார்களா? தெரியவில்லை!

ஆனால், காரணம் இவற்றுள் ஏதேனும் ஒன்றாகவே இருக்க வேண்டும்.

இந்த நாட்டை இன்னும், 10, 15 வருடங்களுக்கு ஆள வேண்டும் என்ற கனவு, ராஜபக்‌ஷ குடும்பத்துக்கு இருக்கின்றது. அப்போதும் கூட, தமது வாரிசு ஒன்றை ஆட்சிபீடம் ஏற்றவே அவர்கள் நினைப்பார்கள் என்பது, மனிதஇயல்பும் கூட.

ஆனால், கடும்போக்கு அரசியல்வாதிகள், காவியுடை உடுத்தித் திரிகின்றவர்கள், தேசப்பற்றுப் பேசுகின்றவர்கள், வெளிச் சக்திகளின் முகமூடி அணிந்த முகவர்கள் போன்றோருக்கு, குறுங்கால இலக்குகளே இருக்கின்றன. இவ்விடயத்தைப் பொறுப்புமிக்க ஆட்சியாளர்கள், கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் முஸ்லிம்கள், தங்களது இன, மத அடையாளத்துடன் நிம்மதியாக வாழவே விரும்புகின்றனர். அவர்கள், தனிநாடு கேட்கவும் இல்லை; அதிகாரப் பகிர்வு கோரவும் இல்லை.

சிங்கள மன்னர்களின் உயிரைக் காப்பாற்றியது மட்டுமன்றி, கொலனித்துவ ஆட்சிக்கு எதிராகவும் முஸ்லிம்கள் போராடி இருக்கின்றார்கள். ஆனால், இன்று வரை ஆட்சி செய்த, ஒன்றிரண்டு ஆட்சியாளர்களைத் தவிர, வேறு யாரும் முஸ்லிம்களுக்கு உரிய இடத்தை வழங்கவில்லை என்று சொல்லும் நிலையே உள்ளது.

1915 கலவரம் தொடக்கம், 2018 வன்முறைகள் வரை, நிறைய இனத்துவ நெருக்குவாரங்களை முஸ்லிம் சமூகம் சந்தித்திருக்கின்றது. மலையகம், தென்னிலங்கையில் வாழும் முஸ்லிம்கள் நேரடியாகப் பெரும்பான்மைக் கட்சிகளுக்கே வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர்.

வடக்கு, கிழக்கில், முஸ்லிம் கட்சிகளுக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளும் கடந்த 30 வருடங்களாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் கூடைகளுக்கு உள்ளேயே, கொண்டு வந்து கொட்டப்படுகின்றன என்பதை மறந்து விடக் கூடாது.

அத்துடன், இலங்கை என்பது, சிங்களப் பெரும்பான்மை நாடே தவிர, சிங்களவர்களுக்கு மட்டுமான நாடோ, தனிச் சிங்கள நாடோ கிடையாது.

எனவே, இந்த அடிப்படையில் அரசாங்கங்களும் ஆட்சியாளர்களும் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை தேசிய மட்டத்தில் உருவாக்க வேண்டும்.

முஸ்லிம்கள், தமிழர்கள் தொடர்பிலான வெறுப்புப் பிரசாரங்கள், நெருக்குவாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், சிங்கள மக்களையும் சிறுபான்மையினரையும் துருவப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கும் மூடுவிழா நடத்த வேண்டும்.

இவற்றைச் செய்யாமல், புலிப் பயங்கரவாதம், யுத்தவெற்றி போன்ற பழைய பல்லவிகளைப் பாடிக் கொண்டு, அரசியல் செய்ய முடியாது. பேரினவாதம், கடும்போக்குவாதம் போன்ற இந்த நாட்டுக்குப் பொருத்தமில்லாத ஆலோசனைகளை, எந்த ஆட்சியாளர்களாவது நம்பி, சிறுபான்மை இனங்களைப் புறமொதுக்கிச் செயற்படுவார்கள் என்றால் அல்லது, இனவெறுப்புப் பிரசாரங்களுக்கு இடமளிப்பார்கள் என்றால், நீண்டகாலத்தில் இது மோசமான விளைபயனைத் தரும் என்பதை, இலங்கை தேசம் இதற்கு முன்னரும் பட்டறிந்து இருக்கின்றது.

வெற்றுக் குற்றச்சாட்டுகள்

அரசியல் களத்தில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும், பழிசுமத்தல்களும் உண்மையானவையாக இருக்க வேண்டும் என்ற, எந்த நிபந்தனையும் இல்லை.

அத்துடன், இவ்வாறான குற்றச்சாட்டுகள் நிரந்தரமானவையாகக் கூட இருப்பதில்லை. ஏனெனில், பெரும்பாலான கதைகளுக்குப் பின்னால் ‘அரசியல் நோக்கம்’ இருக்கும்.

இருப்பினும், முஸ்லிம் அரசியல் தலைவர்கள், ஒரு சில தொழில்வாண்மை யாளர்களை இலக்கு வைத்து, கடந்த சில காலமாக அதிகப்படியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

ஆனால், குற்றச்சாட்டுகளை முன்வைப்போர், அதற்கான வலுவான ஆதாரங்களை நிரூபித்ததாக எந்தப் பதிவையும் காண முடியாதுள்ளது. எல்லாம் வெற்றுக் குற்றச்சாட்டுகளாகவே அமைந்து விடுகின்றன.

இதன் அர்த்தம், முஸ்லிம் அரசியல் தலைவர்கள், தொழில்சார் நிபுணர்கள், செயற்பாட்டாளர்கள் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதோ, அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாதோ என்பதல்ல. மாறாக, குற்றச்சாட்டுகளை முன்வைப்பதென்றால், அதை நிரூபிக்க வேண்டும்.

“அவன் கள்ளன்” என்பதற்கும், “அவன் களவெடுத்ததை நான் கண்டேன்” என்பதற்கும் “என்னிடம் ஆதாரங்கள் உள்ளன” என்று கூறுவதற்கும் வித்தியாசம் இருக்கின்றன.

அந்த அடிப்படையில், முஸ்லிம் அரசியல்வாதிகள் பயங்கரவாதத்தோடு, அடிப்படைவாதிகளோடு தொடர்புபட்டிருக்கின்றார்கள் என்றால், ஊழல் செய்திருக்கின்றார்கள் என்றால், அதை நிரூபிக்க வேண்டும். டொக்டர் ஷாபி போன்ற தொழில்வாண்மையாளர்கள், வேறு துறைகளில் உள்ளோர் மீது குற்றம் சொன்னால், அதற்கான ஆதாரங்களை முன்வைப்பது அவசியமாகும்.

ரிஷாட் பதியுதீன், வில்பத்துக் காட்டை அழித்ததாக, நீண்டகாலமாக இனவாத சக்திகள் குற்றம் சுமத்தி வருகின்றன.

இவ்வாறிருக்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், அமைச்சராக இருந்த ரிஷாட், ஆளுநராக இருந்த ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்குப் பயங்கரவாதிகளுடன் தொடர்பிருக்கின்றது என்ற பிரசாரம் திட்டமிட்ட அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டது.

இவர்களுடன் இணைந்து, ஆளுநர் அசாத் சாலியும் பதவி விலக வேண்டும் என்ற போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமையும் குற்றம்சாட்டினர். அதற்கான ஆதாரம் இருப்பதாகக் கூறினர்.

ஆனால், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிலோ, நீதிமன்ற நடவடிக்கையின் ஊடாகவோ, இதில் ஒன்றிரண்டு குற்றச்சாட்டையேனும் நிரூபிக்க இயலவில்லை.

ஒன்றில், இவர்களிடம் ஆதாரமில்லை; அல்லது, அவர்கள் அதிலிருந்து பின்வாங்கியிருக்கலாம். இதுபோல்த்தான், கர்ப்பத்தடை செய்தார் என்று, டொக்டர் ஷாபி மீதான குற்றச்சாட்டும் தவிடுபொடியானது.

ஆயிரம் பெண்களுக்குக் கர்ப்பத்தடை செய்தார் என்று கூறப்பட்ட நிலையில், ஒரு பெண்ணாவது ஷாபியால் பலோப்பியன் குழாய் நசுக்கப்பட்டு கர்ப்பம் தரிக்கும் தன்மையை இழந்தார் என்பதை நிரூபிக்கவில்லை.

இப்போது மீண்டும் டொக்டர் ஷாபி தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் ரிஷாட் பதியுதீன் எம்.பி மீது, அமைச்சர் விமல் வீரசன்ச ஊழல் மோசடிக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இதனை மறுத்துரைத்துள்ள ரிஷாட், “முடிந்தால் அதை நிரூபிக்குமாறு” கூறியிருக்கின்றார்.

விமல் வீரவன்ச மீது, சட்டவிரோதமாக வருமானமீட்டி, சொத்துக் குவித்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு, விசாரணைக்கு வருவதற்கு இரு தினங்களுக்கு முன்னர், ரிஷாட் மீதான இக்குற்றச்சாட்டை அவர் சுமத்தியுள்ளார் என்பது கவனிப்புக்குரியது.

முஸ்லிம் தலைவர்கள் குற்றம் செய்திருந்தாலும், அதற்காகச் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் தண்டனைகளும் முஸ்லிம் சமூகத்தை மட்டும் இலக்கு வைப்பதாக அமையக் கூடாது. அதேபோல், யாராகினும் எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைத்தால் அதை நிரூபித்தாக வேண்டும்.Post a Comment

Protected by WP Anti Spam