By 25 February 2020 0 Comments

குளிர்சாதனப் பெட்டியில் கவனம் செலுத்துங்கள்!! (மருத்துவம்)

குளிர்சாதனப் பெட்டியின் அடிப்படை நோக்கமே உணவுப் பொருட்களை கெடாமல், சில நாட்கள் மட்டுமே பாதுகாப்பதாகும். ஆனால் நம்மில் பலர், மாத கணக்கில் உணவுப்பொருட்களை சேமித்து வைக்கிறோம். சத்துக்களின் நிலைமை பற்றியோ, நுண்ணுயிர் வளர்ச்சியை பற்றியோ சிறிதும் யோசிப்பது இல்லை. ஒவ்வொரு உணவினையும் சரியாக பாதுகாக்க, உணவினை சுற்றி குளிர்ந்த காற்று ஓட்டம் இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் எல்லா உணவு பொருட்களையும் குளிர்சாதன பெட்டியில் திணிப்பதை சிலர் பழக்கமாக கொண்டுள்ளனர், இதனை
முக்கியமாக தவிர்க்க வேண்டும்.

குளிர்சாதன பெட்டிகளில் உணவை சேமிக்கும்போது முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், சமைத்த உணவுகளையும் சமைக்காத உணவுகளையும் வேறுவேறு அடுக்குகளில் (Shelf) பிரித்து வைக்க வேண்டும்.அடிக்கடி சுத்தம் செய்யப்படாத, குளிர்சாதன பெட்டியின் Shelf-ல் பாக்டீரியா, parasites இருக்கலாம். மாசுபடுத்தப்படாத உணவு கூட உங்கள் குளிர்சாதன பெட்டியின் பின்புற மூலையில் நீண்ட நாட்கள் வைத்திருக்கும் போது கிருமிகளால் மாசுபடுகிறது. நம்மை நோய்வாய்ப்பட செய்கிறது. குளிர்பதன பெட்டி, பாக்டீரியா வளர்ச்சியைக் குறைக்கிறது. இயற்கையில் எல்லா இடங்களிலும் பாக்டீரியாக்கள் உள்ளன. அவை மண், காற்று, நீர் மற்றும் நாம் உண்ணும் உணவுகளில் உள்ளன. ஊட்டச்சத்துக்கள் (உணவு), ஈரப்பதம் மற்றும் சாதகமான வெப்பநிலை இருக்கும்போது, அவை வேகமாக வளர்ந்து, சில வகையான பாக்டீரியாக்கள் நோயை ஏற்படுத்தும் அளவிற்கு எண்ணிக்கையில் அதிகரிக்கின்றன.

40 முதல் 140°F வரையிலான வெப்பநிலை வரம்பில் பாக்டீரியாக்கள் மிக வேகமாக வளர்கின்றன, சில நிமிடங்களுக்குள் இரட்டிப்பாகின்றன. 40°F அல்லது அதற்குக் கீழே அமைக்கப்பட்ட தட்ப வெப்பத்தில்தான் ஒரு குளிர்சாதன பெட்டியால் உணவுகளைப் பாதுகாக்க முடியும்.மின் தடைகளின்போது, குளிர்சாதன பெட்டியால் உணவை பாதுகாக்க இயலாது. நீடித்த மின் தடைகளின்போது உங்கள் குளிர்சாதன பெட்டியில் இருக்கும் உணவுகளில், பாக்டீரியாக்கள் வளர்ந்து நம்மை நோய்வாய்ப்படுத்தக்கூடும். குளிர்சாதன பெட்டியில் விரைவில் வீணாகும் உணவுகளான பால், இறைச்சி, முட்டை, காய்கள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை மட்டுமே பாதுகாக்க வேண்டும். அந்த உணவுகளையும் சரியான வெப்பநிலையில் பாதுகாக்க வேண்டும்.

சரியான வெப்ப நிலையில் பாதுகாக்கப்படாத உணவுகளை உண்பதால் Food borne illness வரக்கூடும். Food borne illness என்பது பழைய கெட்டு போன உணவுகளில் உள்ள கிருமிகளால் வரும் நோய்களாகும். குளிர்சாதன பெட்டி எப்போதும் ஃப்ரெஷ்ஷாக மற்றும் நாற்றங்களை அகற்ற சமையல் சோடாவை ஒரு ஷெல்ஃபில் வைக்கவும். ரசாயன சுவை அளிக்கக்கூடிய அனைத்து சுத்தப்படுத்திகளையும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். பால் பாக்கெட்கள், பால் பாட்டில்கள் வாங்கி பாதுகாக்கும்போது, காலாவதி தேதிக்கு(Expiry date)-க்கு முன்பே பயன்படுத்தபட வேண்டும். தயிர், வெண்ணெய், பாலாடைக்கட்டி, கிரீம், சீஸ் ஆகியவற்றை அவை பேக் செய்யப்பட்டு வந்த பைகளிலே விட்டு விடுங்கள். இருப்பினும், சில சமயங்களில் பரிமாறும் கிண்ணத்திற்கு மாற்றினால், கிண்ணத்தை இறுக்கமாக மூடி போட்டு வைக்க வேண்டும்.

வெங்காயத்தை குளிர்சாதன பெட்டியில் வைக்கும்போது, முறுமுறுப்பு தன்மையை இழந்து மென்மையாகிவிடுகிறது. மேலும் எளிதாக பூசணம் பிடித்துவிடுகிறது. வெங்காயத்தை சேமிப்பதற்கான சிறந்த வழி குளிர்ந்த, இருண்ட இடத்தில் வைப்பதே! கட் செய்யப்பட்ட வெங்காய துண்டுகளை குளிர்சாதன பெட்டியில் வைக்கும்போது, வெங்காயத்தின் மணம் மற்ற உணவுகளுடன் கலந்து, சாப்பிட விரும்பத்தகாததாக ஆக்குகிறது. குளிர்சாதன பெட்டியில் பூண்டை வைத்தால், விரைவில் பூசணம் பிடித்துவிடும். உங்கள் உணவை பாதுகாப்பாக வைத்திருப்பதில் மிக முக்கியமான ஒரு படி உங்கள் குளிர்சாதனப் பெட்டியை சுத்தமாக வைத்திருப்பது ஆகும். உணவுப் பொருட்களை சிந்தினால், உடனடியாக துடைக்க வேண்டும். சூடான Soap நிறைந்த தண்ணீரில் மேற்பரப்புகளை நன்கு சுத்தம் செய்து, பின்னர் துடைக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை, குளிர்சாதன பெட்டியை சோதித்து வேண்டாத உணவுகளை வெளியே எடுத்து எறிந்து விட வேண்டும்.

வெளிப்புறத்தை ஒரு மென்மையான துணி மற்றும் லேசான பாத்திரங்களைக் கழுவுதல் போல சோப்பு மற்றும் சுத்தப்படுத்திகள் மூலம் சுத்தம் செய்யலாம். குளிரூட்டப்படுவதற்கு முன்பு அவற்றைக் கழுவுதல் கூடாது. அவ்வாறு கழுவுவது, பூசண காளான்களின் வளர்ச்சியை துரிதப்படுத்தி, காய்கறி, பழங்களை விரைவாக அழுக வைக்கும். கீரைகளை குளிர்சாதன பெட்டியில் நேரடியாக வைக்கும்போது விரைவில் வாடிவிடும். ஆனால், அவற்றை சுத்தமான காகிதம் அல்லது துணியில் சுற்றி, காற்று புகாத டப்பாக்களில் வைக்கும் போது 10 நாட்கள் வரை பராமரிக்க முடியும். முட்டைகளை அதற்காக கொடுக்கப்பட்ட, ஒரு அலமாரியில் சேமிக்க வேண்டும். முட்டை ஓடுகளில் சில சமயம் கோழியின் கழிவுகள் ஒட்டி இருக்கும். அவற்றை சுத்தம் செய்த பிறகே குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். கோழியின் கழிவுகள் ஒட்டி இருக்கும் ஓடுகளில் தொற்றுநோய்களை பரப்பும் கிருமிகள் குவிந்து இருக்கும்.

இறைச்சி வகைகள், கோழி மற்றும் கடல் உணவுகள் அதிகமான ஆபத்தான பாக்டீரியாக்களை கொண்டவை. எனவே, மற்ற உணவுகளிலிருந்து இவற்றை விலக்கி, தனியாக அதற்கென்று கொடுக்கப்பட்ட Freezer அலமாரிகளில் காற்றுப்புகாத பைகளில், வாங்கிய தேதியை எழுதி பாதுகாப்பாக வைக்கவேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளை தனித்தனியாகப் பிரித்து வைக்க வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகள் வெவ்வேறு கேஸ்களை(Gas) வெளியிடுகின்றன. எனவே அவை மற்றவைகளை பாழடித்துவிடும்.ஐஸ்கிரீம்களை குளிர்சாதன பெட்டியில், ஃப்ரீஸரில், மேல் பகுதியில் சேமிக்கவும். கதவுகளில் உள்ள ஷெல்ஃப்பில் ஐஸ்கிரீமை சேமிக்க வேண்டாம், கதவு மீண்டும் மீண்டும் திறந்து மூடப்படும்போது, ஐஸ்கிரீம் உருகுவதற்கு வாய்ப்பு உள்ளது.

ஐஸ்கிரீமை டப்பாக்களில் சேமித்து வைக்கும்போது, இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். மேலும் மூடுவதற்கு முன்பு ஒரு சிறிய பிளாஸ்டிக் பேப்பர் அல்லது மெழுகு காகிதத்தை ஐஸ்கிரீமின் மேற்பரப்பில் நேரடியாக வைத்து மூடலாம். நீண்ட கால சேமிப்பிற்கு இது உகந்ததாகும். ஒரு முறை திறந்த கேன்களை ஒருபோதும் அப்படியே குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாது, ஏனெனில் இது ரசாயன மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடும். திறந்த கேன்களை, காற்று புகாத இறுக்கமாக மூடக் கூடிய கொள்கலன்களில் வைத்தே குளிர்விக்க வேண்டும். பால் சார்ந்த உணவுகளை, குளிர் சாதன பெட்டியின் கதவுகளில் இருக்கும் Shelf களில் சேமிக்க வேண்டாம். குளிர்சாதன பெட்டியின் வெப்பமான இடம் அதுவே என்பதால் சாஸ், சர்பத், கூல்ட்ரிங்க் போன்ற எளிதில் கெடாத பானங்கள் மட்டுமே அங்கு வைக்க வேண்டும்.பழங்கள் மற்றும் காய்கறிகளை தனித்தனியாக, காற்றோட்டமான, துளையிடப்பட்ட அல்லது சீல் செய்யப்படாத பைகளில் வைக்க வேண்டும்.

குளிர்சாதன பெட்டியில் தக்காளியை சேமிப்பது அதன் தரம் மற்றும் நிறத்தை பாதிக்கும். மென்மையாக இருக்கும் தக்காளி கடினத்தன்மை கொண்டதாக மாறிவிடும். குளிர்சாதன பெட்டியில் உருளைக்கிழங்கை வைப்பது அதன் மாவுச்சத்தை, சர்க்கரையாக மாற்றி விடும், இது அமைப்பு(texture) மற்றும் நிறத்தை பாதிக்கும். சில சமயங்களில் அவை முளை விட ஆரம்பிக்கும். குளிர்சாதன பெட்டியில் பிரட் வைத்திருப்பது அதனை கடினத்தன்மை கொண்டதாக மாற்றிவிடும். வாழைப்பழத்தினை சேமிப்பது, அவற்றில் உள்ள Enzymes(செரிமான நொதிகள்) கசிந்து, பழுக்காத வாழைப்பழத்தின் தோலை முற்றிலும் கருப்பு நிறமாக மாற்றும். நம்மில் பலர் தானியங்கள், பருப்பு வகைகள், மாவு வகைகள், பொடி வகைகள், காபி பவுடர், தேன், மசாலா பொருட்கள், ஊறுகாய், சாஸ், எண்ணெய், நெய், கொட்டைகள், உலர்ந்த பழங்கள், மருந்து ஆகியவற்றை மொத்தமாக வாங்கி குளிர்சாதன பெட்டியில் பாதுகாத்து வைக்கிறோம். இது தவறான செயல் ஆகும். நன்கு உலர்ந்த, காற்று புகாத டப்பாக்களில், ஈரம் படாதவாறு வைத்து இருந்தாலே போதுமானது.Post a Comment

Protected by WP Anti Spam