By 10 April 2020 0 Comments

மறக்க முடியாத மகளிர் டி20 உலகக் கோப்பை!! (மகளிர் பக்கம்)

கிரிக்கெட் என்றாலே, உற்சாகம் தானாகவே தொற்றிக் கொள்ளும். அதுவும், மகளிருக்கான கிரிக்கெட் போட்டிகள் என்றால் சொல்லவே தேவையில்லை. ஏனென்றால், இளைய தலைமுறையினர் தொடங்கி, மூத்த தலைமுறையினர் வரை என அனைவரும் வயது வித்தியாசமின்றி, ரசித்துப் பார்க்கும் விளையாட்டாக, கிரிக்கெட் அரிதாரம் பூசி வருகின்றது. அதன் காரணமாக, கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக கருதப்படும் ஆஸ்திரேலியா திருவிழா கோலம் பூண்டிருந்தது. காரணம், நாம் அனைவரும் அறிந்ததுதான். இந்தாண்டுக்கான மகளிர் டி-20 உலகக் கோப்பையினை தன் வசம் தக்கவைத்துக் கொண்டு இருப்பது தான் அந்த திருவிழாவிற்கு காரணம்.

சர்வதேச கிரிக்கெட் கமிட்டியால், ஏழாவது முறையாக நடத்தப்பட்ட இப்போட்டியின் சுவாரஸ்ய சம்பவங்கள் இதோ உங்களுக்காக… மல்லுக்கட்டிய பத்து அணிகள் பிப்ரவரி 21-ல் தொடங்கி, மார்ச்-8 வரை எனப் பதினேழு நாட்கள் களைகட்டிய இந்த விளையாட்டு திருவிழாவில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா உட்பட, மற்ற அணிகளான தாய்லாந்து, இலங்கை, இந்தியா, மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, பங்களாதேஷ்… என மொத்தம் பத்து அணிகள் உலகக் கோப்பை என்ற மகுடத்தைச் சூட மல்லுக்கட்டின. ‘ஹாட்ரிக்’ வெற்றியைப் பதிவு செய்த இந்திய அணி உலக அரங்கில், அனைவரது கவனத்தையும் ஈர்த்து வரும் இந்திய மகளிர் அணி, இத்தொடரிலும் சாதிக்க தவறவில்லை. தனது லீக் ஆட்டங்களில், தொடர்ச்சியாக மூன்று வெற்றியை ஈட்டியது. முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் மற்றும் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவைப் பாரதப் பெண்கள் பதினேழு ரன் வித்தியாசத்தில் பந்தாடினர். இந்த வெற்றி கொண்டாட்டத்துக்கு, பூனம் யாதவ் முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

இப்போட்டியில், சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்ட பூனம் (4 ஓவர், 19 ரன், 4 விக்கெட்) நூலிழையில், ‘ஹாட்ரிக்’ விக்கெட்டை தவற விட்டார். இறுதிப்போட்டி முடிவில், இவர் 10 விக்கெட் கைப்பற்றி, சிறந்த பந்துவீச்சாளர் வரிசையில் 2-ம் இடம் பிடித்தார். சாதனை உச்சத்தில் ஹெதர் ஹைட் டி-20-ல் சாதித்த மற்றுமொரு வீராங்கனை இங்கிலாந்து அணியின் கேப்டனான ஹெதர் ஹைட். தாய்லாந்துக்கு எதிரான போட்டியில், இவர் 66 பந்துகளை எதிர்கொண்டு, 108 ரன் குவித்தார். இதற்கு முன்னதாக, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் இம்மங்கை சதம் அடித்து இருந்தார். இதன்மூலம் டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 என மூன்று வகையான போட்டிகளிலும் சதம் அடித்தவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார்.

அரையிறுதியில் இந்தியா முதல் சுற்று ஆட்டங்களில், ஆஸ்திரேலியா, வங்காள தேசம், நியூசிலாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி, முதல் அணியாக (6 புள்ளிகளுடன்) செமி-பைனலுக்குள் நுழைந்த இந்தியா, வலுவான இங்கிலாந்தை எதிர்கொள்ள இருந்தது. ஆனால், வருண பகவானின் ‘திடீர்’ சீற்றத்தால், ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. இங்கிலாந்தைவிட, நமது அணியினர் அதிக புள்ளிகள் பெற்றிருந்ததால், இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினர். இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல், இரண்டாம் இடத்தோடு நமது அணியினர் திருப்திப்பட வேண்டியதாயிற்று.Post a Comment

Protected by WP Anti Spam