By 16 May 2020 0 Comments

உன்னைப் பற்றி தெரிந்துகொள்…!! (மகளிர் பக்கம்)

டீன் ஏஜ் பருவத்தில் தான் ஆண்-பெண் இருவருக்குமான பாலியல் குறித்த சந்தேகங்களுக்கான தேடல் துவங்குகிறது. உடலுறவு, மாதவிடாய், பிறப்புறுப்புகள், எதிர் பாலின கவர்ச்சி என நீளும் அந்த தேடல் பட்டியலுக்கான விடைகள் துரதிர்ஷ்டவசமாக பள்ளிகளிலோ, நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்தோ கிடைப்பதில்லை.

உதாரணமாகச் சொல்லவேண்டுமானால் அறிவியல் பாடப் புத்தகத்தில் “மனித இனப்பெருக்கம்” (Reproduction) என்ற பாடம் உண்டு. ஆண், பெண் இனப்பெருக்க முறை மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் பற்றித் தெளிவாக எழுதப்பட்டிருக்கும் அந்த பாடத்தை 99.99% ஆசிரியர்கள் நடத்துவதே இல்லை.

நடத்தாமல் விட்டு விட எதற்காக அந்த பாடம்? மாணவர்களே படித்துத் தெரிந்து கொள்ளவா? என்கிற சூழல்தான் இங்கு நிதர்சனம். இங்கு மட்டுமல்ல உலகின் பல்வேறு பகுதிகளிலும் இதற்கான விடை தேடிக் கொண்டிருக்கின்றனர் பலர்.

இப்படித்தான், “உடலுறவின்போது எல்லாப் பெண்களும் உச்ச நிலை அடைந்து திரவத்தை வெளியேற்றுகிறார்களா?” என்கிற கேள்வி 2016 ஆம் ஆண்டில் அமெரிக்கப் பத்திரிகையாளர் சோய் மெண்டல்சனுக்கும், அவரது அப்போதைய காதலருக்கும் இடையில் ஏற்பட்டிருக்கிறது. திருப்தி அளிக்கக்கூடிய விடை கிடைக்காத நிலையில், கூகுளில் தேட அவர்கள் இருவரும் முடிவு செய்துள்ளனர்.

“முட்டாள்தனமான, தேவையில்லாத தகவல்களே கூகுள் தேடலில் கிடைத்தன” என்று பி.பி.சியிடம் தெரிவித்த சோய் மெண்டல்சன், “கூகுளில் தேடுவதற்குப் பதிலாக மருத்துவம் சார்ந்த பத்திரிகைகளில் தேட முடிவு செய்தேன்” என்றவருக்கு இந்த முயற்சியும் உதவவில்லை. “அவற்றில் குறிப்பிடும் உடல் உறுப்பையோ, அந்த உறுப்புகள் இருக்கும் இடத்தையோ, அவற்றின் செயல்பாட்டையோ என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்கிறார் சோய்.

இதனால் இரு முடிவுகளுக்கு வருகிறார் சோய். ஒன்று “தங்களுக்குக் கிடைத்த எல்லா தகவல்களும் முட்டாள்தனமானவையாக, ஏற்றுக் கொள்ள முடியாதவையாக இருப்பது பெரிய பிரச்சினையாக உள்ளது. இரண்டு பெண்ணாகிய எனக்ேக என்னுடைய உடலைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாமல் இருப்பதைத் தெரிந்துகொண்டேன்” என்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மெக்சிகோவைச் சேர்ந்த தன் தோழியான மரியா கோனெஜோவுடன் என்ற ஓவியருடன் சேந்து ‘புஸ்ஸிபீடியா’ என்ற இணைய தளத்தைத் தொடங்குகிறார் சோய். இது பெண்ணின் உடல் பற்றிய நம்பகமான, இது வரை அவர்களே அறிந்திராத தகவல்களை அளிக்கும் ஆன்லைன் தகவல் களஞ்சியம்.

பெண்ணுறுப்பைக் குறிக்கும் கொச்சையான ஆங்கிலச் சொல்லான “புஸ்ஸி” என்பதுதான் இவர்களது பணிதிட்டத்தில் முக்கியமானது. ஆனால், பெண்ணுறுப்பு, பெண் கருப்பை வாய் (vulva), பெண்ணுறுப்பின் வெளிப்பகுதி (clitoris), கருப்பை, சிறுநீரகம், மலக்குடல், மலவாய்… எனப் பரந்த அளவில் இந்த சொல்லைப் பயன்படுத்த இவர்கள் விரும்பினர்.

நாம் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்கிறோம். #MeToo இயக்கத்துக்கு பிந்தைய காலத்தில், உலக நாடுகளிலுள்ள பள்ளிகளில் பாலியல் கல்வி கற்றுக் கொடுக்கப்படுவதோடு, பெரும்பாலான மக்களின் விரல் நுனியில் இணைய வசதி இருக்கும் காலத்தில் இந்த பணித்திட்டம் தேவையா? என்ற கேள்விக்கு மரியாவின் விடை “தகவல்கள் வலிமை மிக்கவை”, “அவமானப்படுதல் ஆபத்தானது” என்ற இரண்டு வாக்கியங்களே.

“பாலின சமத்துவம் என்று வருகின்றபோது, முன்னேற்றத்தை மட்டுமே உயர்வாக மதிப்பிடுகிறோம். நமது உடல் மற்றும் பாலியல் பற்றி அவமானமாகக் கருதும் பெருமளவு பாகுபாடுகள் நிறைந்த உலகில்தான் வாழ்ந்து வருகிறோம். சமுகம் திறந்த மனப்பான்மை உடையதாக மாறினாலும் இந்தப் பிரச்னைகள் உலகளவில் உள்ளன” என்று சோய் கூறுகிறார்.

இதனை ஆமோதிக்கும் மரியா, “நம்மைப் பற்றியும், நமது உடலைப் பற்றியும் நமக்குத் தெரியும் என்று நாம் எண்ணிக் கொள்கிறோம். ஆனால், சிலவற்றை உறுதியாகக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு வெட்கப்படுகிறோம். இந்த மனப்பான்மையே நாம் அதிகம் அறிந்து கொள்வதைக் கட்டுப்
படுத்துகிறது” என்கிறார்.

ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் கட்டுரைகளை வழங்கும் இந்த இணையதளத்தை, இது வரை ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். பெண்கள் தங்களின் உறுப்பினை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும்? கருத்தரிப்பதை பூச்சிக்கொல்லிகள் எவ்வாறு பாதிக்கின்றன? மாதவிடாய் காலங்கள் பற்றிய விழிப்புணர்வு, மெனோபாஸ் காலத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எனப் பெண்கள் இதுவரை தங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கேட்டுக் கொண்ட கேள்விகளுக்கான விடை இதில் உள்ளது. மேலும், புஸ்ஸிபீடியாவிலுள்ள கட்டுரைகள் அனைத்தும் ஆதாரங்களின் இணைப்புகளையும் சேர்த்தே தருகின்றன.

“எனது கேள்விக்கு இன்னும் விடைக் காண முயன்று வருகிறேன்” என்று தெரிவிக்கும் சோய், “பெண்களின் உடலியல் பற்றி வருகிறபோது பல தகவல்கள் இல்லை. எடுத்துக்காட்டாக, பெண் உறுப்பான கிளிட்டோரிசில் என்ன வகை உடல் திசுக்கள் உள்ளன என்பது கூட நமக்குத் தெரியாது” என்கிறார். மேலும், “எந்தவொரு மருத்துவ பத்திரிகை அல்லது சுகாதார புத்தகங்களில் “பீனிஸ்” (penis) என்று தேடினால், பல கட்டுரைகள் உள்ளன. ஆனால், வெஜைன்னா (vagina) குறித்த தெளிவான மற்றும் விரிவான கட்டுரைகள் இல்லை” என்றும் சோய் தெரிவிக்கிறார்.

“நியாயமான வழிமுறையில் பெண்களின் உடலைப் பற்றிய தகவல்களை அறிவிக்க ஐந்து ஆண்டுகளாக நான் முயன்று வருகிறேன்” என்று கூறும் மரியா, “பெண்ணின் பாலியலை ஆய்வு செய்து, பெண்களின் உடலைப் பற்றித் தெரிவிக்க விரும்புகிறேன். பெண்ணின் நிர்வாணமான உடலை பார்க்கும் கண்ணோட்டத்தை முற்றிலும் மாற்ற விரும்புகிறேன்” என்கிறார்.

இதுவரை அதிகம் பேசப்படாத ‘திருநங்கை பாலியல் சுகாதாரம்’ பற்றிய கட்டுரைகளை வெளியிட சோய் திட்டமிட்டுள்ளார். அதற்கான பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் மற்றும் நிபுணர்களிடம் தன்னுடைய ஆய்வினை மேற்கொண்டுள்ளார். அதே வேளையில், தனது முதல் கேள்விக்கும் விரைவில் பதிலளிக்கும் கட்டுரையையும் இணையத்தில் பதிவேற்றும் முயற்சியில் இயங்கி வருகிறார் சோய் மெண்டல்சன்.Post a Comment

Protected by WP Anti Spam