By 10 June 2020 0 Comments

அழகான கூடு!! (மகளிர் பக்கம்)

போட்டோவாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி பொருத்தமான லைட்டிங்கில் கூடுதல் அழகுதான். ஒரு புடவைக் கடைக்குச் செல்கிறோம். அழகான பிங்க் நிறம் என்று நினைத்து ரொம்பவும் பிடித்து அந்தப் புடவையை எடுத்து விடுவோம். மறுநாள் காலையில் பிரித்துப் பார்த்தால், அது சிவப்பு நிறமாகத் தோன்றும்.

கடையில் அலங்கார விளக்குகளின் வெளிச்சத்தில் தோன்றிய ஒரு நிறம் பகலில் வேறு நிறமாகத் தெரியும். இதுதான் விளக்குகளின் மாயம். அழகற்ற பொருளை அழகாகவும், அழகான பொருளை டல்லாகக் காட்டவும் விளக்குகளால்தான் முடியும். நிறைய பெண்கள் மேட்சிங் செலக்ட் செய்யும்பொழுது குழம்பிப் போவது இப்படித்தான்.

எவ்வளவுதான் பெரிதான, அழகான பங்களா வீடாக இருந்தாலும், சரியான விளக்குகள் இல்லாத வீடு களையிழந்து காணப்படும். ‘வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் செய்து பார்’ என்பது பழைய மொழி. ‘வீட்டைக்கட்டி விளக்கை போடு’ என்பது புது மொழி. நல்ல விளக்குகள்தான் ஒரு இடத்தின் அழகை கூட்டிக் காட்டும்.

விளக்குகளில் பல வகைகள் இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் தனித் தனியான விருப்பம் என்று ஒன்று உண்டு. அமெரிக்கா போன்ற நாடுகளில் பொதுவான வெளிச்சத்திற்கு விளக்குகள் பொருத்தியிருப்பர். அவரவருக்கு வேண்டியதை பெடஸ்டிரல் விளக்குகளாகவோ ஸ்டாண்டில் பொருத்தப்படும் விளக்குகள் போன்றோ அதிகமாக பயன்படுத்துவர்.

மேற்கத்திய நாகரிகம் பரவிய பின், நம்முடைய நாட்டிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் தாக்கத்தால் இங்கேயும் சில இடங்களில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. பொதுவாக நல்ல வெளிச்சம் தரக்கூடியவை எனப் பார்த்தால் அவை டியூப் லைட்டுகள்தான். இவை அனைத்து இடங்களிலும் சாதாரணமாக போடப்படுகின்றன. அறையின் மூலையில் நிழலடிக்குமானால், குறிப்பிட்ட இடத்தில் ஒரு சில வேலைகளை நம்மால் செய்ய முடியாது.

உதாரணமாக, அறையின் மூலையில் ேமசை இருக்கிறது. அந்த இடத்தில் நாம் அமர்ந்து படிக்க வேண்டுமானால், அது முடியாது. அதனால் அங்கு மேசை விளக்கு வைத்துக் கொண்டு படிக்கலாம். என்னதான் டியூப் லைட் வெளிச்சம் இருந்தாலும், குறிப்பிட்ட செயலுக்கு ஏற்ற மாதிரி வசதி செய்ய வேண்டி இருக்கும்.

அதே போல் தையல் வேலை செய்கிறோம் அல்லது குறிப்பிட்ட கைவேலை செய்கிறோம் என்றால் அதற்காக போடும் விளக்குகள் ஒரு வகை. அடுத்ததுதான் அலங்கார விளக்குகள். இவைதான் அறையின் அழகை உயர்த்திக் காட்டும். அழகாக இருக்கிறது என்று நினைத்து வாங்கிப் போட்டுவிட முடியாது. நம் அறையின் அமைப்பு அதாவது நீள, அகல, உயரத்தை கருத்தில் கொண்டுதான் அலங்கார விளக்குகளை போட முடியும்.

பெரிய ஹோட்டல் அறைகளில் இருப்பது போன்றோ, அரண்மனைகளில் காணப்படும் விளக்குகளையோ ஒரு சிறிய வரவேற்பறையில் போட்டால், அங்கு விளக்குகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும். உதாரணமாக, ஏழு அடுக்குகள் கொண்ட பெரிய அலங்கார விளக்குக்குப் பதிலாக நம் அறை வடிவத்திற்கு ஏற்ற ஐந்து அடுக்குகள், நான்கு பிரிவுகள் கொண்டவை என பார்த்து பார்த்து வாங்கிப் போடலாம்.

நீளமான அறையாக இருந்தால் நடுவில் பெரிய சர விளக்கு போடலாம். இரு பக்கங்களிலும் போதிய இடைவெளி இருந்தால், நடு விளக்கு போன்றே, சிறிய விளக்குகளோ போடலாம். அறையே சிறியதாக இருந்து, நடுவில் ஒரே ஒரு விளக்குதான் போட முடியுமானால், அதே வடிவில் அல்லது அதற்கேற்றவாறு வால் பிராக்கெட்ஸ் போடலாம். அதாவது சுவற்றிலேயே அங்கங்கே ஒற்றையாக விளக்குகள் போடலாம்.

வரவேற்பறையுடன் சாப்பாட்டு அறை இணைந்திருந்தால், பொதுவான டியூப் லைட்டுடன், மேலிருந்து தொங்கும்படியான ஸ்பாட் லைட்டும் மேசை மீது வெளிச்சம் படும்படி பொருத்திக் கொள்ளலாம். மேசை மீது வெளிச்சம் படும்பொழுது, கண்ணுக்குத் தெரியாத சிறிய தூசிகள் சாப்பாட்டின் மீது விழுந்தால்கூட நமக்குத் தெரிந்து விடும்.

அதனால்தான் ேஹாட்டல்களில் ஒவ்வொரு மேைசக்கும் விளக்குகள் பொருத்தியிருப்பதை நாம் பார்க்கிறோம். அதுபோல், சமையலறை ‘L’ வடிவத்திலோ அல்லது ‘U’ வடிவத்திலோ இருந்தாலும், இருபுறமும் டியூப் லைட்டுகள் போட்டு வைக்கலாம். மேலே லாஃப்ட்டில் பொருட்கள் வைத்திருந்தால், அங்கும் சிறிய விளக்கு போட்டு வைக்கலாம். இதன் மூலம் பூச்சிகள் அடைவதை தவிர்க்கலாம்.

படுக்கும் அறை ஏ.சி. அறையாக இருந்து, மேற்கூரையில் ஃபால்ஸ் சீலிங் இருந்தால், அங்கே இரட்டை டியூப் அல்லது ஸ்பாட் லைட்டுகள் கூட போடலாம். இவை அலுமினியம் மற்றும் கண்ணாடி போன்ற அமைப்புகளில் பளபளவென அழகாக கிடைக்கின்றன. ஸ்டாண்டு போல நிறுத்தி மேலே விளக்கு எரியும்படியான போலார்ட் லைட் அழகிற்காக பயன்படுத்தலாம்.

பலவித மாடல்களில், அழகழகான நிறங்களில் ஜொலிக்கும்படியான மல்ட்டி ஸ்பாட் விளக்குகள் கிடைக்கின்றன. நம் அறை வடிவத்திற்கு ஏற்றபடி பொருத்திக் கொள்ளலாம். டியூப் லைட் போன்றே அலுமினிய பட்டி வடிவில் ஆங்காங்கே விளக்குகள் தொங்கும்படியான அமைப்பும் நல்ல அழகைத் தரும்.

ஏதேனும் வீட்டில் பார்ட்டி, ஃபங்ஷன் நடந்தால், இது போன்ற விளக்குகள் போட்டால் பார்க்க அழகாகயிருக்கும். தலை பெரிதாய் இருக்கும் பல்க் ஹெட் விளக்குகள் மிக உயரமான மேற்கூரை உள்ள இடங்களுக்குப் பொருந்தும். மேற்கூரை உயரம் குறைவான இடங்களுக்குப் போட்டால், தலைக்கு மேல் நிற்பது போன்று தோன்றும்.

தினம் தினம் புதிய புதிய பொருட்கள், வசதிகள், சுலபமாக பராமரிக்கும் வசதி என மாறிக் கொண்டேதான் இருக்கிறது. ஆம், நிறைய இன்பில்ட் விளக்குகள் சுவர் உள்ளேயே பொருத்தும்படியான அழகழகான மாடல்கள் வந்து விட்டன. வெளியே ஆங்காங்கே வயர்கள் தொங்காமல், உள்ளடக்கி அமைக்கப்படுவது நம் இடத்தை மேலும் அழகாக்கிக் காட்டும்.

விளக்குகளின் ஸ்விட்ச் ேபார்டு மேல் லேமினேட் ஷீட் ஏதேனும் ஒட்டி அழுக்கடையாமல் பார்த்துக் கொள்ளலாம். அடுக்கு மாடிகளில் ஒவ்வொரு திருப்பத்திலும் இணை ஸ்விட்சுகள் அமைப்பதன் மூலம் நம் சிரமங்களை குறைக்கலாம். மேலிருந்து இரவில் கீழே இறங்கும்பொழுது, விளக்கைப் போட்டுக் கொண்டு இறங்கலாம். கீழே சென்று அணைக்கலாம். இதே போன்று கீழே போட்டுக் கொண்டு, மேலே வந்து அணைக்கலாம்.

வீட்டிற்கு மட்டுமா விளக்கு? தோட்டம் உள்ளதா? அங்கும் ஜொலிக்க வைக்கலாம். ஜொலிக்கும் விளக்கில், குடும்பத்துடன் குதூகலிக்கலாம். க்ரிஸ்டல் விளக்குகள் அழகானவை. கொஞ்சம் பணமும் செலவு செய்ய வேண்டும். ஆனால் ஒரு முறைதானே? இவை வெளிச்சம் மட்டும் தருவதில்லை. இதர பொருட்கள் மீது பட்டு ஜொலிக்கச் ெசய்கின்றன. அதை பார்க்கும்பொழுது நம் ரசனையும் மேலிடும்.

எவ்வளவுதான் வீடு நிறைய பொருட்கள் இருந்தாலும், அழகான விளக்குகள் இல்லையென்றால், அவை சோபிக்காது. விளக்குகள் தினம் தினம் வாங்கும் பொருட்கள் அல்ல. வீட்டிற்காக ஒரு முறை வாங்கும் பொருள். இவற்றில் மெட்டல், பி.வி.சி. கோட் செய்யப்பட்டவை. தங்கம் போன்று மினுமினுக்கும் மெட்டல் கோட் செய்யப்பட்டவை என எத்தனையோ வகையானவை கிடைக்கின்றன.

இவை நல்ல தரம் வாய்ந்தவை, உறுதியானவை, அழகானதும்கூட. ரொம்ப செலவு ஆகுமோ என்று பயப்படத் தேவையில்லை. மிகக் குறைந்த விலை முதல் அதிகபட்சம் வரையில் கிடைப்பதால் நம் பட்ஜெட்டுக்கு ஏற்றதை வாங்கிக் கொள்ளலாம். கயிறு போன்ற அமைப்பில்கூட விளக்குகள் காணப்படுகின்றன. இத்தகைய அலங்கார விளக்குகளில் சிம்பிளாக ஒன்று போட்டால்கூட போதும்!

நல்ல ரிச் லுக் கிடைக்கும். ரிச்சாக பொருட்கள் வாங்குவதைவிட ரிச்சாக தெரியும் படியான பொருட்களை குறைந்த செலவில் வாங்கலாம். அழகிய பௌல் போன்ற அமைப்பு முதல், கொத்தாகத் தொங்கும் சர விளக்குகள் அமைப்பு வரை பார்த்தோம். உங்கள் வீட்டை நட்சத்திர ஹோட்டல் அறையாகக் காட்டப் போகிறீர்களா? தங்கம் போன்று ஜொலிக்கச் செய்வீர்களா? ஸ்பாட் லைட் போட்டு கலக்கப் போகிறீர்களா? டூம் லைட் போட்டு அசத்தப் போகிறீர்களா? எதுவாக இருந்தாலும் தோட்டத்தை விட்டுவிடாதீர்கள். பசுமையோடு வெளிச்சத்தையும் சேர்த்துப் பிரகாசமாக்கி பாருங்கள்! எல்லாம் உங்கள் கையில்!Post a Comment

Protected by WP Anti Spam