By 11 June 2020 0 Comments

ஹார்ட்டிகல்ச்சர்!! (மகளிர் பக்கம்)

செடி வளர்ப்பு என்பதே ஆத்மார்த்தமாக செய்யப்படும் ஒரு பொழுதுபோக்கு. ஒரு செடி நன்றாக பூத்துக் குலுங்கும்போது மனதிற்கு ஆனந்தமும், அதுவே அந்தச் செடி பட்டுப்போனால் மனதிற்கு சோகமும் ஆட்கொண்டுவிடும்படியான நம் மனதோடு உறவாடும் ஒரு கலை ஆகும். கடந்த மாதங்களில் செடிகளை பாதுகாப்பாக பேணி வளர்ப்பதை பற்றி விவரமாகத் தெரிந்து கொண்டோம். இந்த இதழில் அடுத்தக் கட்டமாக எப்படி பெரிய அளவில் பாதுகாக்க முடியும் என்பதை பற்றிப் பார்க்கலாம்.

செடிகள் காப்பகம் என்றால் என்ன? ஒரு சின்ன கேள்வி எழுகிறதா?
இது எப்படி சாத்தியப்படும்? அப்படியே சாத்தியப்பட்டாலும் எவ்வாறு அதை அமைக்க முடியும் போன்ற சந்தேகங்கள் உங்கள் மனதில் எழலாம். ஆனால் நாம் கொஞ்சம் மனது வைத்தால் இது சாத்தியமே. செடிகள் காப்பகம் என்பது குழந்தைகள் காப்பகம் உடன் ஒத்து பார்த்தால் நம்மால் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.வீட்டில் யாரும் இல்லாத வேலையில் நம் குழந்தைகளை வீடு போலவே பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும் இடத்தில் விட்டுச் செல்கிறோம். அதைத்தான் குழந்தைகள் காப்பகம் என்று கூறுகிறோம். இந்தக் காப்பகம் நல்ல முறையில் இயங்கி வருவதால் இன்று பல பெற்றோர் கவலை இல்லாமல் தங்கள் வேலைக்கு சென்று வருகிறார்கள்.

இதுவே செடிகள் காப்பகத்திற்கும் அடிப்படை. தொடர்ந்து செடி வளர்ப்பில் ஈடுபடும்பொழுது செடிகளுக்கும் நமக்கும் ஒரு பந்தம் உருவாகிவிடுகிறது. சிலர் ஒவ்வொரு செடிக்கும் (தாவரப் பெயர்கள் அல்லாமல்) ஒரு செல்லப் பெயர் வைத்து அழைக்கும் அளவிற்கு அதனுடன் ஒன்றிப் போய்விடுவார்கள்.செடிகள் என்பது பொழுது போக்காக நாம் வளர்க்க தொடங்கினாலும் செடிகளும் உயிர் உள்ள ஓர் அம்சம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் அதற்கும் நமக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம் அதனால் தன்னைத் தானே நகர்த்திக் கொள்ள முடியாது என்பதே. இவை எல்லாம் நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள். செடிகள் வளர்க்கத் தொடங்கும் முன்பு செடிகளுக்கு தினமும் சில பராமரிப்பு அம்சங்கள் தேவைப்படுகின்றன.

சரி. இதை எல்லாம் மனதில் நிறுத்தியாயிற்று. செடிகள் வளர்க்கவும் தொடங்கியாயிற்று. நன்றாக வளர்ந்து கொண்டும் இருக்கின்றன. ஒரு செடி அல்லது ஒரு தொட்டி என்று ஆரம்பித்து இன்று 50-100 தொட்டிகள் ஆகிவிட்டன. ஒரு நாள் விடியலில் ஊரில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. மிக அவசரம். வீட்டில் உள்ள அனைவரும் செல்ல வேண்டிய கட்டாயம். திரும்பி வர ஒரு வாரமோ பத்து நாட்களோ ஆகலாம்.

கிளம்ப ஆயத்தமானவுடன், வீட்டை அப்படியே போட்டுவிட்டுப் போக முடியாது. சில அடிப்படை ஒழுங்குகள் செய்த பின்னரே கிளம்ப முடியும். வீட்டை ஒழுங்குபடுத்தியபின், செல்லப்பிராணி வைத்திருந்தால் அதை கென்னலில் விட முடிவு செய்தாயிற்று. இப்போதுதான் பூதாகரமாக ஒரு விஷயம் புலப்படுகிறது. 50-100 தொட்டிகளில் வைத்திருக்கும் செடிகளை யார் பார்த்துக் கொள்வார்கள்? யாரிடம் சொல்வது? ஓரிரு நாட்கள் என்றால் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சொல்ல முடியும்.வாயிற்காவலர் அல்லது ஓட்டுனரிடம் சொல்லலாம். மேலும் அவர்கள் நீரூற்றுதல் போன்ற அடிப்படைப் பராமரிப்பு செய்வார்கள். ஆனால் முழுப் பராமரிப்பு, அதாவது தகுந்த நேரம் அதற்கு உணவு அளித்து, நோய்த் தாக்குதல் இருந்தால் அதைக் கண்டுகொண்டு அதற்கேற்ற நிவாரணம் செய்து, வருமுன் காப்போம் வழிமுறைகள் தெரிந்து அதை சரியான முறையில் செயல்படுத்த யார் உள்ளார்கள்?

இத்தனை நாட்கள் ஆசையாக வளர்த்து வந்த இந்த அழகியத் தோட்டம் நாம் வரும்போது இப்படியே இருக்குமா? என்று சந்தேகம் நம் மனதில் வரக்கூடும். செடி வளர்த்து பழக்கப்பட்டவர்களுக்கு இது நன்றாகவே புரியும். சிலர் இதை எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல், தண்ணீர் ஊற்றி காப்பாற்ற யாரையாவது ஏற்பாடு செய்வார்கள். சிலருக்கு இந்த விஷயம் காரணமாக செடி வளர்ப்பது பொழுதுபோக்காக தோன்றியது போய் அதுவே பாரமாகத் தோன்றக்கூடும்.செடி வளர்ப்பு மேல் ஒரு சலிப்பு ஏற்படலாம். ஒரு சின்ன விஷயத்திற்காக அழகிய ஒரு பொழுதுபோக்கை விடவும் முடியாமல் அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துப் போகவும் முடியாத சூழ்நிலையில் மனம் ஊஞ்சலாடுகிறது. இதற்கு என்னதான் தீர்வு? சற்று யோசிப்போமா. ஆம். ஓர் அழகிய தீர்வு உள்ளது?

அதுதான் ‘செடிகள் காப்பகம்’ அமைத்தல். இந்தச் செடிகள் காப்பகம் அப்படி என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா? முடியும். உங்கள் பிரச்னைக்கு ஒரே தீர்வாக அமைக்க முடியும். செடிகள் காப்பகம் என்ற இந்தத் திட்டத்தை ஒரு தோட்டக்கலை நிபுணர்கள் அமைப்போ அல்லது செடிகள் விற்பனை செய்யும் நர்சரிகளோ அமைக்க முடியும். இந்தச் செடிகள் காப்பகம் இரண்டு வழியாக செயல்பட முடியும்.நீங்கள் ஊரில் இல்லாத சமயங்களில் உங்கள் இடத்திற்கு வந்தே தினமும் ஆட்கள் அனுப்பி பராமரிக்கலாம் அல்லது ஊர்களில் குறைவான தொட்டிச் செடிகள் இருக்கும் பட்சத்தில் நீங்கள் அவர்கள் இடத்திற்கு சென்று செடிகள் வைத்துவிட்டு வரலாம். நீங்கள் ஊரில் இருந்து திரும்பி வந்ததும் அதைத் திருப்பி எடுத்துச் செல்லலாம். முதல் கட்டமாக நர்சரிகள் அல்லது தோட்டக்கலை நிபுணர் அமைப்போ இதை அமல்படுத்தலாம்.

ஏனென்றால் இவர்களுக்கு செடிகள் பற்றிய அறிவியலும் தெரிந்து இருக்கும் என்பதால் மேலும் நர்சரிகளில் இதற்காக பிரத்யேக இடம் வைத்து பராமரிக்கும் இட வசதியும் இருக்கும். மேலும் செடிகளில் ஏதாவது பிரச்னை வந்தால் அந்த நிபுணர்களை அழைத்து ஐயம் தீர்த்துக்கொள்ள முடியும். இயற்கை சார்ந்தே அமைவதுதான் இந்த செடி வளர்ப்பு. அதனால் செடிகளுக்கு நம் கைக்கு அப்பாற்பட்டு ஏதாவது நடக்கலாம்.ஆனால் இந்தச் செடிகள் காப்பகம் மூலம் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்து தர முடியும். செடிகள் காப்பகத்தின் அடுத்தக் கட்டமாக வளர்ந்து அதுவே செடிகள் நல மையமாக மாறவும் வாய்ப்பு உள்ளது. இந்தச் செடிகள் காப்பகம் நிறுவுவதால் செடி வளர்ப்பவர்களுக்கும் நன்மையே. அதே நேரம் நர்சரி மற்றும் தோட்டக்கலை ஆலோசகர்களுக்கும் நன்மையே.செடிகள் வளர்த்தல் ஒரு மனவளக் கலை. பிரபஞ்சத்திடமும் பூமித் தாயிடமும் தொடர்பு உள்ள ஓர் உயிரோட்டம் உள்ள கலை. இத்தனை நாட்கள் என் சிந்தனைகளை பொறுமையாக படித்தும் அதற்கு கடிதங்கள் எழுதியும் என்னை ஊக்குவித்தும் என்னுடன் பயணித்து வந்த வாசக உள்ளங்களுக்கும் இந்த வாய்ப்பை ஏற்படுத்தியதற்கு ‘குங்குமம் தோழி’ குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றி!Post a Comment

Protected by WP Anti Spam