By 17 June 2020 0 Comments

எதுவும் நடக்கட்டும்… எப்படியும் நடக்கட்டும்… ஹக்குனா மட்டாட்டா!! (மருத்துவம்)

ஆல் இஸ் வெல் (All is well) மாதிரி இதுவும் ஒரு மந்திர சொல்தான். இனி கவலை ஏதும் இல்லை (No worries) என்பதே ஹக்குனா மடாடா என்னும் வார்த்தையின் பொருள். ‘தி லயன் கிங்’ என்ற குழந்தைகளுக்கான ஆங்கில திரைப்படத்தின் மூலம் பிரபலமான இந்த வார்த்தை, இப்போது பெரியவர்களுக்கும் ஃபேவரைட்டான வார்த்தையாக மாறி விட்டது. தன் தந்தை சிங்கத்தை இழந்து வாடும் குட்டிச் சிங்கம் சிம்பாவை ‘ஹக்ஹக்குனா மடாடா’ என்னும் வார்த்தைகளால் தேற்றி உற்சாகப்படுத்தி வாழ வைக்கிறார்கள் அந்த குட்டி சிங்கத்தின் நண்பர்களான டிமோன் மற்றும் பூம்பா ஆகியோர். அந்த உற்சாகத்தில் கம்பீரமாக வளர்ந்து பின் சிம்பா அந்த காட்டின் ராஜாவாகி விடுவதுதான் கதை.

‘ஹக்குனா மட்டாட்டா’ சிம்பாவிற்கு மட்டுமல்ல: நம் வாழ்விற்கும் தேவையான அடிப்படை மந்திரங்களுள் ஒன்று என்று சொல்லலாம். மனிதனின் எதிரிகள் இரண்டு. ஒன்று பயம். மற்றொன்று கவலை. பயம் வலிமைமிக்க நோயாகும். கவலை மெல்ல மெல்ல அரிக்கும் நோயாகும். பயத்தாலும் கவலையாலும் மனிதன் தன் வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்கிறான். மனிதன் சுற்றி இருப்பவர்களின் நிம்மதியையும் கெடுத்துவிடுகிறான். மனிதனை அலைக்கழிக்கும் மனநோய் கவலையாகும். கவலைப்படும் மனிதன் நாளடைவில் நோயாளியாகிறான். எண்ணங்கள் நமது உடலில் ரசாயன அமைப்பையே மாற்றும் வல்லமை படைத்தவை. கவலையினால் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் என பல நோய்களுக்கும் ஆளாகிறோம். கவலை உண்டு பண்ணும் பல நோய்களில் முக்கியமானது தலைவலி.
தேர்வு எழுதிவிட்டு முடிவு என்ன ஆகுமோ? என்று கவலை கொள்வதால் தேர்வின் முடிவு மாறிவிடாது. வெறுமனே கவலைப்படுவதால் மட்டுமே பிரச்னைகள் தீர்ந்துவிடாது.

பெரும்பாலான பயமும் கவலைகளும் நம் அதீத கற்பனையினால் விளைபவைதான். அச்சம் ஒரு நஞ்சு. நோயினால் இறந்தவர்களை விடவும் சாவின் பயத்தால் இறந்தவர்கள் தான் அதிகம். எதற்கெடுத்தாலும் கவலைப்படுகிறவர்கள் பிறரது கவனத்தை ஈர்ப்பதற்காகவும், பாதுகாப்பிற்காகவும்., அரவணைப்புக்காகவும் ஏங்குகிறவர்கள் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். கடல் முழுதும் தண்ணீர் இருந்தாலும் கப்பலுக்குள் கடல் நீர் புகாத வரையில், கப்பல் மூழ்கிப் போவதில்லை. அதேபோல மனம் என்ற கப்பலுக்குள் கவலை என்ற ஓட்டை ஏற்படாதவரை எந்த உலகப் பிரச்னைகளும் நம்மை அசைக்க இயலாது.

‘மனிதனின் எண்ணங்களே மனிதனை உருவாக்குகின்றன’ என்பது புத்தரின் பிரபலமான வாசகமாகும். உண்மைதான். எண்ணம்தான் எல்லாவற்றிற்கும் ஆணிவேர். எண்ணம் மகத்தான சக்தி கொண்டது. மாபெரும் சாதனைகளைப் புரிய வல்லது. எண்ணங்கள்தான் சக்தியாக உடலில் மாறுகின்றன. எண்ணம் ஒரு தீப்பொறி போல. தீப்பொறி விழுந்ததும் மெல்ல கனிந்து பின் புகைந்து பின் நன்கு கனன்று எரியும். அது நல்ல எண்ணமாக இருந்தாலும் சரி. எதிர்மறை எண்ணமாக இருந்தாலும் சரி.

மனோ தத்துவ நிபுணர் ஆட்லர் சொல்லிய இரு தவளைகள் கதையை ஏற்கனவே நீங்கள் படித்திருக்கலாம். ‘இரண்டு தவளைகள் மோரில் தவறி விழுந்துவிட்டன. அதில் ஒரு தவளை, ‘அவ்வளவுதான்… நான் செத்தேன்’ என்று புலம்பியது. கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது, எனவே, அதன் கையும் காலும் வலுவிழந்தன. அது சற்று நேரத்திற்கெல்லாம் மோருக்குள் மூழ்கி இறந்தது. இன்னொரு தவளை இதிலிருந்து எப்படியாவது நான் தப்பிக்க வேண்டும் என்று எண்ணியது. கையையும், காலையும் தொடர்ந்து உதைத்துக்கொண்டே இருந்தது. இப்படி உதைத்துக் கொண்டதில் சற்று நேரத்தில் மோரிலிருந்து வெண்ணெய் உருவாகியது. அந்த தவளை வெண்ணெயின் மீது அமர்ந்து ஒருவழியாக தப்பி வெளியேறியது. அதன் நம்பிக்கையே அதன் உயிரைக் காப்பாற்றியது. வெறும் கவலை கொள்வதால் பிரச்னைகள் மேலும் சிக்கலாகத்தான் மாறுமே ஒழிய தீர்ந்துவிடாது என்பதையே இக்கதை நமக்கு விளக்குகிறது.

இதையேதான் கண்ணதாசன், ‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்… வாசல் தோறும் வேதனை இருக்கும்… வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. எதையும் தாங்கும் இதயம் இருந்தால், இறுதி வரைக்கும் அமைதி பெறலாம்’ என்று எழுதி இருப்பார். நம் துன்பங்களை பெரிதுபடுத்தக் கூடாது. பெரிதுபடுத்தினால் துன்பம்தான் பெருகும். நன்மையையும் மகிழ்ச்சியையும் பெரிதுபடுத்தும்போது நமக்கு நன்மையும் நம்மைச் சுற்றிலும் மகிழ்ச்சியும் ஏற்படும். மனம் ஒரு தோட்டம் போல. நாம்தாம் தோட்டக்காரர்கள். என்ன விதையை தேர்ந்தெடுக்கிறோம் என்பது நம்மிடம் தான் இருக்கிறது. நாம் எப்படி இருக்கிறோமோ அதே போன்ற எண்ண அலைகளை நம்மைச் சுற்றிலும் ஏற்படுத்தி விடுகிறோம். உற்சாகமான ஒரு குழந்தையைப் பார்க்கும்போது, நமக்குள்ளும் அந்த உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.

இதேபோல் இறப்பு நிகழ்ந்த இடத்திற்குச் சென்றால் இறந்தவர் நமக்குத் தெரியாதவர் எனினும் அங்கிருப்பவர்களின் துக்கம் நம்மையும் சோகமான மனநிலைக்குக் கொண்டு சென்றுவிடும். ஆம்… எண்ணங்களின் சக்தி நம்மைச் சுற்றி பரவுகிறது. பிறரையும் பாதிக்கிறது. எண்ணங்கள் பிற மனிதர்களிடம் வாய்ச்சொல் மூலம் மட்டும்தான் பரவுகின்றன என்பதில்லை. சொற்களுக்கு அப்பாற்பட்ட ஒருவித சக்தி மூலம் பரவுகின்றன. எண்ணம் காந்த சக்தி கொண்டது. ஆகவே, நமது எண்ணங்கள் அதன் விளைவுகளை புறச்சூழ்நிலையில் உருவாக்கும். வாழ்க்கையை நாம் எண்ணுகிறபடி நாம் அமைக்க முடியும். நாம் எங்கே போக ஆசைப்படுகிறோமோ, என்னவாக ஆக வேண்டும் என நினைக்கிறோமோ எல்லாவற்றுக்கும் பாதை பிறக்கும். நாம் எதிர்மறை எண்ணங்களை மனதில் தீவிரமாக நினைத்திருந்தால் அதன்படியே நடக்கும். ‘மனிதன் எங்கே போக விரும்புகிறானோ அங்கேதான் அவனது இருப்பிடம்’ என்று வான்பிர்ன் எனும் ஜெர்மன் நாட்டு விஞ்ஞானி கூறியுள்ளார்.

விவேகானந்தர் சிறுவயதில் தம் நண்பர்களுடன் விளையாடுகையில் ராஜா-மந்திரி விளையாட்டைத்தான் விரும்பி விளையாடுவாராம். அதிலும் எப்போதும் ராஜாவாக இருக்கவே விரும்புவாராம். அதனால்தானோ என்னவோ வளர்ந்த பின்னும் அதே ஆளுமைத் திறனோடு இருந்தார். நம்பிக்கை கவலைகளை நீக்கி மன உறுதி அளிக்கும். நம்பிக்கை நோய்களை குணப்படுத்தும். ஒருமுறை கை, கால்களில் முடக்கப்பட்டு, நடக்க முடியாதவர்கள் இருக்கும் மருத்துவமனையில் தீ பிடித்துக்கொண்டதாம். ‘தீ… தீ…’ என்ற அலறலைக் கேட்டு அங்கிருந்தவர்கள் எல்லாரும் உயிர் தப்பினால் போதும் என்று எழுந்து ஓடத் துவங்கினராம். இத்தனை நாள் எழுந்து கூட நிற்க இயலாதவர்களால் எப்படி எழுந்து ஓட முடிந்தது? உயிர் வாழ வேண்டும் என்ற எண்ணம்தான் அவர்களுக்கு அந்த மகத்தான சக்தியை கொடுத்தது. இந்த சக்தி இத்தனை நாளும் அவர்களுக்கு உள்ளே தானே இருந்தது.

ஆனால் ஏன் நடக்கவில்லை? ஏன் என்றால் தங்களால் நடக்க முடியாது என்று இதுவரை அவர்கள் எதிர்மறையாக நம்பிகொண்டு இருந்துவிட்டனர். அவர்களது நம்பிக்கை இன்மையே அவர்களை ஊன்றுகோலை நாட செய்துவிட்டது. மருத்துவமனையில் இருந்து தப்பிய பலர், நாளடைவில் இயல்பாகவே நடக்க துவங்கிவிட்டனராம். எண்ணம் நம்பிக்கையாய் மாறும்போது பல அதிசயங்களை நிகழ்த்தும். நம்மில் பலரும் இப்படித்தான் எண்ணங்களால் முடக்கப்பட்டுள்ளோம்.
பிரச்னைகளில் இருந்து வெளி வர முடியும் என்ற எண்ணத்தை மனதினுள் நுழைத்து, தொடர்ந்து முடியும் முடியும் என்று நம் மனநிலையை உறுதிப்படுத்தும்போது, பிரச்னைகளில் இருந்து வெளி வரத் தானே வழி பிறக்கும். முடியும் என்ற எண்ணம் திரும்ப திரும்ப எழும் போது மனதில் நம்பிக்கையாய் அது வேர் விடுகிறது. முடியாது என்று முன்பே கூறிவிட்டால், போகிற பாதையின் முகப்பிலேயே நாம் கதவை இறுகச் சாத்தி விடுகிறோம்.

இரண்டாம் உலக மகா யுத்த சமயத்தில் பசுபிக் கடலில் சிறிய படகில் வந்தவர்கள் திசை தெரியாது தத்தளித்தனர். உணவோ, தண்ணீரோ எதுவுமே அவர்களிடம் இல்லை. அனைவரும் நம்பிக்கை இழந்து, கவலையோடு இருந்த போது, அவர்களிடம் இருந்த பைபிள் புத்தகத்தில் இருந்த வாசகம்தான் அவர்களை வாழ வைத்தது. ‘தண்ணீருக்கு எங்கே போவேன்? சாப்பிட என்ன செய்வேன்? என்றவரிடம், கவலைப்படாதே’ என்ற மாத்யூவின் வாசகங்களை அவர்கள் படித்தனர். உடன் அவர்களுக்கு, எப்படியாவது தாங்கள் பிழைத்துவிடுவோம். தங்களுக்குத் தேவையானது அனைத்தும் கிடைத்துவிடும் என்று நம்பிக்கை ஏற்பட ஆரம்பித்தது.
கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மழை பெய்து அவர்களின் தண்ணீர் பிரச்னை தீர்ந்ததாம். அதன் பிறகு பாதுகாப்பு விமானங்களால் அவர்கள் காப்பாற்றப்பட்டனர். அவர்களின் நம்பிக்கைதான் செயலாக வடிவங்கொண்டு துணை புரிந்தது எனலாம்.

வாழ்க்கை சிறு பிரச்னைகள், பெரும் பிரச்னைகள் என்று பிரச்னைகளாலே நிறைந்ததுதான். சிக்கல்களை கண்டு அஞ்சுவதற்குப் பதில் துணிந்து எதிர்கொள்வது நல்லது. சில சிக்கலான பிரச்னைகள் தோன்றும்போது. அதைப் பல வழிகளிலும் அலசுங்கள். தீவிரமாக எண்ணிவிட்டுப்பின் விட்டுவிடுங்கள். அதை மறந்துவிட்டு வேறு வேலையில் ஈடுபடுங்கள். மனம் தானாகத் திடீரென்று வழிகாட்டும் என மன இயல் வல்லுனர்கள் கூறுகின்றனர். பிரச்னைகள் வரும்போது கவலைப்பட்டு கொண்டு இருக்காமல், குழப்ப நிலையில் இருந்து மீண்டு தெளிவுகொள்ள வேண்டும். என்ன முடிவை விரும்புகிறோம் என தீர்மானிக்க வேண்டும். பின் அதற்கான பல வழிமுறைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். சில சமயம் நமது உணர்ச்சிகள் நம் முடிவெடுக்கும் திறனை பாதிக்கும். சொந்த விஷயமாயிருப்பின் நெருங்கிய நண்பர்களுடன் ஆலோசனை கேட்கலாம். பொது விஷயமாயிருப்பின் சிறந்த அறிஞர்களை கலந்து ஆலோசிப்பது நல்லது.

மனம் துயரத்தில் இருக்கும்போது, இனிமையான பாடல்களை கேளுங்கள். மனதில் துயர் குறைவதை உணர முடியும். சில நேரங்களில் நாம் உடுத்தும் புதிய ஆடைகள் கூட நமக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். இதமான படுக்கையில் படுத்துஉறங்குங்கள். நல்ல பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது நமது ஆக்க சக்திகளை வெளிக் கொண்டு வர உதவும். சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம் கவலைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம். அது மட்டுமின்றி, கவலைகளில் இருந்து வெளி வர தன்னம்பிக்கை மிக அவசியம். தன்னம்பிக்கையும் தைரியமும் வளர, எப்போதும் சிரித்த முகமாய் இருங்கள். பிறருடன் பேசும்போது நிதானமாக பேசுங்கள்.

பிறர் கண்களை பார்த்து பேசுங்கள். நல்ல நண்பர்களுடன் பழகுவது, நல்ல புத்தகங்கள் படிப்பது என்று மனதை செம்மையாக வைத்துக் கொள்ளுங்கள். நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியான மனநிலையை உள்ளிருந்து ஏற்படுத்துவதன் மூலம் புறச் சூழலின் கொடுமையைச் சற்றுக் குறைக்க முடியும். பிரச்னை என்ன? பிரச்னை தீர சிறந்த வழி என்ன? முடிவென்ன? என்று ஆராய்ந்து பிரச்னையை முடிக்கும் திறனை பழக்கமாக்கிக் கொண்டால், வாழ்க்கை வரப்பிரசாதமாகிவிடும். கவலைக்கு மாற்று நம்மிடம் உள்ள வசதிகள், நம் குடும்பத்தினரின் அன்பு என நம்மைச் சுற்றியுள்ள நல்ல விஷயங்களை பற்றி சிந்திப்பதாகும். அந்த நல்ல விஷயங்களுக்கு நன்றி சொல்வதாகும். ‘தேடிச் சோறு நிதந்தின்று – பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று’ என வாழாமல் கவலைகள் நீக்கி நல்ல எண்ணங்களோடு வாழ்வோம். பிறரையும் வாழ வைப்போம்!Post a Comment

Protected by WP Anti Spam