ஆயிரமும் காரணங்களும் !! (கட்டுரை)

Read Time:14 Minute, 45 Second

தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளம் தொடர்பான அறிவிப்பும் பேச்சுவார்த்தைகளும் மறுப்புகளும் போராட்டங்களும் வாக்குறுதிகளும் அமைச்சரவைப் பத்திர மும் என, ஐந்து வருடங்கள் கடந்து சென்றுகொண்டிருக்கின்றன.

2015ஆம் ஆண்டு, பொதுத்தேர்தல் பிரசார மேடை களில் வழங்கப்பட்ட வாக்குறுதி, 2020 பொதுத்தேர்தல் பிரசாரங்களிலும் முக்கிய இடம்பிடித்துக் கொண்டுள்ளது. 2020 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், அதைக் கொடுத்துவிட்டால், தேர்தலில் பெரு வெற்றியைப்பெற்று விடலாம் என்ற எண்ணத்தில், 2020 ஜனவரியில் முன்வைக்கப்ப ட்ட அமைச்சரவைப் பத்திரமும் இப்போது அர்த்தமற்றதொன்றாகவே தோன்றுகிறது.

இதைப் பெற்றுக் கொடுத்துவிடுவதால், தோட்டத் தொழிலாளர்கள் நன்மையடைவ துடன், அரசியல் இலாபமும் கிடைக்கும். இதற்கான இறுதிச் சந்தர்ப்பம் நாளை வெள்ளிக்கிழமை (10) ஆகும்.

ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி, அதற்கு முதல் மாதச் சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளும் நிலையில், ஜூலை மாதச் சம்பளத் தொகையில் அது சேர்க்கப்படுமானால், ஓகஸ்ட் 10ஆம் திகதியே கிடைக்கும். அப்போது (ஓகஸ்ட் 05) பொதுத்தேர்தல் நிறைவுபெற்றிருக்கும்.

எனவே, அரசியல் இலாபம் இல்லாது, தொழிலாளர் நலனில் அக்கறை கொண்டு, பொதுத்தேர்தலுக்குப் பின்னரான மாதங்களில், ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என, எதிர்பார்க்க முடியாது. புதன்கிழமை (01) நடைபெற்ற தமிழ் ஊடகங்களின் ஊடகப் பிரதானிகள் உடனான சந்திப்பில், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஒரு காரணத்தைக் கண்டுபிடித்தார். அதுதான், தேர்தல் காலத்தில் இந்தத் தொகை வழங்கப்படுமாக இருந்தால், அதைத் தேர்தல் ஆணைக்குழு, வாக்காளருக்கான இலஞ்சம் வழங்கலாகப் பார்க்கக் கூடும் என்பதாகும்.

ஏற்கெனவே, மார்ச் முதலாம் திகதி முதல், நாள் ஒன்றுக்கு, ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளம் வழங்கப்படும் என, அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ கோஷத்தோடு, ஜனவரி 15ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஏப்ரல் 10ஆம் திகதி வழங்கப்பட்டிருக்கக் கூடிய மார்ச் மாதச் சம்பளத்தில் அது, கிடைத்திருக்க வேண்டும்.

அதன்போது ஏப்ரல் 25ஆம் திகதி, பொதுத்தேர்தல் என அறிவிக்கப்பட்டது. எனவே, ஏப்ரல் 10ஆம் திகதி, தேர்தல் பிரசார காலமாகவே இருந்திருக்க வேண்டும்.

எனவே, மார்ச் 11இல் தேர்தல் ஆணைக்குழு காரியாலயத்தில் நடைபெற்ற கட்சி செயலாளர்கள் கூட்டத்தில், இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதன்போது பதிலளித்த தேர்தல் ஆணைக்கு ழுவின் தவிசாளர், “பொதுத்தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே அமைச்சரவை அனுமதிக்கப்ப ட்ட இந்த விடயத்தை, அதுவும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான விடயத்தை, ஆணைக்குழு எந்தவிதத்திலும் தடுக்காது” என, உறுதி வழங்கப்பட்டது.
எனவே, இப்போது தேர்தல் காலத்தில், இந்தச் சம்பளவுயர்வு வழங்கப்பட்டால், தேர்தல் ஆணைக்குழு, அதை இலஞ்சம் எனக் குற்றம் சுமத்தலாம் என்ற பிரதமரின் கருத்து, ஒரு நொண்டிச் சாட்டாகும்.

ஏனெனில், இதற்கு முன்னராகவே உறுதி செய்யப்பட்ட மார்ச் முதலாம் திகதி முதல் கொடுக்கப்படாமைக்கான காரணமாக, கொவிட்- 19 தொற்றுப் பரவல் முன்வைக்கப்பட்டது. அதுவும் நொண்டிச்சாட்டுத்தான் என்பது, அப்போதே தெளிவாகியது. ஏனெனில், கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, ஊரடங்கு அறிவிப்பு வந்ததே, மார்ச் 19ஆம் திகதி இரவுதான். எனவே, மார்ச் முதலாம் திகதியே, அதற்கான காரணம் கண்டறியப்பட்டமை, கண்துடைப்பேயன்றி வேறில்லை.

இப்படிக் காலத்துக்குக் காலம், ஆயிரம் ரூபாய் வழங்கப்படாமைக்கு, அரசாங்கம் பலவித காரணங்களைக் கண்டறிய முற்படுகிறதே தவிர, அதைப் பெற்றுக் கொடுப்பதற்கான பொறிமுறை, அரசாங்கத்திடம் இல்லை என்பதே உண்மை. இந்த, அரசாங்கத்திடம் மட்டுமல்ல; இதற்கு முன்னரிருந்த அரசாங்கங்களிடமும் கூட இருக்கவில்லை.

1992ஆம் ஆண்டு, பெருந்தோட்டங்கள் தனியார் மயப்படுத்தலுக்கு உள்ளானதன் பின்னர், பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பள விடயத்தில், அரசாங்கம் கொண்டிருந்த கட்டுப்பாடுகள், அதிகாரங்கள் எல்லாமே இழக்கப்பட்டன. சம்பள நிர்ணய சபைச் சட்டத்தின் பிரகாரம், அரசாங்கமும் ஓர் அங்கமாகப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் வாய்ப்பும் இழக்கப்பட்டது.

கூட்டு ஒப்பந்த அடிப்படையில், தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் தீர்மானிக்கப்படும் முறைமை, நடைமுறைக்கு வந்ததோடு தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் தோட்ட முதலாளிகளும் கூடிப்பேசித் தீர்மானித்துவிடுவதால், அரசாங்கம் அந்த விடயத்தில் ஒரு பார்வையாளர் மட்டுமே.
ஏதேனும், அரசியல் அழுத்தங்களால் தொழில் அமைச்சரோ, அவரின் பிரதிநிதிகளோ அந்தப் பேச்சுவார்த்தைகளின் போது அல்லது, ஒப்பந்தம் கைச்சாத்திடும்போது, பார்வையாளர்களாக அமர்ந்திருக்கின்றார்களே அன்றி, அவர்களுக்கு அந்தத் தொகையைத் தீர்மானிக்கும் எந்த அதிகாரமும் இருந்திருக்கவில்லை.

பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்திருக்கும் தொழிற்சங்கப் பிரதிநிதி, அமைச்சராகவும் (தொழில் அமைச்சர் அல்லாத) செயற்பட்டு வந்ததால், அரசாங்கத்தின் தலையீட்டுடன் சம்பளம் பேசித்தீர்மானிக்கப்பட்டதான ஒரு மாயை, உருவாக்கப்பட்டு வந்தது.

அந்த மாயையை மேலும் விரிவாக்க, தொழிற்சங்கப் பிரதிநிதியான அமைச்சர், அப்போது ஜனாதிபதியாக, பிரதமராக இருப்ப வர் முன்னிலையில், தோட்ட முதலாளிகளுடன் கையொப்பம் இட்டு, பந்தா காட்டிவிடுவதால் அரசாங்கம் தலையிட்டு, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டதான ஒரு தோற்றப்பாடு, மக்களுக்கும் காட்டப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்தில் என்ன உள்ளது என்பதை, ஜனாதிபதியோ, பிரதமரோ அறியார்; அதற்கான தேவையும் அவர்களுக்கு இல்லை.

இப்போதைய கள நிலைவரங்களின்படி, காட்சிப்பொருளாகக் கையொப்பம் இடும் தரப்பினர் நடுவே நிற்கும் நிலைமை, ஜனாதிபதிக்கோ, பிரதமருக்கோ இல்லை. தாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளம் பெற்றுக் கொடுப்போம் என, எதிர்க்கட்சி வரிசையில் இருந்துகொண்டு நாடாளுமன்றத்தில் கொச்சைத் தமிழில் அடிக்கடி கூறியவர், மஹிந்தானந்த அளுத்கமகே ஆவார். அவரும் ஒரு தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கத் தலைவர் என்பது பலரும் அறியாத செய்தி. அந்தச் சங்கத்தின் பதிவு செய்யப்பட்ட ‘இடாப்பு’ப் பெயர் என்ன என்று ஊர்ஜிதமாகத் தெரியாத நிலையில், நாவலப்பிட்டி பகுதியில் ‘மஹிந்தா னந்த யூனியன்’ என, அதன் வீட்டுப் பெயரில் தொழிலாளர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின்போது, ஆயிரம் ரூபாய் சம்பள விவகாரத்தைத் தாங்கள் வந்ததும் நடைமுறைப்படுத்துவோம் என்றவர்கள், தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நாளில், அங்கே கண்ணில்பட்ட பெண் தோட்டத் தொழிலாளி ஒருவரைத் தன் அருகே அழைத்த ஜனாதிபதி, அவரது சுக நலன்களை விசாரித்ததுடன் தேர்தல் முடிந்த கையோடு, நவம்பர் 19ஆம் திகதி முதல், அதைப் பெற்றுக் கொடுப்பதாக உறுதி அளித்ததாக அப்போது ஊடகங்களில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

இது நடைமுறைச் சாத்தியமில்லாதது என, அறிந்துகொண்ட கோட்டாபய ராஜபக்‌ஷ, தான் ஜனாதிபதியானதும் இதைச் செய்ய முயன்று இருக்கலாம். இதன்போதும் அவருக்காக, அங்கும் இங்கும் ஓடித்திரிந்தவர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆவார். அதன் பின்னர், ஜனாதிபதி ஓர் ஆய்வைச் செய்திருக்க வேண்டும். அப்போதே இந்தப் பிரச்சினையின் ஆழ – அகலங்களை அவர் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

அதற்கிடையில், பொதுத்தேர்தல் காலமும் நெருங்க, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சி எடுத்துள்ளதான தோற்றப்பாட்டக் காட்ட, அவரது முன்னெடுப்பிலேயே அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்ப ட்டது. அதற்கு அனுமதியும் கிடைத்தது.

அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி கிடைத்தவுடன் வழங்கப்படுவதாக இருந்தால், இந்த நாட்டில் எத்தனையோ விடயங்கள் இன்று நிறைவு பெற்று இருக்கும். கடந்த அரசாங்கத்தில் நாளாந்த மானியமாக ரூபாய் 50 கொடுப்பதற்கு, பெருந்தோட்டத்துறை அமைச்சரும் அப்போதைய பிரதமரும் தனித்தனியே அத்தகைய பத்திரம் சமர்ப்பித்து, அவை அனுமதிக்கப்பட்ட போதும், இன்று வரை அது கொடுக்கப்படவில்லை. எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு நடைமுறை அப்படி ஆனதல்ல என்பதை, இப்போதே அரசாங்கங்கள் உணரத் தொடங்குகின்றன.

தாங்கள் என்னதான் அமைச்சரவையில் தீர்மானம் எடுத்தாலும், ஆயிரம் ரூபாயை அடிப்படைச் சம்பளமாகக் கொடுப்பதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம், அந்தக் கம்பனிகளை நடத்தும் தோட்ட முதலாளிகள் கைகளிலேயே உள்ளது.

கம்பனிகளைப் பொறுத்தவரை, சம்பளச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச வேதனமான ரூபாய் 400க்கும் மேலான ஒரு தொகையாக ரூபாய் 700ஐ அடிப்படைச் சம்பளமாக இப்போது கொடுக்கின்றன. அதுவும் ஒப்பந்த தொழிலாளர்கள் விடயத்தில், குறைந்தபட்ச சம்பளச் சட்டம், அவ்வளவு இறுக்கமானதாகவும் இல்லை.

ஆனால், அவர்கள் நிலையில் சட்டத்தை மீறவில்லை என நினைக்கின்றனர். ஆனால், பொதுவான சட்டமான இதில் அடங்கும் தோட்டத் தொழிலாளர்கள், அப்படி ஒன்றும் இலகுவான வேலையில் ஈடுபடவில்லை. அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அல்ல; அதற்கு மேலும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உணர்வு முதலில் வரவேண்டும். அந்த உணர்வை, ஆட்சியாளர்கள் பெறாதவரை இந்தப் பிரச்சினை அவர்களுக்குப் பத்தோடு பதினொன்றுதான்.

ஒன்றில், அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயைப் பெற்றுக் கொடுக்க, குறைந்த பட்ச சம்பளச் சட்டத்தைத் திருத்தி, ஆயிரமாக அதை உயர்த்த வேண்டும். இதனால் தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரம், இன்று ஏனைய தொழிற்றுறை நாட்கூலித் தொழிலாளர்களும் நன்மைப் பெறுவர். அல்லது, ஆயிரம் ரூபாயையும் விட அதிகமாக நாளாந்தம் உழைக்கக்கூடியதாக, தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உடமையாளராக்க வேண்டும். இதைத் தென்பகுதி சிங்கள மக்களுக்கு, அரசாங்கங்கள் செய்து கொடுத்துள்ளன.

எனவே, பொறுப்புள்ள அரசாங்கம் எனில், பொருத்தமான தீர்வை முன்வைக்குமேயன்றி, கொடுக்காமல் இருப்பதற்கான காரணங்களைத் தேடித் தேடிக் கண்டறியாது என்பதே யதார்த்தமானது ஆகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெளியே வாருங்கள்… தைரியமாக பயணியுங்கள்!! (மகளிர் பக்கம்)
Next post நலம் தரும் சோயா!! (மருத்துவம்)