வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன…!! (மருத்துவம்)

Read Time:13 Minute, 21 Second

‘வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன இங்கு யார் சுமந்திருப்பார் இச்சரக்கை மங்காத சீரகத்தைத் தந்தீரேல தேடேன் பெருங்காயம் ஏரகத்து செட்டியாரே’ என்றொரு பழம்பாடல் தமிழில் உண்டு.இந்தப் பாடல் அடிகளில் சொல்லப்படுகிற ஒவ்வொரு தாவரங்களும் மருத்துவத் தன்மை உடையது என்பதை நம் முன்னோர்கள் நன்கு உணர்ந்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அது நமக்கும் இன்று நன்றாகவே தெரியும்.

மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு. ‘சுக்கு இல்லா கஷாயம் இல்லா.’ அதாவது சுக்கு இல்லாமல் மருந்துகள் செய்ய முடியாது என்பது இதற்குப் பொருள். தமிழகத்தில், ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை’ என்றும் இதே பெருமை சொல்லும் வேறு ஒரு பழமொழியை நாம் பயன்படுத்தி வருகிறோம். இதனால் மருத்துவகுணம் நிறைந்த சுக்கின் மகத்துவம் நன்கு புரியும். ஆகவே, நாம் உணவில் இஞ்சியை அடிக்கடி சேர்த்துக் கொள்கிறோம். (உலர்ந்த இஞ்சியைத்தான் சுக்கு எனக் குறிப்பிடுகிறோம் என்பதை இளைய தலைமுறைக்கு
நினைவுபடுத்துகிறோம்).

சுக்கு முதுமையை வரவிடாமல் தடுக்கும் ஒரு காயகற்ப மருந்து. ஆகும். ‘காலையில் இஞ்சி… நண்பகல் சுக்கு… மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண… கோலை ஊன்றி குழைந்து நடந்தவர் கோலை வீசி குலாவி நடப்பாரே’ – என்ற முதுபெரும் மொழியில் இஞ்சி, சுக்கு மற்றும் கடுக்காய் ஆகிய மருந்துப் பொருட்களின் முக்கியத்துவம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இஞ்சியைத் தேனில் ஊற வைத்து அந்தத் தேனைத் தினமும் அருந்தி வர, செரிமானப் பிரச்னைகள் முற்றிலும் குணமாகும் என்பது நிதர்சன உண்மை. பேருந்தில் பயணம் செய்கிறபோது ஒரு சிலருக்குத் தலைசுற்றல், வாந்தி மற்றும் ஒவ்வாமை(Allergy) ஏற்படும்.

இதனை மோஷன் சிக்னஸ்(Motion sickness) என்று சித்த மருத்துவத்தில் குறிப்பிடுவோம். கப்பல், விமானத்தில் பயணிக்கும்போதுகூட பலருக்கு இந்தப் பிரச்னை ஏற்படும். இவற்றைத் தவிர்ப்பதற்காகத்தான் பேருந்து நிலையங்களில் ‘ஏலம், சுக்கு சேர்த்த சில்லுக்கருப்பட்டி மற்றும் இஞ்சி முரப்பா ஆகியவற்றைத் தவறாமல் விற்பனை செய்துகொண்டு இருப்பார்கள். நமது உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்திடும் இவற்றிற்கு, ‘மோஷன் சிக்னஸ்’ எனக் குறிப்பிடப்படுகிற தலைசுற்றல், வாந்தி மற்றும் ஒவ்வாமை ஆகியவற்றைப் போக்கும் தன்மை உண்டு. அதனால்தான் இந்த எளிய மருந்துப் பொருட்கள் பேருந்து நிலையங்களில் இன்றும் விற்கப்படுவதைக் காண முடிகிறது.

சித்தா மற்றும் ஆயுர்வேதம் முதலிய பாரம்பரிய வைத்தியத்திலும், பாட்டி வைத்தியத்திலும் இவை மிகுந்த முக்கியத்தும் வாய்ந்த இடத்தைப் பெற்று உள்ளன. சுக்கு மல்லி காப்பி என்று ஒன்று குடிப்பது வழக்கம். சுக்கு மற்றும் தனியாவைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பால், சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து தயாரிக்கப்படுவது சுக்கு மல்லி காபி. உடல் வலியை நீக்குவதற்காக கிராமப்புறங்களில் தயாரித்து கொடுக்கப்படுகிற சுக்குமல்லி காப்பியில் இருந்துதான் களைப்பு நீக்கும் பல மருந்துகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.

பிரசவத்திற்குப் பின்னர் தாய்மார்களுக்குக் கர்ப்பப்பை சுருங்குவதற்கும், வயிற்றில் தோன்றுகிற வெள்ளைக் கோடுகள் மறைவதற்கும், தாய்ப்பால் அதிகமாக சுரப்பதற்கும், குழந்தைக்கு நோய் வராமல் தடுப்பதற்கும் நடகாய லேகியம் அல்லது பிரசவ லேகியம் கொடுப்பார்கள். சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில், இந்த லேகியம் சௌபாக்ய சுண்டி என அழைக்கப்படுகிறது. சௌபாக்யம் என்றால் எல்லா நலனும் என்று பொருள். சுண்டி என்பது சமஸ்கிருதத்தில் சுக்கின் பெயர். அதன் காரணமாகத்தான் அந்த மருந்தைக் குழந்தை பிறந்த பின்னர், இளம் தாய்மார்களுக்குக் கொடுத்து வந்தால் குழந்தை மற்றும் தாய்மார்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

இதனால்தான் இன்றைக்கு ‘மகப்பேறு பெட்டகம்’ என்று அரசாங்கம் கொடுக்கும் அந்தப் பெட்டகம் குழந்தைகளுக்கும் ஒரு கிஃப்ட் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால், அதில் இந்த சௌபாக்ய சுண்டி சேர்த்துக் கொடுக்கப்படுகிறது. கர்நாடகாவில் தட்சிண கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்டங்களில் மழைக் காலத்தில் பெரும்பாலான ஹோட்டல்களிலும்கூட சுக்கும், சித்தரத்தையும் சேர்த்து, ‘கஷாயம்’ என்ற பெயரில், பெரிய அளவில் விற்பனை செய்கின்றனர். ஏனென்றால், இவ்விரண்டு மருந்துப் பொருட்களைச் சேர்த்து கஷாயம் செய்து கொடுக்கிறபோது, அது மழைக்காலத்தில் ஏற்படுகிற ஜுரம், உடல் வலி, தசை வலி சளி பிடித்தல் ஆகியவற்றைப் போக்கும்.

மேலும் அவை வராமல் தடுக்கும். இத்தகைய காரணங்களினால், இதன் விற்பனை பெருமளவில் மழைக்காலத்தில் நடைபெறும். உடலில் எங்கேனும் வீக்கம், வலி, மற்றும் தலைவலி இருந்தால் சுக்கை அரைத்து பத்து போட பாட்டி சொல்வாள். இதனால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ரயில் மற்றும் பேருந்துகளில் நீண்ட நேரம் பயணம் செய்பவர்களுக்கும், பல மணி நேரம் கணிப்பொறி முன் அமர்ந்தவாறு, நாள் முழுவதும் பணியாற்றுபவர்களுக்கும் இந்தக் கஷாயம் செய்து கொடுக்க கால்களின் ரத்த ஓட்டத்தில் ஏற்படுகிற தடை மெல்லமெல்ல குறைந்து இயல்பு நிலையை அடையும் என்று சொல்வார்கள் ஆழ் ரத்த நாளங்களில் உண்டாகிற ரத்தக்கட்டு(Deep venous thrombosis) நோயைக் குணப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.

ஒற்றைத் தலைவலி என்று சொல்லப்படுகிற Migraine-ஐ அனைவரும் ‘ஒரு கொடிய நோய்’ என்ற கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டும். ஏனென்றால் சாதாரணமாக வேலை செய்பவர்கள் கூட இந்த ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டால் அன்றைக்கு முழுவதுமே அவருடைய வேலை பாதிக்கப்படும். வாந்தி எடுத்தால்தான் அத்தலைவலி குறையும் என்ற சூழலும் ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படுகிற இந்தத் தலைவலி மிகுந்த வேதனை தரும். இதைக் குணப்படுத்துவதற்கு 2 கிராம் சுக்குப் பொடியைத் தேனில் கலந்து காலை, மாலை என இரண்டு வேளையும் ஒரு மண்டலம்(40 நாட்கள்) சாப்பிட்டு வர, மைக்ரேன் என்ற இந்த ஒற்றைத் தலைவலி வருவது வெகுவாக குறைந்து விடும் என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

இத்தகைய பெருமை வாய்ந்த சுக்கை அடிப்படையாகக் கொண்டு, நவீன மருத்துவத்தில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
அவற்றில் ஒன்று, புற்றுநோய்க்குச் சிகிச்சை மேற்கொள்கிறபோது ஏற்படுகிற வாந்தி ஒக்காளம் தடுப்பதற்கு முன்னரே நாம் சொன்னது போல சுக்குப்பொடியைத் தேனில் கலந்து கொடுத்தால் வாந்தி ஒக்காளம் உண்டாவது தவிர்க்கப்படும். Analgesic, Anti-inflammatory என்று சொல்லப்படும் வீக்கம் காரணமாக உடலில் எங்கு வலி வந்தாலும் எங்காவது காயம்பட்டு அதனால் வீக்கமும் வலியும் இருந்தாலும், அவை வெளியில் தெரியாத ரத்தக் கட்டியாக இருந்தாலும் அதனைச் சுக்கு நீக்கும் என்பதை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்து நிரூபித்துள்ளார்கள்.

அதேபோல் இஞ்சி தேனூறல் செரிமானத்தை அதிகப்படுத்தி பசியைத் தூண்டி உடலில் வாதத்தைச் சமன்படுத்தும். சித்த மருத்துவத்தில், வாதம் பித்தம் கபம் ஆகிய மூன்றும் இயற்கை அளவில் இருக்க வேண்டும். இம்மூன்றின் இயற்கை அளவு மாறுகிறபோது நோய்களை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. உடலின் இயக்கங்களைத் தடுப்பதால் வரக்கூடிய நோய்கள், வலியை ஏற்படுத்தக்கூடிய நோய் ஆகியவற்றிற்குச் சிறந்த மருந்து என்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை. சுக்கில் நறுமண எண்ணெயும் Gingerol என்ற வேதிப்பொருளும் இருக்கிறது.
இந்த வேதிப்பொருள்தான் சுக்கினுடைய காரத் தன்மைக்குக் காரணமாக இருக்கிறது.

இரைப்பையில் இருக்கிற கிருமியை அழித்து, செரிமானத்தைச் சீராக வைத்துக்கொள்ள உதவுதல், வீக்கத்தைக் குறைத்தல் மற்றும் வலி நிவாரணியாக செயல்படல் ஆகிய தன்மையும் இதற்கு உண்டு. சில சுக்கு வகைகளில், நார்ச்சத்து அதிகமாகவும், Gingerol அளவு குறைவாகவும் இருக்கும். மாவு சுக்கு என்று அழைக்கப்படுகிற வகை எளிதாக பூச்சிகளின் தாக்கத்துக்கு உட்படுவதால் அதைச் சேமித்து வைக்க இயலாது.

தமிழ்நாட்டில் செங்கோட்டை, சத்தியமங்கலம் போன்ற மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரங்கள், கேரளாவின் வயநாடு மாவட்டம் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் வளர்க்கக்கூடிய இஞ்சி மிக நன்றாக இருந்தாலும், இன்று நமது உணவு மற்றும் மருந்துகளின் தேவைக்கு இந்தியாவில் போதுமான அளவு இஞ்சி விளைச்சல் இல்லை என்பதும், அதனால் நாம் இப்போது வெளிநாடுகளில் இருந்து இதை இறக்குமதி செய்யவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டு விட்டோம் என்பது வேதனைக்குக்குரிய விஷயம்.

கத்தரிக்காயில் எவ்வாறு நம் நாட்டு வகைகள் பல இருக்கின்றனவோ, அதுபோல சுக்கு செய்வதற்கென்றே சுக்குமாறன் என்ற ஒருவகை வயநாடு மாவட்டத்தில் பாரம்பரியமாக சாகுபடி செய்யப்பட்டு வந்திருக்கிறது. கரிமச்சத்து நன்றாக உள்ள நிலப்பகுதியில் சுக்கை விளைவித்து நம்முடைய நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குப்பைமேனிக்குள் இத்தனை மகத்துவமா?! (மருத்துவம்)
Next post சோதனைகளை சாதனைகளாய் மாற்றிய MICHAEL JORDAN!! (வீடியோ)