நடிகர் தனுசுக்கு ஆண் குழந்தை பிறந்தது ரஜினிகாந்த் தாத்தா ஆனார்
நடிகர் தனுசின் மனைவி ஐஸ்வர்யாவுக்கு சென்னை ஆஸ்பத்திரியில் நேற்று மாலை அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து ரஜினிகாந்த் தாத்தா ஆனார். நடிகர் தனுசுக்கும், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடத்தி வைத்தார். ஐஸ்வர்யா கர்ப்பமாக இருந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று பிற்பகல் பிரசவ வலி ஏற்பட்டது.
ஆண் குழந்தை
உடனடியாக ஐஸ்வர்யாவை சென்னை அப்போலோ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நேற்று மாலை 5.30 மணிக்கு ஐஸ்வர்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இது, சுக பிரசவம் ஆகும்.
குழந்தை பிறந்த தகவல் அறிந்ததும் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா, நடிகர் தனுஷ், அவரின் தந்தை டைரக்டர் கஸ்தூரிராஜா, தாயார் விஜயலட்சுமி ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று குழந்தையை பார்த்தனர்.
தாத்தா ஆனார்
ரஜினிகாந்த் தாத்தா ஆனதை தொடர்ந்து அவர் மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் காணப்பட்டார். அவருக்கு ஏராளமான நண்பர்களும், பட உலகை சேர்ந்தவர்களும் டெலிபோன் மூலம் வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் தனுஷ் தனக்கு மகன் பிறந்ததையொட்டி குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இனிப்பு வழங்கினார்.