By 16 September 2020 0 Comments

சிலம்பத்தில் சீறும் பொன்னேரி பெண்!! (மகளிர் பக்கம்)

தமிழக வரலாற்றில், கண்ணகிக்கு என்றும் அழியாத இடம் உண்டு. காரணம் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்; தன்னுடைய ஒற்றைக் காற்சிலம்பைக் கொண்டே, ‘கள்வன்’ எனக் குற்றம் சாட்டப்பட்ட தன் கணவனை நிரபராதி என உலகிற்குத் தெரிவித்த சாதனைப் பெண். அந்த வரிசையில், இந்தப் பெண்ணும் சத்தம் இல்லாமல், சாதனைகள் பல புரிந்து வருகிறார். அதற்காக, இவர் ஏந்தியது சிலம்பு அல்ல; சிலம்பம்! தான் சிலம்பம் கையில் எடுத்ததற்கான பின்னணியையும், அந்த வீர விளையாட்டில், தான் தடம் பதித்து வரும் விதம் குறித்தும் விவரிக்கிறார் வீர மங்கை வெண்மதி…

‘‘நான் கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். கோடை விடுமுறையில் எல்லா ஊர்களிலும் சம்மர் கோச்சிங் கேம்ப் நடக்கிற மாதிரி எங்க ஊரான பொன்னேரியிலும் நடக்கும். இங்கு சுப்பிரமணிய ஆசான் சிலம்பக்கூடத்தில் ஹரி மாஸ்டர் தான் பயிற்சி அளித்து வருகிறார். ஒவ்ெவாரு கோடை விடுமுறையிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக சிலம்பம் கற்றுக் கொடுப்பார். அதை கேள்விப்பட்டு என் மாமா தான் என்னை அங்கு சேர்த்துவிட்டார். மாலை நேரத்தில் என் வயதையொத்த நிறைய சிறுமியர், சிறுவர் ஆர்வத்துடன் சிலம்ப பயிற்சியில் ஈடுபட்டு இருப்பதைப் பார்த்தேன். அதை பார்த்த எனக்கும் சிலம்பக்கலையை முறையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன்.

எல்லோரையும் போலவே, நானும் வேல் கம்பு, சுருள்வாள் வீச்சு, தனித்திறமை, இரட்டைக்கம்பு, தொடுமுறை போன்றவற்றைக் கற்று கொள்ள ஆரம்பித்தேன். என் அம்மா முதலில் இது ஆபத்தான விளையாட்டாக இருக்கும்ன்னு பயந்தாங்க. ஆனா, என் விடா முயற்சி மற்றும் போட்டிகளில் தொடர்ச்சியாகப் பரிசுகள் வெல்வதையும் பார்த்து நாளடைவில் அவங்க எண்ணத்தை மெல்ல மெல்ல மாற்றிக் கொண்டார்கள்.இதுவரை பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலானப் போட்டிகள் என ஏராளமான போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். 2015-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான மாவட்டம் அளவிலான சிலம்ப போட்டி நான் பங்கேற்ற முத ல் போட்டி. அதில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது.

அதன் பின்னர் சுருள் வாள் வீச்சு, வேல் கம்பு, தொடுமுறை ஆகிய மூன்று கலைகளையும் முறையாக கற்றுக் கொண்டேன். 2016-ம் ஆண்டில் தமிழக சிலம்ப அணிக்கு போட்டியிட தேர்வானேன். தமிழக அணிக்காக சுருள்வாள் வீச்சு, வேல் கம்பு ஆகிய பிரிவுகளில் தேர்வாகி, 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பீகாரில் நடைபெற்ற நேஷனல் கேம்சில் கலந்து கொண்டேன். அதில் சுருள் வாள் வீச்சு போட்டியில் தங்கப் பதக்கமும், வேல் கம்பு பிரிவில், வெண்கலப் பதக்கமும் வென்றேன். சுருள் வாள் வீச்சு இறுதிப் போட்டியில் பீகார் வீராங்கனையைத் தோற்கடித்தேன். இதன் மூலம், இந்திய பெண்கள் ஜூனியர் அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. இதுவரை பீகார், திருச்சி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நடைபெற்ற 3 தேசியப் போட்டிகள் உட்பட பல மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று, 25 மெடல்கள் வென்று இருக்கிறேன். இவற்றில் தேசிய அளவில் 2 மெடல்களும் மாநில அளவில் 20 மெடல்களும் (பத்து தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம்) பெற்றுள்ளேன்.

தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையும் மாலை நான்கு மணியில் இருந்து இரவு 7 மணிவரையும் பயிற்சி எடுத்துக் கொள்கிறேன். போட்டி நெருங்கும் சமயத்தில் புதுப் புது டெக்னிக் கற்றுத் தருவார்கள்! உடல் மற்றும் மனம் அடிப்படையில் பயிற்சிகள் அமையும். எதிராளி தாக்குதலில் இருந்து நம்மைப் பாதுகாத்து கொள்ளும் முறை, அவரை அட்டாக் செய்யும் விதம் போன்றவற்றுடன் எதிராளியை எதிர்த்து நிற்கும் திறமை, மனதைரியம் ஆகியவற்றையும் சொல்லிக் கொடுப்பார்கள். இவைத்தவிர, உடலை வலிமைப்படுத்தும் வகையில் ஓட்டப்பயிற்சி, ஜம்பிங் பயிற்சியும் உண்டு. Thigh sit- up, Knee sit-up Touch and Bend, Push-up பயிற்சியும் செய்வேன். இந்த பயிற்சி முடிந்த பிறகு வேல் கம்பு, சுருள் வாள் ஆகியவற்றை ஒன்றரை மணி நேரம் பயிற்சி செய்வேன். ஒவ்வொரு நாளும் 5 நிமிட தியானத்துடன் தான் பயிற்சியை முடிப்போம்.

இதுவரைக்கும் மாவட்டம், மாநில தேசியப் போட்டிகள் என சுமார் 20க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு உள்ளேன். போன வருஷம் தஞ்சாவூரில் நடைபெற்ற ஸ்கூல் கேம் பெடரேஷன் ஆஃப் இந்தியா போட்டிகளில் பங்கேற்றதை என்றைக்கும் மறக்க முடியாது. அதில் தான் 17 வயதுக்கான பிரிவில், வேல் கம்பு போட்டியில் இரண்டாம் பரிசு வென்றேன். எங்க ஸ்கூல் ஹெட்மாஸ்டர், பி.டி மாஸ்டர் மற்றும் என் மாமா ஆகியோர் தரும் ஊக்குவிப்பால் சிலம்ப விளையாட்டில் என்னால் சாதிக்க முடிகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் சிலம்பத்தைச் சேர்க்க வேண்டும். இந்தியாவுக்காக, அதில் கோல்டு மெடல் ஜெயிக்க வேண்டும். ஐ.பி.எஸ், ஆக வேண்டும். இவை தான் என் லட்சியம்’’ என்றவாறு தன் பேச்சை முடித்தார்.Post a Comment

Protected by WP Anti Spam