2018 பெண்கள் உருவாக்கிய ஆண்டு!! (மகளிர் பக்கம்)

Read Time:15 Minute, 12 Second

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம் உட்பட 66 பதக்கங்கள் வென்று மூன்றாவது இடத்தை பிடித்தது. பெண்களுக்கான பளு தூக்கும் பிரிவில், இந்தியாவைச் சேர்ந்த மீராபாய் சாய்கோம் சானு, முதல் தங்கம் வென்று பதக்க வேட்டையை தொடங்கி வைத்தார். மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், குத்துச்சண்டை போட்டியில் மேரிகோம், துப்பாக்கி சுடும் போட்டியில் ஹீனா சித்து, 69 கிலோ எடைப் பிரிவில் பூனம்யாதவ் தங்கம் வென்றனர். டேபிள் டென்னிஸ் போட்டியில் மணிகா பத்ரா தங்கம் வென்றார். பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் தங்கமும், பி.வி. சிந்து. வெள்ளி பதக்கமும் வென்றனர். ஸ்குவாஷ் போட்டியில் சென்னையைச் சேர்ந்த தீபிகா பல்லிகல் – ஜோஸ்னா ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

* பெண் போர் விமானிகள்

24 வயதாகும் அவானி சதுர்வேதி முதல் இந்திய பெண் போர் விமானி என்ற சிறப்பை பெற்றுள்ளார். மோகனா சிங், பாவனா காந்த் மற்றும் அவானி சதுர்வேதி ஆகிய மூன்று பெண்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு போர் விமானங்களை இயக்குவதற்கான சவால்கள் நிறைந்த பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில் அவானி சதுர்வேதி முதல்முறையாக மிக்-21 ரக போர் விமானத்தை தனியாக இயக்கி சாதித்து காட்டி முதல் பெண் போர் விமானி என்ற பெருமையைத் தட்டிச் சென்றிருக்கிறார்

* ஸ்ரீதேவி இறப்பு

இந்த ஆண்டு துபாயிலிருந்து வந்த துயர செய்தி ஒன்று ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தமிழக மக்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது. நடிகை ஸ்ரீதேவி இந்த மண்ணுலகை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார் என்பதே அது. வெளியில் செல்வதற்கு ரெடியாகி வருவதாகச் சொல்லிவிட்டு, பாத்ரூமுக்குச் சென்ற ஸ்ரீதேவி, நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. கணவர் போனி கபூர், கதவைத் தட்டியும், உள்ளிருந்து சத்தம் வராமல் போகவே ஹோட்டல் உதவியாளர்களுடன் கதவை உடைத்துப் பார்த்தபோது, கழிவறையில் மயங்கிய நிலையில் அவர் கிடந்துள்ளார். மருத்துவமனையில் அவரை சோதித்த மருத்துவர்கள், முன்னரே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

* பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவு

1950களில் மறக்க முடியாத குழந்தை குரலில் குழந்தை நட்சத்திரங்களுக்கு பாடியவர் எம்.எஸ். ராஜேஸ்வரி. அவர் பாடிய ‘கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே…’ பாடலை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. ‘மகான் காந்தி மகான், ‘ஓ ரசிக்கும் சீமானே‘, ‘மியாவ் மியாவ் பூனைக்குட்டி’, ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ உள்ளிட்ட ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். பேபி ஷாமிலி நடிப்பில் வெளியான துர்கா படத்தில் வந்த பாப்பா பாடும் பாட்டு பாடலை பாடியவரும் ராஜேஸ்வரியே. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளார்.

* நடிகையர் திலகமாக கீர்த்தி சுரேஷ்

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு, தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநடி’ என்ற பெயரிலும் எடுக்கப்பட்டது. இதில் படம் முழுவதும் நடிகை கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக வாழ்ந்திருந்தார். கீர்த்தியின் நடிப்பும், சிரிப்பும், அழுகையும், துயரமும் நம்மை மகா நடிகை சாவித்திரியாகவே ஆட்கொண்டதுடன் கீர்த்தி சாவித்திரியாக வாழ்ந்து காட்டியமைக்காக பாராட்டுப் பெற்றார்.

* உறுதியான பெண்களில் ஒருவர் அற்புதம்மாள்

பேரறிவாளனின் முகத்தை மறந்தவர்கள் கூட அற்புதம்மாளின் முகத்தை அவ்வளவு எளிதாக மறந்துவிட மாட்டார்கள். 1991-ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் பேரறிவாளன் கைதாகும் போது அவருக்கு 19 வயது. 27 ஆண்டுகளாக, அன்று ஒப்படைக்கப்பட்ட மகனுக்காக இன்று வரை காத்திருக்கிறார். நீதி கேட்டு அவர் ஏறாத நீதிமன்றங்கள் இல்லை. சந்திக்காத சட்ட ஆலோசகர்கள் இல்லை. நாட்டில் உள்ள உறுதியான பெண்களில் அற்புதம்மாளும் ஒருவர்

* ஆல்வுமன் ஆர்.ஜே. ஸ்டேஷன்

தென்தமிழ்நாட்டில் பெண் ஆர்.ஜே.க்களைக் கொண்டு உருவாகியுள்ள முதல் ஸ்டேஷன் என்கிற பெருமையோடு செயல்பட்டு வருகிறது 93.9 பண்பலையில் சூரியன் எஃப்.எம். வானொலி நிலைய இயக்குநராய் ஒரு பெண் தலைமை ஏற்க, முழுக்க முழுக்க பெண் ஆர்.ஜே.க்களைக் கொண்டு சேலம் நகரில் தன் அலைவரிசையை தொடங்கி நடத்தி வருகிறது.

* முதல் பார்வையற்ற பெண் கலெக்டர்

இரண்டு வயதில் பார்வையை இழந்த கர்நாடகாவைச் சேர்ந்த பிரஞ்ஜால் பட்டீல் மன உறுதியாலும், விடாமுயற்சியாலும் தொடர்ந்து போராடி, நேரடி கலெக்டர் தேர்வு மூலம் இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் கலெக்டர் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார். பிரஞ்ஜால் பட்டீல் கேரள மாநிலம் எர்ணாகுளம் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி கலெக்டராக பொறுப்பேற்றிருக்கிறார்.

* நியூசிலாந்தின் இளம் பிரதமர்

ஜெசின்டா அர்டெர்ன், நியூசிலாந்தின் 40வது பிரதம மந்திரி. மார்ச் 2017 முதல் மவுண்ட் ஆல்பெர்ட்டின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் அர்டெர்ன், 2008ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் முதல் பிரதிநிதி மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 37 வயதில் மந்திரி பதவியில் வகிக்கும் உலகின் இளம் பெண் தலைவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. அலுவலக வேலைப் பார்க்கும் போது, பிரசவ வலி ஏற்பட்டு, அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அதை தொடர்ந்து புதிய பெற்றோருக்கு வாராந்திர உதவித்தொகை உள்ளிட்ட சீர்திருத்தங்களை அறிவித்தார். இதனுடன் பெற்றோர்களுக்கு ஊதியத்துடன் 18 முதல் 22 வாரம் பிரசவ விடுமுறை நாட்களையும் அதிகரித்துள்ளார்.

* NYSEன் முதல் ஜனாதிபதி

ஸ்டேசி கன்னிங்ஹாம் வங்கியாளர். நியூயார்க் பங்குச்சந்தையின் முதல் பெண் தலைவர். 1990 முதல் 2005ம் ஆண்டு வரை NYSEல் பணியாற்றினார். பின்னர் நாஸ்ட்டாக் பங்குச் சந்தையில் மூலதன சந்தை இயக்குநராகவும் அமெரிக்க பரிவர்த்தனை சேவைகளின் விற்பனைத் தலைவராகவும் பணிபுரிந்தார். 2012ல் கன்னிங்ஹாம் மறுபடி NYSEல் சேர்ந்தார். 2015ஆம் ஆண்டில் பரிமாற்ற தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி ஏற்றார். கடந்த ஆண்டு கன்னிங்ஹாம் NYSEன் முதல் பெண் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். NYSE துவங்கி 226 ஆண்டு வரலாற்றில் ஜனாதிபதியாக பெண் தேர்வாகி இருப்பது இதுவே முதல் முறை

* சவுதியில் பெண்களும் கார் ஓட்டலாம்

சவூதி அரேபியாவில் உள்ள பெண்கள் நீண்ட நாட்களாக இந்த நாளுக்காக காத்திருந்தார்கள். சவுதி அரேபியா அரசு பெண்களுக்கு இறுதியாக கார் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அங்கு பெண்கள் ஓட்டுநர்களுடன் அல்லது ஆண் குடும்ப உறுப்பினர்களுடன் தான் காரில் பயணம் செய்ய வேண்டும். அதனை தகர்த்தி பெண்கள் கார் தனியாக ஓட்டிச் செல்லலாம் என்று ஆணை பிறப்பித்தது மட்டும் இல்லாமல் ஓட்டுநர் உரிமம் வழங்கவும் அனுமதியை சவுதி அரசு அளித்துள்ளதின் பேரில் 2000 பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளனர்.

* ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா

சமீபத்தில் வெளியான ‘96’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதில் தன்னுடைய யதார்த்த நடிப்பால் த்ரிஷா அனைவரையும் கவர்ந்தார்.

* இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர்

திருநங்கைகள் இப்போது ஒவ்வொரு துறையிலும் தங்களின் கால் தடங்களை பதித்து வருகின்றனர். அவர்களை தொடர்ந்து, ராமநாத
புரத்தை சேர்ந்த திருநங்கையான சத்யாஸ்ரீ சர்மிளா, வக்கீலாக பார்கவுன்சிலில் பதிவு செய்துள்ளார். இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் என்ற பெருமையை தன் வசம் தக்க வைத்துள்ளார் சர்மிளா.

* சவுதியின் இரவு நேர பெண் செய்தியாளர்

சவூதி அரேபியாவில் முதல் முறையாக இரவு நேர செய்திகளை தொலைக்காட்சியில் வாசிப்பதற்காக வீம் அல் தஹீல் என்ற பெண் செய்தியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இரவு நேர முதல் பெண் செய்தி வாசிப்பாளர் என்ற வரலாற்றை உருவாக்கியுள்ளார்.

* மீ டூ பிரச்சனை

பெண்கள் தங்கள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களை வெளியில் கொண்டு வரும் ‘மீ டூ’ இயக்கம் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படும் ஒரு ஹேஸ் டாக்காக மாறி மிகப்பெரும் விவாதப் பொருளாகவும் மாறியது.

* இஷா அம்பானியின் ஆடம்பரத் திருமணம்

ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், பிரபல வைர உற்பத்தி தொழிலதிபர் அஜய் பிராமலின் மகன் ஆனந்த் பிராமலுக்கு இருவீட்டார் சம்மதத்தோடு காதல் திருமணம் நடைபெற்றது. இஷா அம்பானியின் திருமணம். பிரமாண்டத்தின் உச்சக்கட்டமாய் நடந்தது. திருமணத்துக்காக மட்டும் சுமார் 100 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆசியாவிலேயே நடைபெற்ற ஆடம்பரத் திருமணம் என்ற பெயரை பெற்றுள்ளது.

* பாலிவுட் ஹாட் ஜோடிகளின் திருமணம்

ராம் லீலா, பஜிராவ் மஸ்தானி, பத்மாவத் ஆகிய படங்களில் இணைந்து நடித்த ரன்வீர் சிங், தீபிகா படுகோன் ஜோடியின் திருமணம் மிகவும் ஆடம்பரமாக இத்தாலியில் நடந்தது.

பிரபல பாப் பாடகர் நிக் ஜோனஸ், பிரியங்கா சோப்ராவை விட 10 வயது இளையவராக இருந்த போது இவர்களது காதல் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

* உலக சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து

2018ம் ஆண்டு நிறைவடையும் தருவாயில் தங்கத்தை தன்வசப்படுத்தி வெற்றிக்களிப்பில் நின்றார் சிந்து. இதன் மூலம் ‘உலக சாம்பியன் பட்டம்’ வென்ற முதல் இந்திய பெண் என்ற வரலாற்று சாதனையையும் சேர்த்தே படைத்தார்.

* சாதனை நாயகி மேரிகோம்

டெல்லியில் நடைபெற்ற சர்வதேச மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் ஆறாவது முறையாக தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தார்.

* பனிச்சறுக்கில் வெற்றி பெற்ற முதல் இந்தியர்

ஆஞ்ச்சல் தாகூர், துருக்கியில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் சர்வதேச பனிச்சறுக்கு போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்ற பெருமையை சேர்த்துள்ளார்.

* அமெரிக்காவை வீழ்த்திய ஜப்பான்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் செரீனா வில்லியம்சை விழ்த்திய நவோமி ஒசாகா, கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஜப்பானியர் என்ற சாதனையை பெற்றுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயிற்றுபோக்கை குணமாக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)
Next post சளி, இருமலுக்கு மருந்தாகும் கற்பூரவல்லி பச்சிலை!! (மருத்துவம்)