By 18 September 2020 0 Comments

பெரும்பான்மையினரின் இனவாதம் தேசியவாத போர்வையை போர்த்திக்கொண்டு வந்துள்ளது இது மிகவும் ஆபத்தானது-ரவூப் ஹக்கீம்!! (கட்டுரை)

பெரும்பான்மையினரின் இனவாதம் தேசியவாத போர்வையை போர்த்திக்கொண்டு வந்துள்ளது இது மிகவும் ஆபத்தானது என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தங்கள் சமூகத்திற்காக அதிகாரப்பகிர்வு குறித்து பேசுகின்ற ஒவ்வொருவரையும் பிரிவினைவாதியாக பார்க்கின்ற நிலைதான் இன்று காணப்படுகின்றது சந்தர்ப்பம் கிடைத்தால் தீவிரவாதிகளாக பட்டம் சூட்டப்படுகின்ற சூழலிலேயே நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் ஸ்தாபகதலைவர் மறைந்த எம்.எச்.எம் அஷ்ரபின்20வது நினைவுநாள் நிகழ்வு மூதூரில் இடம்பெற்றவேளை அங்கு உரையாற்றுகையில் ரவூப் ஹக்கீம் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

மறைந்த தலைவரது நினைவுகளை பகிர்ந்து கொள்கின்ற போது இன்றைய சமகால அரசியலோடு சம்பந்தப்படுத்தி எதை பேசலாமென்று பார்த்தால்இ அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் தொடர்பான விடயம் பற்றி பேசுவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கின்றேன்.

தலைவர் மர்ஹ_ம் எம்.எச்.எம் அஷ்ரப் எங்களை விட்டுப் பிரிந்துச் சென்ற முதலாவது வருடமான 2000ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக வெற்றிபெற்ற பின்னணியில் அவருடைய புதிய அரசியல் யாப்புக்கான பிரேரணை மும்மொழியப்பட்ட போது மறைந்த எமது தலைவர் அந்த புதிய அரசியல் யாப்பை அறிமுகப்படுத்தி பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக மூன்று மணித்தியாலங்கள் உரை நிகழ்த்தினார்.

அன்றைய தலைவரது பாராளுமன்ற உரையை இன்றைய நினைவேந்தல் நிகழ்விற்காக சற்று மீண்டும் மீட்டிப்பார்த்தேன். அதில் தலைவர் மிகவும் லாவகரமாக தன்னுடைய கருத்துக்களை முன்வைக்கின்றார்.

அந்த உரையில் அவர் அல்குர்ஆன் வசனங்களை மேற்கோள் காட்டி பேசுகின்றார். “ஒரு சமூகத்தின் தலைவிதியை அந்த சமூகமே மாற்ற முன்வராத வரை இறைவன் ஒருபோதும் மாற்றமாட்டான்” என்ற பொருள்படும் திருவசனங்களோடு அந்த உரை தொடர்கிறது. நாங்களும் இன்று அவ்வாறானதோரு கட்டத்தில் தான் வந்துநிற்கின்றோம்.
இப்போது முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் உள்ளடக்கம் பற்றி நான் இங்கு பேசவரவில்லை.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நீக்கப்பட வேண்டும் என்ற வாக்குறுதியை சந்திரிக்காவின் அரசாங்கம் வழங்கியிருந்தாலும் அதற்கு முன்னைய தேர்தலில் வெற்றியீட்டிய அவர் தன்னுடைய பதவி காலம் முடியும் வரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை வைத்துக் கொள்ளும் விதத்தில் தான் யாப்புத் திருத்தம் முன்மொழியப்பட்டிருந்தது.

அதனை உடனடியாக நீக்குவதாக இருந்தால்; ஆதரவளிப்போம் என்ற பாணியில் அன்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சியினர் பேசத் தொடங்கியிருந்தார்கள்.

தலைவர் இதற்கு மாற்றமாக தன்னுடைய கருத்துக்களை மிகவும் திடகாத்திரமாக ரணில் விக்கிரமசிங்கவை நோக்கி “சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்கவேண்டும். சரியான நேரத்தில் எடுக்கப்படும் பிழையான முடிவுகளும் தவறாகிவிடும். சரியான முடிவுகளை பிழையான நேரத்தில் எடுப்பதும் தவறாகியே போகும்” என்றும் பேசுகின்றார்.

நிறைய குறுக்கீடுகள் எழுந்ததற்கு மத்தியில் மிகவும் தைரியமாக தன்னுடைய நிலைப்பாட்டை முன்வைக்கின்றார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை பாராளுமன்றத்தை பலவீனப்படுத்திவிடக் கூடாது என்பதைப் பற்றியும் மிக ஆணித்தரமாகப் பேசுகின்றார்.

அண்மைக்கால அரசியல் யாப்பு திருத்தங்களின் போது 17ஆவது மற்றும் 19ஆவது யாப்புத் திருத்தங்களின் உருவாக்கத்தில் நாங்களும் பங்காளிகளாக இருந்தோம். இரண்டு யாப்புக்களும் நல்லாட்சிக்கான பல அம்சங்களை உள்ளடக்கியதாக இருந்தன.

18ஆவது மற்றும் இப்போது உருவாக்கப்பட்ட 20ஆவது யாப்பு திருத்தங்களிலும் எவ்வித பங்கும் எங்களுக்கு இல்லை. இவ்விரண்டு யாப்புக்களும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளை அண்மித்த பலமான அரசாங்கத்தினால் எப்படியாவது பலவந்தமாக திணிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் முன்வைக்கப்பட்ட திருத்தங்களை உள்ளடக்கியுள்ளமை தொடர்பில் நாடெங்கிலும் பேசப்பட்டு வருகின்றது.

இதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன்னுடைய நம்பகத்தன்மையையும் காப்பாற்றிக்கொண்டு எவ்வாறு கையாளப் போகின்றது என்ற விவகாரம் தான் எங்களுக்குள் அலவளாவிக்கொள்ளும் பேசுபொருளாக உள்ளது.

எங்களது கடந்த உயர்பீட கூட்டத்திலும் இவ்விடயம் தொடர்பில் மிகவும் தீவிரமாக கலந்துரையாடினோம். அப்போது இந்நாட்டின் பெரும்பான்மை சமூகம் சிறுபான்மை சமூகங்களில் எங்களுக்கு ஏட்டிக்குப் போட்டியாக வடகிழக்கில் யாரை செல்லப்பிள்ளையாக தத்தெடுக்கப் போகின்றது என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

ஒரு சமூகம் தத்தெடுக்கப்பட்டால் மற்ற சமூகம் வேண்டாப் பிள்ளையாக மாறிவிடுமா என்றதோர் அச்சம் குறித்தும் பேசப்பட்டது. இவை தேர்தல் முடிவுகளின் பின்னணியில் பேசுப் பொருளாக எழுந்துள்ள விடயங்களாகும்.

இந்நாட்டு சிறுபான்மை சமூகங்களின் மீது இன்று அடிக்கடி பிரிவினைவாதம் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் பற்றி மாறி மாறி எடுத்தஎடுப்பிலே குற்றச்சாட்டுக்கள் தாராளமாக சுமத்தப்படுகின்ற காலகட்டமாகும்.

எவ்வளவு தான் மிதவாதப் போக்கை கடைப்பிடித்தாலும் கூட சமூகத்திற்கான அதிகாரப் பகிர்வு என்று பேசுகின்ற ஒவ்வொருவரையும் பிரிவினைவாதியாகப் பார்ப்பது மட்டுமல்லாமல் எப்படியாவது ஒரு விதத்தில் வாய்ப்பு கிடைத்தால் தீவிரவாதிகளாக பட்டம் சூட்டுகின்ற சூழலிலேயே நாங்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றோம்.

இன்று ஆட்சியாளர்களுடைய பலமான ஆசனங்களின் எண்ணிக்கையின் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற பேரியக்கம் அப்படியே தடுமாறி அள்ளுப்பட்டுவிடக்கூடுமோ என்ற சலனம் எங்களை ஆட்கொண்டிருக்கின்றது. என்னைப் பொறுத்தமட்டில் இவ்வாறான விடயங்களை மிக நிதானத்துடன் பக்குவமாகக் கையாள வேண்டும்.

அரசாங்கத்திற்குள் 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் காரணமாக உட்கட்சி முரண்பாடுகளும்; உள்ளுர சிறுசிறு சலசலப்புகளும் ஏற்பட்டுள்ளன.

திருத்தங்கள் மும்மொழியப்படும் என்று அதற்கென குழுவொன்றையும் நியமித்திருக்கின்றார்கள். அக்குழுவைச் சேர்ந்த சிலர் சாடையாக வெளியில் வந்து தமது கருத்துக்களை பேசுகின்ற போது அவ்வாறு பேசவோ கருத்துக்களை வெளியிடவோ கூடாது என அவர்கள் அதட்டப்படுவாத அறிகின்றோம்.

இந்தப் பின்னணியில் முஸ்லிம்களது அரசியலை வைத்து மாத்திரம் இவ்விடயங்களை நோக்கலாகாது. பயங்கரவாதம் என்று சொல்லப்படுகின்ற போது இங்கு ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

யாருடைய பயங்கரவாதத்தைப் பற்றி பேசுகின்றார்கள்? இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒருவிடயம் பற்றி சொல்லியிருக்கின்றார்.

அண்மையில் மறைந்த ஆறுமுகம் தொண்டமானின் அனுதாபப் பிரேரணையின் போது நான் அதை மேற்கோள் காட்டி பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தேன். எடுத்தவாக்கிலே நாங்கள் இனவாத அரசியல் செய்கின்றோம் என குற்றம்சாட்டிப் பேசுகின்றார்கள்.

ஜவஹர்லால் நேரு இனவாதம் பற்றி பேசுகின்றபோது “சிறுபான்மையினரின் இனவாதமும் விரும்பத்தக்கது அல்ல. காலப்போக்கில் தன்னை சுதாகரித்துக்கொண்டு அது ஒரு சமநிலைக்கு வந்துவிடும். ஆனால்இ பெரும்பான்மையினரின் இனவாதம் மிகவும் ஆபத்தானது. ஏனென்றால்இ அது “தேசியவாதம்” என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு வரும்” என்றார். அது தான் இன்று இலங்கைஇ இந்தியா உட்பட பல நாடுகளிலும் நடக்கின்றது.

எதற்கெடுத்தாலும் சிறுபான்மையினரின் இனவாதம் பயங்கரவாதம் என்ற பாங்கில் அடக்குமுறைப் போக்கில் விடயங்களை கையாளப் பார்க்கின்றார்கள்.

இதற்கு வக்காளத்து வாங்கும் சிலரும் இருக்கின்றார்கள். இன்று மாவீரர் குடும்பங்களை கொண்டாடுவது என்பதை முறைத்துப் பார்க்கிறார்கள். ஏனெனில் இன்று ஆட்சியில் இருப்பதும் ஒரு “மாவீரர்” உடைய குடும்பமாகும். அவ்வாறுதான் பெரும்பான்மை பார்க்கின்றது. ஆனால் வேறு எந்த மாவீரர் தொடர்பிலும் யாரும் எதனையும் பேசிவிடக் கூடாது. அவ்வாறு பேசினால்இ உடனே கைது செய்து சிறையில் அடைத்துவிடுவார்கள்.

ஒரு ஜனநாயக நாட்டில் இது ஆரோக்கியமானதா என்ற கேள்வி எழுகின்றது. கருத்துச் சுதந்திரம் என்பதை கையாளுகின்ற போக்கில் ஆட்சியில் ஒருவித ஆணவம் தொனிக்கின்றது.

இந்நிலைமை மிகவும் ஆபத்தானது.

இதேபோக்கில் தான் கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் முழு முஸ்லிம் சமூகத்தினர் மீதும்இ தலைவர்கள் மீதும் பயங்கரவாதிகளோடு தொடர்பு வைத்திருந்ததாக இட்டுக்கட்டி முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சுப் போடும் பாங்கில் விசாரணை என்ற போர்வையில் நடந்தது நடக்கின்றது.

அதனை ஊடகங்களும் இன்னுமின்னும் ஊதிப் பெருப்பிக்கின்ற நாடகமொன்றும் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

பெரும்பான்மை பலத்தைக் கொண்ட ஆட்சியாளர்கள் ஏன் இவ்வளவு தூரம் மக்களை அச்சமூட்டி வைத்துக்கொண்டு ஆட்சி நடத்த வேண்டுமா என்பதை சற்று நிதானத்தோடு சிந்தித்திருந்தால் இதைவிடவும் பக்குவமாக இவ்விடயங்களை கையாளலாம்.

அதுதான் சரியான போக்கு என்று நான் நினைக்கின்றேன். அந்த நிதானம் வருகின்ற போது தான் எங்களைப் போன்ற கட்சியினர் ஆட்சியில் பங்குதாரர்களாக இருப்பது சற்று நிம்மதியளிப்பதாக இருக்கும். எதனையும் இரும்;புச் சப்பாத்துக் கொண்டு மிதிக்கும் செயற்பாடு அறவே கூடாது.

ஒவ்வொரு விடயத்தையும் அக்குவேர் ஆணிவேராக அடுத்த சந்ததி ஆராய்ந்துக்கொண்டிருக்கின்ற தருணம் இது.

இன்று இருக்கின்ற அரசியல் மறைந்த தலைவர் வாழ்ந்த காலத்தில் இருந்த அரசியல் போன்றதல்ல. அன்று உயிரோட்டமாக இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பு மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றைக் காட்டி அரசியல் செய்தார்கள்.

இன்று அழிந்து போய்விட்ட அவ்வியக்கங்களை நினைவூட்டி அரசியல் செய்கின்றார்கள். இது தான் வித்தியாசம். அன்று உயிரோட்டமாகயிருந்து அரசியலுக்கு வன்முறையை பயன்படுத்திய இவ்வியக்கங்கள் பற்றி மக்களுக்கு மத்தியில் அச்சத்தையூட்டி வாக்கைச் சேகரிக்கும் உபாயம் கையாளப்பட்டது.

ஆனால் இன்று இவ்வியக்கங்கள் அழிந்து போயிருக்கின்ற அல்லது வன்முறையை கைவிட்டு ஜனநாயகத்தை ஆறத்தழுவியிருக்கின்ற நிலையில் அவர்கள் பற்றிய அச்சத்தை இன்னும் மக்கள் மத்தியில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு செய்தியை பெரிதாகப் பரப்பி மக்களை பீதியில் ஆழ்த்தி அதிலேயே நிலைத்திருக்கச் செய்யும் அரசியலை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நாட்டில் இஸ்லாமிய பயங்கரவாதம் என்று படுமோசமான நிலைமைக்கு முஸ்லிம் சமூகத்தின் மீது அள்ளும் பகலும் பயங்கரவாத முலாம் பூசப்படுகின்ற நிலைமைக்கு தள்ளப்படுவோம் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் திடீரென ஒரு கும்பல் எங்கிருந்தோ வந்தது. ஒரே நாளில் எட்டு பேர் தற்கொலை செய்து பெரிய படுபாதகச் செயலில் ஈடுபட்டு முழு சமூகத்தின் மீதும் குற்றத்தை சுமத்த வைத்தார்கள்.

எங்களின் மேல் படிந்த அந்தக் கறையை நீக்குகின்ற விடயத்தில் நாங்கள் வெற்றியடைந்து விடக் கூடாது என்பதற்காக எங்களோடு சம்பந்தமில்லாத விவகாரங்களிலும் கூட இந்த சமூகத்திற்கு மத்தியில் மீண்டும் பயங்கரவாதம் முளைவிட்டுஇ தலைதூக்கிவிடும் என்ற கீழ்த்தரமான பிரசாரம் தான் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.

எமது சமூகத்திற்கு மத்தியிலும் எவரேனும் சற்று வரம்பு தவறுகின்ற பட்சத்தில் நாங்களே முன்வந்து கைது செய்ய முறைப்பாடு செய்யும் நிலையில் இருக்கின்றோம். ஏனென்றால் அவ்வளவு தூரம் நாங்கள் நெருக்கடிகளை அனுபவித்த ஆத்திரத்தில் இருக்கின்றோம். கூலிக்கு அமர்த்தப்பட்ட இக்கும்பல் மேற்கொண்ட இந்த இழி செயலினால் நாங்கள் குற்றவாளிகளாகப் பார்க்கப்படுகின்றோம்.

நடந்தவை அத்தனையுமே புலனாய்வுத் துறைக்கு நன்றாகத் தெரியும். அதன் விளைவுகளும் குறித்த தரப்பினருக்கு சாதகமாகவே அமைந்தன. இவ்வாறிருக்க ஏன் இதனை இன்னுமின்னும் தோண்டிக் கொண்டிருக்கின்றார்கள். இது நேரத்தை வீணடிக்கும் செயலல்லவா? இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகத்தை பீதியில் வைத்துக்கொள்வதே இதன் சாரம்சமாகும்.

இன்னொரு புதிய பிரச்சினையொன்றும் எழுந்துள்ளது. அது தான் சமயத்தின் பெயரினால் கட்சிகள் தேவையா?

அது தான் இவ்வளவு பிரச்சினைகளும் கிளம்புவதற்கு காரணமாக இருக்கின்றது என்கின்றார்கள். இனத்தின் மற்றும் சமயத்தின் பெயரால் இருக்கின்ற இயக்கங்களின் பெயர் பலகையை வேண்டுமானால் அகற்றிவிட்டாலும் அரசியல் செய்யப்படத்தான் போகின்றது.

பெயர் பலகையில் எதுவும் தங்கியில்லை. இன்று இனம் மதம் இல்லாத பெயர் பலகையோடு மதவாதம் பேசுகின்ற கட்சி பெரும்பான்மை சமூகத்தில் இல்லையா? இந்நாட்டிலுள்ள பேரின கட்சிகள் அனைத்தும் தமது மதம் சார்ந்த விதத்தில் அரசியலை செய்யவில்லையா? மதத்தை முன்னிலைப்படுத்தி பேசவில்லையா? பேசுகின்றார்கள் தானே.

ஆனால் இவ்வாறு நாங்கள் சமயத்தை முன்னிலைப்படுத்தவும் இல்லை. மதத்தை பின்பற்றுபவர்கள் அரசியல் ரீதியாக அடக்கப்பட்டு ஒடுக்கப்படும் உரிமைகள் பறிக்கப்படுகின்ற போது ஜனநாயக நாட்டில் அரசியலமைப்பின் 14ஆவது உறுப்புரை மதச் சுதந்திரத்தை பற்றிப் பேசுகின்றது. அதுவே சர்வதேச நியதியும் கூட. இவ்வாறான இந்தச் சமூகத்தின் மேல் மிகவும் விஷமத்தரமான பிரசாரங்களை செய்து அரசியலை மேற்கொள்கின்றார்கள்.

இத்தகைய யுகத்தில் அடுத்த கட்ட அரசியலுக்கு இவ்வியக்கத்iயும் பாராளுமன்றத்தில் எனது தோள்களில் ஐவரை சுமந்து பாதுகாத்துக் கொண்டு செல்கின்ற பாரிய பொறுப்பு எனக்குள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் கூனிக்குறுகிப் போய்விட்டதாக ஒருசிலர் பேசுகின்றார்கள்.

.இந்த இயக்கத்தை வெறுமனே பிழைப்புவாத அரசியலுக்கு பயன்படுத்தும் வகைளில் கொண்டு செல்ல முடியாது. இதனை தலைவரது நினைவு தினத்தில் மனதில் நன்கு இருத்திக் கொள்ள வேண்டும்.

இதை அடிப்படையாக வைத்து தான் இந்த இயக்கத்தின் செல்நெறி இருக்க முடியும். உட்கட்சிப் பிரச்சினைகளை அம்பலப்படுத்துவதற்கும் இவ்வியக்கத்தை சிதைப்பதற்கும் இன்று சில ஊடகங்கள் முயற்சிக்கின்றன. ஒவ்வொரு ஊடகத்திற்கும் தனித்தனி நிகழ்ச்சி நிரல் உள்ளது.Post a Comment

Protected by WP Anti Spam