By 21 September 2020 0 Comments

சண்முகதாசனும் விஜேவீரவும் – கலாநிதி சரத் அமுனுகம!! (கட்டுரை)

கம்யூனிஸ்ட் தலைவரும் தத்துவவாதியும் தொழிற்சங்கவாதியுமான என்.சண்முகதாசனின் பிறந்த நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு அவரின் வாழ்வு மற்றும் பணிகள் மீது கவனத்தை ஈர்த்தமைக்காக “சண்டே ஐலண்ட்” பத்திரிகையின் வாசகர்கள் கலாநிதி தயான் ஜயதிலகவிற்கும் அதன் பிரதம ஆசிரியர் மெனிக் டி சில்வாவிற்கும் கடமைப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனது அனுபவத்தில் நான்கு தமிழ் மார்க்ஸியவாதிகள், சிறுபான்மைச்சமூகத்தில் இருந்து வந்தவர்கள் என்றாலும்கூட அவர்கள் அங்கம் வகித்த மார்க்ஸிய கட்சிகளினால் அவற்றின் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மிகப்பெரிய அங்கீகாரத்திற்கு உரியவர்களானார்கள். ஆனால், அவர்களது இறுதியான அரசியல்கதி 1950 களின் நடுப்பகுதியிலிருந்து இலங்கையில் ஆதிக்கம் செலுத்திய இனவாத அரசியலினால் பாழ்படுத்தப்பட்டது.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த என்.சண்முகதாசனும் பி.கந்தையாவும் லங்கா சமசமாஜக்கட்சியை சேர்ந்த வி.காராளசிங்கமும் (கார்லோ) பாலா தம்புவுமே அந்த நான்கு தனித்துவமான தமிழ் மார்க்ஸிசவாதிகளுமாவர். அவர்கள் எல்லோரும் அர்ப்பணிப்புச் சிந்தனையுடைய மார்க்ஸிசவாதிகளாகவும் சர்வதேசிய புத்திஜீவிகளாகவும் விளங்கினார்கள். என்னதான் சோதனைகளுக்கும் இன்னல்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் ஆளாகியிருந்தாலும் அவர்கள் எல்லோரும் தங்களது கோட்பாட்டின் மீதான ஈடுபாட்டைப் பொறுத்தவரை உறுதிமிக்கவர்களாக இருந்தார்கள். ஆனால், அவர்கள் நடுத்தர வர்க்க வாழ்க்கைமுறையை அனுபவித்தார்கள். அவர்களது பாட்டாளி வர்க்கத்தோழர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த மார்க்ஸிசவாதிகள் செங்கொடியினால் போர்த்தப்பட்ட பேழைகளிலேயே அடக்கம் செய்யப்பட்டார்கள்.

இந்த நால்வரில் பாலாதம்புவை மாத்திரமே நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். பி.கந்தையாவை பேராதனை பல்கலைக்கழக மாணவனாக இருந்தகாலத்தில் கண்டிருக்கிறேன். அவர் அப்போது வடபகுதியிலிருந்து பாராளுமன்றத்திற்கு மார்க்ஸிய கட்சியொன்றின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட ஒரேயொரு தமிழ் எம்.பி.யாக இருந்தார். பேராதனையில் எம்மத்தியில் தனிச்சிங்களச்சட்டம் தொடர்பில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து மிகத்திறமையாகப் பேசினார்.

ரோஹண விஜேவீரவினது அரசியல் வாழ்விலும் அவர் ஜனதா விமுக்தி பெரமுனவை (ஜே.வி.பி) தாபித்ததிலும் சண்முகதாசனின் தீர்க்கமான பாத்திரம் தொடர்பில் தயானும் மெனிக்கும் தங்களது கட்டுரைகளில் குறிப்பிடவில்லை. தனது சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணியின் தலைவராக சண் தான் விஜேவீரவை சேர்த்துக்கொண்டார். இருவருக்கும் இடையிலான இந்த ஊடாட்டம் குறித்து “ஜே.வி.பி தலைமைத்துவம் பற்றிய சமூகவியல் ஆய்வு” (A Sociological analysis of the leadership of the JVP) என்ற எனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். அந்தக் கட்டுரை ‘மாற்றத்திற்கான கனவுகள்: இலங்கையில் நிலம், தொழில் மற்றும் முரண்நிலை” என்ற தலைப்பிலான நூலில் (விஜித யாப்பா பப்ளிகேஷன்ஸ் 2018) (Dreams of change: Land, Labour and Conflict in SriLanka) பிரசுரிக்கப்பட்டது. மாஸ்கோவிற்கு திரும்பிச்சென்று தனது கல்வியை நிறைவுசெய்வதற்கு விசா மறுக்கப்பட்ட பிறகு விஜேவீர தனது இடர்ப்பாட்டுநிலையை எவ்வாறு எதிர்கொண்டார்?

தனக்கு விசா மறுக்கப்பட்டதற்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி கொழும்பிலுள்ள சோவியம் தூதரகத்திற்குக் கொடுத்த நெருக்குதலே காரணமென்று அவர் நம்பினார். குறிப்பாக, அவர் தன்னையும் தனது சகமாணவனான தர்மசிறியையும் மாஸ்கோவில் சந்தித்த கம்யூனிஸ்ட் தலைவர் கே.பி.சில்வாவையே சந்தேகித்தார். தர்மசிறி ஒரு இளம் பத்திரிகையாளர். மிகவும் பிரபல்யமான அவரையே இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஒரு எதிர்காலத்தலைவராக நோக்கியது. தர்மசிறியின் மரபு வழுவாத கோட்பாட்டு உறுதியும் செல்வாக்குமே அவரின் போக்கிற்கு எதிரான சீனப்பாதையை விஜேவீர கடைப்பிடிப்பதற்கு வழிவகுத்தது எனலாம்.

தர்மசிறி பின்னர் சோவியத் யூனியனில் விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டார். விஜேவீரவை பொறுத்தவரை தனது அதிகாரத்திற்கு வரக்கூடிய எந்தவொரு சவாலையும் சகித்துக்கொள்ள முடியாத ஆளுமைக் குணவியல்பைக் கொண்டவர். தனது எதிரிகளை ஒரு நேர்மறையான பிம்பத்தில் காட்டுவதற்கே அவர் தனது சக்தி முழுவதையும் பயன்படுத்துவார். கம்யூனிஸ்ட் கட்சியில் முதலில் அவர் டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்கவின் ஒரு ஆதரவாளரும் சிறந்த சிங்களப்பேச்சாளரும் மாத்தறை மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரேமலால் குமாரசிறியுடனேயே நட்பை வளர்த்துக்கொண்டார்.

அந்த நேரத்தில் குமாரசிறி சண்முகதாசனுடன் அணிசேர்ந்துகொண்டு சீன சார்புக்கட்சியின் ஒரு சிரேஷ்ட தலைவராக விளங்கினார். இதனால் விஜேவீர சண்முகதாசன் குழுவின் உயர்மட்டத்தலைவர்களுடன் வெகுமுன்னதாகவே பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளக்கூடியதாக இருந்தது. விஜேவீரவிற்கு ரஷ்யமொழியில் இருந்த அறிவு சண் உட்பட உட்கட்சி மோதல்கள் நிறைந்த கம்யூனிஸ்டுகள் மத்தியில் வேறு எந்தவொரு தலைவரையும் விட அவரை சிறப்பான நிலையில் வைத்தது. விஜேவீரவைத் தவிர மற்றைய எந்தத் தலைவருமே ‘சோசலிஸ தாயகத்தில்” நீண்ட நாட்களாகத் தங்கியிருந்ததாகவோ, ரஷ்யமொழியில் பேசக்கூடியவர்களாகவோ பெருமைபாராட்ட முடியாது.

எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே சண்ணுடன் குமாரசிறிக்கு முரண்பாடுகள் ஏற்படத்தொடங்கின. தனது பலத்தை வலுப்படுத்தும் ஒரு வழிவகையாக சண் விஜேவீரவை நோக்கித் திரும்பினார். சண்ணின் இளைஞர் அணியின் தலைவராக வீஜேவீர நியமிக்கப்பட்டார். அது சண்ணின் அமைப்பிற்குள் ஊடுருவி குழுவிற்குள் ஒரு குழுவாக அவர் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கு பிரத்தியேகமான வாய்ப்பைக் கொடுத்தது. தனது தத்துவார்த்த அக்கறைகளிலும் தொழிற்சங்கப் பணிகளிலும் ஆழ்ந்திருந்த சண்ணுக்கு அது பாதகமாக அமைந்தது. சண்ணுக்கு எதிரான குழுவினர் அவர் தமிழர் என்பதையும் பயன்படுத்தி அவருக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்தனர். அத்துடன் கட்சிக்குள் முக்கிய பதவிகளை தமிழ் உறுப்பினர்களைக்கொண்டு நிரப்புவதாகவும் அவர்கள் சண்மீது குற்றஞ்சாட்டினர்.

உதாரணமாக, கட்சியின் பத்திரிகைகள் சண்ணுக்கு தனிப்பட்ட முறையில் விசுவாசமான தமிழ் தோழர் ஒருவரின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்பட்டன. 1965 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் கொழும்பு மத்திய தொகுதியில் போட்டியிட சண் தீர்மானித்தார். அந்தத் தொகுதியில் வாழ்கின்ற பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் தனக்கே வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே அவர் அந்தத் தீர்மானத்தை எடுத்தார். தனது தேர்தல் பிரசாரப்பணிகளில் ஒரு அமைப்பாளராக அவர் விஜேவீரவை நியமித்தார். அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. சண் படுதோல்வி அடைந்ததுடன் கட்டுப்பணத்தையும் கூட இழந்தார்.

இந்த அவமதிப்பான தோல்வி சண்ணின் கவலைகளை அதிகரித்தது. தனது தலைவருக்குப் பாதகமான முறையில் விஜேவீர கட்சிக்குள் தனக்கு விசுவாசமான சொந்தக்குழுவொன்றை அமைக்கத் தொடங்கினார். இது சண்முகதாசனின் நோட்டத்திலிருந்து தப்பவில்லை. விஜேவீர கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தை தனது சொந்தக்கட்சியான ஜே.வி.பி.யை – சீனப்பாதையிலிருந்து விலகியோரை முக்கிய ஆதாரமாகக்கொண்டு – அமைப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக விஜேவீர கண்டார். அவர்களில் விஜேவீரவின் கட்சியின் முதலாவது பிரதித்தலைவரான விஜேசேன விதானவும் ஒருவர். அவர் சனத் பொரளுகெட்டிய என்ற இயக்கப்பெயரில் இயங்கினார். அவர் ஒரு ஆசிரியர். அத்துடன் அநுராதபுரத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் சீனப்பிரிவின் மாவட்டச்செயலாளராக இருந்தார். களனியைச் சேர்ந்த நிமலசிறி ஜயசிங்க, காணி அபிவிருத்தித் திணைக்களத்தில் ஒரு தொழிற்சங்கவாதியாக இருந்த டினோரிஸ், சீனப்பிரிவின் வத்தளைக்கிளையின் செயலாளராக இருந்த டபிள்யூ.டி.கருணாரத்ன, வத்தளையைச் சேர்ந்த எஸ்.வி.ஏ.பியதிலக, பல்கலைக்கழக மாணவனும் சீனப்பிரிவின் பாணந்துறை கிளை செயலாளரான நிஹால் டயஸ் ஆகியோர் விஜேவீரவை முதலில் ஆதரித்த சீனப்பிரிவின் முக்கியஸ்தர்களாவர்.

சண்ணின் கட்சிக்குள் விமர்சனங்களை செய்கின்ற ஒரு சிறுபான்மைக்குழுவின் தலைவராக இருப்பது ஒரு விடயம். ஆனால், சொந்தமாக ஒரு தீவிரவாதக் கட்சியை தாபிப்பதென்பது வேறு விடயம். அந்தக் கட்டத்தில்தான் விஜேவீரவின் புத்தாக்க ஆற்றல்களை நாம் காண்கின்றோம். தலைசிறந்த இடதுசாரித்தலைவர்களின் குணவியல்புகளை ஒத்ததாக விஜேவீரவின் தலைமைத்துவத்தகுதிகள் இருந்தன. அதுகாலவரையில் இடதுசாரி இயக்கத்தில் ஒரு விளிம்புநிலையில் மாத்திரம் பங்களிப்புச்செய்து கொண்டிருந்த அமைப்புக்கள் பலவற்றை விஜேவீர தன்னுடன் இணைத்துக்கொண்டார். அந்த அமைப்புக்கள் முன்னதாக பாரம்பரிய இடதுசாரித்தலைவர்களினால் அலட்சியப்படுத்தப்பட்டிருந்தன அல்லது ஓரங்கட்டப்பட்டிருந்தன.

பழைய இடதுசாரித்தலைவர்களினால் தங்களது மத்தியதரவர்க்க உள்வட்டத்திற்கு வெளியே ஒரு வர்க்கத்தின் அர்ப்பணிப்பு உணர்வையும் உற்சாகத்தையும் ஒருபோதுமே ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்த முடியவில்லை. அவர்கள் தங்களது பாராளுமன்றவாத அரசியல் ஊடாகவும் மத்தியதரவர்க்க வாழ்க்கை முறை ஊடாகவும் அந்தத் தீவிரவாத உணர்வுச்சுடரை அணைத்தனர். ஜே.வி.பி.யின் ஊடாக பாட்டாளிகளின் எழுச்சி பழைய இடதுசாரிகளின் முடிவின் தொடக்கமாக அமைந்தது. ஜே.வி.பி.யின் ஐந்து மூலமுதல் விரிவுரைகளில் ஒன்றில் பாரம்பரிய இடதுசாரிகள் கேலிக்குரியவர்களாகவும் வெறுக்கத்தக்கவர்களாகவும் காண்பிக்கப்பட்டார்கள். புதிதாக அமைக்கப்பட்ட ஜே.வி.பி. லங்கா சமசமாஜக் கட்சியையும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியையும் வழக்கொழிந்துபோன கட்சிகளாக மாற்றியது. தங்களது விரிவுரைகளில் ஜே.வி.பி. தலைவர்கள் இடதுசாரித் தலைவர்களை உண்மையான ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரிடமிருந்து அந்நியப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். லங்கா சமசமாஜக்கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடனான கூட்டணி அரசியலுக்குள் இறங்கிய அதேவேளை, விஜேவீர ஐக்கிய தேசியக்கட்சியையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியையும் “ஒரே முதலாளித்துவக்கழகத்தின் மூத்த, கனிஷ்ட உறுப்பினர்கள்” என்று வர்ணிப்பதில் தனது முன்னாள் ஆசான் சண்ணை பின்பற்றினார்.

சண் ஒரு சளைக்காத எழுத்தாளர். “இலங்கை சரித்திரத்தின் மீதான ஒரு மார்க்ஸியவாதியின் பார்வை” (A Marxist looks at the history of Ceylon – 1972), ‘பச்சாதாபம் கொள்ளாத ஒரு கம்யூனிஸ்டின் நினைவுகள்” (The memories of an Unrepentant communist – 1989) என்ற இரு நூல்களை சண்ணின் சிந்தனைகளின் முன்நிலைப்படுத்தலாக நாம் பார்க்கிறோம். அவர் நவீன இலங்கையின் வரலாற்றை அதன் ஆளும் வர்க்கங்களினதும் அரசியல் கலாசாரத்தினதும் திசையமைவை ஏகாதிபத்திய சார்பு – தரகு முதலாளித்துவ குணாம்சத்தின் ஒரு தழுவலாகவே பார்த்தார். இது காலனித்துவ தேசியவாதத்துடனான இந்திய சுதந்திரப்போராட்ட இயக்கத்திலிருந்து முரண்பட்டதாகும். ‘இந்தியாவில் இருந்ததைப்போன்று ஒரு தேசிய முதலாளி வர்க்கத்தையோ (தேசிய பூர்ஷ்வா) அல்லது புரட்சிகர இயக்கத்தையோ இலங்கை கொண்டிருக்கவில்லை” என்று சண் கூறுகிறார். இலங்கை சுதந்திரம் அடைந்ததை ஒரு தகர்வாக அன்றி, காலனித்துவத்திலிருந்து நவகாலனித்துவத்திற்கான கண்ணுக்குப் புலப்படாத மாற்றம் என்றே அவர் கூறினார்.

அத்தகைய நவகாலனித்துவக் கொள்கைகளின் தொடர்ச்சி கூடுதலானளவிற்கு தேசிய திசையமைவு கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தோற்றத்திற்கான களத்தை உருவாக்கிய பல நெருக்கடிகளுக்கு வழிவகுத்ததாக சண் பார்த்தார். ஆனால் புதிய கட்சியின் தலைவர்களின் வர்க்க கூட்டமைவு ஏகாதிபத்திய சார்பிலிருந்து மிகவும் வேறுபட்ட ஒன்றல்ல. மாறாக தனிப்பட்ட போட்டி மனப்பான்மை மற்றும் ஜனரஞ்சக அரசியல் ஆகியவற்றினால் ஊக்குவிக்கப்பட்டது என்று சண் கூறுகிறார். ஜனரஞ்சக கட்சி என்றவகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூடுதலானளவிற்கு இனவாதப்போக்குடையதாக இருக்கக்கூடியது சாத்தியமாக இருந்ததுடன் இடதுசாரிகளைப் பொறுத்தவரையிலும் கூட சுதந்திரக்கட்சியுடன் தங்களை அணிசேர்த்துக்கொண்டு அதே இனவாதப்பாதையில் செல்வதைத் தவிர அவர்களுக்கும் வேறு மார்க்கம் இருக்கவில்லை. இனவாதப்பாதை இப்போது பாராளுமன்ற அரசியலுடன் மிகவும் இறுக்கமாகப் பிணைக்கப்பட்ட ஒன்றாகவும் தேர்தல்களில் வாய்ப்புக்களை உச்சபட்சமாகப் பெறுவதையும் விரும்புவதாக அமைகிறது.

விஜேவீரவின் ஆரம்ப அரசியல் ஆய்வுகள் சண்ணின் கோட்பாடுகள் மீதே பெருமளவிற்குத் தங்கியிருந்தன. விஜேவீரவும் கூட ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக்கட்சிக்கும் இடையில் பெரிய வேறுபாட்டைக் காணவில்லை. தந்திரோபாய காரணங்களுக்காக அந்தக் கட்சிகள் இரண்டில் ஏதாவது ஒன்றுடன் அணிசேர்ந்துகொள்ளக்கூடியவராகவும் இருந்தார். ஆனால், விஜேவீர “சிங்கள சோசலிஸத்தை” மேம்படுத்தும் பாதையிலேயே சென்றுகொண்டிருந்தார். உள்நாட்டுப் புரட்சியின் முன்னரங்கப் படையினராக பெருந்தோட்டப் பாட்டாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மலையகத்தில் செங்கொடி பதாதையின் கீழ் அவர்களை அணிதிரட்டுவதற்கான சண்ணின் முயற்சிகளை விஜேவீர நிராகரித்தார்.Post a Comment

Protected by WP Anti Spam