By 24 October 2020 0 Comments

இருபதாவது திருத்தமும் திருந்தாத தலைமைகளும்!! (கட்டுரை)

இலங்கையின் இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பின் இருபதாவது திருத்தம் எதிர்பார்ப்புகளுக்கும் எதிர்ப்புக்கும் மத்தியில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

எதிர்ப்பு என்பது பாராளுமன்றத்துக்கு உள்ளே இருந்ததைவிட வெளியே சிவில் சமூக அமைப்புக்களிடம் அதிகமாக இருந்தது. அதற்கும் மேலாக சில முக்கியமான பௌத்த மத பீடங்களில் இருந்தும் எதிர்ப்புகள் வந்திருந்தன.

ஆனாலும் பாராளுமன்றத்துக்கு உள்ளே இருந்த பலவீனங்களைக் கொண்டு இருபது நிறைவேற்றப்பட்டுள்ளது எனலாம். அத்தகைய பலவீனத்தை அதிகம் வெளிக்காட்டியவர்களாக சிறு கட்சிகளின் தலைமைகளைக் கூறலாம்.

ஆளும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன தவிர்ந்த ஏனைய அனைத்து கட்சிகளும் தமது ஆசனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் சிறு கட்சிகளே.

அதில் மக்கள் விடுதலை முன்னணி ( அநுர), தமிழ்த்தேசிய கூட்டமைப்பு (சம்பந்தன்), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி(பொன்னம்பலம்), தமிழ் மக்கள் தேசிய கூட்டணி (விக்னேஸ்வரன்) போன்ற எதிர்கட்சிகள் தமது எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து அதனை செய்தும் உள்ளன.

அதேநேரம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி(டக்ளஸ்), தேசிய காங்கிரஸ் (அதாவுல்லா), தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் (பிள்ளையான்) போன்றன தமது அரசாங்க ஆதரவு நிலைப்பாட்டில் தெளிவாக இருந்து ஆதரவும் தெரிவித்துள்ளன.

அரசாங்கத்தில் இருந்து கொண்டே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (சிரிசேன) தேசிய சுதந்திர முன்னணி(வீரவங்ச) பிவித்துரு ஹெல உருமய (கம்மன்பில) , ஜனநாயக இடதுசாரி முன்னணி (வாசுதேவ), இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (டியூ), லங்கா சம சமாஜ கட்சி ( திஸ்ஸ வித்தாரண) போன்றன தமது தடுமாற்றத்தைக் காட்டியுள்ளன.

இதில் மைத்ரிபால சிரிசேன சுதந்திர கட்சியை சிறு கட்சியாக மாற்றியது மட்டுமல்ல, தானும் சிறுபிள்ளைத் தனமாகவே நடந்து கொண்டுள்ளார். அவரது கட்சி உறுப்பினர்களை அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்துவிட்டு தனது மனசாட்சிக்கு அமைய தான் 20 க்கு ஆதரவாக வாக்களிக்க முடியாது என வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் விட்டுள்ளார்.

எதிர்தரப்பில் தமது தேசிய பட்டியலில் இடம் வழங்கி நியமித்த டயானா கமகே எனும் தமது ஐ க்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர் பதவியில் உள்ள நேரடி உறுப்பினரை தக்கவைத்துக் கொள்ள முடியாதவராக சஜித் பிரேமதாச இருக்கிறார். இத்தனைக்கும் அந்த பெண் உறுப்பினர் (அவரது கணவர்) பெயரிலேயே ‘தொலைபேசி’ கட்சி பதிவு பெற்றிருந்தது. அதற்கு சன்மானமாகவே தேசிய பட்டியல் வழங்கப்பட்டு இருந்தது.

தவிரவும் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி கட்சிகளான ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் , தமிழ் முற்போக்கு கூட்டணி என்பன தலைமை ஒருவிதமாகவும் தாம் ஒருவிதமாகவும் செயற்பட்டு ‘சிரிசேன வழி’ சென்றுள்ளனர்.

இவர்களின் இந்த தந்திரோபாயத்தை அடுத்து வரும் நாட்களில் அழகாக நியாயப்படுத்துவார்கள். ஆனால், தமது தலைமையை தமது உறுப்பினர்கள் ‘கணக்கில் எடுக்கவில்லை’ என்ற இன்றைய வெளிப்பாட்டை எப்படி சரி செய்யப் போகிறார்கள் என்பதில்தான் சுவாரஷ்யமே இருக்கிறது.

வாக்கெடுப்பின் இரண்டு தினங்களுக்கு முன்னர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளர் பணிமனையில் இடம்பெற்ற கூட்டணி உயர்பீட கூட்டத்திற்கு பதுளை மாவட்ட உறுப்பினர் அரவிந்தகுமார் சமூகம் அளித்திருக்கவில்லை. சுகவீனம் என தகவல் அனுப்பி உள்ளார் அரவிந்த். அப்போதே தலைமை அவர் குறித்த கவனம் எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் , உபதலைவர்களில் ஒருவரான கண்டி மாவட்ட உறுப்பினர் வேலு குமாரை வைத்து ஊடகங்களுக்கு “ஆறும்” எதிர்ப்பது உறுதி என அறிக்கை விட்டார்கள். ஆறில் ஒன்றாக இருந்த அரவிந்த் தாவிய பின்னரும் தனது முகநூலில் எழுத்தில் ஆறு உறுப்பினர்கள் இருபதை எதிர்த்து வாக்களித்ததாக தனது முகநூலில் பெருமை பேசி இருக்கும் கூட்டணித் தலைவர் மனோ கணேசன் அடைப்புக் குறிக்குள் ஆறினை ஐந்து (5) என குறிப்பிட்டு மக்களுக்கு கண்ணாம்பூச்சி காட்டுகிறார். இனி அரவிந்த் எங்கள் கூட்டணியிலே இருந்தாலும் அவர் மலையக மக்கள் முன்னணி கட்சி உறுப்பினர். அதற்கு தான் பொறுப்பு சொல்ல முடியாது என இலகுவாக கையை கழுவி விடுவார் மனோ; திலகரின் தேசிய பட்டியல் விவகாரத்தில் திகாம்பரத்தைக் காட்டி நழுவியதுபோல்.

அனுஷா விடயத்தில் இரண்டான மலையக மக்கள் முன்னணி அரவிந்த்குமாரின் பாய்ச்சலோடு மூன்றாகிவிட்டது. இனி மலையக மக்கள் முன்னணி பதுளை அணி என்றும் ஒன்று இருக்கும். அதன் நுவரெலிய கிளையாக அனுஷா செயற்படுவார்.

2018 ஐம்பத்திரண்டு நாள் சதி புரட்சி நாட்களில் அங்குமிங்கும் தாவிய பதுளை எம்.பி வடிவேல் சுரேஷை அடுத்துவந்த (2020) தேர்தலில், மாவட்டத்தில் முதலாம் இடத்தில் வாக்களித்து தெரிவு செய்த பதுளை தமிழ் மக்கள் நிச்சயமாக தம்மையும் அடுத்த தேர்தலில் அதே முதலிடத்திற்கு கொண்டுபோவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் இருப்பார் அரவிந்த்குமார்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத்துக்கு இந்த காலகட்டம் இக்கட்டானது. இந்த தருணத்தில் அவர் எடுப்பார் என்று எதிர்பார்த்த முடிவுபடியே அவர் இயங்கினார். சிறைபடுத்தப்பட்ட நெருக்கடி மன நிலையில் தமது கட்சியின் ‘மயில்’ சின்னத்தில் நேரடியாக போட்டியிட்டு தெரிவான திகாமடுல்ல மாவட்ட எம்பி முஷாரப்பும் தானும் எதிர்த்து வாக்களிப்பது என்றும் ஏனைய இரண்டு உறுப்பினர்களான அனுராதபுரம் மாவட்ட எம்.பி இஷாக், புத்தளம் மாவட்ட எம்.பி ரஹீம் (இவர் முஸ்லிம் காங்கிரஸ் வாக்குகளையும் பெற்று வந்தவர்) ஆகியோரை ஆதரித்து வாக்களிக்கச் செய்து அரசாங்கத்தின் 2/3 க்கு உதவுவதே ரிஷாடின் திட்டம். அது அப்படியே நடந்தது.

இடையே இரட்டைக் குடியுரிமை விடயத்தில் தனியான வாக்கெடுப்பு வந்தவேளை தனது தலைவர் ரிஷாத்தின் குருவான பஷில் ராஜபக்‌ஷவுக்காக வேண்டி அதற்கு ஆதரவாக தானும் வாக்களித்து சறுக்கல் ஒன்றைக் காட்டிவிட்டார் புதியவர் (மயில்) முஷாராப் எம்பி . அவர் வாக்களித்து இருந்தால் கூட பரவாயில்லை, அதற்காக அவர் கூறிய காரணம் சகித்துக் கொள்ளக்கூடியதாக இல்லை.

ரிஷாத்தின் இந்தத் திட்டத்தை அறிந்து, அடுத்த ‘ரிஸ்க்கை’ எடுத்தவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம். வழமையாக வேறு வேறு கட்சி என்றாலும் ஹக்கீமின் தீர்மானத்தை அடியொற்றி நடப்பவர் ரிஷாட். ஆனால் இந்தமுறை ரிஷாட் டினை அடியொற்றி தனது தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் ஹக்கீம்.

ரிஷாட்டின் எம்பிக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவது தெரிந்ததுமே முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் முந்தத் தொடங்கினர். அதில் முதலாமவர் தமது சொந்த கட்சி சின்னமான மரத்தில் போட்டியிட்டு வந்த அஹமட் நசீர். அவர் அப்படி செய்வதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இனி எஞ்சிய மூவரில் திகாமடுல்ல மாவட்டத்தின் ஹாரிஸ், பைசல்காசிம் ஆகிய இருவருக்கும் யார் யாரை முந்துவது எனும் கடும் போட்டியில் தோற்றவர் தலைவர் ஹக்கீம். அவரது ஆசீர்வாதத்துடன் தனது எம்பிக்கள் எல்லோரையும் ஆதரவளிக்க அனுமதி கொடுத்தார். அதுவரை தனது இடது கையில் சிவப்பு நிறத்தில் பட்டி கட்டி 20 க்கு எதிர்ப்புத் தெரிவித்த திருமலை மாவட்ட எம்.பி தௌபீக்கும் திருத்தத்துக்கு ஆதரவாக பச்சைக் கொடி காட்ட வேண்டியதாயிற்று.

இவர்களை ‘தொப்பிப் பிரட்டிகள்’ என திட்டிவிட்டுப் போகிறார் திருமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி யின் நேரடி எம்.பி இம்ரான் மஹ்ரூப்.

இந்த அல்லோல கல்லோலத்தில் ரிஷாட்டை விட ஹக்கீமின் நிலைமை மோசமானது. தான் தலைமை வகிக்கும் கட்சியின் ‘மரம்’ சின்னத்தில் போட்டியிட்டுத் தெரிவான பிரதித்தலைவர் நஸீர் அஹமட் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, தலைவரான தான் எதிர்த்து வாக்களித்ததுதான் பெருங்கொடுமை. இதற்கு அவரும் சேர்ந்தே ஆதரவாக வாக்களித்து இருக்கலாம்.

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி தாங்கள் எடுத்த தீர்மானம் மூலம் தமது தலைவர் மைத்திரிபால சிரிசேனவை ‘காப்பாற்றியுள்ளனர்’. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முடிவு கூட அத்தகையதுதான். அடுத்தவாரம் அதன் தலைவர் பிணையில் விடுதலையாவார் என எதிர்பார்க்கலாம்.

ஐக்கிய மக்கள் சக்தி, தமது பங்காளி கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியனவற்றுக்கான தேசிய பட்டியல் விவகாரத்தில் காட்டிய அக்கறையின்மைக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது. இவர்களுக்கு வழங்கும் ஆசனங்கள் எதிர்த்தரப்புக்கு போகும் அபாயம் உள்ளது என்ற அவர்களது அப்போதைய அச்சம் இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் மூலம் தெரிவுசெய்த ஒரேயொரு பெண் உறுப்பினரான டயானா கமகே மாத்திரம் பாய்ந்ததே போதும் அரசாங்கம் 2/3 இனை அடைவதற்கு. அதனைத் தடுத்துக் கொள்ள சஜித் பிரேமதாச என்ற தலைமைக்கு முடியாமல் போனது.

அந்த டயானா கமகே பாய்வது 22 ஆம் திகதி காலையிலேயே உறுதியாக தெரிந்த பின்னராவது அதிலேயே 2/3 கிடத்திவிடும் எனவே தமது உறுப்பினர்களை ஆதரவாக வாக்களிப்பில் இருந்து தடுத்தி நிறுத்தி 20 வது திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து தாம் சோரம் போகவில்லை தம்மை சுதாகரித்துக் கொண்டிருக்க வேண்டிய முஸ்லிம் தலைமைகள் தமது தலைமைத்துவ பண்பை இழந்து நிற்கின்றன.

ஆக, ஆதரவாக வாக்களித்த அந்த ஆறு முஸ்லிம் எம்பிகளும் ஒரு தமிழ் எம்பியும் அரசாங்கத்துக்கு ‘தேவையே இல்லாத ஆணிகள்’.Post a Comment

Protected by WP Anti Spam