By 2 November 2020 0 Comments

பச்சை குத்தலையோ பச்சை : நவீன டாட்டூக்களின் காலம்! (மகளிர் பக்கம்)

உடலை சுவராக்கி மனதிற்கு பிடித்த சித்திரங்களை வண்ணங்களோடு பதியும் ‘டாட்டூஸ்’ இப்போது இளைஞர்களிடத்தில் ரொம்பவே பிரபலம். இதற்கு ஆண், பெண் விதிவிலக்கல்ல. தங்களை அழகாய் காட்டிக்கொள்ள இருபாலாருமே ஏதாவது ஒன்றைச்செய்து கொண்டேதான் இருக்கின்றனர். பழங்காலத்தின் பச்சை குத்தும் பழக்கமே டெக்னாலஜியின் வரவால் டாட்டூவாக மாறி இளைஞர்களிடையே பரவுகிறது.“பிறர் கவனத்தை ஈர்க்கத்தான் டாட்டூ குத்திக்கொள்கிறோம்” என நம்மிடம் பேசத் துவங்கினார் டாட்டூஸ் கலைஞராகத் தம்மை அடையாளப்படுத்தி ‘டாம்பாய் டார்ச்சர்ஸ் டாட்டூஸ் ஸ்டுடியோவை’ நடத்திவரும் ஹரிணி. “நான் படித்தது என்னவோ எம்.எஸ்.ஸி பயோடெக்.

ஆனால் பிடித்த துறையாக டாட்டூஸ் கலை மாறிப்போனது. அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டேன்’’ என இயல்பாய் பேசத் துவங்கினார். ‘‘இதற்கான முறையான படிப்பென்று எதுவும் இங்கில்லை. கற்றுக்கொள்ள விரும்பினால் நமக்கு முன் இத்தொழிலில் கால்பதித்து கரைபுரண்டவர்களின் டாப் ஸ்டுடியோக்களில் இணைந்து மாணவராக வேண்டும். அதை நாம்தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என நம்மிடம் கண் சிமிட்டுகிறார். அதற்காக இலவச படிப்பு என நினைத்துவிடாதீர்கள். கற்றுக்கொள்ள ஆகும் செலவு லட்சங்களைத் தாண்டும். அதற்கான காலம் ஒரு மாதம் மட்டுமே” எனக்கூறி நம்மை ஆச்சரியமூட்டினார்.

“ டாட்டூவில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று நிரந்தரமானது. இன்னொன்று தற்காலிகமானது. டெம்ரவரி டாட்டூஸ் ஒரு வாரத்தில் அழிந்துவிடும். பெர்மனென்ட் டாட்டூஸ் என்பது நம் வாழ்நாள் முழுவதும் கூடவே வரும். உடல் புதைக்கப்பட்டு மக்கினாலும் நம் எலும்பில் டாட்டூவின் பதிவு இருப்பதற்கான ஆதாரங்களும் உண்டு” என்றவர், புதைக்கப்பட்டு பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த ஒரு மம்மியின் புகைப்படத்தைக் காட்டி மிரட்டுகிறார். ‘‘முன்பு பச்சை குத்துவதுபோல ஒரே நிறம் இப்போது இல்லை. டெக்னாலஜி ரொம்பவே இப்போது வளர்ந்துவிட்டது.

எலக்ட்ரானிக் மற்றும் ஸ்மார்ட் மை டெக்னாலஜி தொழில்நுட்ப உதவியோடு காட்ரிஜ் ஊசி போன்ற கருவியில் ரசாயன மை நிரப்பி, மின்சாரம் மூலம் சூடேற்றி அப்படியே உடலில் விரும்பிய இடத்தில் வரைவதே டாட்டூஸ். இதைப் பல வடிவங்களில் பல வண்ணங்களில் மனதிற்கு பிடித்த மாதிரி போட்டுக்கொள்ளலாம். ஆனால் என்ன, நாம் போட்டுக்கொள்வது பெர்மனென்ட் டாட்டூ என முடிவானால், நிறைய யோசித்து முடிவு செய்துவிட்டு வாருங்கள். ஏனெனில் நிரந்தர டாட்டூவை அழிக்க வழியே இல்லை. அது வாழ்நாள் அடையாளம். நிழலாய்த் தொடரும்.தற்காலிக டாட்டூஸால் வலிகள் ஏற்படுவதில்லை.

தற்காலிக டாட்டூஸ்கள் அழகுக்காக வண்ணக் கலவைகளால் வரையப்படுபவை. அல்லது ஸ்டிக்கர் வடிவில் நமது சருமத்தின் மேலே ஒட்டிக்கொள்பவை. இவை நிரந்தரமற்றது. தானாய் அழியத் தொடங்கிவிடும்.சிலர் காதலில் இருக்கும்போது அந்தக் காதல் நிலைக்குமோ நிலைக்காதோ, அவசரப்பட்டு, அன்பின் வெளிப்பாடாய் தங்கள் இதயத்திலும், மறைவான இடங்களிலும், சிலர் வெளியில் தெரிய கைகளிலும் பிடித்தமானவர்களின் பெயரை டாட்டூவாகக் குத்திக்கொள்வார்கள். காதல் கைகூடாத நிலையில், வேறொருவருடன் திருமணம் முடிவான நிலையில், போட்டுக்கொண்ட நிரந்தர டாட்டூவை அழிக்கச்சொல்லி வருவார்கள்.

அப்போது லேசர் சிகிச்சை மூலம் டாட்டூவை அகற்ற முடியும். அதுவும் முழுமையாக அகற்ற முடியும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. சில அடர் வண்ண நிற டாட்டூவை நீக்க பல முறை லேசர் செய்ய வேண்டிய நிலையும் ஏற்படும். ஏனெனில் வண்ணங்களில் நிறைய ரசாயனங்கள் சேர்க்கப்படுவதால், அழிப்பது கடினமாக இருக்கும். டாட்டூவை நீக்கும்போது உண்டாகும் வலி போடும்போது இருக்கும் வலியைவிட பன்மடங்காக இருக்கும். தொழில் முறையில் இதற்கு ஒரு வழிதான் உண்டு. அதாவது ஏற்கனவே போடப்பட்ட டாட்டூவை மறைத்து அதன் மேல் வேறொரு வடிவத்தைக் கொண்டு வருவது.

ஆனால் அது இன்னும் கூடுதலான வலியையும், செலவையும், நேர விரயத்தையும் ஏற்படுத்தும். பரம்பரை பரம்பரையாக பச்சை குத்துபவர்கள் அல்லது இதற்கெனத் தனியாய் பயிற்சி பெற்றவர்கள் எனப் பலர் இத்துறையில் இருக்கிறார்கள். இதில் யாரிடம் நீங்கள் உங்கள் உடலை ஒப்படைத்து டாட்டூ குத்தப் போகிறீர்கள் என்பதில் கவனம் தேவை. தரமான நிபுணர்களை அணுகினால் அவர்கள் தரமான வண்ணங்களைப் பயன்படுத்துவதோடு, உங்கள் சருமம் ஏற்கும் மையினை தொழில்நுட்பம் சார்ந்து தேர்வு செய்து உபயோகிப்பார்கள்.

விலை மலிவான தரமற்ற வண்ணங்கள், காயில்கள், ஊசிகளைப் பயன்படுத்துவது, ஒருவருக்குப் பயன்படுத்திய அசுத்தமான ஊசியை மற்றொருவருக்குப் பயன்படுத்துவது போன்ற செயல்களால் நோய் தொற்று ஏற்படலாம். சரியான பயிற்சி இன்றி டாட்டூஸ் போடும்போது டாட்டூஸ் சருமத்தோடு ஒட்டிய தோற்றத்தை தராமல், தோலின்மேல் துருத்திக்கொண்டு நிற்கும்” என்கிறார்.“நம் உடலை வருத்தி பிறர் கவனத்தை ஈர்க்க வேண்டுமா” என்ற கேள்விக்கு, “எங்களை எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒருவிதம் இது” என முடித்தார்.

வரலாறு முக்கியம்

உடலில் பச்சை வண்ணத்தில் ஊசி கொண்டு குத்தி, பல்வேறு வடிவங்களை வரைந்து அழகுபடுத்திக் கொள்வதே பச்சைக் குத்துதல். அதாவது அழியாத மையினை உடலின் உள்ளே, தோலின் கீழே உட்செலுத்தி அதன் மூலமாக தோலின் நிறத்தை மாற்றி உருவங்களையும் வடிவங்களையும் எழுத்துக்களையும் வரைய முடியும் என்பதே பச்சைக்குத்துதல் என அழைக்கப்பட்டது.ஐரோப்பிய, ஆசியா நாடுகளில் கற்காலத்திலிருந்து நடைமுறையிலிருந்த ஒரு பழக்கம். இந்திய, இலங்கை மக்களிடமும் பழங்காலத்திலிருந்து பச்சை குத்தும் வழக்கம் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. ஜப்பானில் ஒரு இனக்குழுவைச் சேர்ந்த மக்களிடம் முகத்தில் பச்சை குத்திக் கொள்ளும் பழக்கம் உள்ளது.

சில இன மக்கள் இதை ஒரு சடங்காகச் செய்கின்றனர். முழங்காலின் கீழ், மணிக்கட்டு முதலான பகுதிகளில் இடப்பட்ட புள்ளிகளும் கோடுகளுமாக இவை இருந்தன. இது மேலும் வளர்ச்சிபெற்று மார்பு, மேல் கை, முன்னங்கை, கால் போன்ற உடற் பகுதிகளில் பச்சையாக குத்தப்பட்டது. ஒருசில நாடோடி இன மக்கள் பச்சை குத்துவதை தொழிலாகவும் செய்கின்றனர். நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கான அக்குபங்சர் மருத்துவ வகையாகவும், ஜப்பானியரின் அக்குபங்சர் மருத்துவ முறை கலையோடு தொடர்புடையதாகவும் பார்க்கப்படுகிறது.

மஞ்சள் பொடியோடு அகத்திக் கீரை சேர்த்து அரைத்து, அதை ஒரு துணியில் கட்டி, தீயிலிட்டு எரித்துக் கரியாக்கிக் கொள்கின்றனர். பின்னர் நீர் கலந்து அதைப் பசையாக்கி, கூர்மையான ஊசியினால் பசையைத் தொட்டுத் தோலில் குத்திக் குத்தி எடுத்துத் தேவையான உருவங்களை வரைகின்றனர். பச்சை குத்தப்பட்ட பின் சுடுநீரால் கழுவி அதனைச் சுத்தம் செய்கின்றனர். இப்பொழுது பச்சை குத்திய இடம் அழகாகத் தோற்றம் அளிக்கும். இது எந்நிலையிலும் அழியாது.கடவுளர்களின் உருவங்கள், கோலங்கள், தேள், பாம்பு போன்ற விஷ ஜந்துகளின் உருவங்கள், பெயர்கள் போன்றவை பச்சை குத்துதலில் பெரும்பாலும் இடம் பெற்றது. பழங்காலத்தில் பண்ணை விலங்குகளை அடையாளப்படுத்திக்கொள்ள விலங்கிற்கு பச்சைக்குத்தும் பழக்கம் இருந்திருக்கிறது.

டாட்டூஸின் விளைவுகள்

* டாட்டூஸ் நிரந்தரமாகப் போடும்போது கட்டாயம் வலியும், போட்ட இடத்தில் அரிப்பும் இருக்கும். வலி நீங்க சிலருக்கு பத்து நாட்களும் சிலருக்கு அதற்கு மேலும் ஆகலாம்.
* சிலருக்கு வண்ணங்களில் உள்ள ரசாயனங்களால் ஒவ்வாமை ஏற்படும். விளைவு சருமப் பாதிப்பு உண்டாகலாம்.
* உடல்நலம் பாதிக்கவும் வாய்ப்புண்டு.
* டாட்டூ ஸ்டிக்கரில் உள்ள பசையும் சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கும்.
* மருதாணி இடுவதுகூட தற்காலிக டாட்டூஸ்தான். வண்ணம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும் மருதாணியில் பி.பி.டி. என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இது சருமத்தில் ஒவ்வாமையை உண்டாக்கும்.Post a Comment

Protected by WP Anti Spam