By 22 November 2020 0 Comments

கருப்பை வீக்கத்தை குறைக்கும் இலந்தை இலை!! (மருத்துவம்)

பூப்படைந்தது முதலே மாதவிலக்கு கோளாறால் பெண்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கருமுட்டை சிதைவு, கருப்பை சுவர்களில் நீர் கட்டி போன்ற காரணங்களால் குழந்தை பாக்கியம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். அத்தகைய நிலையை தவிர்க்கவும், சீரான மாதவிலக்கை தூண்டவும் பக்கவிளைவில்லாத இயற்கை மூலிகைகளை கொண்டு தீர்வு காண்பது பற்றி பார்க்கலாம்.பெண்மைக்குரிய முக்கிய ஹார்மோன் சுரப்பியாக ஈஸ்ட்ரோஜன் இருந்து வருகிறது. இந்த ஹார்மோனின் குறைபாட்டினால் கருப்பையில் கட்டிகள், மாதவிலக்கு கோளாறு, குழந்தை இன்மை, மாதவிலக்கின் போது இடுப்பு வலி, உபாதைகள், அடிவயிற்று வலி ஏற்படுகிறது. இந்த சமயங்களில் ஆண்களின் சுரப்பியான ஆன்ட்ரோஜன் அதிகப்படியாக உடலில் சுரக்கப்படுவதால் தேவையற்ற இடங்களில் முடி வளர்தல், தலை முடி மென்மையாதல், உடல் சோர்வு போன்ற நிலை ஏற்படுகிறது. இதனுடன் நச்சுகளும் உடலில் சேர்ந்து கொண்டு உடல் பருமனடைய செய்கிறது. இத்தகைய பிரச்னைகளுக்கு சதக்குப்பை, மரமஞ்சள், கருஞ்சீரகம், கொள்ளு, இலந்தை இலை உள்ளிட்ட பொருட்களை கொண்டு மருந்து தயாரிக்கலாம்.

ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் உடல்பருமனை போக்கும் சதக்குப்பை:

தேவையான பொருட்கள்: சதக்குப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் பொடி, பனைவெல்லம்.பாத்திரத்தில் அரை ஸ்பூன் கருஞ்சீரகம், அரை ஸ்பூன் சதக்குப்பை, கால் ஸ்பூன் மரமஞ்சள் பொடி, ஒரு ஸ்பூன் வெல்லம் மற்றும் சிறிது நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
சதக்குப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் ஆகியன நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்ற மூலிகைகள். இவை கலந்த பானத்தை தொடர்ந்து குடித்து வர கருப்பை நீர் கட்டிகள் கரைந்து வெளியேறும். மேலும் இது ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பு மற்றும் மாதவிடாய் கோளாறால் உடலில் தேங்கும் சிதைந்த கருமுட்டை உள்ளிட்ட அழுக்குகளை வெளித்தள்ளுகிறது. மேற்கண்ட பானத்தை வழக்கமான மாதவிடாய் காலத்துக்கு ஒரு வாரத்துக்கு முன் எடுத்து வருவதால் வலியற்ற, முறையான மாதவிடாய் ஏற்படும்.

கெட்ட கொழுப்புகளை அகற்றும் கொள்ளு கஞ்சி:

தேவையான பொருட்கள்: கொள்ளு-50 கிராம், பார்லி அரிசி-50 கிராம் , மிளகு- 10 கிராம், உப்பு.
பார்லி அரிசி, கொள்ளு, மிளகு ஆகியவற்றை சுத்தம் செய்து பொடித்து கொள்ளவும்.
பாத்திரத்தில் 2 ஸ்பூன் பொடித்த கலவையுடன், உப்பு மற்றும் நீர் சேர்த்து கரைத்து கொதிக்கவிடவும்.
சிலருக்கு கரு முட்டை உருவாகின்ற கருப்பை சுவரிலே கட்டிகள் காணப்படுகின்றன. இதனால் பலருக்கு கருமுட்டை சிதைவு ஏற்படும். இதன் முக்கிய காரணம் உடலில் அதிக இன்சுலின் சுரப்பது, ஆன்ட்ரோஜன் என்ற ஆண் ஹார்மோன் அதிகம் சுரப்பது, உயர் மன அழுத்தம், அதிக கொழுப்பு உடலில் சேர்வதாகும். இரும்பு சத்து மிகுந்து காணப்படும் தானியம் கொள்ளு. இதனை கஞ்சியாக மூன்று மாதம் குடித்து வர சீரான மாதவிடாய் ஏற்படும். உடல் பருமன் குறைந்து அழகாக தோற்றமளிக்கும்.

கருப்பை வீக்கத்தை குறைக்கும் இலந்தை இலை:

தேவையான பொருட்கள்: இலந்தை இலை, பூண்டு, மிளகு.இலந்தை இலையை கையளவு எடுத்து பாத்திரத்தில் நீர் விடவும். இதனுடன் சிதைத்த பூண்டு, மிளகு சேர்த்து கொதிக்கவிடவும்.
இலந்தை இலையில் மாவு சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது. புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு சுவை கொண்டுள்ள இலந்தை இலையில் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியுள்ளது. இந்த இலை உடலின் ஜீரணசக்தியை அதிகரித்து பசியை தூண்ட செய்யும் தன்மையுடையது. முதுகுவலி, இருதய நோயால் அவதிப்படும் நோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகும். குறிப்பாக பெண்களின் பிரச்னையான கருப்பை வீக்கத்தை சரிசெய்கிறது. இந்த பானத்தை ஓரிரு வேளை அன்றாடம் குடித்து வரும்போது, வீக்கம் குறைவதோடு, கருப்பை பலம் பெறும்.இலந்தை வேர்பட்டை-40 கிராம், மாதுளம் பட்டை-40 கிராம் ஆகியவற்றை அரை லிட்டர் நீரில் நன்கு கொதிக்கவிடவும். இந்த நீர் 125 மி.லிட்டராக குறையும் போது இறக்கி வடிகட்டி கொள்ளவும். இதனை தினமும் 4 வேலை அருந்துவதால் பெரும்பாடு விரைவில் குணமடையும்.Post a Comment

Protected by WP Anti Spam