By 1 December 2020 0 Comments

வீதிக்கு இறங்காத அரசியல்வாதிகளும் வீதிக்கு இறங்கிய மக்களும்!! (கட்டுரை)

இலங்கையை கொரோனா கொத்தணிகள் ஆக்கிரமித்து வரும் நிலையில் மேல் மாகாணமே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதிகமான உயிரிழப்புக்களையும் அதிக தொற்றாளர்களையும் கொண்ட ஆபத்து வலய மாவட்டமாக கொழும்பு அடையாளப்படுத்தப்பட்டு பல பகுதிகள் ஒரு மாத காலத்துக்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளன

கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, மோதர, வாழைத்தோட்டம் , கொட்டாஞ்சேனை , ஆட்டுப்பட்டித் தெரு ,பொரளை ,புளுமெண்டல் ,கரையோர பொலிஸ் , மாளிகாவத்தை ,தெமட்டகொட ,கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்குளியின் மெத்சந்த செவன, மிஹிஜயசெவன , மோதரையின் ரண்முத்து செவன ,கிராண்ட்பாஸின் முவதொர உயன ,தெமட்டகொடையின் சிறிசந்த உயன , மாளிகாவத்தையின் தேசிய வீடமைப்புத் திட்டம் போன்ற தொடர்மாடிகளில் இருந்து எவரும் வெளியே செல்லவோ எவரும் உள்ளே வரவோ அனுமதிக்கப்படுவதுமில்லை.

ஒரு மாத காலத்துக்கும் மேலான இவ்வாறான முடக்க நிலையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக சீர்குலைந்து, கொரோனா தொற்று ஒருபக்கம் மிரட்ட ,மறு பக்கம் வறுமை விரட்ட உழைப்பு ,உணவு, உறக்கமின்றி வறுமையுடனும் பசியுடனும் போராடுகின்றனர்.இப்பகுதி மக்கள் ஒன்றும் வசதியானவர்கள் அல்ல.அன்றாட உழைப்பை நம்பியே வாழ்க்கையை நடத்துபவர்கள். அதில் கிடைக்கும் வருமானத்தில் திருப்தியாக வாழ்பவர்கள். இந்நிலையில் தான் கொரோனா முடக்கம் அவர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டதாலும் அரசும் அரசியல்வாதிகளும்அந்த மக்களின் வறுமை, பட்டினிக் கொடுமையை கண்டு கொள்ளாததாலும் உணவுக்காக அந்த மக்கள் வீதியிலிறங்கிப்போராடவேண்டிய நிர்ப்பந்தத் துக்குள் கடந்த வாரம் தள்ளப்பட்டனர்.

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலொன்றான கொழும்பு – 15 மோதரை – இக்பாவத்த மற்றும் புளூமெண்டல் பகுதியை சேர்ந்த மக்களே கடந்த வாரம் வீதியிலிறங்கி போராட்டமொன்றை முன்னெடுத்தனர். தமது பகுதி தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையினால், தமது வாழ்வாதாரம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,தொழில்களுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குடும்பமொன்றுக்கு தலா 5000 ரூபா கொடுப்பனவு அரசினால் வழங்கப்பட்டுள்ள போதிலும், ஒரு மாதத்திற்கு மேலதிகமாக தமது பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த 5000 ரூபா எத்தனை நாளைக்கு தமது பசியை, நோயை,வறுமையை போக்க உதவும் எனவும் அந்த மக்கள் கேள்வி எழுப்பினர்.

நாளாந்தம் கூலித் தொழில்களை செய்து , வாழ்ந்து வரும் தமக்கு 5000 ரூபா கொடுப்பனவை கொண்டு ஒரு மாதத்திற்கு மேல் எவ்வாறு வாழ்வது எனவும் தாம் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இந்த தருணம் வரை கூட தம்மை எந்தவொரு அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் வந்து பார்வையிட வில்லை எனவும், ஆர்ப்பாட்டத்தின் பின்னரே முகத்துவாரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூட வருகைத் தந்துள்ளதாகவும் இவ்வாறானதொரு சூழ்நிலையில், தமக்கான வாழ்வாதார பிரச்சினைகளுக்கு உரிய தீர்வொன்றை பெற்றுத் தர அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் இந்தப் போராட்டத்தின்போது கோரிக்கையை பாதிக்கப்பட்ட மக்கள் முன் வைத்தனர்.

இலங்கைக்குள் காலடி வைத்த கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் முழு நாடும் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வரை முடக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடந்தபோது கூட இவ்வாறான உணவுக்கான போராட்டங்கள் நாட்டின் எந்தப்பகுதியிலும் இடம்பெறவில்லை. அப்போது வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் சில பிரச்சினைகள் ஏற்பட்டதைத் தவிர வேறு எதுவும் இடம்பெறாதநிலையில் தற்போது உணவு கேட்டு மக்கள் வீதியிலிறங்கியமைக்கு அரசியல்வாதிகள் வீதியில் இறங்காமையே காரணமாகவுள்ளது.

கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் முழு நாடும் மூன்று மாதங்கள் வரை முற்றாக முடக்கப்பட்டு மக்களின் நடமாட்டங்கள் கூட கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டு போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டு தொழில் நிறுவனங்கள் ஒட்டு மொத்தமாக மூடப்பட்டு,நாட்டின் ஒரு பிரஜை கூட தொழில்களுக்கு செல்ல முடியாத நிலையில் கூட உணவுக்கு எந்தவொரு மக்களும் போராடவில்லை.ஏனெனில் வீடுகளுக்குள் முடங்கிக்கிடந்த மக்களுக்கான அரசினதும் அரசியல்வாதிகளினதும் உதவிகள் ,நிவாரணங்கள்,உலருணவுப்பொருட்கள் தேவைக்கதிகமாகவே அந்த மக்களின் வீடுகள் தேடிச் சென்றன.

இதற்கு காரணமாக அப்போது வரவிருந்த பாராளுமன்றத்துக்கான தேர்தல் அமைந்திருந்தது. இந்த பாராளுமன்றத்துக்கான தேர்தலே 5000 ரூபா நிவாரணங்கள் ,உலருணவுப்பொருட்ககளை மக்களின் காலடி தேடித் செல்ல வைத்தது . வருமானம் இழந்து, தொழில் இழந்து வறுமையின் பிடியிலும் பசியின் கொடுமையிலும் வாடிய மக்களின் துன்பத்தை அறிந்து எந்தவொரு அரசியல் வாதியும் அப்போது இந்த உதவிகளை வழங்கவில்லை என்பதும் தமது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குகளை இலக்கு வைத்தே இந்த உதவிகளை அப்பட்டமான சுயநலத்தோடு அப்போது மக்களுக்கு வழங்கியுள்ளனர் என்பதும் தற்போதைய இந்த மக்களின் உணவுக்கான வீதிப்போராட்டம் அம்பலப்படுத்தியுள்ளது.

”ஆடு நனைகின்றதே என்று ஓநாய் அழுததாம் . அப்போது ஆடுகளை வேட்டையாடும் ஓநாய் கூட தான் வேட்டையாடும் ஆடு மழையில் நனையும்போது அதன் துன்பத்தைப்பார்த்து அழுகின்றதே என்று நினைத்த நரியொன்று ஆடுகளைக் கொன்று தின்னும் உன்னிடம் கூட இவ்வளவு இரக்ககுணம் உள்ளதா என்று கேட்டபோது, நீ வேற ..ஆடு மழையில் நனைந்தால் அதன் இறைச்சி வலித்துவிடும்[ கடித்துத் தின்ன முடியாமல் இறப்பர் போலாகிவிடும்] அதனால்தான் கவலைப்படுகின்றேன் என அந்த ஓநாய் சொன்னதாம்” . இந்த ஓநாயின் மன நிலையில் தான் கடந்த கொரோனா கால முடக்கத்தின் போது அரசியல் வாதிகள் ஓடி,ஓடி மக்களுக்கு உதவினர்.

அரசியல்வாதிகள் எதனையும் விளம்பரத்தை எதிர்பார்த்தே செய்வார்கள் . அப்போதைய முட க்கத்தின்போது ஊடகங்களின் செயற்பாடுகள் கூட மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருந்ததனால் தாங்கள் செய்யும் உதவிகளை ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்த முடியாது.அதனால் தா ங்கள் தான் உதவிகளை செய்தோம் என்பது மக்களுக்கு தெரியாமல் போய்விடுமென்பதனால் பல அரசியல் வாதிகள் போட்டிபோட்டுக்கொண்டு தாமே களத்தில் இறங்கி வீடு வீடாக நிவாரண உதவிகளை கொண்டு சென்று மக்களை கூப்பிட் டு தங்களை அடையாளப்படுத்தி உதவிகளைக் கொடுத்தார்கள். மக்களுக்கு இவ்வாறு உதவிகளை வழங்குவதில் அரசியல் வாதிகளிடையில் போட்டியே நடந்தது. சில இடங்களில் தினமும் நிவாரண உதவிகள் மக்களை தேடி வந்தன. இவ்வாறு கிடைத்த நிவாரணப்பொருட்கள் பாவிக்க முடியாது வீணாகிவிடுமோ என்று மக்கள் கவலைப்படுமளவுக்கு நிவாரண உதவிகள் குவிந்தன. அதன் பலனாக குறிப்பிட்ட அரசியல்வாதிகளுக்கு அந்த மக்களின் வாக்குகளும்அண்மையில் நடந்த பாராளுமன்றத்தேர்தலில் குவிந்து அவர்களும் பாராளுமன்றக் கதிரைகளில் அமர்ந்து விட்டனர்.

இந்நிலையில் தான் கொரோனாவின் இரண்டாவது அலை கொத்தணிகளாக வெளிப்பட்டு முழு நாட்டையும் அச்சுறுத்துவதுடன் 100 பேர்வரையில் உயிர்பலிகளை எடுத்தும் 21000 க்கும் மேற்பட்டவர்களை தொற்றாளர்களாக்கியும் வரும் நிலையிலும் அரசு கடந்த முறைபோன்று இம்முறை நாட் டை முழுமையாக முடக்காது ஆபத்தான வலயப்பகுதிகளை மட்டும் முடக்கி வைத்துள்ளது. ஆனால் எதோ மக்களுக்காவே நாட்டை முடக்காதிருப்பதாகவே அரசு படம் காட்டிக்கொண்டிருக்கின்றது.

”கொரோனா தொற்றுக்கு மத்தியில் எமக்கு மேற்கொள்ள முடியுமான மாற்று வழிகள் 3 உள்ளன. ஒன்று ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்து முழு நாட்டையும் முடக்குவது. இரண்டாவது எதனையும் செய்யாதிருப்பது, மூன்றாவது நோயை கட்டுப்படுத்தும் அதே நேரம் நாட்டை வழமை போன்று பேணிச் செல்வதாகும். நாம் மூன்றாவது மாற்றுவழியை தெரிவுசெய்திருக்கின்றோம்” என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார். .அத்துடன் ஆரம்பத்தில் கொரோனா தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதன் பின்னர் ஊடகங்களும் மக்களும் அனைத்தையும் மறந்துவிட்டதும் பொறுப்பை தவறவிட்டதும் தற்போதைய நிலைமைக்கு காரணமாகும். கொரோனா தொற்று உலகிலிருந்து ஒழிக்கப்படும் வரை நாட்டை மூடி வைக்க முடியாது. யதார்த்தத்தை புரிந்துகொண்டு செயற்படவேண்டும். சுமார் 40 நாட்கள் மூடப்பட்டிருந்த பிரதேசங்களிலும் நாளாந்தம் தொற்றாளர்கள் பதிவாகின்றனர். இதிலிருந்து தெரியவருவது மூடிவைப்பதால் மட்டும் நோய்த்தொற்றை ஒழிக்க முடியாது என்பதாகும்” என்றும் ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.

இலகுவான விடயம் நாட்டை மூடி வைப்பதாகும். எனினும் மக்கள் வாழ வேண்டும். தொழில்கள், விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைககளிலும் ஈடுபட்டு பொருளாதாரத்தை பாதுகாப்பது எனது பொறுப்பாகும். பீ.சீ.ஆர். பரிசோதனைக்காக அரசாங்கம் நாளொன்றுக்கு 60மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் செலவிடுகின்றது. தனிமைப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்கும் நாளாந்தம் பெருந்தொகை செலவிடப்படுகின்றது. மக்கள் இந்த நிலைமையை புரிந்துகொண்டு நோய்த்தொற்றுக்கு ஆளாவதிலிருந்து தவிர்ந்திருப்பது அவர்களது தனிப்பட்ட பொறுப்பும் கடமையுமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆனால்நாட்டை முடக்காதிருப்பதற்கு அரசின் அரசியல் ஆதாய நோக்கமும் அப்படி நாட்டை முடக்கினால் கடந்த முறைபோன்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5000 ரூபா கொடுக்க நேரிடும். அப்போது பாராளுமன்றத் தேர்தல் வரவிருந்ததால் அதனைக்கொடுத்து தேர்தல் வெற்றியைப்பெறமுடிந்தது. இப்போது தேர்தலும் இல்லை. குடும்பங்களுக்கு கொடுக்க அரசிடம் பணமும் இல்லை .நாட்டை முடக்கினால் மக்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். கொடுக்காதுவிட்டால் மக்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்பதாலுமே அரசு நாட்டை முடக்கவில்லை.முடக்கப்பட்ட பகுதிகளில் கூட 5000 ரூபா ஒழுங் காக வழங்கப்படவில்லை .அத்துடன் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சவப்பெட்டிகளுக்கு கூட அரசு அந்தக் குடும்பங்களிடம் இருந்தே பணத்தையும் அறவிடுகின்றது. கொரோனாவுக்காக அரசினால் சேகரிக்கப்பட்ட பல கோடி ரூபா நிதிக்கும் என்ன நடந்தது என்பது எவருக்கும் தெரியாது. தற்போது கொரோனாவின் உக்கிரம் அதிகரித்துள்ளபோதும் முதல் அலையில் உருவாக்கப்பட்ட அந்த ஜனாதிபதி நிதியம் இரண்டாவது அலையில் காணாமல் போயுள்ளது.

கடந்த முறை கொரோனா வெளிக்கிளம்பிய போது நாடு பாராளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கியிருந்ததாலேயே மக்களுக்கு நிவாரண உதவிகள் குவிந்தன. கொரோனாவும் வெற்றிகரமாக இறுக்கமான நடைமுறைகளுடன் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது எந்த தேர்தலும் வருவதற்கில்லை என்பதனால் அரசு தன் அரசியல் ஆதாயத்துக்காக கொரோனாவை பயன்படுத்தி பல விடயங்களை மறைத்தும் பல விடயங்களை முன்னெடுத்தும் வருகின்றது.அரசியல்வாதிகளும் தாம் நினைத்தபடி பாராளுமன்றக் கதிரைகளை கைப்பற்றிவிட்டதனால் வீதிக்கிறங்கத் தயாரில்லாத நிலையில் உள்ளனர். இப்போது மக்களுக்கு உதவிகள் செய்வதனால் தமக்கு எந்தவித ஆதாயமும் இல்லை என்பதனாலேயே அரசியல்வாதிகள் மக்களுக்காக நிவாரணப் பொருட்களுடன் வீதிக்கிறங்கவில்லை.

அதுமட்டுமன்றி ”நாம் 5000 ரூபா கொடுத்தது ஒரு வாரத்தில் செலவழிப்பதற்கல்ல.ஒரு மாதத்துக்காகவே கொடுத்தோம் .அதனை ஒரு வாரத்தில் செலவழித்தால் நாம் எதுவும் செய்யமுடியாது” என கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் விமல் வீரவசன்ச திமிர்க்கதை பேசியுள்ளார். அமைச்சர் விமல் வீரவன்சவின் இந்த திமிர்த்தனமான கருத்துக்கு முடக்கப்பட்ட மட்டக்குளி, மோதர, வாழைத்தோட்டம் , கொட்டாஞ்சேனை , வெல்லம்பிட்டி , ஆட்டுப்பட்டித் தெரு ,பொரளை ,புளுமெண்டல் ,கரையோர பொலிஸ் , மாளிகாவத்தை ,தெமட்டகொட ,கிராண்ட்பாஸ் பகுதிகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையானோர் தமிழ். முஸ்லிம் மக்கள் என்பதுதான் காரணமாக இருக்கின்றது. சிங்களவர்கள் தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறான கருத்தை தெரிவித்திருப்பாரேயானால் வெளியில் தலைகாட்ட முடியாதிருந்திருக்கும்

இந்நிலையில் கொரோனா முடக்கத்தையும் மீறி வறுமை,பட்டினியால் மக்கள் வீதிக்கிறங்கி போராடியபோதும் இதுவரையில் அந்த மக்களை எந்தவொரு அரசியல்வாதிகளோ அரச அதிகாரிகளோ வந்து பார் வையிடவில்லை. பரிகாரம் வழங்கவில்லை. எனவே இவ்வாறான அரசியல்வாதிகள் தொடர்பில் மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.Post a Comment

Protected by WP Anti Spam